Sunday, January 27, 2013

32. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 19


நாம், சமூகத்துடன் நேரடி தொடர்பில் இறங்குவது பெரும்பாலும் கல்லூரியில் கால் வைக்கும் பொழுது துவங்குகிறது. இதன் ஒரு வடிவம், NCC, NSS போன்ற அமைப்புகளில் சேர்ந்து "நாட்டு நலப் பணி"களில் ஈடுபடுவது. நம்மில் பெரும்பாலானோர் நம் கல்லூரி நாட்களில் இதில் பங்கு பெற்றிருப்போம்..

எனது "இளங்கலை" பருவத்தில் NSS சார்பாக நாங்கள் traffic ஒழுங்குபடுத்தும் பணியில் சில பொழுது பணியாற்றியிருக்கிறோம். அத்தகைய ஒரு தினத்தின் மாலைப் பொழுதில், நெரிசல் மிகுந்த திண்டுக்கல் ரோடு சந்திப்பில் நாங்கள் நிறுத்தப் பட்டிருந்தோம். பழைய ஆரிய பவன் ஒரு முனையுமாய், முருகன் கோயில் மறு முனையுமாய் இருக்கும் அந்த நான்கு ரோடு சந்திப்பில், பக்கத்துக்கு நால்வர் வீதம் கைகளை இணைத்தபடி குறுக்கே நின்றால்  red signal ஒதுங்கினால் green! ஒருபக்கக் குழு ஒதுங்கி "green" செய்யும் பொழுது ஒரு விசில் தர வேண்டும். மறுபக்க குழு உடனே மறு விசில் கொடுத்து கைகளை கோர்த்தபடி மறித்து "red" செய்ய வேண்டும். இவ்வாறு நான்கு குழுக்களின் ஒருங்கிணைப்புடன், ஒவ்வொரு பக்கத்து சாலையிலும் போக்குவரத்து நின்று செல்லும்.

சாலை ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மதுரை மகாஜனம் "இது என்னடா புதுக் கூத்து" என்று எங்களை வினோதமாக பார்த்தபடி கைத்தடுப்புகளை மீறப் பார்க்கும்.  இந்த சந்திப்புக்கு அருகில் ஒரு சிறிய அம்மன் கோயில் சாலை நடைபாதையில் அந்நாளில் இருந்தது. அங்கு "கூழ்" ஊற்றும் திருவிழா. அப்புறம் என்ன, அங்கு இளையராஜா, ஒலிப்பெருக்கியின் வழியே மனதை நிரப்பும் இசையின் கூழை எடுத்து நமக்குள் ஊற்றுவார் என்பதை தனியே சொல்லவும் வேண்டுமா?

நாங்கள் பாடல்களை கேட்டவாறே எங்கள் வேலையை செய்து வந்தோம். அப்பொழுது "தங்க நிலவுக்குள்" (ரிக்க்ஷா மாமா / 1992 / Ilayaraja / SPB) பாடல் வந்தது.

இந்தப் பாடலில் சில அற்புதங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அதை தேடியெடுக்க, இளையராஜா செதுக்கியிருக்கும் வெவ்வேறு ஒலித்தளங்களின் தோட்டத்தில் நாம் நடக்க வேண்டும். அடித்தளத்தில் கிடார் மற்றும் தபேலாவின் கைப்பிடியை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு வயலின் மற்றும் புல்லாங்குழலின் படிகளில் ஏறிய பின், லயங்களின் லாவகத்துடன் ஒரு ஊஞ்சல், நாம் அமர்ந்தாட அமைக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு புரிய வரும்.

இதை எப்படிச் செய்திருக்கிறார் இளையராஜா? சில வரிகளைத் தவிர அனைத்து வரிகளின் முடிவிலும் வரும் புல்லாங்குழல் எப்படியிருக்கிறது? ஊஞ்சலில் நாம் உயரே செல்லும் பொழுது காதின் பின்புறத்தில் ஒரு காற்று வருடிச் செல்லும்...அனுபவத்திருக்கிறீர்களா? அதைப் போன்றது இந்த வரிகளின் பின்வரும் குழலின் வருடல். அந்த உச்சியில் ஒரு நொடி நின்று, மீண்டும் கீழிறங்கி, கால்கள் தரையைத் தொட்டு, ஒரு விசை உருவாகி மறு உச்சிக்கு போவோம்...அந்த உச்சிகளில் ஏற்படும் வருடல்களை ஆணியடித்து நிறுத்த முயல்வது போல சீரான இடைவெளியில் வரும் இரண்டு கப்பாஸ்... இந்த ஊஞ்சல் வீச்சில் தரைதொடும் நடுப்பொழுதை, காலக் கட்டுக்குள் கொண்டு வருவது போலவே, இரண்டு கப்பாஸ் நடுவே ஒலிக்கும் அந்த ஒற்றை மணியோசை...

இந்த பாடலின் வசீகரம் பற்றி பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு நிமிட மயக்கத்தில் எதிர் சாலையில் விசில் ஊதியது எங்கள் காதில் ஏறவில்லை. ஏறியிருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயம் என்று அப்போது எங்களுக்குத் தோன்றவும் இல்லை. பதில் விசில் ஊதி, கைகளை கோர்த்து உடனடி தடுப்பு ஏற்படுத்த வேண்டிய நாங்கள், இசை அடுப்பை ஊதிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட நிமிடத்துக் குழப்பத்தில், பெருநெரிசல் ஏற்பட்டு அந்த குறுகிய சாலைகளின் சந்திப்பு குழப்பமாகிப் போனது... "college பசங்க கிட்ட பொறுப்பான வேலைய‌ கொடுத்தா இப்படித்தான் ஆகும்" என்று சொல்லியபடி எங்களை கடந்து போனார் ஒருவர்.

இப்பொழுது அதே இடத்தில் "automatic signal" வந்து விட்டது. இன்றும் அந்த இடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம், அத்தனை நெரிசலிலும், இரைச்சலுடன் கடக்கும் வாகனங்களுக்கு இடையிலும், அனைத்து சத்தமும் மறைந்து போய், அந்த வரிகளுக்கு முடிவில் வரும் புல்லாங்குழல் எங்கிருந்தோ என் காது மடலை தொடுவது போன்ற ஒரு உணர்வு.

நாம் கடக்கும் சாலைகள் அனைத்துமே காலத்தின் பாதைகள் தானே?

Friday, January 11, 2013

31. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 18


நாம் பயணம் போகும் பொழுது எடுக்கும் பேருந்து பயணச்சீட்டுக்களை என்ன செய்வோம்? இறங்கியவுடன் கசக்கி எறிவோம். பக்கத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போடும் பழக்கம் கூட நமக்குக் கிடையாது. ஆனால் என்னிடம் ஒரு "40 பைசா" டிக்கெட் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பத்திரமாக இருக்கிறது. ரோஜா நிறத்தில் இருக்கும் அதன் உள்ளே கால ரோஜாவின் வாசனையை ஒளித்து வைத்திருக்கிறேன்.

அன்று வழக்கம் போல் பழங்கானத்தம் petrol bunk அருகே பேருந்து நின்றது. அதற்கு சில நிமிடங்கள் முன்னர் கூட்ட நெரிசலில் நான் "pass" எடுக்க எத்தனிப்பதை கவனித்த நடத்துனர் என்னை "வைத்துக் கொள்" என்று சைகை செய்து போய் விட்டார். பஸ் நின்ற இடத்தில் இரண்டு checkerக‌ள் நின்று கொண்டிருந்தனர்.டிக்கெட் எடுக்காததற்காக நான்கைந்து பேர்கள் சற்று தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பார்த்தவாறே படிக்கட்டில் இறங்கிய என்னை கீழே இருந்த checker நிறுத்தினார்.

நான் பழக்கமான உச்சரிப்பில் "pass" என்றேன். "எடு" என்றார் . பையின் பல இடங்களில் தேடியும் பாஸ் பிடிபடாததால் மெய்யில் ஒரு கலக்கம் தோன்றியது. "வீட்டுல மறந்து வச்சிட்டேன் சார்..." என்ற என் இழுவை முடியும் முன் என்னை அந்த வரிசையில் ஒதுக்கி நிற்க வைத்தார்.

வரிசையாக நின்றிருந்த பஸ்களின் உள்ளிருந்தவர்களும் நடந்து போகின்றவர்களும் பள்ளிச் சீருடையில் இருக்கும் என்னையே பார்ப்பது போல் அவமானம் பிடுங்க, என் காதுகள் சாலையின் எதிர்புறம் இருந்த டீ கடையின் ஒலிப்பெருக்கி நோக்கி ஓடியது...அது காலையில் "ஒருபடப் பாடல்கள்" வரும் நேரம். "கவிக்குயில்" [1977/ Ilayaraja] கூவிக் கொண்டிருந்தது.

எனது பேருந்தின் conductor, பெரியார் நிலையம் - திருப்பரங்குன்றம் வழித்தடத்தில் பயணம் செய்பவர்களுக்கு பரிச்சயமான முகமாக இருக்கலாம். நெற்றியில் சிறிய குங்குமப் பொட்டுடனும், அதிகளவு எண்ணெய் தடவப்பட்டு படிய வைக்கப்பட்ட தலையுடனும், சட்டையின் கையிடுக்குப் பகுதிகளில் பஸ் புழுக்கத்தின் வியர்வை, அதன் உப்பு மூலம் அடையாளம் வரைய, வலம் வரும் பொறுமைமிக்க மனிதர்.

ராதையை பூங்கோதையை கண்ணன் அழைப்பதாக என் காதை அடைந்த பாடலுக்கிடையில், தனது stage collection வெள்ளைப் பேப்பரை செக்கரிடம் கொடுத்து சரி பார்த்த conductor என்னைப் பார்த்தபடி, "தம்பி பாஸ் மறந்துருச்சு... நான் தான் முன்னாடி போயிட்டு வந்து ticket தாரேன்னு முன்னாடி போயிட்டேன்" என்று அந்த நாற்பது பைசா டிக்கெட்டை என் கையில் திணித்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழிக்க, "கிளம்பு கிளம்பு" என்றார். அவர் என்னையும் என் மறதியையும் காப்பாற்றியிருக்கிறார் என்று புரிய சில நிமிடங்கள் ஆனது.

நமக்கு சற்றும் சம்பந்தமில்லா மனிதருக்கும் உதவிட முடியும் என்று அடிமனதில் ஆணி அடித்துப் போனார் அந்த பேருந்து நடத்துனர். மெதுவாக நடந்து சற்று தூரம் கடந்து நான் திரும்பி பார்க்கையில் ஒரு பத்து பேராவது டிக்கெட் இல்லாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். தான் கண்ட காதல் ஓவியம், கனவோ நினைவோ என்று சாலையில் போய் வருவோரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் சுஜாதா

இவை நடந்த சுமார் பத்து நிமிட இடைவெளியில், "காதல் ஓவியம் கண்டேன்" மற்றும் "குயிலே கவிக்குயிலே" கடந்து போனதை அவ்வப்பொழுது நான் என்னையறியாமலே கவனித்து கொண்டிருந்திருக்கிறேன் என்பது, பின்னாளில் இந்தப் பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம், அந்த பத்து நிமிடங்கள், பளிங்கில் வரையப்பட்ட கருநிற ஓவியம் போல் துல்லியமாக நினைவில் மீண்டு வருவதன் மூலம் ஒரு வித பரவசம் கொடுக்கிறது.

"சின்னக் கண்ணன் அழைக்கிறான்" பாடலில் சில சிறப்புகள் உண்டு. தபேலாவில் தவழும் விரல்கள் விடுபடும் இடைவெளிகளை, கிடாரால் கோர்த்து ஒரே சரமாக கொண்டு செல்வார் இளையராஜா. பிற்பாடு ஆயிரக்கணக்கான பாடல்களில் அவர் இதைச் செய்திருந்தாலும், இந்த உத்தியின் மூலம் நம் மனதின் ரசனைக்கு உற்சாகமூட்ட‌ அவர் முயன்ற ஆரம்ப கட்ட நாட்களில், வெளிவந்த முக்கியமான பாடல்களில் இதுவும் ஒன்று.

பொதுவாக புல்லாங்குழல், வயலின், வீணை போன்றவற்றை ஒன்றுடன் மற்றொன்று ஒத்து, பின் தொடர்ந்து வருமாறு வைப்பது தான் இளையராஜா வழக்கம். இந்தப் பாடலின் இரண்டு சரணங்களுக்கு முன்னரும் ஒரு புல்லாங்குழல் மற்றொரு புல்லாங்குழலையே தொடர்வது நமக்கு வித்தியாசமான உணர்வு தரும் - ஒரு பாம்பின் மேல் மற்றொரு பாம்பு ஊர்வதை பார்ப்பது போல....

ஒவ்வொரு சரணமும் முடிந்து மீண்டும் பல்லவிக்குள் நுழைகையில் கிடார் "கண்ணன் அழைக்கிறான்" என்ற வார்த்தைக்குள்ளேயே ஒரு சுற்று சுற்றி அடங்கும்.

இதே படத்தில் வரும் "கவியே கவிக்குயிலே" பாடலின் tabla-guitar combination,அது வரை நாம் கேட்டிராத ஒரு கெட்டித்தன்மையுடன் இருக்கும். இதில் தபேலாவின் ஆழத்தையும் கிடாரின் ஆழத்தையும் எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று இளையராஜாவுக்கு எப்படித் தோன்றியதோ...ஆனால் அந்த விகிதம் இதுவரை வேறு எந்தப் பாடலிலும் அவர் பயன்படுத்தவில்லை.


அன்று duty முடிகையில் அவருக்கு நாற்பது பைசா இடித்திருக்கும். அந்த நாட்களில் நாற்பது பைசா என்பதற்கு மதிப்பு இருந்தது. ஆனாலும் அடுத்த நாள் அவரிடம் நாற்பது பைசாவை திருப்பிக் கொடுக்கையில் அவர் வாங்கவில்லை!

ஒரு வருடத்திற்கு முன் திருப்பரங்குன்றம் செல்லும் பேருந்தில் இவரை பார்க்க நேர்ந்தது. நன்றாக நரையேறிய தலையுடன், அதே குங்குமப் பொட்டுடன், அதே வழித்தடத்தில் அவர் இருக்கிறார். முன்னர் விரல்களுக்கிடையில் ரூபாய் நோட்டுக்களையும், விதவிதமான நிறத்தில் பயணச்சீட்டுகளையும் வைத்திருந்த இவரிடம் இப்போது பயணச்சீட்டு இயந்திரம் இருக்கிறது. பொத்தானை அழுத்த, எட்டு ரூபாய் என்று அச்சடிக்கப்பட்டு ஒரு வெள்ளை காகிதம் வெளிவர, கிழித்துக் கொடுத்தார் அவர். அதை வாங்கும் பொழுது, அந்த பயணச்சீட்டு மிகவும் கனமாகத் தோன்றியது. கால எடை! காலத்தின் கனத்தை எப்படி அளப்பது? வருடங்களைக் கொண்டு நாம் அளக்கலாம். நம் வாழ்க்கையைக் கொண்டு காலம் அளக்குமோ?