Wednesday, November 30, 2011

6. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 2

நான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம்...மதுரை நகருக்குள் அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட "சைக்கிள் குழு" எங்கள் வீட்டின் பின்புறம் பெருமாள் கோவில் தெருவில் முகாமிட்டிருந்தது. நம்மூர் மக்களுக்கு புரளி கிளப்புவதில் கிடைக்கும் திருப்தி பெரிது போலும். அவர்கள் இமயமலையில் சைக்கிள் விட்டவர்கள் என்றும் ராஜஸ்தான்காரர்கள் அங்கிருந்து கண்ணை கட்டி கொண்டு சைக்கிளில் வந்திருக்கிறார்கள் என்றும் இஷ்டத்திற்கு கதை கட்ட, தினமும் மாலை தெருவில் கூட்டம் அம்மும். அக்குழுவின் hero சுமார் 3 வாரங்கள் சைக்கிள் மீதே இருப்பார். தினமும் மாலை வித்தைகள் நடக்கும். தெருவின் இருமருங்கிலும் கட்டப்பட்ட கம்பங்களில் ஒளிரும் tube lights, நடுவே மேடை, அதை சுற்றி சுற்றி வரும் cycle hero, தொடர்ந்து ஒளிப்பரப்பாகும் பாடல்கள், "காஜிமார் பாய் பத்து, பெருமாள் கோவில் பட்டர் பத்து" என்று இடையிடையே ஒலிக்கும் "உபயம்" பற்றிய அறிவிப்புகள் என்று அந்த வாரங்களின் காட்சி கனவு போல விரிகிறது...

tea stall காரர் டிபன் தருகிறார் ஆர்ய பவன் உணவு தருகிறது என்று தினம் ஒரு செய்தியுடன் அன்றைய மாலை ஆரம்பமாகும். பள்ளியிலிருந்து திரும்பியவுடன் மொட்டை மாடிக்கு சென்று "குழு" என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பார்ப்பதும் அன்றைய வித்தைகள் என்னவென்று கேட்பதும் போக பாடல்கள் காதில் வந்து விழுந்தபடியே இருக்கும். இந்த நாட்களில் மட்டுமே கேட்டு பிறகு எந்த "பொது இடத்திலும்" கேட்கவே வாய்ப்பு வாராமல் போன  பாடல்கள்தான் எத்தனை... "ஸ்ரீதேவி என் வாழ்வில்" ["இளமை கோலங்கள்" கவனிக்க: இளமை காலங்கள் அல்ல], "சங்கீதமே" ["கோவில் புறா"],"காளிதாசன் கண்ணதாசன்" ["சூரக்கோட்டை சிங்கக்குட்டி"] - இதை பிற்பகலில் கிராமத்து பம்பு செட்டில் குளித்துக்கொண்டே  கேட்டுப்பாருங்கள்],"தேனருவியில் நனைந்திடும் மலரோ" ["ஆகாய கங்கை"], "வண்ணம் நீ விரும்பிய வண்ணம்" ["பிரேம பாசம்"]

சிறிது நாட்களில் சைக்கிளில் சுற்றுபவர் உடல்நிலை மோசமானதாகவும் மயக்கம் போட்டதாகவும் தகவல் பரவியது. ஆனாலும் மாலையில் சென்று பார்த்தால் அவர் பாட்டுக்கு மேடையை சுற்றிகொண்டிருந்தார். "Climax" தினம் நெருங்கிக்கொண்டிருந்தது. தெரு முழுதும் வைக்கோல் பரப்பி அதில் தீ மூட்ட, பற்றியெரியும் நெருப்பில் tube lights சிதற அதன் நடுவில் அவர் சைக்கிளில் வர வேண்டும். இரு நாட்கள் முன்னராகவே இந்த "climax" மூடிற்கு மக்களை கொண்டு வர ஒரே தத்துவ பாடல்களாக ஒலிக்கத்துவங்கியது. இதில் கேட்கத் துவங்கியதுதான் கண்ணதாசனும் TMSசும். அர்த்தம் ஒன்று கூட புரியாவிடிலும் ஒரு வித "heaviness" உண்டாக்கும் அப்பாடல்களை இரவு பகலாக ஒலிக்கவிட்டு மனதில் தங்கவிட்டு சென்றனர் அந்த சைக்கிள் குழுவினர்.
"மனிதன் நினைப்பதுண்டு", "ஆறு மனமே ஆறு", "சட்டி சுட்டதடா", "உள்ளம் என்பது", "நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு", "கால தேவனின் மயக்கம்","எந்தன் பொன்வண்ணமே", "நிலவை பார்த்து" போன்றவை அந்தப்பட்டியலில் முக்கியமானவை. அவர் சைக்கிளில் நெருப்புக்குள் நுழைவதற்கு முன் போடப்பட்ட பாடல் "சிவப்பு விளக்கு எரியுதம்மா" அதன் பின் விளக்குகள் எல்லாம் நெருப்பினால் உடைந்து வெளிச்சமான தெரு 10 நிமிடம் இருட்டானதும் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று அனைவரும் பதறியதும் மறக்க முடியாத நாள்.

இவரின் அடுத்த தலைமுறை இன்று JAVA Code எழுதிக்கொண்டிருக்குமோ?

Monday, November 7, 2011

5. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 1

பத்தாம் வகுப்பில் சொல்லிக்கொள்ளும்படி மதிப்பெண் வாங்கிவில்லை. இருப்பினும் என் அண்ணன் madurai jansi rani பூங்கா அருகில் உள்ள சைக்கிள் கடையில் 1990ல் ஒரு செவ்வாய் மாலை என்னை கூட்டி சென்று BSA SLR ("white walled tyre" உடன்) வாங்கித்தந்தார் (நீ வாங்கிய மார்க்குக்கு ஒரு டயர் மட்டும்தான் நியாயப்படி தரவேண்டும் என்று சொன்னதாக ஞாபகம்).  வீட்டினரின் ஏகோபித்த கவலைகளுக்கு நடுவில் வரண்டாவில் ஜம்மென்று வந்து நிறுத்தப்பட்டது சிகப்பு கலர் BSA SLR. சாப்பாடு, தூக்கம், இயற்கை அழைப்பு இந்த மூன்றைத்தவிர வேறு அனைத்தையும் சைக்கிள் பயன்படுத்தி எப்படி செய்யலாம் என்று யோசிக்க வைத்தது புது சைக்கிள் ஆர்வம்.
சைக்கிளும் பாட்டு கேட்கும் பழக்கமும் சேர்ந்து சில வினோதமான அனுபவங்களை நினைவில் இறக்கிய அந்த நாட்கள் சில...


"உதடுகளில் உனது பெயர் ஒட்டி கொண்டது அதை உச்சரிக்கும் பொது உள்ளம் தித்திக்கின்றது கனவுகளில் உன்னை கண்டு வெட்கம் வந்தது அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிச்சென்றது..." [வெட்கம் என்றொரு குணம் நம் சமூகத்தில் முன்பு இருந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிக!] என்னும் ஜெயச்சந்திரன் பாடல் என்னை சில மாதங்களாக படுத்திக் கொண்டிருந்தது. முதலிலோ, நடுவிலோ, கடைசியிலோ என்று பிட் பிட்டாக கேட்க முடிந்ததே தவிர முழு பாட்டும் கேட்கும் வாய்ப்போ என்ன படம் என்று கண்டுபிடிக்கும் வாய்ப்போ நழுவிக்கொண்டே இருந்தது. ஒரு முறை மேல மாசி வீதி வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்படி பெரியப்பா அனுப்ப, திரும்பி வரும் வழியில் ஆரிய பவன் முனையில்  இருக்கும் டீ கடையிலிருந்து உதட்டில் மீண்டும் பெயர் ஒட்டிக்கொண்டதாக ஜெயச்சந்திரன் அழைக்க முன் பக்கம் தொங்க விட்டிருந்த brown color பையுடன் சைக்கிளை நிறுத்தி "தங்க ரங்கன்" [எப்படித்தான் இப்படியெல்லாம் பெயர் வைத்தார்களோ!] என்று படப்பெயரை கண்டுபிடித்த திருப்தியுடன் வீட்டின் முன் வந்து சைக்கிளை நிறுத்தும் பொழுது வயிறு வாய்க்கு வந்து விட்டது - பை இல்லை. பிறகு நடந்தது தனிக்கதை. மதுரையின் பெரும்பாலான cassette கடைகளில் இப்படியொரு படமே கிடையாது என்று சொல்லி விட்டார்கள். Ceylone ரேடியோவில் தவறு நடக்காது என்ற நம்பிக்கையில் வருடக்கணக்கில் இந்த பாட்டை record செய்யும் முயற்சி தொடர்ந்தது. '79ல் வெளியான இந்த பாடலை '88 ல் முதலில் கேட்டு அதன் பின் சுமார் 15 வருடங்கள் துரத்தி சில வருடங்களுக்கு முன் சென்னை கோடம்பாக்கத்தில்  அலிகான் என்பவரின் "பழைய பாடல்கள் ஆவணக் காப்பகம்" தெரிந்து அதில் பதிவு செய்து ஒரு இரவில் நிதனாமாக கேட்ட போது பாட்டுடன் பதினைந்து வருடங்களும் பெருகி வழிய...இதே போல் "நெருப்பிலே பூத்த மலர்" படத்தின் "எங்கெங்கும் அவள் முகம்",  "பாலூட்டி வளர்த்த கிளி" படத்தின் "நான் பேச வந்தேன்", "கொக்கரக்கோ" படத்தின் "கீதம் சங்கீதம்" "ஆட்டோ ராஜா" படத்தின் "சங்கத்தில் பாடாத" என்று நீளும் கணக்கற்ற பாடல்களை என்னிடம் சேர்த்த BSA SLR க்கு நன்றி. இந்த படத்தின் பெயர்களை எல்லாம் கடைகளில் நெளிந்தபடி கேட்டு அலைந்ததும் cassette வந்த பின் கேட்கும் பொழுது கிடைக்கும் விளக்க இயலாத சந்தோஷமும் தனி.

"padmanabhan" enbhadhu "பேபி"யாகி மரியாதை நிமித்தம் "பேபியப்பா" என்றழைக்கப்பட்ட, எனக்கு கிரிக்கெட் அறிமுகம் செய்த Kapil Dev இன் தீவிர ரசிகரான என் மற்றொரு பெரியப்பா [இவர் டிவி இல்லாத அந்த காலத்தில் எந்த நாட்டில் match நடந்தாலும் ABC, BBC என்று அந்த நாட்டு stationஐ தன் radioவில் பிடித்து விடுவார்]   ஒரு அதிகாலை சர்க்கரை நோயிடம் முழுவதுமாக தோற்ற பொழுது குடும்ப வைத்தியரை அழைத்து வரும்படி என் அப்பா அனுப்ப மாலை முரசு office அருகே செயின் அறுந்து விட்டது. "K,A,D,A,L கடலா காதலா? கடல் shampoo தான் குளிச்சா நல்லாருக்கும்" என்று நாளுக்கு நூறு முறை ஒலிக்கும் அர்த்தமில்லா advertisement முடிந்து காலை 7.30 மணி திருச்சி வானொலியின் முதல் பாட்டாக "மெட்டி ஒலி காற்றோடு" எதிரில் உள்ள டீ கடையில் ஓடிக்கொண்டிருக்க அதில் வரும் "துருதூ துதுதூ.. என்னும் humming, அதை தொடர்ந்து வரும் violin இவற்றுக்கிடையில்  எவ்வளவு போராடியும் செயின் துருப்பிடித்து இருந்ததால் மாட்ட முடியாமல் கிட்டத்தட்ட அழுகை எட்டிப்பார்க்கையில் என் அப்பா  "எண்ணெய் போடுடா" என்று சொல்லி சொல்லி அலுத்து போனது ஞாபகம் வர  அக்கடையில் வடை போட்டுக் கொண்டிருந்த முதியவர் chain போட உதவி செய்து "தம்பி அடிக்கடி எண்ணெய் போடணும்" என்று சொல்லிவிட்டு போக doctor இல்லாமல் வெறுங்கையுடன் வீட்டில் நுழைந்த போது எத்தனையோ score கள் சொன்ன அந்த வெள்ளை நிற பாக்கெட் transistor யும் பெரியாப்பவையும் பார்ப்பது அன்றே கடைசி என்று புரிந்தது. அதன் பின் சைக்கிள் செயினுக்கு மட்டுமில்லை எந்த இயந்திரத்தின் பராமரிப்பையும் எளிதில் மறந்ததில்லை. 
இந்த "மெட்டி ஒலி" பாட்டின் ஆரம்பத்தில் ஏன் ரேடியோவில் வருவது போல் noise irukkiradhu? ["தோகை இளமையில்..." பாட்டில் "பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் போட வேண்டும் புதுத்தென்றலோ பூக்களில் வசிக்கும்" வரிகளில் வரும் noise போல]
குறிப்பு: அரிது - இனிது "மிதிவண்டியும் மீளா நினைவும்"பகுதிகளின்  முடிவில்.