Sunday, July 20, 2014

40. அந்த இரவு...

அந்த இரவு குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று சில நண்பர்களும் நன்றாக இருக்காது என்று வேறு சில நண்பர்களும் வெவ்வேறு எண்ணங்களில் இருந்தனர். கல்லூரியில் புதிதாய் சேர்ந்திருந்த‌ நாட்கள் அவை...

அந்த நாளும் வந்தது. மாலையில் நண்பர்கள் குழுவுடன் காந்தி மியூசியத்திற்குள் நுழைந்து மைதான சிமிண்ட் படிகளில் அமர்வதற்கும் வானில் நட்சத்திரங்கள் மின்னுவதற்கும் சரியாக இருந்தது. நல்ல கூட்டம். மேடையில் இசைக்குழு சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. இளையராஜாவுக்கு மட்டுமே இணங்க, இழைய, குழைய பழக்கப்பட்டிருந்த மனதை TMS சுசீலாவின் பழைய பாடல்கள் கச்சேரிக்கு அழைத்து வந்து அமர்த்தியிருந்தேன்....

ஒரு சில அர்த்தமுள்ள வரிகள், நல்ல பாடல்கள், இடையே அவர்கள் இருவரும் ஓய்வெடுக்கும் வேளையில் ஏதேதோ பாடல்கள் என மணி பதினொன்றை தாண்டியிருந்தது. ஆடிக்காற்று காந்தி மீயூசிய மரங்களில் இருந்து இலைகளை மைதானம் எங்கும் வீசியபடி உலா வந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான், அதன்பின் வருடக்கணக்கில் இரவுகளில் திடீரென்று காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும் அந்த ஏகாந்த நொடிக்கரைசலின் ஒலிப்பிம்பத்தின் மூலமான‌  "தேவன் வந்தாண்டி..." [உத்தமன் / 1976 /  KV Mahadevan / TMS - சுசீலா] என்றொரு மயக்கமூட்டும் குரல் மேலெழும்பி காற்றில் நகரும் இலைகள் போல மைதானம் எங்கும் பரவியது. சிறுசிறு பேச்சொலிகள் அடங்க, "தீபம் கொண்டாடி" என்று ஒலியின் மீதொரு ஒளி ஏறியது... மயிலிறகின் நுனிகளில் தென்றலை ஏந்தி நம் மீது தொட்டு தொட்டு வைத்துப் போவது போன்ற குரல். துவக்கத்திலேயே, இந்த இரண்டு வரிகளும் புடலை கொடியிலேறி படர்வது போல நம் மனதில் வளைந்து வளைந்து சுற்றி ஏறும்... அது மட்டுமல்ல. கண்ணதாசன் "டி"யை வைத்தே நம்மை ராட்டினம் ஏற்றப் போகிறார் என்பதும் தெரிந்து விடும்.

இந்த பாடலில் மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் இசை சற்றே இரைச்சலாக‌ இருப்பது போலக் கூடத் தோன்றும். "தேவன் வந்தாண்டி தீபம் கொண்டாடி" என்ற ஒற்றை வரியில் சுசீலா நம்மை எத்தனை நெளிவு சுளிவுகளுக்குள் தோய்த்து எடுக்கிறார் என்பதே இந்த பாடலின் அற்புதம். அதுவும் இரண்டாம் ஸ்டான்ஸா முடிந்த பின் திரும்ப வரும் பல்லவியில் அவர் தீபத்தில் உள்ள "தீ"யை இழுத்து  சுருக்கி "கொண்டாடி"யை நீட்டும் லயம் ஒரு மந்திரவாதி புதிதாக ஒரு ஸ்வரத்தை உண்டாக்கி நம் காதுகளில் ஊற்றும் அற்புத அனுபவம். ஐந்தே நொடிகளில் அவர் நிகழ்த்திக் காட்டும் அந்த சாகசம்...கேட்கும் பொழுதெல்லாம் பரவசம்...

பாடல் முடிந்தது. அனைவரும் அடுத்த பாடலுக்கு தயாராயினர். முன் வரிசைகளில் சலசலப்பு. சுசீலா புன்னகையுடன் வயலின் குழவை நோக்கி கையசைத்தார். அனைத்து வாசிப்பு கருவிகளும் சைலண்ட் ஆக வயலின் வாசிப்பவர்கள் மட்டும் தயார் நிலைக்கு வந்தனர். "தேவன் வந்தாண்டி" என்று பல்லவியை மீண்டும் பாடத்துவங்கினார். வயலின் மட்டும் மலரின் மீது வழியும் பனியின் துளி போல அவரின் குரலை பின் தொடர்ந்தது.
அந்த நிசப்தமான இரவில் சொர்க்கத்தின் முகவரியை காட்டி விட்டு அமர்ந்தார் சுசீலா. நினைப்பேதுமின்றி இசையின் அணைப்பே முனைப்பாக இருத்தல் மனதுக்கு சொர்க்கம் தானே?

நள்ளிரவு கடந்த பின் தமுக்கம் ரோட்டில் நடந்து கொண்டிருந்தோம். "தேவன் வந்தாண்டி"யின் மகிழ்ச்சியில் எத்தனை தொலைவும் நடக்கலாம் போலிருந்தது...காந்தி மியூசியத்திலிருந்து வைகை மேம்பாலம் வருவதற்குள் எத்தனை முறை ஏற்ற இறக்கங்களுடன் அந்த "தீபம் கொண்டாடி"யை பாடிப் பார்த்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது...அந்த வரியின் லாவகம் ஒரு ஒப்பற்ற குரல் தந்த சங்கதியின் உயிர்ப்பின் ரகசியம் போலத் தோன்றியது. வாகனங்கள் ஏதுமற்ற வைகை பாலத்தின் மீது நடக்கத் துவங்கினோம்...ஆற்றின் வாசனையை அள்ளி வந்து முகத்தில் அடித்தது காற்று...வைகையில் நீரோடிய வருடம் அது. பாலத்தின் சுவரில் சாய்ந்து கீழே ஓடிய நீரில் மின்னும் ஒளித்திவலைகளை பார்த்தபடி நின்றிருந்தோம்...எங்கிருந்தோ "தீபம் கொண்டாடி" என்று கேட்பது போல இருந்தது. ஒரு முறை வெளியேறிய உணர்வின் அலை எப்போதும் கால வெளியில் நீந்திக் கொண்டுதானே இருக்க வேண்டும்? அந்த இரவின் நொடிகளை, நிசப்தத்தை, வைகையில் ஜொலித்த நீர் இழைகளை, ஒன்றுக்குள் ஒன்றாய் கோர்த்து மனதின் ஓரமாய் நினைவின் வாசம் வீசும் மலரின் ஆரமாய் தோன்றிய பொழுதெல்லாம் பூத்தபடி இருக்கிறது "தேவன் வந்தாண்டி".

Sunday, March 16, 2014

39. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 23

எதிர்பாராத இடத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்கையில் அது எத்தகையதாகினும் அதற்குரிய உணர்வு அதற்கான இயல்பை விட‌ பல்மடங்கு பெருகியே நம்மிடம் சேரும். அதன் காரணமாகவே அது ஆழமாக பதிந்து விடவும் கூடும். இப்படியாகத்தான் ஒரு மாலை வேளையும் ஒரு சைக்கிள் கடை சிறுவனும் சேர்ந்து ஒரு பாட்டைக் காட்டி விட்டுப் போய் இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

பத்தாம் வகுப்பு பாஸ் செய்ததன் பொருட்டு மீனாட்சி கோயில் அருகில் உள்ள ஜான்சி ராணி பூங்காவின் எதிரில் இருந்த "கமலா சைக்கிள் மார்ட்" கடையில் வாங்கிய எனது சிறகுகள் வீட்டில் வந்திறங்கிய தினம், அதன் மேல் படிந்திருந்த சிறு சிறு தூசியை கூட துடைப்பதுமாகவும், டயர் அழுக்காகாமல் ரோட்டில் ஓட்டுவது எப்படி என்ற கவலையுடன் இரவு முழுவதும் கழிந்தது.

சைக்கிளை பயன்படுத்திட என்ன சாக்கு கிடைக்கும் என்ற தவிப்புகளுக்கிடையில் காற்றடிப்பது கூட களிப்பான வேலையாகத் தோன்ற, அதற்கென்றே வீட்டிலிருந்து "கமலா சைக்கிள் மார்ட்" வரை போய் காற்றடிக்கும் பழக்கம் தொற்றியது. சைக்கிள் கடையின் எதிரில் ஒரு ஸ்பீக்கர் கடை இருந்தது. விதவிதமாக வெவ்வேறு சைஸ்களில் ஸ்பீக்கர்களை அடுக்கி வைத்திருப்பார்கள். பூக்கடைக்கு மணம் போல, ஸ்பீக்கர் கடையென்றால் பாட்டு வாசம் வீச வேண்டுமே...எப்போதும் அந்தக் கடையில் ஏதேனும் பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சைக்கிள் கடையில் முதலாளி தவிர மூன்று நான்கு பேர் உண்டு. அதில், எடுபிடி வேலைக்கு என்னை விட வயதில் குறைந்த ஒரு சிறுவனும் இருந்தான். அங்கு வரும் சைக்கிள்களில் சிறு சிறு ரிப்பேர்  மற்றும் பஞ்சர் பார்ப்பதும் அவன் வேலைகளில் அடக்கம். அழுக்கைடந்த ஒரு முண்டா பணியனும் காக்கி டிராயருமாகத் திரியும் அவன் கையில் எப்பொழுதும் ஒரு ஸ்பானர் இருக்கும். எதிர்கடையிலிருந்து வரும் பாட்டுக்கு எசப்பாட்டு போல விசில் அடித்துக் கொண்டே வேலை செய்வது அவன் ஸ்டைலாக இருந்தது.

சில மாதங்களில், பல முறை சென்று வந்ததன் பயனாக, ஒரு புதிய விஷயம் அந்த சிறுவனை நெருக்கமாக பார்த்ததில் புரிந்தது. அவன் எப்பொழுதும், எந்தப் பாட்டை விசிலடிக்கத் துவங்கினாலும் சற்று நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டுக்குத் தாவி அதை விசிலடிப்பது அவனது வழக்கமாக இருந்தது. எந்த நேரத்தில் அந்தப் பாட்டுக்குத் தாவுவான் என்பது மிக இயல்பாக நெருடல் ஏதுமின்றி நிகழும் மாற்றமாக இருந்தது...

அதுவரை நான் அந்தப் பாடலை கேட்டிருக்கவில்லை. பிரபலமான பாடலாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையிலே, ஒரு நாள் பள்ளி முடிந்து காற்றடிக்கச் சென்றிருந்தேன். எதிர்கடையிலிருந்து "வா வெளியே இளம் பூங்குயிலே" [பாடு நிலாவே‍ - 1987] என்னும் ஒரு பாட்டு ஒலிக்கத் துவங்கியது. சிறுவனுக்கு குஷி தாளவில்லை. அவன் எல்லா பாடல்களுடன் இணைக்கும் விசில் இந்தப் பாடலே என்று விளங்கியது. இத்தனைக்கும் அது ஒரு மிகச் சாதாரணமான பாடலாகவே தோன்றியது.

இந்தப் பாடலின் துவக்கம், குழந்தைகள் விளையாடும் கீபோர்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பீட்களில் ஒன்று போலத்தான் இருக்கும். இந்தப் பாட்டில் என்ன இருந்து விடப் போகிறது என்று கவனச் சிதைவு ஏற்படுத்தும் துவக்கம் அது.

நம்மூர் பாடல்களுக்கு இரண்டு ஸ்டான்ஸா என்று உருவாக்கப்பட்டதே இளையராஜாவின் interlude களுக்காகத்தானோ? அப்படித்தானே அவர் தனது வயலின் கொண்டும் குழல் கொண்டும் ஏராளமான இரண்டாம் சரணங்களுக்குள் நம்மை மூழ்க வைத்திருக்கிறார்...இந்தப் பாட்டில் அதற்காக‌ காத்திருக்கும் பொழுதில் பேங்கோஸ் மீது சற்று இளைப்பாறலாம். பிறகு அந்த வயலினும் புல்லாங்குழலும் நிகழ்கிறது. காத்திருந்த பயன் கிடைக்கிறது. முப்பதே நொடிகள். ஒருவிதமான துன்பியலின் படிகளில் நம்மை அமர்த்தி விட்டு மீண்டும் சாதாரணத்தில் சறுக்கிக் கொண்டு போய் விடும் பாட்டு.

நம் சிறுவன் இந்தக் முப்பது நொடிக் கோர்வையை சற்றே நீட்டி இழுத்து வாசிக்கும் பொழுது அதில் ஒரு சோகத்தின் இழையை இழுப்பது போல இருக்கும். பிறகு சட்டென்று பாட்டின் முடிவில் வரும் சஞ்சாரங்களுக்குப் போய், தனக்குத் தோன்றிய ஸ்வரங்களை சேர்த்து வாசிப்பான். எண்ணம் என்பதே ஸ்வரம் தானே?

இரண்டு மூன்று வருடங்கள் கடந்திருக்கும். புதியதின் மீதிருக்கும் ஆர்வம் தரும் மகிழ்ச்சியின் சுழற்சிகள் பழக்கமான பின் அவற்றை மெல்ல வடிந்து போகச் செய்வது தானே காலத்தின் கோட்பாடு? சைக்கிள் அன்றாட வாழ்வின் அங்கமானது. போகும் வழியில் இருக்கும் எந்த கடையிலும் காற்றடிக்கும் "பக்குவம்" வந்து விட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின் கமலா சைக்கிள் மார்ட் செல்ல நேர்ந்த பொழுது சிறுவன் அங்கு இல்லை. முதலாளியிடம் "பையன் இல்லையா?" என்றேன். "சாப்பாடெல்லாம் போட்டு பாத்துகிட்டேன்...சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டான்" என்றார். அதில் கோபத்தை விட வலி அதிகம் இருப்பது போல இருந்தது. சொல்லலாம் என்று நினைத்தும் சொல்ல முடியாத நிலையில் நம்மை வைக்கும் கோடிக்கணக்கான நொடிகளை உருவாக்கும் காலத்தில் இதுவும் அத்தகைய இன்னொரு நொடியாக இருந்திருக்கக் கூடுமோ? யாருக்குத் தெரியும் யார் எதை சொல்ல நினைத்தார்கள் சொல்லாமல் போனார்கள் என்று?



Sunday, September 29, 2013

38. ஆனந்த யாழை மீட்டுகிறாய்...

அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் நகரத்தின் மீது இரவை இழுத்துப் போர்த்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது காலம். இருப்பினும், அந்த ரயில் நிலையத்தில், காலத்தின் பகடை ஆட்டத்தில் தங்கள் மீது விழுந்த ஏதோ ஒரு நிகழ்தகவின் பொருட்டு எத்தனையோ பேர் எதனையோ தங்கள் எதிர்பார்ப்பாக்கி பயணத்தை துவக்க விரைந்து கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். எனது கம்பார்ட்மெண்ட் நோக்கி சென்று கொண்டிருக்கையில் பிளாட்பாரத்தில் தொங்க விடப்பட்டிருந்த டிவிகளில் இருந்து விளம்பரங்களுக்கிடையில் ஒலித்தது ஒரு குரல். "மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் ‍ முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று..." - "மட்டும்தான்" என்பது இந்த வரியின் பொருளை குறுக்கினாலும், ஒரு பெருங்கவிதை வெளியை நமக்கு(ள்) நாமே உருவாக்கி ஞாபக பாத்திகளின் வழியே கால நீருற்றி உணர்வின் பூக்கள் பூத்துக் குலுங்கும் நினைவுத் தோட்டத்திற்கான விதைகள் அந்த ஒற்றை வரிக்குள் ஒளிந்திருந்தன...சிலருக்கு இந்த வரி அர்த்தமற்றதாக தோன்றுகிறது. அர்த்தமுள்ளதோ அர்த்தமற்றதோ, இரண்டுமே நம் நினைப்பின் ரசம் பூசி நாம் எண்ணுவதையே சரி என்பது போல் காட்டும் மனக்கண்ணாடியின் மாயம் தானே?

எனது பெட்டியை அடைவதற்குள் இரண்டு மூன்று டிவிக்களை தாண்டியதில், அது ஒரு புதிய திரைப்படத்தின் விளம்பரம் என்ற செய்தியை கண்ணும் காதும் மூளையில் பதிய வைத்திருந்தது. அந்த வரியைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தின் நெரிசலையும் சத்தங்களையும் மீறி, வயல் வெளிகளில் நெற்கதிர்களின் தலை மேல் இறங்கி ஏறி ஒரு வித லயம் கலந்த அசைவுடன் சத்தமின்றி நம்மிடம் வந்து சேரும் சுகமான காற்றைப் போல ஒரு இசைத் துகள் என்னை சில நொடிகள் வருடிப் போனது. அதைத் தொடர்ந்து "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்றொரு குரல் மக்கள் திரளில் எழுந்த இரைச்சல்களின் ஊடே பயணம் செய்து உள்ளத்தின் ஏதோ ஒரு ஊற்றுக்கண்ணைத் திறப்பது போல இறங்கியது.. எனது இருக்கையில் அமர்ந்த பின்னும் அந்த "சுகமான காற்று" தீண்டுவது போன்ற உணர்வில் ஆழ்ந்திருந்தேன். அந்த இசைத் துகள் அவ்வப்பொழுது என்னுள் நகர்ந்து கொண்டே இருப்பது போன்ற உணர்வின் அசைவுடன்...

உலகியல் வேலைகளின் பின்னே மந்தையின் நடுவில் சிக்கிய ஆடு போல நாம் ஓடும் பொழுது, உள்ளத்தின் தேவைகளை அறிந்து அதன் வழியில் நம்மை ஆற்றுப்படுத்தும் அற்புத கருவியாய் கலைவடிவங்கள் தானே நம் ஆன்மத்தின் ஆதார ஸ்ருதியை நமக்கு மீட்டுக் கொடுக்கின்றன? எனவே தான் அவை இடம் பொருள் ஏவல் மீறி எங்கோ ஒரு நொடியில் நமக்குள் புகுந்து கொள்கின்றன. அப்படித்தான் அன்று நுழைந்தது "ஆனந்த யாழ்..."

சில தினங்கள் கழித்து ஒரு இரவில், அறையில் இருந்த என்னை சீக்கிரம் வரச்சொல்லி அழைத்த மனைவியின் குரல் ஹாலில் இருந்த டிவியின் முன் நிறுத்தியது. டிவியில், ஒரு புல்வெளி முழுவதும் புகுந்து நகரும் காற்று, திரையை விட்டிறங்கி நம் மேல் வீசுவது போல‌ ஆனந்த யாழை மீட்டிக்கொண்டிருந்தது. "உங்க லிஸ்டுல சேர்ந்துரும் போல" என்றார் என் மனைவி. "உங்க லிஸ்ட்" என்றால் என் அடி மனதின் சுவற்றில், ஒரு குகையின் சுவற்றில் வழியும் ஏதோ ஒரு ஊற்றின் நீர் கசிவு போல ஆங்காங்கே வழிந்தபடி இருக்கும் பாடல்களின் வரிசையில் இதுவும் இனி ஊறத்துவங்கும் என்று பொருள்.

"தங்க மீன்கள்" வேண்டி கணிணியில் "வலை" வீசி எனது ஒலிப்பேழையில் பிடித்து நீந்த விட்டேன். இரண்டு மாதங்களாக இரவில் துயில்வதற்கு முன் ஒலிப்பேழையிலிருந்து உள்ளத்தின் உள்ளே குதித்து நீந்தி விட்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தன "ஆனந்த யாழை" மற்றும் "நதி வெள்ளம் மேலே" என்னும் இரண்டு மீன்கள். செதில் செதிலாக அதில் பதிந்து இருந்தன உணர்வின் தறி ஏறக் காத்திருந்த இசையின் இழைகள். நெய்து நெய்து இழைகள் கூழாகி விழிப்படலத்தின் மீது நீரின் திரைச்சீலைகளை உருவாக்கும் மீன்கள் அவை.

இவ்வாறாக இசைப்பேழையில் என்னுடனேயே வந்து கொண்டிருந்தன இந்த மீன்கள். அலுவலகத்திலிருந்து ஒரு தினம் வேலை முடித்து நள்ளிரவை நெருங்கும் பின்னிரவு வேளையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
மாலை துவங்கிய மழை, ஆள் நடமாட்டம் குறைந்த பின், முழு சுதந்திரம் கிடைத்தது போல சாலை முழுவதும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. காற்றுடன் கைகோர்த்து அதன் நடனத்தின் வழியெங்கும் மரத்திலிருந்து இலைகளை பிடித்து, சாலையின் ஈரத்தில் ஒட்டி ஓடியாடிக் கொண்டிருந்தது மழை. கரும்பலகையில் வரைந்த நூற்றுக்கணக்கான இலைகளின் ஓவியம் போல தார்ச் சாலையெங்கும் இலைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

"நதி வெள்ளம் மேலே" துவங்கியது. இரண்டாம் ஸ்டான்ஸா துவக்கத்தில் வரும் குழலுக்கு ஏற்றவாறு, இருட்டிப்போய் ஆளரவமற்று இருந்த சாலையின் மரங்களிலிருந்து மழை சொட்டுகள் வெவ்வேறு கிளைகளிலிருந்து வெவ்வேறு இடைவெளியிலிருந்து உதிர்ந்து சாலையில் கலந்து நகர்ந்து கொண்டிருந்தன. சாலையில் என்னையும் மழையையும் தவிர யாருமில்லை. வண்டியை ஒரு நிமிடம் நிறுத்தலாம் எனத் தோன்றியது. பாடலை மீண்டும் ஓட விட்டேன். மரங்கள் அனைத்தும் ஏதோ துயரத்தின் வெளியில் தங்களை மெதுவாக அசைத்து கண்ணீர் சிந்துவது போல ஒரு மிகப்பெரும் சித்திரமாக சாலை என் முன் மாறியது. இப்பாடல் பாடியவர் பல்வேறு ஏற்ற இறக்கங்களில் ஜெயச்சந்திரனை ஞாபகப்படுத்தி எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நம்மை மூழ்க வைக்கிறார்.

இரவும் மழையும் இணையும் பொழுதுகளில் இந்த இரண்டு பாடல்களுமே நமக்குள் நன்றாக ஊடுருவுகிறது. கையடக்க ஒலிப்பேழை அத்தகைய இரவுகளை எதிர்நோக்கி என்னருகில் காத்திருக்கிறது.

Sunday, July 7, 2013

37. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 22

ஒரு மழை நமக்குள் பல நினைவுகளைத் தந்து போகக்கூடும். கெட்டித்து போன மண் மேல் முதலில் துளித்துளியாய் ஒட்டி, பிறகு மெல்ல பெருமழையாய் கொட்டி, இறுகியிருந்த மண் நெகிழ்ந்து, ஈரத்தினால் குழைந்து ஒரு வாசனை கிளம்புமே...அது மழை வாசமா? மண் வாசமா? அல்லது அந்தப் பொழுதுகள் நமக்குள் கிளப்பும் நினைவின் வாசமா?

மழைக்கும் மனதுக்கும் இடையே கிடக்கும் நினைவுப் புதையல்களை தோண்டி எடுக்கும் வேலையை சில பாடல்கள் செய்யும். பெருமழை பொழுதில் பேருந்துக்குள் அமர்ந்திருக்கிறீர்களா? மழையை ரசிக்கும் மனிதர்கள் பேருந்துகளுக்குள் இருப்பார்கள் என்று மழைக்குத் தெரியும் போலும். "நான் வெளியில் வந்திருக்கிறேன். உள்ளே என்ன செய்கிறாய்?" என்பது போல பேருந்தின் உலோகத் தகடுகளை தன் எண்ணற்ற கரங்களால் தட்டி நம்மை வெளியே வரச் சொல்லுவது போல அடித்துச் செல்லும் மழையின் சத்தம். அத்தகைய மழை தினத்தில் மழையின் வடிவத்தில் ஏறி மனதில் படிமமாய் ஊறிய‌ ஒரு பாடல், ஆயுளுக்கும் நினைவின் கிறக்கத்தை மனதுக்குள் இறக்கிச் செல்வதில் அதிசயமில்லை.

"பூமி குளிரட்டும் நல்லா அடிச்சு பெய்" என்று மழையிடம் பேசிக் கொண்டிருந்தார் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பாம்படம் அணிந்திருந்த ஒரு பக்குவப்பட்ட மூதாட்டி. அவரின் பேச்சை ரசித்தது போல‌, காற்றின் வழி பிடித்து தேடி வந்து கூடுதல் சாரல்களை அவர் மேல் கொட்டி கன்னத்தில் தட்டி விட்டுப் போனது மழை. நரைத்திருந்த அவரின் கூந்தலில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் போல மின்னிக் கொண்டிருந்தன மழையின் துளிகள். வானம் பார்த்து காத்திருந்து பாளம் பாளமாக பிளவுபட்ட‌ நிலத்தின் மீது பொழியும் மழை அந்தப் பிளவுகள் நோக்கி வழிந்தோடுவது போல, வயதின் சுருக்கங்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிய அந்த மூதாட்டியின் கன்னத்தில் இறங்கிய மழைத்துளிகள் அந்தச் சுருக்கங்கள் தந்த பிளவுகள் நோக்கி வழிந்து கொண்டிருந்தன. வழியும் மழைத்துளிகளிடம் வசப்பட்டதாலேயோ என்னவோ, துடைக்கும் நினைப்பின்றியோ மனமின்றியோ அமர்ந்திருந்தார் அவர்.

சற்றே ஓய்ந்தது போலிருந்த மழையின் ஒலியை வைத்து சாளரங்களை நன்றாக திறந்து வைக்கத் துவங்கினர் பயணிகள். அரசு பேருந்துகளுக்கே உரித்தான‌, விரித்தால் மடிக்க முடியாத, மடித்தால் விரிக்க முடியாத‌ ஷட்டரை முக்கால் பாகம் மேலேற்றி "ட" வடிவிலிருக்கும் துருப்பிடித்த இரும்பினுள் அடைக்கும் முயற்சியில் ஒரளவு வெற்றி அடைந்து அமர்ந்திருந்தேன் நான்.

பேருந்து நிலையத்தின் மேடு பள்ளங்களில் தேங்கியிருந்த மழை நீரின் மேல் விழுந்து சிதறும் தூறல்கள் நீரில் சிறு வட்டங்களைத் தோற்றுவித்து, அந்த வட்டங்களுக்குள் தோன்றும் புது வட்டம் சிறு வட்டங்களை பெருவட்டங்களாய் மாற்றி, விரிந்து கொண்டே போகும் வட்டம், ஏதோ ஒரு நொடியில் மறைந்து...புதிதாய் ஒரு வட்டம் நுழைந்து...இதுவே சுழற்சியாய்..மழை போடும் நீர் வட்டத்தின் ஆரம் போல பெருகிக் கொண்டே போகும் நினைவின் சாரம் சட்டென்று இன்னொரு நினைவைத் தோற்றுவித்து...அது பெருகி....ஒரு துளியின் தடத்தில் மறுதுளி...வட்டங்களுக்குள் வட்டங்கள்...நினைவுகளுக்குள் நினைவுகள்!

இந்தச் சுழற்சியை இசையின் பாதைக்குள் பொருத்தியது போல, நம்மையே அந்தச் சுழற்சியின் மையப் புள்ளியில் இருத்தியது போல, அடிமனதில் மெதுவாக அசையும் உணர்வுகளின் ஒலிவடிவம் போலத் துவங்கியது ஒரு பிளாட்பாரத்தில் இருந்த தேநீர் கடை ஒன்றிலிருந்து ஒலிக்கத் துவங்கிய "நிலவே நீ வர வேண்டும்" பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த அற்புதமான கிடார்.

பாடல் முடியும் வரை பேருந்தை கிளப்பாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு. தள்ளித் தனியே நின்றிருந்த ஓட்டுனர் தேநீர் கிளாசை சுழற்றியபடி அதிலிருந்து வெளியேறும் ஆவியை பார்த்தபடி இருந்தார். ஒரு வேளை அவரும் இந்தப் பாடல் முடியும் வரை காத்திருக்க நினைத்திருந்தாரோ என்னவோ? எவருக்குத் தெரியும் எவரின் நினைப்பு?

கரையிலிருந்து நீண்டு, நதியின் மீது படர்ந்திருக்கும் கிளைகளை உடைய மரத்தின் இலைகள் உதிர்ந்து நீரோட்டத்தில் மிதந்து செல்வது போல, இந்தப் பாடல் முழுவதுமே "bass guitar" மேல் மிதந்து நகர்கிறது. அந்தக் கிளையின் நிழல், தண்ணீரின் அசைவுக்கு ஏற்ப ஆடுவது போலத்தானே நம் நினைவுகளும் இந்தப் பாடலின் ஊடே அசைகிறது...நீரோட்டம் ஆங்காங்கே எழும்பி அடங்குகையில் அதன் மேலேறி இறங்கும் இலையின் பயணத்தை ஒத்ததாக இருக்கிறது "bass guitar" மேலே ஏறி இறங்கும் வரிகள்.. நினைவுகள் கொப்பளித்து நிகழ்காலத்தின் கோப்பையை மீறி வழிவது போல, ஆங்காங்கே அடியிலிருந்து மேலேறி வரிகளின் இடைவெளியில் பொங்கி உள்ளடங்கும் நொடிகள் அவை.

நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஊடகமாக மழை மாறிப் போகும் அதிசயத்தை முதல் ஸ்டான்ஸா துவக்கத்தில் வரும் புல்லாங்குழலில் புரிய வைக்கிறார் இளையராஜா. நம் மேல் விழும் மழைத்துளி உடலின் மீது வழிந்தோடும் வழித்தடங்களுக்கு எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளனவோ அத்தனை சாத்தியங்கள், அந்த துளியின் நகர்வு எத்தகைய நினைவின் துளிகளை நம்மிலிருந்து மீட்டெடுக்கும் என்பதற்கும் உண்டு. ஜன்னலின் மீது சாய்ந்து வானத்தை பார்த்தபடி இருந்த என் முகத்தை தாங்கியிருந்த கைகளின் மீது இறங்கி, மழையின் ஒரு குமிழ் அதற்குரிய நீர்த்தடத்தை உருவாக்கி விரல் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த புல்லாங்குழலின் தடம், குமிழின் தடத்தை ஒத்ததாகி ஒலித்தது. மழையின் குமிழும் புல்லாங்குழலும் அங்கு என்னவாகிப் போனது? மழையின் குமிழ், காலக் குமிழாகி, அது வேகமாக‌ உருண்டோடி, புல்லாங்குழலின் உள்ளோடி, ஒவ்வொரு துளையிலிருந்தும் சொட்டும் நினைவுகளின் சத்தத்தில் உள்ள உயிரின் ஸ்வரம்தானோ அந்த முதல் ஸ்டான்ஸா புல்லாங்குழல்? அத்தகைய சொட்டுக்களை வாங்கி, நமக்குரிய உணர்வுகளில் தாங்கி, மறுபடி நம் மனதுக்குள்ளேயே ஊற்றுகிறதோ அதன் பின் வரும் வயலின்?

பெய்து போன மழை நெய்து வைத்த மிச்சம் போல ஜன்னலின் விளிம்புகளில் மாலையாக கோர்த்திருந்த மழைத்துளிகள் ஒவ்வொன்றாக என் உச்சந்தலையில் இறங்கின. அந்த சிலிர்ப்பின் ஊடுருவல் மெதுவாகத் துவங்கி, மேலோங்கி வளர்ந்து, மனம் முழுதும் படர்ந்து நிற்கும் பொழுதுகளைத் தான் இரண்டாம் சரணத்திற்கு முன்னர் வரும் கிடாரும் வயலினும் தருகிறதோ? மனதில் தோன்றும் நினைவின் சிலிர்ப்புகள் இப்படித்தான் நிகழுமோ?

தமிழ் வகுப்புகளில் நாம் "மாத்திரை" பற்றி படித்திருப்போம். சொற்களுக்கான உச்சரிப்பின் கால அளவு "மாத்திரை" என்று தமிழாசிரியர் சொல்லும் பொழுதே சொற்கள் ஒரு குறிப்பிட்ட அளவின் வடிவமைப்பில் வாயில் உருள்வது போல இருக்கும். இப்பாடலில் "நீயின்றி வாடுதே...", "துன்பங்கள் சேர்ந்ததே" [முதல் ஸ்டான்ஸா] மற்றும் "மாயங்கள் செய்வதே...", "காயங்கள் ஆனதே..." [இரண்டாம் ஸ்டான்ஸா] என்னும் வரிகளின் அடியில் இளையராஜா என்ன செய்கிறார்? அந்த "bass guitar" இந்த வார்த்தைகளின் "மாத்திரைகளை" அப்படியே சாப்பிட்டு அதன் வடிவிலேயே வரிகளோடு உருகி ஓடுகிறதே...நினைவின் கரடு மேல் எத்தனை லாவகமாக நம்மை ஏற்றி இறக்குகிறார் இளையராஜா!

மழை, தான் தொடும் அனைத்தின் மீதும் காலத்தை ஊற்றி விட்டு போய்விடுகிறது. நனைதலும் காய்தலும் மனதுக்கே உரிய மழையின் சொல்லாடல்கள் தானே? மழை என்பதே நினைவுக்கான காலத்தின் குறியீடுதானே? இசையும் அத்தகையது தான் இல்லையா?

குறிப்பு: இதே பாடல் தந்த மற்றொரு அனுபவம் வாசிக்க இங்கே செல்லவும்... 

Sunday, May 19, 2013

36. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 21


நம்மில் நிறைய பேருக்கு, நேரடியாகவோ அல்லது எவர் மூலமாகவோ ஏதோ ஒரு கிராமத்துத் தொடர்பு இருக்கும். இன்னும் சொல்லப் போனால், ஏதோ ஒரு கிராமத்து பெருமரத்தின் மீது தொடர்ந்து அடித்த தலைமுறை காற்றினால், நகர்ந்து நகர்ந்து பெருநகரம் ஒன்றில் வந்து படிந்த இலைகளில் ஒன்றாக நாம் இருக்கக் கூடும்.

நச்சு மிகுந்த நகர வாழ்க்கையை "நச்"சென்று இருப்பதாக நினைத்துக் கொண்டு வாழத்துவங்கி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், கிராமத்து வாசனை நமக்குள் எங்கோ ஒரு ஓரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும். மழை வர எத்தனிக்கும் மாலையில் நெரிசல் மிகுந்த நகரத்து சாலையில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது வந்து வீசும் மண்வாசனையிலோ, "அளவாக பயன்படுத்த" அறிவுறுத்தப்பட்டு, ஒரு வாளி நீரில் குளியல் முடிக்க ஒரு கோப்பையை அந்த வாளிக்குள் விடும் பொழுது தெறிக்கும் நீரிலோ... சாலையை கடக்கையில் சட்டென்று கண்ணில் படும் மரத்தின் பச்சையிலோ...சும்மாடு வைத்துக் கொண்டு போகும் ஏதேனும் ஒரு மூதாட்டியை பார்க்கையிலோ...திடீரென்று அந்த கிராமத்து வாசனை எட்டிப் பார்க்கும். அந்த வாசனை, அப்படியே புகை போல மெலிதாக படர்ந்து நம்மை நம் நினைவில் இருக்கும் கிராமம் நோக்கி இட்டுச் செல்லும்...

சிறு வயதிலிருந்தே எங்கள் வீட்டில் அனைவருமே எங்கள் கிராமத்தை "கிராமம்" என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். அப்பாவை அப்பா என்று அழைப்பது போலவும் அம்மாவை "அம்மா" என்று அழைப்பது போலவும், ஊருக்கு பெயர் இருந்தாலும் கிராமத்தை "கிராமம்" என்றே எங்கள் வீட்டு முதியவர்கள் அழைத்து அது அப்படியே நிலைத்து விட்டது போலும்...

ஒரு தாத்தாவின் எண்பதாவது ஆண்டு நிறைவுக்குத்தான் நான் முதல் முறையாக "கிராமத்துக்கு" அழைத்துச் செல்லப்பட்டேன். வெட்டவெளியில் வீசும் காற்றும் அதில் கலந்து வரும் வயக்காட்டு வாசனையும் தான் சட்டென்று ஈர்த்தது. பிற்பகல் மூன்று மணிக்கு மேல் கிராமத்தின் பெரும்பான்மையான தோட்டங்களில் பம்பு செட் மோட்டார் ஓட விடுவார்கள்.

பெரிய கிணறு. அதையொட்டி ஒரு மோட்டார் ரூம். இறைத்த நீர் வயலில் பாய்ந்தோட வசதியாக ஒரு பெரிய சிமிண்ட் தொட்டி. "தொப தொப" என்று அந்த தொட்டியில் நம் தலைக்கு மட்டும் தயார் செய்யப்பட்ட அருவி போலக் கொட்டும் நீரைத் தரும் பெரிய குழாய். அனைத்து தோட்டங்களிலும் அமைப்பு பெரும்பாலும் இப்படித்தான் இருந்தது. நான்கைந்து பேர் மிதந்து சுற்றி வரும் அளவு பெரியதாக தொட்டி இருக்கும்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், காலம் தினம் தினம் தின்று பழகிய ஒரு பிற்பகல் எனக்கு மட்டும் புதிதாய்...குடும்பத்துக் கூட்டத்துடன் வரப்புகளின் ஊடே நடந்து வயல்களுக்கு நடுவில் இருந்த கிணற்றை அடைந்திருந்தேன் நான். தொட்டி நிறைந்து பெருக்கெடுத்த நீரோட்டத்தை புசித்துக் கொண்டிருந்தன வயல்கள். இயற்கை இப்படித்தான் நீர் அருந்தும் போலும்...அந்த வயல்வெளியே ஒருவித வாசனையின் மயக்கத்தில் கிடந்தது. பச்சை நிறத்தை சக்கையாய் பிழிந்து வடிகட்டியது போல காற்றில் அடிக்கும் வயல்களின் வாசனை.

தொட்டிக்குள் "விடப்பட்ட" எனது கழுத்தளவுக்கு நீர் இருந்ததால் கடல் போலத் தெரிந்தது எனக்கு. இறங்கு வெயிலில் நீரின் மேல் தங்க முலாம் பூசிக்கொண்டிருந்தது சூரியன். குழாயின் அருகில் சென்றாலே மூச்சு முட்டும் அளவு நீர் விழுவதும், தள்ளி வந்து இளைப்பாறுவதுமாய் நீரில் கரைந்து கொண்டிருந்தேன் நான். அப்பொழுதுதான், ஊரின் கடைக்கோடியில் இருக்கும் வீட்டில் ஏதோ "கிடா விருந்து" காரணமாக கடந்து போன பல்வேறு பாடல்களுக்குப் பின், குழாய் ஒலிப்பெருக்கியிலிருந்து மெதுவாக வழிந்து, ஈரமேறிப் போயிருந்த என் உடம்பின் துளைகளில் நுழைய வழிபார்த்து வருவது போல துவங்கியது அந்த "humming" (மெட்டி / 1982 / இளையராஜா / ஜானகி].

பாடலின் நகர்விற்கேற்ப, என்னையறியாது நான் மல்லாந்து மிதந்த படி வானத்தை பார்க்கத் துவங்கியிருந்தேன். வெயிலில் வெளீர் நீலத்தில் விரிந்திருக்கும் வானத்தில் ஆங்காங்கே ஒட்டியிருந்த மேக திட்டுக்கள் நகர்கிறதா...நான் நகர்கிறேனா அல்லது பாட்டு இரண்டையுமே நகர்த்துகிறதா என்று தெரியாத மயக்கத்தை கொடுத்தது.

humming முடிவதற்கும் பாட்டு துவங்குவதற்கும் இடைப்பட்ட நொடிகளில் பரவும் இசை, பம்பு செட் தொட்டியிலிருந்து பெருகியோடும் சிற்றோடை நீர் ஆங்காங்கே மண்ணால் உறியப்பட்டு, சட்டென்று ஒரு உடைபட்ட இடத்தில் சற்றே கொப்பளித்து வயலுக்குள் விழும் நிகழ்வின் உணர்வு போல இருக்கும்.

முதல் ஸ்டான்ஸாவின் துவக்கத்தில் வரும் வயலினையும் புல்லாங்குழலும் காற்றில் ஏறி அமர்ந்து, நெற்கதிர்களின் மீது தவழ்ந்து வருவது போல இருந்தது. அதனால் வயலே ஒருவித ஸ்வரத்தின் கட்டுக்குள் அசைந்தாடுவது போன்ற ஒரு ஏகாந்தமான காட்சியில் குளித்துக் கொண்டிருந்தேன்...

இரண்டாவது ஸ்டான்சாவின் துவக்கத்திலும் ஒரு அற்புதத்தை ஹம்மிங்கிலும் இசைகோர்வையிலும் வைத்திருப்பார் இளையராஜா. மேகத்திலிருந்து யாரோ நம்மை தூளியில் தொங்க விட்டு நீருக்குள் ஆட்டிவிடும் பரவசத்தை கொடுக்கும் அது.

இந்தப் பாட்டின் கிடார் strokes அனைத்துமே, நாம் மெதுவாக குளிர்ந்த நீரில் கால் வைத்து, படிப்படியாக உடல் முழுதும் நனைந்து பின்னர் அந்த ஈரம் மனதுக்குள்ளும் குளிரூட்டும் வரை ஏற்படும் சிலிர்ப்புகளின் ஏற்பாட்டை அவ்வப்பொழுது சுண்டி விடுவது போலவே பரவசமூட்டும்.

சமீபத்தில் மதுரைக்கு சென்றிருந்த போது, உறவினருக்கு போன் செய்து, "மோட்டார்" போடுவார்களா என்று உறுதி செய்து கொண்டு கிராமத்துக்கு போனேன். காயந்து போன வயல்கள் கடந்த காலம் போல் பார்வைக்கு வறண்டு அடியில் தாகத்துடன் இருந்தன. "இப்பல்லாம் கிணத்து தண்ணீ உப்பு கரிக்குது" என்றார் தோட்டத்துக்கு போகும் வழியில் குறுக்கிட்ட கிராமத்துக்காரர் ஒருவர். காலமே, கடக்க கடக்க எங்கோ ஒரு ஓரத்தில்  உவர்ப்பை உதிர்த்த‌ படிதானே இருக்கிறது?

பராமரிப்பின்றி பழுதான கிணறு. சிறு வயதில் புதிதாய் இருந்த தொட்டியின் நிறைய இடங்களில் தோல் உதிர்ந்து அதன் எலும்பு தெரிந்தது.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்து போன அந்த மதியம்...அதில் குளித்தவர்களின் நினைப்பிலிருந்து தெறித்த ஏதோ சில துளிகள்...அவையெல்லாம் இந்த பெயர்ந்து போன காரைப் பொடிகளில் தேங்கியிருக்கக்கூடும். எங்கெங்கும் என்றென்றும் தேங்குவதன் பெயர்தானே காலம்?

கண்கள் சிவக்க நனைந்து காய்ந்து நனைந்து காய்ந்து குளித்துத் தீர்த்தேன். எந்த வித பாட்டும் இப்போது இல்லை. காற்று மட்டும் காலத்தின் பாட்டை பாடியபடி திரிந்து கொண்டிருந்தது. இருட்டத் துவங்கியதால் வேறு வழியின்றி துண்டை எடுத்து துவட்டத் துவங்கினேன். அது என்னை துவட்டுவதற்கு பதில் மேலும் மேலும் ஈரமாக்கியபடி இருந்தது. காலக்குளியலில் ஈரமான எதையும் நினைவின் துண்டால் துடைத்து உலர வைக்க  முடியுமா என்ன?

Sunday, April 7, 2013

35. Cassette கடை முதியவர்...

நம்மில் பலர் படித்து நல்ல வேலை, சம்பளம் என்று வாழ்க்கையில் ஆகியிருக்கலாம். அந்த நினைப்பின் மூலம் நம்மில் பலருக்கு ஒரு கர்வமும் இருக்கலாம். ஆனால், காலம் வீசிய வாய்ப்புகளின் பகடையில் நம் பக்கம் விழுந்த சாதகமான தாயம் இது என்றும் அந்த வாய்ப்புகள் கிடைக்காததன் விளைவாக பலர் எங்கெங்கோ தேங்கி விட்டார்கள் என்பதை நாம் சமூகத்தின் சாளரங்கள் வழியே பார்த்துப் புரிந்து கொள்ள நேர்கையில், கர்வம் காணாமல் போய், ஒரு வித பக்குவத்தை நம் மனது அடையக்கூடும்...

நம் கேசட் கடை பெரியவர் அத்தகைய ஒரு தெளிவையும் அதே சமயம் விடை காண இயலாத கேள்வியையும் ஒருசேர கொடுத்த நிகழ்வு ஒன்று இன்றும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. கணிப்பொறி என்பது ஒரு மந்திர இயந்திரம் என்பது போல நம் போன்ற சராசரி மனிதர்களின் கைகளுக்கு எட்டாமல் இருந்த நாட்கள் அவை. ஏதேனும் செய்திகளில் தட்டுப்படுமே அன்றி, அதைப் பற்றி வேறெதுவும் நாம் அறிந்திராத காலம்.

பெரிய சைஸ் திருமண ஆல்பம் மூன்று நான்கை சேர்த்து தைத்தால் போன்ற அளவில் இருக்கும் "பாடல்கள் புத்தகம்" 5 நம் முதியவரிடம் இருந்தது. அதை நம் மடியில் வைத்தோ கையில் பிடித்தோ பார்க்க இயலாது. கையும் தொடையும் வலிக்கத் துவங்கி விடும். அத்தகைய தடிமனான புத்தகங்களில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருந்தார் அவர்.


இந்த பெரிய சைஸ் புத்தகங்களில், நம் தேடுதலை சுலபப்படுத்த, குறிப்பு புத்தகம் ஒன்றையும் வைத்திருந்தார். இதில், பாடகர்கள், இசையமைப்பாளர்களுக்கு ஒரு குறியீடு இருக்கும். உதாரணமாக,  என்றால் இளையராஜா, என்றால் ஜெயச்சந்திரன். இந்த குறியீடுகளைக் கொண்டே மற்ற புத்தகங்களில் பாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இந்த குறியீடுகள் புத்தகங்களின் எந்தெந்த பக்கங்களில் வருகின்றன என்பது குறிப்புப் புத்தகத்தில் இருக்கும். இரண்டு பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல் என்றால் அது இரண்டு குறியீடுகளில் வரும். இது ஒருவகை குறியீடுத் தொகுப்பு.

இன்னொன்றில் பாடலின் படமும் வருடமும் மற்றொரு குறியீட்டில் இருக்கும். இந்த இரண்டு குறியீடு வகைகளையும் இணைக்கும் வகையில் இன்னொரு நம்பர் குறியீடு இருக்கும். இந்த நம்பர் குறியீடு அனைத்து குறிப்பு வகைகளிலும் இருக்கும். இந்த நம்பரின் மூலம், ஒரு பாடல் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு தகவல் இருந்தால் போதும். அந்தப் பாடலின் அனைத்து தகவல்களையும் நீங்கள் பத்து நிமிடங்களில் புரட்டி எடுத்து விடலாம்...

இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? இவர் இதை வெறும் புத்தகத்தில் செய்தது, கணிப்பொறி, கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாமல் இருந்த காலங்களில்.

நான் கல்லூரியில் கணிப்பொறி படிக்கத் துவங்கியவுடன் பொறி தட்டியது... தரவுத்தளம் (Relational Database) என்பதன் அடிப்படை கோட்பாடுகளை அசாத்தியமாக அவர் அந்தப் புத்தகங்களின் ஆக்கத்தில் கையாண்டிருந்ததைக் கண்டு அசந்து போனேன் நான். குளுகுளு அறையில் "Primary key" "Foreign key" என்று புழங்கும் சொற்களை, அதன் பெயர் மட்டுமே அறியாமல், அதை ஒத்த அறிவை, தனது அனுபத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு உருவாக்கிய, ஐந்தாம் வகுப்பு மேல் பள்ளி செல்லாத முதியவர் நமக்கு விட்டுப் போன செய்தி என்ன...?

காலத்தின் வீச்சில் கணக்கற்றுச் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற கோடி மனிதர்களில், மேலும் மேலும் பலர் வளர்ந்து கொண்டே போவதும், என்ன திறமை இருக்கிறது என்று வெளியில் தெரியாமலேயே பலரின் வாழ்வு பொட்டல் வெளியில் கொதிக்கும் கோடையில் தகிக்கும் தார்ச்சாலையில் தெரியும் கானல் போலாவதும் ஏன்? விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் விளக்க முடியாத நிகழ்வுகளின் வழிகளை குறிக்க, மொழியின் துணை நாடி நாம் வைத்த சொல் தானே "விதி"!

Sunday, March 10, 2013

34. ஒரு பாடல் வரி...ஒரு சமூக நெறி...


ஒரு புதிய கண்டுபிடிப்பை சாதித்த‌ விஞ்ஞானியின் மகிழ்ச்சியுடன் இருந்தேன் நான்...இவ்வளவுக்கும், அரிதான பாடல்களை செய்து தரக்கூடிய ஒரு தரமான காசெட் கடையை கண்டறிந்தது மட்டுமே நான் செய்தது. மாதம் எப்போது பிறக்கும், அந்த மாதத்திற்கான "cassette பணம்" நாற்பது ரூபாய் அப்பா எப்போது தருவார் என்று காத்திருந்த நாட்கள் அவை.

நாற்பது ரூபாயில் ஒரு "60" காசெட் வாங்கி ரெகார்டு செய்து விடலாம். அதாவது, நாற்பது ரூபாயில், எத்தனை காசு கொடுத்தாலும் வாங்க முடியாத, நினைவாகிப் போன நிகழ்வுகளை மனக்கினற்றிலிருந்து மீண்டும் மீண்டும் ஒரு மணி நேரம் இறைத்துக் குளிக்க தோதான இசை வாளியை வாங்கி வரலாம்!

ஜெயச்சந்திரன் பாடல்கள் லிஸ்ட் மூலம் அறிமுகமான அந்த கேஸ்ட் கடை முதியவர், தான் செய்யும் வேலையைத் தாண்டி, அதை எத்தனை பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் நேசித்தார் என்பதை உணர்த்தும் வண்ணம் ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன.

நான் ஒரு முறை பதிவு செய்யக் கொடுத்த பாடல்களில் "பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே" [டிக்...டிக்...டிக் / 1981 / Ilayaraja / Yesudas / Jency] இருந்தது. அப்பொழுது நான் பள்ளி இறுதி  வகுப்பில் இருந்தேன்.

மிருதங்கத்தில் மிதந்தபடி  மேற்கத்திய தளத்திற்கு தாவும் இடங்களுக்காகவும், பல வரிகளின் முடிவில் அந்த வரிக்கு மெருகூட்டும் வண்ணம் வரும் வயலினுக்காகவும், அந்த இரண்டாம் சரணத்திற்கு முன்னர் வரும் ஜென்ஸியின் humming முடிந்து, மற்ற அனைத்து இசைக் கருவிகளும் மௌனம் காக்க, தனியே இழைந்தோடும் வயலினுக்காகவும், பல்லவியில் வரும் "விழிகளால் இரவினை விடிய‌ விடு" என்னும் வரிக்காகவும் அந்தப் பாடலை record செய்யும் விருப்பம் ஏற்பட்டது.

இந்தப் பாடலின் முதல் சரணத்தில் ஒரு வரி வெட்டப்பட்டிருக்கும். அப்போது அந்த வரி பொது ஒலிபரப்பில் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பல இடங்களில் இந்தப் பாடல், அந்த "வெட்டு" இல்லாமலலேயே ஒலித்துக் கொண்டிருந்தன.

பதிவு செய்யக் கொடுத்து சில தினங்கள் கழித்து, அவரின் கடைக்குச் சென்று ரெடியான காசெட் வாங்கிக் கொண்டு, அன்றிரவு வீட்டின் மொட்டை மாடியில் கேஸட்டை "சோதனை ஓட்டம்" விட்டேன். பாடலை நம் முதியவர் அந்த வரி நீக்கப்பட்ட வடிவத்தில்தான் பதிவு செய்திருந்தார். சட்டென்று அறுபட்டு ஒரு வரி தாண்டிப் போவதால், பாடலின் ஓட்டத்தை தடை செய்வது போல இருந்ததால், எனக்கு அது பிடிக்கவில்லை. மறு தினம் மாலை கேசட்டை எடுத்துக் கொண்டு அவரிடம் போனேன். "பல இடங்களில் இந்தப் பாடல் முழுதாக கிடைக்கிறதே...ஏன் நீங்கள் மட்டும் வெட்டுடன் பதிவு செய்திருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அவர், "இல்லை தம்பி. நான் அந்தப் பாடலை அந்த வடிவில்தான் record செய்து தரமுடியும்" என்று சொல்லி விட்டார்.

மூன்றாண்டுகள் கழித்து நான் இளங்கலை கணிதம் முடித்த பின், மேற்கொண்டு பம்பாய் செல்வது என்று வீட்டில் திட்டமிடப்பட்டது. நானும் ஊருக்குக் கிளம்பும் முன் சில காசெட்களை பதிவு செய்ய எண்ணி நமது கடைக்குச் சென்றேன். நான் பம்பாய் போவதாகவும் ஒரு வேளை அங்கேயே தங்கி விட வாய்ப்புண்டு எனவும் அவரிடம் சொன்னேன். "அந்த யேசுதாஸ் ஜென்ஸி காசெட்டை கொண்டு வாங்க" என்றார். அடுத்த நாள் அவரிடம் அதை கொடுத்த போது, "மற்ற காசெட்டுகள் வாங்க வரும்பொழுது இதையும் வாங்கிக்குங்க" என்று சொல்லி அதை வாங்கி வைத்துக் கொண்டார்.

அந்த வார இறுதியில் எனக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. எனது புது காஸெட்டுகளை சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று போட்டுக் காட்டிய அவர், இறுதியில் "யேசுதாஸ் ஜென்ஸி" கேஸட்டை ஓட விட்டார். சரியாக "பூ மலர்ந்திட" முதல் சரணத்தில் நிறுத்தினார். அதில் வெட்டப்பட்ட வரி ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலை மட்டும் அழித்து, மறுபடியும் பதிவு செய்து தந்திருக்கிறார் அவர்.

"தம்பி, இப்போ வளர்ந்து பெரியவானாயிட்டீங்க...இனிமே நீங்க இந்தப் பாட்டை முழுசாவே கேட்கலாம் அதான் உங்கள அந்த cassetteடை கொண்டு வரச் சொன்னேன். பாட்டை முழுசா மறுபடி record செஞ்சுருக்கேன்...ஆனா இந்த ஒரு வரி அழகான‌ பாட்டையே எவ்வளவு அசிங்கமாக்கிடுச்சு பாத்தீங்களா" என்றார். எத்தகைய சமூக பொறுப்புணர்வுமிக்கவராக இருந்தால், தான் செய்வது வியாபாரம் என்று தெரிந்தும், இது போன்ற "கொள்கைகள்" வாடிக்கையாளர்களை இழக்கக் கூட வைக்கும் என்று புரிந்தும், இத்தகைய "தரம்" பற்றிய அக்கறையுடன் செயல்பட முடியும்!

இப்பொழுது சேனலுக்கு சேனல், "ஜூனியர்" பெயரில் "சீஸன்" "சீஸனாய்" சீரழிந்து கொண்டிருக்கிறோமே...அங்கு அர்த்தம் விளங்காமல், தரக்குறைவான பாடல்களை சிறுவர் சிறுமியர் பாடும்பொழுது, "எத்தனை அனுபவித்து பாடுகிறாய்" என்றும் "expression போதாது" என்றும் நடுவர்கள் கூறும் பொழுது...இசை மேதாவிகளாக தங்களை கருதிக் கொள்ளும் இந்த நடுவர்களுக்கு சற்றேனும் பொறுப்பு இருந்தால், எவரேனும் தரம் குறைந்த வரிகள் உள்ள‌ பாடலை பாடத்துவங்குகையிலேயே "சபையில் இந்தப் பாடல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது" என்று சொல்லும் துணிவு இருந்திருக்குமே...ஒரு வேளை நடுவர் வாய்ப்பும் டிவி தரும் விளம்பரமும் போய் விடும் என்ற பயமோ?

"பூ மலர்ந்திட" பாடலை சமீபத்தில் ஒரு பத்து வயது சிறுமி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடினான். கேஸட் கடை முதியவர் "இந்தப் பாடலை இந்த வடிவத்தில்தான் என்னால் பதிவு செய்ய முடியும்" என்று இருபது வருடங்களுக்கு முன் சொன்னது காதருகில் கேட்டது...