Sunday, March 10, 2013

34. ஒரு பாடல் வரி...ஒரு சமூக நெறி...


ஒரு புதிய கண்டுபிடிப்பை சாதித்த‌ விஞ்ஞானியின் மகிழ்ச்சியுடன் இருந்தேன் நான்...இவ்வளவுக்கும், அரிதான பாடல்களை செய்து தரக்கூடிய ஒரு தரமான காசெட் கடையை கண்டறிந்தது மட்டுமே நான் செய்தது. மாதம் எப்போது பிறக்கும், அந்த மாதத்திற்கான "cassette பணம்" நாற்பது ரூபாய் அப்பா எப்போது தருவார் என்று காத்திருந்த நாட்கள் அவை.

நாற்பது ரூபாயில் ஒரு "60" காசெட் வாங்கி ரெகார்டு செய்து விடலாம். அதாவது, நாற்பது ரூபாயில், எத்தனை காசு கொடுத்தாலும் வாங்க முடியாத, நினைவாகிப் போன நிகழ்வுகளை மனக்கினற்றிலிருந்து மீண்டும் மீண்டும் ஒரு மணி நேரம் இறைத்துக் குளிக்க தோதான இசை வாளியை வாங்கி வரலாம்!

ஜெயச்சந்திரன் பாடல்கள் லிஸ்ட் மூலம் அறிமுகமான அந்த கேஸ்ட் கடை முதியவர், தான் செய்யும் வேலையைத் தாண்டி, அதை எத்தனை பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் நேசித்தார் என்பதை உணர்த்தும் வண்ணம் ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன.

நான் ஒரு முறை பதிவு செய்யக் கொடுத்த பாடல்களில் "பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே" [டிக்...டிக்...டிக் / 1981 / Ilayaraja / Yesudas / Jency] இருந்தது. அப்பொழுது நான் பள்ளி இறுதி  வகுப்பில் இருந்தேன்.

மிருதங்கத்தில் மிதந்தபடி  மேற்கத்திய தளத்திற்கு தாவும் இடங்களுக்காகவும், பல வரிகளின் முடிவில் அந்த வரிக்கு மெருகூட்டும் வண்ணம் வரும் வயலினுக்காகவும், அந்த இரண்டாம் சரணத்திற்கு முன்னர் வரும் ஜென்ஸியின் humming முடிந்து, மற்ற அனைத்து இசைக் கருவிகளும் மௌனம் காக்க, தனியே இழைந்தோடும் வயலினுக்காகவும், பல்லவியில் வரும் "விழிகளால் இரவினை விடிய‌ விடு" என்னும் வரிக்காகவும் அந்தப் பாடலை record செய்யும் விருப்பம் ஏற்பட்டது.

இந்தப் பாடலின் முதல் சரணத்தில் ஒரு வரி வெட்டப்பட்டிருக்கும். அப்போது அந்த வரி பொது ஒலிபரப்பில் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பல இடங்களில் இந்தப் பாடல், அந்த "வெட்டு" இல்லாமலலேயே ஒலித்துக் கொண்டிருந்தன.

பதிவு செய்யக் கொடுத்து சில தினங்கள் கழித்து, அவரின் கடைக்குச் சென்று ரெடியான காசெட் வாங்கிக் கொண்டு, அன்றிரவு வீட்டின் மொட்டை மாடியில் கேஸட்டை "சோதனை ஓட்டம்" விட்டேன். பாடலை நம் முதியவர் அந்த வரி நீக்கப்பட்ட வடிவத்தில்தான் பதிவு செய்திருந்தார். சட்டென்று அறுபட்டு ஒரு வரி தாண்டிப் போவதால், பாடலின் ஓட்டத்தை தடை செய்வது போல இருந்ததால், எனக்கு அது பிடிக்கவில்லை. மறு தினம் மாலை கேசட்டை எடுத்துக் கொண்டு அவரிடம் போனேன். "பல இடங்களில் இந்தப் பாடல் முழுதாக கிடைக்கிறதே...ஏன் நீங்கள் மட்டும் வெட்டுடன் பதிவு செய்திருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அவர், "இல்லை தம்பி. நான் அந்தப் பாடலை அந்த வடிவில்தான் record செய்து தரமுடியும்" என்று சொல்லி விட்டார்.

மூன்றாண்டுகள் கழித்து நான் இளங்கலை கணிதம் முடித்த பின், மேற்கொண்டு பம்பாய் செல்வது என்று வீட்டில் திட்டமிடப்பட்டது. நானும் ஊருக்குக் கிளம்பும் முன் சில காசெட்களை பதிவு செய்ய எண்ணி நமது கடைக்குச் சென்றேன். நான் பம்பாய் போவதாகவும் ஒரு வேளை அங்கேயே தங்கி விட வாய்ப்புண்டு எனவும் அவரிடம் சொன்னேன். "அந்த யேசுதாஸ் ஜென்ஸி காசெட்டை கொண்டு வாங்க" என்றார். அடுத்த நாள் அவரிடம் அதை கொடுத்த போது, "மற்ற காசெட்டுகள் வாங்க வரும்பொழுது இதையும் வாங்கிக்குங்க" என்று சொல்லி அதை வாங்கி வைத்துக் கொண்டார்.

அந்த வார இறுதியில் எனக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. எனது புது காஸெட்டுகளை சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று போட்டுக் காட்டிய அவர், இறுதியில் "யேசுதாஸ் ஜென்ஸி" கேஸட்டை ஓட விட்டார். சரியாக "பூ மலர்ந்திட" முதல் சரணத்தில் நிறுத்தினார். அதில் வெட்டப்பட்ட வரி ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலை மட்டும் அழித்து, மறுபடியும் பதிவு செய்து தந்திருக்கிறார் அவர்.

"தம்பி, இப்போ வளர்ந்து பெரியவானாயிட்டீங்க...இனிமே நீங்க இந்தப் பாட்டை முழுசாவே கேட்கலாம் அதான் உங்கள அந்த cassetteடை கொண்டு வரச் சொன்னேன். பாட்டை முழுசா மறுபடி record செஞ்சுருக்கேன்...ஆனா இந்த ஒரு வரி அழகான‌ பாட்டையே எவ்வளவு அசிங்கமாக்கிடுச்சு பாத்தீங்களா" என்றார். எத்தகைய சமூக பொறுப்புணர்வுமிக்கவராக இருந்தால், தான் செய்வது வியாபாரம் என்று தெரிந்தும், இது போன்ற "கொள்கைகள்" வாடிக்கையாளர்களை இழக்கக் கூட வைக்கும் என்று புரிந்தும், இத்தகைய "தரம்" பற்றிய அக்கறையுடன் செயல்பட முடியும்!

இப்பொழுது சேனலுக்கு சேனல், "ஜூனியர்" பெயரில் "சீஸன்" "சீஸனாய்" சீரழிந்து கொண்டிருக்கிறோமே...அங்கு அர்த்தம் விளங்காமல், தரக்குறைவான பாடல்களை சிறுவர் சிறுமியர் பாடும்பொழுது, "எத்தனை அனுபவித்து பாடுகிறாய்" என்றும் "expression போதாது" என்றும் நடுவர்கள் கூறும் பொழுது...இசை மேதாவிகளாக தங்களை கருதிக் கொள்ளும் இந்த நடுவர்களுக்கு சற்றேனும் பொறுப்பு இருந்தால், எவரேனும் தரம் குறைந்த வரிகள் உள்ள‌ பாடலை பாடத்துவங்குகையிலேயே "சபையில் இந்தப் பாடல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது" என்று சொல்லும் துணிவு இருந்திருக்குமே...ஒரு வேளை நடுவர் வாய்ப்பும் டிவி தரும் விளம்பரமும் போய் விடும் என்ற பயமோ?

"பூ மலர்ந்திட" பாடலை சமீபத்தில் ஒரு பத்து வயது சிறுமி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடினான். கேஸட் கடை முதியவர் "இந்தப் பாடலை இந்த வடிவத்தில்தான் என்னால் பதிவு செய்ய முடியும்" என்று இருபது வருடங்களுக்கு முன் சொன்னது காதருகில் கேட்டது...