எங்கள் வீட்டுக்குள்ளேயே 3 ஆசிரியர்கள் (maths 2, chemistry 1) இருந்தும் அவர்கள் மெச்சும்படி நான் ஒரு முறை கூட mark வாங்கவில்லையே என்ற வருத்தம் இன்றும் எனக்கு உண்டு. அதிலும் கணக்கு மீது எனக்கு பிணக்கு. பரீட்சை அன்று காலை 100 வாங்கி விடுவோம் என்றும் எழுதி முடிக்கையில் 90 வந்து விடும் என்றும் வீட்டுக்கு வந்து பெரியப்பாவிடம் answer check செய்கையில் 80 ஆகி paper கைக்கு வரும் போது 70 இல் நிற்கும். வடிவேலு பாஷையில் "opening நல்லாத்தான் இருக்கு ஆனா உன்கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா..." என்றிருந்த என் நிலையை சரி செய்ய, பெரியப்பா என்னுடனேயே எழுந்து என்னுடனேயே தூங்கி என்று என்னவெல்லாமோ செய்து பார்த்தும் scooty இல் 60 க்கு மேல் போனால் வண்டி உதறுவது போல 70 க்கு மேல் போவதில் "ஞான உதறல்" இருந்தது!
அன்று இருட்டும் பொழுது...வாய்பாடுகள் வழக்கம் போல வில்லங்கம் செய்ய home work note [எனது மூத்த அண்ணன் கல்லூரி note book cover இல் bruce lee உடம்பில் பாம்பை சுற்றிக்கொண்டிருக்கும் enter the dragon பட அட்டை நன்றாக இருக்கும். internet போன்ற எந்த communication தொடர்பும் இல்லாத அந்த நாட்களில் எங்கோ இருந்த bruce lee மதுரையில் நோட் புக் அட்டையில் வரும் அளவு popular ஆனது எப்படி?] புரட்டி கொண்டிருந்த என் காதுக்கு வரண்டாவிலிருந்து வந்தது "பனி விழும் மலர் வனம்...". அப்பொழுதெல்லாம் "வயர் chair " பிரசித்தம். எங்கள் வீட்டில் வெள்ளை சிகப்பு, வெள்ளை பச்சை, வெள்ளை நீலம் என்ற color combinationல் chairகள் உண்டு. அதில் மேலிருந்த tapeல் ஒளிந்து கொண்டிருந்தது பல வருடங்கள் நாம் கேட்க ரெடியாக இருந்த "பனி விழும்...". பக்கத்திலேயே வெள்ளை நிற cassette cover "Shanth". "Coney", "TDK" போன்ற "மேல் தட்டு" cassette போல் அல்லாமல் 8 - 10 ரூபாய்க்கு கிடைத்ததாக சொன்னதாக ஞாபகம். இந்த பாட்டை தொடர்ந்து வரும் "நீதானே எந்தன் பொன் வசந்தம்" [அதில் வரும் 2nd stanza voilin bit ] , அடுத்ததாக வரும் "ரோஜாவை தாலாட்டும்" காதல் பாட்டு என்றாலும், எல்லா உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும்
thumb rule போன்ற "வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்" வரி என "நினைவெல்லாம் நித்யா" ஒரு நீண்ட கால நினைவு.
விடுமுறை நாட்களில் மதியம் வெள்ளை கலர் கை வண்டியில் அதன் மூடியை திறந்து மூடி சப்தம் செய்தபடி வரும் ஐஸ் வண்டிக்காரனிடம் அக்காக்களும் அண்ணன்களும் ஓடி வாங்கி வரும் 10 பைசா பால் iceஐ டம்ப்ளரில் போட்டு பாதி கடித்து மீதி உருகியபின் குடித்த கொண்டாட்டமான பொழுதுகளில் அறிமுகமான பாடல்கள்தான் எத்தனை எத்தனை!
1 . செவ்வானமே பொன்மேகமே [துவக்கத்தில் வரும் violin , 3rd stanza துவக்கத்தில் வரும் humming ] 2 . கண்ணன் ஒரு கைக்குழந்தை [பத்ரகாளி] 3 . பூப்போலே உன் புன்னகையில் [ கவரி மான்] 4 . நதியோரம் [அன்னை ஒரு ஆலயம்] 5 . நானொரு கோயில் [நெல்லிக்கனி] 6 . நானொரு பொன்னோவியம் கண்டேன் [கண்ணில் தெரியும் கதைகள்] 7 . குறிஞ்சி மலரில் [அழகே உன்னை ஆராதிக்கிறேன்] 8 . சமுத்ர ராஜகுமாரி [எங்கள் வாத்தியார்] 9 . சித்திர செவ்வானம் [காற்றினிலே வரும் கீதம்] 10 . சின்ன புறா ஒன்று [அன்பே சங்கீதா]........என்று நீண்டு கொண்டே போகிறது.....
இன்றும் மதுரை வீட்டில் மீதமிருக்கும் சில டம்ளர்களில் தண்ணீர் குடிக்கையில் வருடங்களையும் சேர்த்து விழுங்கி புரையேறும் பொழுது அது தற்செயலானது என்று தோணுவதில்லை [மற்றவர் நம்மை நினைத்தால் புரையேறும் என்றால் காலம் நம்மை நினைத்தாலோ காலத்தை நாம் நினைத்தாலோ புரையேறுதல் சாத்தியம்தானே?]. இன்று baskin-robbins போன்று பகட்டான பெயர்களில் பல வகை கலர்களில் கிடைக்கும் ஐஸ் கிரீம்கள் அந்த 10 பைசா பால் ஐஸ் நினைவின் சுவை தருமா?
"Coney "யில் பல வருடம் பேணிய "காதல் ஓவியம்" - இந்த படத்தின் பாட்டு வரிசை கிரமமாக மனதில் பதிந்தது போல் (a+b) whole cube forumla கூட பதியவில்லை. பூவில் வண்டு நுழைந்து பந்தம் ராக பந்தமாகி வெள்ளி சலங்கைகள் பூஜைக்காக வாடி அம்மா அழகே என்ற கீதத்தை நதியிலாடும் பூவனத்தில் குயில் கேட்க சொல்லி ஓயும் சங்கீத ஜாதி முல்லை வரை வாழ்க்கை முழுதும் ஞாபகமிருக்கும் வைரமுத்துவின் வரிகளை "food supplement" போல் தின்ற வருடங்கள்...
"நதியிலாடும் பூவனம்" பாட்டில் வரும் "காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்" வரியில் எனக்கு அன்று ஒரு சந்தேகம். மதுரையில் பெரும்பாலான ஊர்வலங்கள் எங்கள் வீடு வழியேதான் போகும். "கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால்..." [என்னவாகும் என்றுதான் இன்று உலகத்துக்கே தெரியுமே] "பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருந்தவர் யார் " "நீங்க நல்ல இருக்கணும் நாடு முன்னேற" போன்ற பாடல்களுடன் சத்தமாக போகும் ஊர்வலங்களில் இந்த "தேவ ரோஜா" மட்டும் ஊர்வலம் போகவில்லையே என்றும் TPK சாலை தெரியும் அதென்ன "காமன் சாலை" என்றும் சந்தேகம். வருடங்கள் கழித்து இந்த வரிகள் புரிந்து பின் வயதாக வயதாக "எல்லா வித" ஊர்வலங்களிலும் அபத்தமே அதிகம் என்று தோன்றுகிறது.
மழை வருவது போல் மேகம் இருக்க வேண்டும். காற்றில் மழை வாசம் வீச வேண்டும். ஆனால் மழை பெய்ய கூடாது. இத்தகைய சூழலில் மொட்டை மாடியில் பாயிலோ ஜமுக்காளத்தில்லோ வானம் பார்த்தபடி கீழ்க்கண்ட பாடல்கள் கேட்டால் பத்தாயிரம் செலவழித்து கேரளா aayurvedha massage எதற்கு?
அரிது - இனிது - பகுதி 2
1.தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்
2.மெட்டி ஒலி - மெட்டி
3.சாலையோரம் - பயணங்கள் முடிவதில்லை
4.பருவமே - நெஞ்சத்தை கிள்ளாதே
5.தாழம்பூவே - கை கொடுக்கும் கை
6.கண்மணியே - ஆறிலிருந்து அறுபது வரை
7.பூ வண்ணம் - அழியாத கோலங்கள் [salil choudri]
8.இதயம் போகுதே - புதிய வார்ப்புகள் [குறிப்பாக 2nd stanza இசை கோர்வை. இதில் வரும் 5 நொடி bitஐ பிறகு பூவே பூச்சூடவாவில் "சின்ன குயில்" பாட்டில் அப்படியே reuse செய்திருப்பது ஏனோ இளையராஜா?]
9.ஆனந்த தாகம் - வா இந்த பக்கம்
10.புல்லாங்குழல் மொழி - பேரும் புகழும்