Saturday, August 25, 2012

23. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 13


ஒரு பாடல் எப்பொழுது, எப்படி நம் மனதுக்குள் இறங்குகிறது? இந்த உலகை நிர்வகிக்கும் காலத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்றோ? ஏதோ ஒரு நிகழ்வில் ஒரு பாடல் முழுதுமோ அல்லது அதன் ஒரு துளியோ நம் காதில் விழுகிறது. அதை நாம் கேட்ட நொடியில், பிறகு பலமுறை கேட்கும் நொடிகள் உரசி உரசி காலத்தின் இழை பாடலுக்குள் நுழைந்து மேலும் மேலும் நினைவுகளை கோர்த்துக் கொண்டே போகிறது இல்லையா? இதில் மனதுக்குள் இறங்கிய நொடி என்று எதை அடையாளப்படுத்துவது?

இப்படித்தான், நான் B.Sc படித்துக் கொண்டிருந்த பொழுது, பசுமலை பள்ளியில் பார்வையற்றோர் எழுதும் தேர்வுக்கு எங்கள் கல்லூரி மூலம் சென்றிருந்தேன். அவர்கள் விடை சொல்லச் சொல்ல‌ நாம் எழுத வேண்டும். செந்தில் குமார் என்பவருக்கு தேர்வு எழுத நான் அவர் அருகில் அமர்ந்தேன். அவர், பிறந்த பொழுதிலிருந்து மனதின் மூலமே உலகைப்பார்த்து வளர்ந்தவர். பசுமலையில், சாலையில் இருந்து நீண்டு அடிவாரத்தில் முடியும் அழகிய பாதையின் முடிவில் இருந்தது தேர்வு அறை.

செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, "நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது". எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம் வரை நடந்து வருவோம். சரியான இடங்களில்,  தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை "hum" செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.

அப்படிப்பட்ட தேர்வு முடிந்த வெயில் நிறைந்த மதிய வேளை ஒன்றில் தான் அவர் "ஊரெல்லாம் உன் பாட்டுதான்" (ஊரெல்லாம் உன் பாட்டு / 1991 / 3 versions Yesudoss, Swarnalatha, Ilayaraja) - முணுமுணுத்தபடி மூன்றாக மடித்திருந்த தன் ஊன்றுகோலை பிரித்து நீட்டிக் கொண்டிருந்தார். இந்தப் பாடல் மூன்று பேரால், மூன்று வெவ்வேறு இசைத் தளங்களில், மூன்று முறை பாடப்படும். இந்த மூன்று  மூன்று வெவ்வேறான உணர்வின் ரேகைகளை மனதில் வரையக்கூடியவை. எனக்கு இரண்டாம் stanzaவில் வரும் வயலின் மீது ஒரு அதீத பிடிப்பு. இளையராஜா பாடும் version ஒரு stanza மட்டுமே கொண்டது என்றாலும் அதிலும் இந்த வயலின் கோர்வை வரும்.

இசைக் கல்லூரியில் பயிலும் அவரிடம் இந்தப் பாட்டின் இரண்டாம் stanza வயலின் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது அதை உங்கள் புல்லாங்குழலில் வாசியுங்களேன் என்றேன். லேசாக சிரித்தபடி தன் ஜோல்னா பையை தடவிக்கொண்டார். அதனுள் உறங்கிக்கொண்டிருக்கும் குழலை எழுப்பினாரோ என்னவோ...

சற்று தூரம் நடந்த பின், அடிவேர்கள் பரந்திருந்த ஆல மரத்தின் அடியிலிருந்த சிமிண்ட் திட்டில் அமர்ந்து புல்லாங்குழலை வெளியில் எடுத்தார். காலத்தின் துளைகளில் நினைவை இட்டு நிரப்பக் காத்திருந்தது போல பேசாமல் இருந்தது அந்த புல்லாங்குழல். பெருகி வரும் காட்டருவியின் நீர் பிரிந்து, சிற்றோடை போல இரு கரைகளிலும் இருக்கும் சிறு சிறு பாறைகளின் நடுவே காலகாலமாக வழிந்தோடி வழிந்தோடி, பச்சை பூத்து ஒரு வாசம் வீசுமே..அந்த சூழலையும் அந்த வாசனையும் நுகரும் பொழுது ஒரு உணர்வு தோன்றுமே...அதைப்போன்றதொரு உணர்வை பீறிட்டு கிளப்பியது அவர் வாசித்த "ஊரெல்லாம் உன் பாட்டு".

அந்த இரண்டாம் stanza  துவக்கத்தில் வரும் வயலின் நடுவே, வயலினை வைத்தே ஒரு ஒற்றை stroke போட்டிருப்பார் இளையராஜா...அதை அப்படியே புல்லாங்குழலில், ஒரு காலத்துகளுக்குள் நினைவின் ஒரு சொட்டை தொட்டு எடுப்பது போல், குழலின் துளையில் விரலை வைத்தெடுத்து வாசித்தார் செந்தில் குமார். பாடலின் ஒரு மிக அற்புதமான நொடிக்குள் நம்மைத் தூக்கியெறியும் அந்த வயலின் நொடிகள்...ஒருவேளை அந்த இரண்டாம் stanzaவில் முழுவதுமே புல்லாங்குழலை வைத்திருக்கலாமோ இளையராஜா என்றேன் நான். இது நடந்தது 1993ல்.

இந்தப் பாடலில் வரும் கப்பாஸில் ஒரு மாயம் இருக்கிறது. நதியோ, அருவியோ ‍ ஏதோ ஒரு நீரோட்டத்தில் கால்களை ஆட்டியபடி இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். எத்தனை வேறுபட்ட வேகத்தில் கால்கள் ஆடத்துவங்கினாலும், பாடல் செல்ல செல்ல, தானாகவே அந்த கப்பாஸ் ஒலிக்கும் இடைவெளியின் லயத்திற்கேற்றவாறே நம் கால்கள் நீரில் அலையத்துவங்கும்!

இந்தப் பாடல் பற்றி ஒரு பதிவில் முடிக்க இயலவில்லை. காலத்தின் நீள அகலங்களை நம் வசதிக்கேற்றபடி நீட்டவோ சுருக்கவோ, நினைக்கவோ மறக்கவோ நமக்கு உரிமை இருக்கிறதா என்ன? காலம் வரையும் வடிவத்திற்கேற்றவாறு படிந்து கிடக்கும் ஞாபகங்கள் தானே நம் மனதின் வடிவம்? எனவே அடுத்த பதிவிலும் "ஊரெல்லாம் உன் பாட்டு" தொடரும்...





Saturday, August 11, 2012

22. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 12


நமது வேர்கள் மூன்று விதமாக மண்ணில் படிந்திருக்கக் கூடும். ஒன்று - நகரத்திலேயே பிறந்து வளர்ந்து, கிராமங்களின் வாசனையை வாகனங்களில் கடக்கும் பொழுது மட்டும் நுகரும் வகை. இரண்டு - முந்தைய தலைமுறை கிராமத்தில் இருந்து, இன்றைய தலைமுறை நகரத்திற்கு மாறி, நினைவில்   மட்டும் கிராமங்களை சுமக்கும் நிலை. மூன்று - விட்ட குறை தொட்ட குறை கிராமத்தில் தொடர, என்றோ ஒரு நாள், நகரத்திலிருந்து கிராமம் சென்று நினைவை அறுவடை செய்து வருபவர்கள். வகைகள் மூன்று என்றாலும் அதன் வாசனை ஒன்றே!

சமீபத்தில் ஒரு பிற்பகல் வேளையில் மதுரை காரியாபட்டி அருகில் இருக்கும் எங்கள் "விட்ட குறை" கிராமத்திற்கு சென்றிருந்தேன். முன்பெல்லாம் மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். இப்போது கிராமம் வரை பஸ் போகிறது. ஆனால் அந்த நடையில் ஒரு சுகம் உண்டு. கால சுகம். புதிதாக போடப்படும் தார் சாலைகளில் நாம் நடக்கையில் செருப்பில் தார் ஒட்டுவது போல, சில சாலைகளில் நாம் நடக்கையில் கால்களில் காலம் ஒட்டிக் கொள்ளும். இது போன்ற‌ சாலைகளில் தாருக்குப் பதில் காலத்தை உருக்கி ஊற்றி விட்டார்களோ என்னவோ? அது இழுக்கும் இழுப்பில் நடையின் வேகம் தானாகவே தடைபடும். ஊருக்குள் செல்லும் பஸ்சை வேண்டுமென்றே தவறவிட்டு நடந்தேன். பஸ்ஸில் இருப்பவர்கள் பார்வையில் ஒரு பைத்தியக்காரன் நடந்து கொண்டிருந்தான். காலத்துடன் உறவாட சில சமயம் சற்று பைத்தியக்காரத்தனம் தேவைப்படுகிறது இல்லையா?

சிறு வயதில் கிராமத்துக்கு போகையில் எப்போது "கண்மாய்" பக்கம் போவாம் என்று இருக்கும். "சும்மா சும்மா" கண்மாய் பக்கம் போக வீட்டில் விட மாட்டார்கள் என்பதால் மதுரையில் இருந்து வேண்டுமென்றே "இயற்கை அழைப்பை" அடக்கிக் கொண்டு கிராமத்திற்கு போன நாட்கள் அவை. இப்படித்தான் ஏழாம் வகுப்பு விடுமுறையில் கிராமத்திற்கு "ஆர்வமுடன்" சென்றேன். வீடு முழுவதும் ஒரு சடங்கிற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருக்க, யாருமறியாது கண்மாய் கரையோரம் நழுவினேன். கருக்கல் நேரம். கருவேல மரங்களின் ஒல்லியான நிழல்கள் கரையெங்கும் பரவியிருக்க, முட்டியளவு நீர் "சளக் சளக்" என்று அசைந்து கொடுக்க, நீர் அருகே அமர்ந்தேன். கண்மாயின் மறுபுறம் இருக்கும் காட்டில் முயல், நரிகள் உண்டு. ஏதேனும் கண்ணில் தெரிகிறதா என்று பார்த்த கண்களை மூட வைத்தது காது. எங்கள் கிராமத்திற்கு அருகே "நரிக்குடி" என்றொரு ஊர். அந்த ஊர் இருக்கும் திசையிலிருந்து காற்றில் பறக்கும் இலை போன்ற ஏறி இறங்கி, அங்கும் இங்கும் ஒழுங்கின்றி திரிந்தபடி காதுக்கு வந்தது "கண்ணா உன்னை தேடுகிறேன்" (உனக்காகவே வாழ்கிறேன் / 1986 / Ilayaraja / SPB - Janaki).

இது ஒரு சாதாரணமான பாடல்தான். ஆனால், கேட்பவர்களுக்கு தங்களுக்கென தயார் செய்யப்பட்ட ஞாபகங்களை தரக்கூடிய மந்திரச் சாவியினால் இப்பாட்டினைப் பூட்டியிருப்பார் இளையராஜா. காற்றின் கைவரிசையால் இந்த பாடலில் வரும் அழகான வயலின் இடங்கள், குறிப்பாக இரண்டாம் stanza துவக்கத்தில் விட்டு விட்டு  வரும் வயலின் இசை, கண்மாயின் இரு கரைகளிலும் மாறி மாறி குதித்து வருவது போல இருந்தது. அதே போல், பாடலின் துவக்கத்தில் வரும் வயலின்,  வீசும் காற்றில் கிராமத்தையே தட்டாமாலை சுற்றுவது போல இருந்தது. எண்பதுகளின் நடுவில் "உண்மையான‌ காதல்" செய்ய முயன்று அல்லது செய்து உழன்று, இன்று முதுமையின் அருகே இருக்கும் பலருக்கும் இந்தப் பாடலின் "ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை" வரிகள் இன்றும் ஞாபகம் இருக்கக்கூடும்.

இந்தப் பாடல் முடிந்ததும் "கால் கழுவ" மனமின்றி அப்படியே அமர வைக்கும் விதமாக வந்தது அதே படத்தின் "இளஞ்சோலை பூத்ததா..." . இந்தப் பாடல் ஆரம்பத்தில் வரும் SPB குரலும் புல்லாங்குழலும், நீரோட்டம் உள்ள இடத்தில், வானமே கூரையாக நாம் அமர்ந்து கேட்கும் பொழுது மாறுபட்ட அனுபவம் தருவது நிச்சயம். கவிதை வரியின் ஆழத்திற்கு வெகு அருகில் நம்மை இட்டுச் செல்லும் "ஒரு மௌனம் தீர்ந்தது" போன்ற வரிகள் வைரமுத்துவை எளிதாய் அடையாளம் காட்டும்.

நிறைய நேரம் ஆகி விட்டது போலும்...வீட்டிலிருந்து ஆள் தேடி வருவதும் உரத்த குரலில் என்னை அழைப்பதும் தொலைவில் தெரிந்தது. எத்தனை திட்டுக்கள் வாங்கினாலும் அவை இந்த ஞாபக தட்டுக்களை சேகரிக்க உதவியதாகவே இருந்தது அன்று.

சமீபத்திய பயணத்தில், அன்று கேட்ட அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன் நான். கண்மாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. ஆடுகள் "மே(ய்) மே(ய்)" என்றபடி மேய்ந்து கொண்டிருந்தன. மண்ணுக்கும் நமக்குமான இன்றைய உறவை சொல்வது போல பாளம் பாளமாக தரை வெடித்திருந்தது. "கண்ணா உன்னை" பாடல் ஒலிப்பது போலவே மனதுக்கு  மனதுக்குத் தோன்றியது. நரிக்குடி பக்கம் கவனித்துப் பார்த்தும் காற்றின் ஒலி கூட கேட்கவில்லை.பாட்டு ஒலிக்க வேண்டும் என்ற எண்ணமா அல்லது ஏற்கனவே ஒலித்த கால பிம்பமா என்று யோசிக்கத் தேவையின்றி என்னைப் பின்னிழுத்துக் கொண்டிருந்தது காலம். ஒரு முறை கொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் நினைக்க வைப்பது தானே காலத்தின் மூளை! அதில் மூழ்கி மூழ்கி எழுவதுதானே மனதின் வேலை!

Friday, July 27, 2012

21. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 11


ஒரு பாடலுக்குள்ளே கடல் மெதுவாக அசைந்து கொண்டிருக்க முடியுமா? "கடல்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமலேயே ஒரு பாடல் முழுதும் கடலின் வாசனை வீச முடியுமா? ஒரு பாடலே படகாக, அதன் மேல் நாம் அமர்ந்து, கடலில் மிதந்து, நினைவில் மூழ்கிக் கொண்டிருக்க முடியுமா? நிச்சயம் முடியும்.

அது என் ஏழாம் வகுப்பு ஆண்டு விடுமுறை நேரம். என் அப்பா பணிபுரிந்த நீதித்துறை சார்பில் ஊழியர்கள் மாநாடு கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது. இதை பயன்படுத்தி மாநாட்டின் முன்பின் தினங்களில் சுற்றுலாவும் சேர்க்கப்பட்டு ஊழியர்களின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர். ஒரு அதிகாலை பொழுதில் மதுரை கோர்ட் வளாகத்திலிருந்து நான்கைந்து "தீப்பெட்டி" வேன்கள் (அப்பொழுது இந்த வகை வேன்கள் மட்டுமே நிறைய பேர் சேர்ந்து பயணம் செய்வதற்கு புகழ் பெற்றிருந்தன) கிளம்பின. கடல் பார்க்கும் கனவுடன் அந்த வேன்களில் இருந்த பல சிறுவர்களில் நானும் ஒருவன்.

மதிய வேளை. உணவு நேரம். திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் காற்று நம்மை இழுத்துக் கொண்டு போய்விடும் என்று தோன்றிய அத்துவான காட்டில் வேன்கள் நிறுத்தப்பட்டன. சுற்றிலும் வான் தொடும் விசிறிகள் காற்றின் வேகத்திற்கு சுற்றிக் கொண்டிருந்தன. நாங்கள் இருந்த இடம், ஆசியாவில் அதிவேக காற்று வீசும் இடமான ஆரல்வாய்மொழி. கடல் எப்போது கண்ணில் தெரியும் என்ற ஏக்கமும் உணவின் ஊக்கமுமாய் வேகமாக சாப்பிட்டு முடிக்கையில் ஒரு வித "வாசனை" பிடிபட்டது. ஆம். கடலின் விரல் நம் மூக்கை தொடப்பார்க்கும் இடம் ஆரல்வாய்மொழி. "இன்னும் சற்று தொலைவில் தான் நான் இருக்கிறேன் வா" என்று காற்று மூலம் கடல் தெரிவிக்கும் இடங்கள் நம் மனதில் சட்டென்று ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். ஆரல்வாய்மொழியும் அத்தகைய இடமே...

உணவுக்குப் பின் சற்று நேரம் ஓய்வுக்கு விடப்பட்டது. வேன் டிரைவர் cassette playerரில் பாடல்கள் போட்டு விட்டு சீட்டில் சற்று அசந்திருந்தார். நாங்கள் வேன்களை சுற்றி "ஓடிப் பிடித்து" விளையாடிக் கொண்டிருந்தோம். என் வயதுக்குள் இளையராஜா கடலை ஊற்றப் போகிறார் என்று அப்போது தெரியாது. வரிசையாக வந்து கொண்டிருந்த பாடல்களின் நடுவே
தாலாட்டத் துவங்கியது வானம்! இந்த பாடலின் வசீகரத்தினால் நான் அன்று மெதுவாக ஓடி பலமுறை ஆட்டத்தில் "அவுட்" ஆனேனா என்று தெரியாது ஆனால் அந்த பேய் காற்று வீசும் ஆரல்வாய்மொழியும், மதிய நேர‌ அமைதியும் இந்தப் பாடலும் என் மனதை என்னவோ செய்திருக்க வேண்டும்.

அன்று இரவு, கடலுக்கு அருகில் இருக்கும் Vivekananda Ashram என்ற அற்புதமான இடத்தில் தங்கும் ஏற்பாடு. அந்த van driver ஒரு அசாத்தியமான இளையராஜா ரசிகராக இருக்க வேண்டும். நாங்கள் படுக்கச் செல்லும் பொழுதில், தென்னை, பனை மரங்களுக்கிடையில் "ஊ" என்று உற்சாகமாய் ஊரை சுற்றி வந்த கடல் காற்று நாங்கள் தங்கியிருந்த இடத்தையும் தழுவிப் போக மறக்கவில்லை. வேன் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு "தாலாட்டுதே வானம்" கேட்டுக் கொண்டிருந்தார். அன்று வரை, இந்தப் பாடல் காட்சியை நான் பார்த்ததில்லை. அதன் பின்னும் சில வருடங்கள் கழித்துத்தான் பாடல் வரும் காட்சியை பார்க்க நேர்ந்தது. ஆனால், அந்த அற்புத இரவிலேயே, இசையின் துடுப்பு மூலம் என்னை கரையிலிருந்து கடலுக்குள் செலுத்திக் கொண்டிருந்தார் இளையராஜா.


மறுநாள் காலை, விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி! படகில் செல்லும் பொழுது இந்தப் பாடல் ஏனோ நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. ஏன் இப்படி? என்று தெரிய ஐந்து வருடங்கள் ஆனது. அந்த இடைப்பட்ட ஐந்து வருடங்களில் இந்தப் பாடலை பலமுறை கேட்டு மனதுக்குள் பத்திரப்படுத்தியபின், வானம் இருட்டிக் கொண்டு வரும் ஒரு ஐப்பசி மாத பிற்பகலில் அதே விவேகானந்தர் பாறைக்கு போகும் படகில் காலம் என்னை ஏற்றியது.

எனக்கு முன்னரே படகில் ஏறிக் காத்திருந்தது "தாலாட்டுதே வானம்". இந்தப் பாட்டு படகில் மட்டுமா ஏறும்? கடல் முழுதும் ஏறுமே! நம் மனது முழுதும் ஊறுமே! "தள்ளாடுதே மேகம்"? மேகம் தள்ளாடுவதை பார்ப்பதற்கு நாம் கடலில் இருக்க வேண்டும். கடலின் கரங்கள் படகை அசைக்க, அந்த அசைவின் பிம்பம் போல வானத்தின் கண்ணாடியில் மேகங்கள் அசையும் காட்சி கண்ணுக்குள் புகுந்து நெஞ்சத்தை நிறைக்கும்.

இந்தப் பாடலில், பல இடங்களில், புல்லாங்குழல் மேலே நகர, அதனடியில் வயலின் நீளும். இப்படி நீளும் வயலின், பார்வையின் பரப்பில், படகின் அடியில் மோதும் அலைகள் பிடிமானம் இன்றி ஏற முயன்று, படகின் சுவர்களில் வழுக்கிக் கொண்டு மீண்டும் கடலுக்குள் விழும் அழகு போன்றது.

படகு நீரைக் கிழித்துக்கொண்டு முன்னேறுகையில் வரி வடிவங்களாய் நம்மை விட்டு நீங்கும் நீர், படகின் பின் முனையில் மறுபடியும் குழுமி நம்மைத் தொடரும் அழகியலை சொல்கிறதோ முதல் சரணத்திற்கு முன்பு வரும் வயலின்?

நம்மை வாரிச் சுருட்டிக் கொண்டு போவது போல அடுத்தடுத்து வரும் அலைகளின் உயரம் கூடிக் கொண்டே போகையில், அந்த அலைகளின் படிக்கட்டுக்களில் படகு ஏறி இறங்கும் லாவகத்துக்கு ஏற்ற லயத்தில் மனமும் ஏறி இறங்குமே...அது போன்றது இரண்டாவது சரணத்திற்கு முன்பு ஏறி இறங்கும் வயலின்.

நம் மீது ஆங்காங்கே தெறிக்கும் கடலின் துளிகள் தரும் தொடுகை உணர்வு போல  பாடலில் ஆங்காங்கே "வைத்து எடுக்கப்படும்" கப்பாஸ்!

நம் வீடுகளுக்கும் கடலுக்கும் பல நூறு மைல்கள் தொலைவு இருக்கலாம். ஆனால், வீட்டுக்குள்ளேயே கடலை வைத்திருக்கவும், விரும்பிய பொழுது "குளியல்" போடவும் உதவுகிறது இந்தப் பாடல்!

Sunday, July 15, 2012

ஆனந்த விகடனில் "பாடல் கேட்ட கதை"

இந்த வார ஆனந்த விகடன் இதழில், மதுரை என் விகடனில் வெளியான "பாடல் கேட்ட கதை" வலைப்பூ பற்றிய குறிப்பு...





Sunday, July 8, 2012

20. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 10


நம்மில் சிறு வயதில் கிரிகெட் கிறுக்கு பிடித்துத் திரியாமல் இருந்தவர்கள் மிகக் குறைவே. வாழ்க்கை நம் மேல் ஏறி விளையாடத் துவங்கியபின் விளையாட்டுக்களில் ஆர்வம் மெதுவாக நம் மீதிருந்து இறங்கி வடியத்துவங்குவதுதான் வயதின் இயல்பு இல்லையா?

நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். முதல் "unit test" - chemistry தேர்வு தினம். எங்கள் பள்ளி மைதானத்தில் TVS Srichakra அணிக்காக league cricket விளையாட அன்று  ஸ்ரீகாந்த் வந்திருந்தார். அவரையும் அவர் ஆட்டத்தையும் பார்க்கும் ஆர்வத்தில், தேர்வுத்தாளில் பேனா பெருவேகம் கொண்டு ஓடியது. சொற்ப நேரத்தில் அரையும் குறையுமாக அவசரத்தில் அள்ளித் தெளித்த விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்து விட்டு மைதானத்திற்கு ஓடிய அந்த தினத்தில், chemistry பாடத்தை விட‌ கிரிகெட்டே மனதை ஆக்ரமித்திருந்தது வயது.

மைதானம் என்றவுடன் பெரிதாக கற்பனை செய்ய வேண்டாம். ஆனால் எங்கள் பள்ளி மைதானம் அழகானது. நீள்வட்ட வடிவில், சீரிய இடைவெளியில் சுற்றிலும் மரங்களுடன் இருக்கும். இரண்டு முனைகளில் இருக்கும் மின்சார கம்பங்கள் மட்டுமே சற்று இடையூறு போலத் தோன்றும். நான் தேர்வு அறையிலிருந்து ஓடி வந்த பொழுது ஒரு விக்கெட் விழுந்திருந்தது.  ஸ்ரீகாந்த் நான்காவதாகத்தான் வருவார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.  அவரைப் பார்க்க நல்ல கூட்டம்.  எட்டிப் பார்த்தும் இடையில் நுழைந்து பார்த்தும் அவர் அரைகுறையாகத் தான் தெரிந்தார்.ஆட்டத்தையும் ஸ்ரீகாந்தையும் நன்றாக பார்க்க‌, நாங்கள் "மரக்குரங்கு" விளையாடும் மரம் நோக்கி வேக நடை போட்டேன். மரக்குரங்கு விளையாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பொருள் நயத்துடன் இந்த விளையாட்டுக்கு பெயர் வைத்தவர் யாரோ? எல்லா மரங்களிலும் மரக்குரங்கு விளையாட முடியாது. குறைந்த உயரத்தில் நிறைய கிளைகள் பிரியும் மரமே இந்த விளையாட்டுக்கு ஏற்றது. மைதானத்தில் இருந்த சுமார் ஐம்பது மரங்களில் 2 மரங்கள் மட்டுமே "மரங்குரங்கு மரங்கள்".

மரக்குரங்கு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். இன்னும் இரண்டு விக்கெட்டுகள் விழ பலத்த ஆரவாரத்திற்கு இடையே ஆட வந்தார்  ஸ்ரீகாந்த். முதல் பந்து, கண் சிமிட்டும் நேரத்தில், மைதானம் தாண்டி, பள்ளி தாண்டி, இரண்டு தெருக்கள் தாண்டியிருந்த ராமர் கோவில் உள்ளே போய் விழுந்தது. தேர்வை அவசரமாக எழுதியது வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி, அடுத்த பந்திலேயே காற்றிறங்கிய பலூன் போல ஆனது. மீண்டும் அதே போல் அடிக்க முயன்று "போல்ட்" ஆனார்  ஸ்ரீகாந்த். அவரின் மேல் கோபம் கோபமாக வர ஏமாற்றத்துடன் மரத்திலிருந்து இறங்கினேன். அவரின் ஆட்டத்தை மட்டுமே பார்க்க வந்த கூட்டம் கலைந்தது. மெதுவாக "team" அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு இருந்த சில உள்ளூர் வீரர்கள் transistor ஒன்றில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர். திருநெல்வேலி வானொலி நிலையம் என்று ஞாபகம். ஸ்ரீகாந்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த என் காதுகளில் நுழைந்து கொண்டிருந்தது "என் ஜீவன் பாடுது"...[நீதானா அந்த(க்) குயில் / 1986 / இளையராஜா / ஜேசுதாஸ்]

இந்த பாடல் நம் மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை ஏற்றி வைக்கும் இயல்புடையது. இளையராஜாவின் இவ்வகைப் பாடல்கள் சில சூழ்நிலைகளில் கேட்கும் பொழுது நம்மை அப்படியே விழுங்கி விடும். இந்தப் பாடலும் அப்படித்தான். இதன் அடியில் வழியும் உணர்வு மதிய நேரத்தில் கேட்கும் பொழுது வீரியம் மிக்கதாக தோன்றும்.

ஏதேனும் ஒரு மதிய வேளையில்,

இந்தப் பாடலை, ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில், ஒரு மர நிழலில் கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, பாழடைந்த பழைய கால கோயில் அருகிலோ சிதிலமடைந்த‌ கட்டடங்கள் அருகிலோ கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, பாறைகள் நிறைந்த குன்றின் மீதேறி போகையில் கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, காலி செய்யப்பட்டு நன்றாய் கழுவி விடப்பட்ட, பொருட்கள் ஏதுமற்ற வீட்டுக்குள் கேட்டிருக்கிறீர்களா?

இவையனைத்தும் இந்த "பாறாங்கல்லை" நம் மீது ஏற்றி வைக்க பயன்படும் இடங்கள்.

பாடல் துவங்கும் பொழுது, ஞாபகக் குடுவையில் ஊற்றிய நினைவின் திரவத்தை காலத்தின் அடுப்பில் guitar மூலம் பற்ற வைப்பார் இளையராஜா. பாடல் முழுவதுமே இந்த கிடார், தழல் போல் அடியில் எரிந்து கொண்டே இருக்கும். நினைவு திரவத்தை கிண்டி விடும் அகப்பை போல அடியிலும் மேலுமாக சுற்றிக் கொண்டிருக்கும் வயலின். ஒவ்வொரு சரணத்தின் இறுதியிலும் உச்சத்திற்கு சென்று சட்டென்று உடைந்து போகும் அந்த வயலின் - நம் நினைவு கொதித்து, அடுப்பு முழுதும் பெருகி வழிந்து சிதறும் உணர்வின் துகள்கள் உடைபடுவதுதான் அந்த உச்சத்தில் சட்டென்று முறியும் வயலினோ? வழிந்தொடும் நினைவை மீண்டும் அள்ளி கோப்பைக்குள் எப்படி போடுவது? இளையராஜாவின் உதவியுடன் கோப்பைக்குள் போட முயற்சிக்கலாம் - பாடல் முடிந்து விட்டதோ என்று நாம் நினைக்கையில் வரும் ஜேசுதாசின் குரலையும் அதன்பின் மெலிதாக கரையும் கிடாரையும் கேளுங்கள். வழிந்தோடிய நினைவுகளையும், உடைந்து போன "கோப்பைகளின்" துகள்களையும் மெதுவாக பொறுக்க முயலும் மனதை போல அது இருக்கும்.

ஸ்ரீகாந்த் ஆடிய காலம் முடிந்து சேவக் வந்து அவருக்கும் வயதாகி அடுத்த கட்ட வீரர்களும் வந்து விட்டார்கள். ஒரு நாள் போட்டியை கூட முழுவதுமாக பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டது. ஆனால் அன்று ஸ்ரீகாந்த் முகத்தை பார்த்தபடி கேட்ட "என் ஜீவன் பாடுது" ஜீவனுக்குள்ளே ஊறியபடியே இருப்பதை என்னவென்று சொல்வது?

Saturday, June 23, 2012

19. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 9


மதுரை நகரம் முழுவதும் மத்தளம் போன்ற இடியுடன் மழை இறங்கிய ஒரு மாலை வேளை. முன்னர் கண்டிராத அளவு மூன்று நாட்கள் கொட்டித் தீர்க்கப் போகிறது மழை என்று தெரியாமல் , வழக்கமான மழை என்று நினைத்து கிடைத்த இடங்களில் ஒதுங்கினோர் ஏராளம்.சற்று நேரத்தில் நின்று விடும் என்று காத்திருந்த எண்ணற்ற பேரில் நானும் ஒருவனாய், உயர்நிலைப் பள்ளியின் முதல் ஆண்டு மாணவனாய், பழங்கானத்தம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன்...

இரண்டு பேர் சந்தித்துக் கொண்டாலே, "வாங்க காபி சாப்பிடுவோம்" என்று அருகிலுள்ள கடையில் நுழையும் மதுரை மக்களின் மனது அறிந்தே, அனைத்து பேருந்து நிறுத்தங்களின் அருகிலும் குறைந்தது ஒரு காபி கடையையாவது நீங்கள் மதுரையில் பார்க்கலாம். சூடான பாலில் சுவையான காபி தேநீர் மட்டுமல்ல, அத்துடன் வாடிக்கையாளரை மகிழ்விக்க சங்கீதமும் போடத்தெரிந்த ரசனை மிகுந்தவர்கள் மதுரை டீ கடைக் காரர்கள்.

மழைக்கு ஒதுங்கியவர்களும் காபி குடிப்போருமாய் கூட்டம் நிறைந்திருந்த கூரை வேயப்பட்ட டீக்கடையில் ஒலிக்கத்துவங்கியது "நிலவே நீ வர வேண்டும்..." [என்னருகில் நீ இருந்தால் / Ilayaraja / 1990-91]. இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் அற்புதமான கிடார், கூரையிலிருந்து மழை நீர்த்தாரைகள் தரையில் தேங்கியிருந்த தண்ணீர் மேல் விழும் தாளக்கட்டில் துள்ளத் துவங்கியது. மழையின் துளிகள் இந்த கிடாரின் இழையை பிடித்து மனதுக்குள் இறங்குவது போன்ற ஒரு உணர்வு.

காலக் கிணற்றின் மீட்க முடியாத ஆழத்தில் வீசப்பட்ட நினைவின் கல்லில் இருந்து கசியும் நீர் போல நம்முள் ஏதோ ஒன்று வழிந்து கொண்டே இருக்கும் இப்பாடல் முழுவதும். அந்த கசிவின் வடிவம் போல‌"bass guitar", மெலிதாக, அனைத்திற்கும் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் நளினம் இளையாராஜாவுக்கு மட்டுமே சாத்தியம்.

முதல் stanza ஆரம்பத்தில் வரும் அந்த புல்லாங்குழல்... அதை வாசிப்பவர் குழலின் துளைகளின் வழியே அனுப்புவது காற்றையா அல்லது நம் காலத்தையா? அல்லது புல்லாங்குழலே காலத்தின் துளைகளால் செய்யப்பட்ட கருவியா? அத்துளைகளுக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போய், "அனைத்தும் கடந்து போகும்" என்று நம்மை ஆரத்தழுவுவது போல இருக்கிறது இல்லையா?

"இணைந்து இருந்த சோலைகள் உலகை மறந்த கோலங்கள்" [1st stanza இறுதி இரண்டு வரிகள்] , "கலைந்து பிரிந்த மேகங்கள் இழந்த காதல் சோகங்கள்" [2nd stanza இறுதி இரண்டு வரிகள்] என்ற வரிகளின் பின்னே சட்டென்று சொட்டும் வயலின் துளிகளை தனியே பிரித்தெடுங்கள்...மழை பெய்து ஒய்ந்த வேளையில் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்ந்து அமர்ந்திருக்கிறீர்கள். மழையின் துளி ஜன்னலின் மேற்பகுதியிலிருந்து சொட்டி உங்கள் உச்சந்தலைக்குள் இறங்குகிறது...அந்த உணர்வின் ஊடுருவலை ப்ரதிபலிப்பது போலிருக்கும் இந்த வயலின் சொட்டுக்கள்...!

அப்படியே சற்றே பின்னால் நகர்ந்து அதற்கு முந்தைய வரிகளுக்கு அடியில் செல்லுங்கள்... "நீ இன்றி வாடுதே பூஞ்சோலை மலரே...துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே"  1st stanza] , "மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே காயங்கள் ஆனதே என் நோய்க்கு மருந்தே"  [2nd stanza]. இந்த வரிகளின் பின்னே வரும் வயலின் எப்படி இருக்கிறது? தலையில் இறங்கிய நீர்த்துளி காதோரமாய் வழிந்து நம் கன்னத்தை தாங்கியிருக்கும் கைகளில் இறங்கி அந்த துளி, கை முழுதும் பயணம் செய்து முழங்கை வழியே பேருந்தின் ஜன்னல் இரும்பில் வழிந்தோடும் நொடிகள் போன்றது அது. இங்கே வழிவது மழையின் மொழியா? வயலின் ஒலியா? வாழ்க்கையின் துளியா ?

குறிப்பு: கடந்த சில நாட்களாக, இளையராஜாவின் பாடல் London Olympics துவக்க விழாவில் இடம்பெறுவதனால் அவருக்கு அங்கீகாரம் என்று வரும் செய்திகள் குறித்த "ஆதங்கம்" படிக்க:
இளையராஜாவை நாம் இழிவு செய்கிறோமா?

Saturday, June 9, 2012

18. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 8

TV அரக்கன் ஊருக்குள் புகுந்து நேர‌த்தை தின்ன‌த் துவ‌ங்காத‌ 1980களின் ஆரம்ப வருடங்கள்...அந்த நாட்களில் ஞாயிறு மாலை நேர‌ம் என்பது ஆற்றங்கரை படிக்கட்டில் அமர்ந்து நாம் பார்க்கும் நீர் போல மெதுவாக அழகாக ஊர்ந்து போகும். எங்கள் வீட்டில் பொன்னி என்றொருவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரின் தங்கை காந்தி. சில சமயங்களில் ஒருவருக்கு பதில் மற்றொருவரோ, அல்லது இருவரும் சேர்ந்தே வேலைக்கு வருவார்கள்.

சில ஞாயிறுகளில் இவர்கள் வேலை முடிந்தபின் வீட்டின் சிறார் குழுவை மொட்டை மாடிக்கு அழைத்து போவார்கள். பொன்னி அத்தகைய சமயங்களில் கதை சொல்வார். ஞாயிறு மாலைகளில் மொட்டை மாடியில் கதை கேட்பது பலாச்சுளை சுவை போன்றது என்றால், அப்போது மழை திரண்டு வந்தால், பலாச்சுளை மேல் தேன் ஊற்றியது போல இருக்கும் இல்லையா? அப்ப‌டி ஒரு தேனூறிய‌ ப‌லா போன்ற‌தொரு ஞாயிறு மாலையில் நாங்க‌ள் மொட்டை மாடியில் ஒரு க‌தையை பொன்னி சொல்ல, கேட்க‌த் துவ‌ங்கினோம்.

"இப்ப‌டியொரு இடி இடிக்கும் பொழுதில் ம‌ழைக்கு முன் வீட்டுக்கு போக‌ வேண்டும் என்று அவ‌ன்  வேகமாக‌ நடந்தான்" என்று பொன்னி ஆர‌ம்பித்த‌து ஒரு பேய் க‌தை. சிறுவ‌ய‌தில் நாம் அனைவ‌ருமே பேய் ப‌ற்றி ஒரு முறையேனும் யோசித்தோ ப‌ய‌ந்தோ இருப்போம். வ‌ள‌ர்ந்த‌ பின், ச‌மூக‌த்தில் ப‌ல‌ வித‌ கொடூர‌மான‌ பேய்களுடன் (நம்மையும் சேர்த்து) ப‌ழ‌கி, உண்மையான‌ பேயே தேவ‌லாம் என்று முதிர்ச்சி அடைந்திருப்போம்.

பொன்னி, சொல்லும் க‌தையின் சுவை கூட்ட‌ ச‌ம‌யோஜித‌மாக‌ செய‌ல்ப‌டுவார். பேய் பற்றிய கதை என்பதால், த‌ன் கூந்த‌லின் பின்ன‌லை அவிழ்த்து விட்டுக் கொண்டார். க‌ருத்து க‌விழ்ந்த‌ மேக‌ங்க‌ளின் பிண்ண‌னியில் த‌லைவிரித்திருந்த‌ பொன்னி அந்த‌ சூழ‌லுக்கு ந‌ன்றாக‌வே அச்ச‌மேற்றினார்.

இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்னரே, என் இன்னொரு அண்ணன், அப்போது பிரபலமாக இருந்த‌ "உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வ‌ச்ச‌ கிளி" பாட‌லை ("ரோசாப்பூ ர‌விக்கைக்காரி" / SPB ) கேட்டால் பயத்தில் ஓடி ஒளிந்து கொள்வார் என்று வீடு முழுதும் அறிந்திருந்தது. இந்தப் பாடலை, பொன்னி கதைக்கு  இடையிடையே பயன்படுத்திக்கொண்டார்.

இந்த‌ பாட‌ல் முழுவ‌துமே இளைய‌ராஜா ந‌ம் ம‌ன‌தை க‌ரும்பு மிஷின் உள்ளே விட்டு பிழிந்தெடுத்திருப்பார். பிழியும் வித‌த்தில் பிழிந்தால், ம‌ன‌ம் ச‌க்கையானாலும் அனுப‌வ‌த்தின் ருசி என்ப‌து அடியிலிருக்கும் பாத்திர‌த்தில் சேரும் க‌ருப்புச் சாறு போலிருக்கும் இல்லையா? பாட‌ல் ஆரம்பத்தில் வ‌ரும் இசையிலேயே சொட்ட‌த் துவ‌ங்கும் சாறு, முத‌ல்  stanza முன்ன‌ர் வரும் "ஆரீராரோ" வில் கொட்டி நிர‌ம்பும்!
மூன்றாவது stanza துவக்கத்தில் வரும் SPBயின் அந்த "தனன..."வும் அதை தொட‌ர்ந்து வ‌ரும் அந்த‌ "Cornet" இசையும், வெறித்த வானத்தின் நடுவே நகரும் ஒற்றை மேகத்தை போல ஒரு சோக நிழல் கவிழும்.

பாட‌லில் ஆங்காங்கே வ‌ரும் வ‌ய‌லினை நாம் எப்ப‌டி அர்த்த‌ப்ப‌டுத்துவ‌து? வ‌ய‌லினா அது? bowவை வயலின் மீதா இழுக்கிறார் ilayaraja ? கால‌த்தின் க‌ண்க‌ளை மூடியிருக்கும் ஞாப‌க‌ இமைக‌ளின் மீது violin bow வைத்து இழுத்த‌து போல‌ல்ல‌வா  பெருகி வ‌ழிகிற‌து துய‌ர‌த்தின் ஒலி!

க‌தை உச்ச‌க்க‌ட்ட‌த்தை நெருங்கிய‌ பொழுது, அச்ச‌த்தின் பிடியில் அம‌ர்ந்திருந்த‌ எங்க‌ளுக்கு, வாடைக் காற்றில் மொட்டை மாடி வாச‌ல் க‌த‌வு "ப‌ட் ப‌ட்" என்று எழுப்பிய‌ பெருத்த‌ ச‌த்த‌ம் கிலி கிள‌ப்பிய‌தில் விய‌ப்பில்லை. அல‌றி அடித்து ப‌டிக‌ளில் இற‌ங்கிய‌தில் த‌வ‌றி விழுந்து என் முட்டி பெய‌ர்ந்த‌து. விளையாடும் பொழுது விழுந்த‌தாக‌ வீட்டில் நினைத்துக் கொண்டார்க‌ள். "க‌தை கார‌ண‌ம்" வெளியிட்டால் இனி க‌தையே கிடையாது என்று பொன்னி சொல்லிய‌தால், பேய்க்க‌தையால் முட்டி பெய‌ர்ந்த‌ க‌தை எங்க‌ள் அனைவ‌ராலும் பெரியவர்களிடமிருந்து "அமுக்க‌ப்ப‌ட்டது".

பாட்டு வ‌ரிக‌ளின் உள்ள‌ர்த்த‌ம் தெரியாம‌ல், இது ந‌ட‌ந்து சில‌ வ‌ருட‌ங்க‌ள் வ‌ரை, பால் திரிந்தால் பேய் வ‌ரும் என்றும் ("ப‌ட்டியில‌ மாடு க‌ட்டி பால‌ க‌ற‌ந்து வ‌ச்சா..."),க‌ரும்பின் அடியில் இருக்கும் செம்ம‌ண் பார்த்து ("பொங்க‌லுக்கு பூங்க‌ருப்பு...") க‌ரையான் என்றும், க‌ருப்ப‌ட்டி பார்த்தால் ஒரு இன‌ம் தெரியாத‌ ப‌ய‌மும் ("வ‌ட்ட‌க் க‌ருப்ப‌ட்டிய‌ வாச‌முள்ள‌ ரோசாவ‌..."), பிச்சிப் பூவிலும் ம‌லைக‌ளிலும் பேய் இருக்குமென்றும்...வெளியில் சொன்னால் பொன்னியின் க‌தைக‌ள் கிடைக்காது என்ப‌தால் உள்ளேயே வைத்து கொண்டு பயத்துடன் திரிந்த‌ சிறு வ‌ய‌து நாட்க‌ள்...சீக்கிரத்தில் மறக்க முடியாது.

என்னுடன் அமர்ந்து கதை கேட்ட Lakshmi, Jayashree அக்காக்க‌ள் இருவரும் காலத்தின் ஊருக்கு மாற்றலாகிப் "போய் விட்டார்கள்". பொன்னியை பார்த்து இருப‌து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. காந்தி அன்று வெள்ளை நிற முழுக்கை ஆண் ச‌ட்டை போட்டுக் கொண்டு "ஒடாத‌ விழ‌ப்போற‌" என்று என் பின்னே ஓடி வந்தது புகை போட்ட காட்சி போலத் தெரிகிறது.

இப்பொழுதெல்லாம் இந்தப் பாடல் அதிகமாக காதில் விழுவதில்லை. சில மாதங்கள் முன் கோயப்பேடு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொழுது ஒரு கடையிலிருந்து எதிர்பாராமல் எழுந்து வந்தது "உச்சி வகுந்தெடுத்து"...சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் போனாலே முக்கால் மணியாகும்.இளையராஜாவின் இசைவாகனத்தில் ஏறினால் கண் சிமிட்டும் நேரத்தில், காத தூரம் காலவெளியில் போகலாமே...அதில் மதுரை சென்னை தூரமெல்லாம் ஒரு தூரமா? எனவே ஒரே நொடியில், கோயம்பேட்டிலிருந்து எங்கள் வீட்டு மொட்டை மாடியில் முப்பதாண்டுகள் எம்பிக் குதித்தேன்...பிச்சிப் பூ நெடியில் வழிந்தோடியது அந்த நொடி...