Friday, July 27, 2012

21. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 11


ஒரு பாடலுக்குள்ளே கடல் மெதுவாக அசைந்து கொண்டிருக்க முடியுமா? "கடல்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமலேயே ஒரு பாடல் முழுதும் கடலின் வாசனை வீச முடியுமா? ஒரு பாடலே படகாக, அதன் மேல் நாம் அமர்ந்து, கடலில் மிதந்து, நினைவில் மூழ்கிக் கொண்டிருக்க முடியுமா? நிச்சயம் முடியும்.

அது என் ஏழாம் வகுப்பு ஆண்டு விடுமுறை நேரம். என் அப்பா பணிபுரிந்த நீதித்துறை சார்பில் ஊழியர்கள் மாநாடு கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது. இதை பயன்படுத்தி மாநாட்டின் முன்பின் தினங்களில் சுற்றுலாவும் சேர்க்கப்பட்டு ஊழியர்களின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர். ஒரு அதிகாலை பொழுதில் மதுரை கோர்ட் வளாகத்திலிருந்து நான்கைந்து "தீப்பெட்டி" வேன்கள் (அப்பொழுது இந்த வகை வேன்கள் மட்டுமே நிறைய பேர் சேர்ந்து பயணம் செய்வதற்கு புகழ் பெற்றிருந்தன) கிளம்பின. கடல் பார்க்கும் கனவுடன் அந்த வேன்களில் இருந்த பல சிறுவர்களில் நானும் ஒருவன்.

மதிய வேளை. உணவு நேரம். திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் காற்று நம்மை இழுத்துக் கொண்டு போய்விடும் என்று தோன்றிய அத்துவான காட்டில் வேன்கள் நிறுத்தப்பட்டன. சுற்றிலும் வான் தொடும் விசிறிகள் காற்றின் வேகத்திற்கு சுற்றிக் கொண்டிருந்தன. நாங்கள் இருந்த இடம், ஆசியாவில் அதிவேக காற்று வீசும் இடமான ஆரல்வாய்மொழி. கடல் எப்போது கண்ணில் தெரியும் என்ற ஏக்கமும் உணவின் ஊக்கமுமாய் வேகமாக சாப்பிட்டு முடிக்கையில் ஒரு வித "வாசனை" பிடிபட்டது. ஆம். கடலின் விரல் நம் மூக்கை தொடப்பார்க்கும் இடம் ஆரல்வாய்மொழி. "இன்னும் சற்று தொலைவில் தான் நான் இருக்கிறேன் வா" என்று காற்று மூலம் கடல் தெரிவிக்கும் இடங்கள் நம் மனதில் சட்டென்று ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். ஆரல்வாய்மொழியும் அத்தகைய இடமே...

உணவுக்குப் பின் சற்று நேரம் ஓய்வுக்கு விடப்பட்டது. வேன் டிரைவர் cassette playerரில் பாடல்கள் போட்டு விட்டு சீட்டில் சற்று அசந்திருந்தார். நாங்கள் வேன்களை சுற்றி "ஓடிப் பிடித்து" விளையாடிக் கொண்டிருந்தோம். என் வயதுக்குள் இளையராஜா கடலை ஊற்றப் போகிறார் என்று அப்போது தெரியாது. வரிசையாக வந்து கொண்டிருந்த பாடல்களின் நடுவே
தாலாட்டத் துவங்கியது வானம்! இந்த பாடலின் வசீகரத்தினால் நான் அன்று மெதுவாக ஓடி பலமுறை ஆட்டத்தில் "அவுட்" ஆனேனா என்று தெரியாது ஆனால் அந்த பேய் காற்று வீசும் ஆரல்வாய்மொழியும், மதிய நேர‌ அமைதியும் இந்தப் பாடலும் என் மனதை என்னவோ செய்திருக்க வேண்டும்.

அன்று இரவு, கடலுக்கு அருகில் இருக்கும் Vivekananda Ashram என்ற அற்புதமான இடத்தில் தங்கும் ஏற்பாடு. அந்த van driver ஒரு அசாத்தியமான இளையராஜா ரசிகராக இருக்க வேண்டும். நாங்கள் படுக்கச் செல்லும் பொழுதில், தென்னை, பனை மரங்களுக்கிடையில் "ஊ" என்று உற்சாகமாய் ஊரை சுற்றி வந்த கடல் காற்று நாங்கள் தங்கியிருந்த இடத்தையும் தழுவிப் போக மறக்கவில்லை. வேன் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு "தாலாட்டுதே வானம்" கேட்டுக் கொண்டிருந்தார். அன்று வரை, இந்தப் பாடல் காட்சியை நான் பார்த்ததில்லை. அதன் பின்னும் சில வருடங்கள் கழித்துத்தான் பாடல் வரும் காட்சியை பார்க்க நேர்ந்தது. ஆனால், அந்த அற்புத இரவிலேயே, இசையின் துடுப்பு மூலம் என்னை கரையிலிருந்து கடலுக்குள் செலுத்திக் கொண்டிருந்தார் இளையராஜா.


மறுநாள் காலை, விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி! படகில் செல்லும் பொழுது இந்தப் பாடல் ஏனோ நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. ஏன் இப்படி? என்று தெரிய ஐந்து வருடங்கள் ஆனது. அந்த இடைப்பட்ட ஐந்து வருடங்களில் இந்தப் பாடலை பலமுறை கேட்டு மனதுக்குள் பத்திரப்படுத்தியபின், வானம் இருட்டிக் கொண்டு வரும் ஒரு ஐப்பசி மாத பிற்பகலில் அதே விவேகானந்தர் பாறைக்கு போகும் படகில் காலம் என்னை ஏற்றியது.

எனக்கு முன்னரே படகில் ஏறிக் காத்திருந்தது "தாலாட்டுதே வானம்". இந்தப் பாட்டு படகில் மட்டுமா ஏறும்? கடல் முழுதும் ஏறுமே! நம் மனது முழுதும் ஊறுமே! "தள்ளாடுதே மேகம்"? மேகம் தள்ளாடுவதை பார்ப்பதற்கு நாம் கடலில் இருக்க வேண்டும். கடலின் கரங்கள் படகை அசைக்க, அந்த அசைவின் பிம்பம் போல வானத்தின் கண்ணாடியில் மேகங்கள் அசையும் காட்சி கண்ணுக்குள் புகுந்து நெஞ்சத்தை நிறைக்கும்.

இந்தப் பாடலில், பல இடங்களில், புல்லாங்குழல் மேலே நகர, அதனடியில் வயலின் நீளும். இப்படி நீளும் வயலின், பார்வையின் பரப்பில், படகின் அடியில் மோதும் அலைகள் பிடிமானம் இன்றி ஏற முயன்று, படகின் சுவர்களில் வழுக்கிக் கொண்டு மீண்டும் கடலுக்குள் விழும் அழகு போன்றது.

படகு நீரைக் கிழித்துக்கொண்டு முன்னேறுகையில் வரி வடிவங்களாய் நம்மை விட்டு நீங்கும் நீர், படகின் பின் முனையில் மறுபடியும் குழுமி நம்மைத் தொடரும் அழகியலை சொல்கிறதோ முதல் சரணத்திற்கு முன்பு வரும் வயலின்?

நம்மை வாரிச் சுருட்டிக் கொண்டு போவது போல அடுத்தடுத்து வரும் அலைகளின் உயரம் கூடிக் கொண்டே போகையில், அந்த அலைகளின் படிக்கட்டுக்களில் படகு ஏறி இறங்கும் லாவகத்துக்கு ஏற்ற லயத்தில் மனமும் ஏறி இறங்குமே...அது போன்றது இரண்டாவது சரணத்திற்கு முன்பு ஏறி இறங்கும் வயலின்.

நம் மீது ஆங்காங்கே தெறிக்கும் கடலின் துளிகள் தரும் தொடுகை உணர்வு போல  பாடலில் ஆங்காங்கே "வைத்து எடுக்கப்படும்" கப்பாஸ்!

நம் வீடுகளுக்கும் கடலுக்கும் பல நூறு மைல்கள் தொலைவு இருக்கலாம். ஆனால், வீட்டுக்குள்ளேயே கடலை வைத்திருக்கவும், விரும்பிய பொழுது "குளியல்" போடவும் உதவுகிறது இந்தப் பாடல்!

Sunday, July 15, 2012

ஆனந்த விகடனில் "பாடல் கேட்ட கதை"

இந்த வார ஆனந்த விகடன் இதழில், மதுரை என் விகடனில் வெளியான "பாடல் கேட்ட கதை" வலைப்பூ பற்றிய குறிப்பு...





Sunday, July 8, 2012

20. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 10


நம்மில் சிறு வயதில் கிரிகெட் கிறுக்கு பிடித்துத் திரியாமல் இருந்தவர்கள் மிகக் குறைவே. வாழ்க்கை நம் மேல் ஏறி விளையாடத் துவங்கியபின் விளையாட்டுக்களில் ஆர்வம் மெதுவாக நம் மீதிருந்து இறங்கி வடியத்துவங்குவதுதான் வயதின் இயல்பு இல்லையா?

நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். முதல் "unit test" - chemistry தேர்வு தினம். எங்கள் பள்ளி மைதானத்தில் TVS Srichakra அணிக்காக league cricket விளையாட அன்று  ஸ்ரீகாந்த் வந்திருந்தார். அவரையும் அவர் ஆட்டத்தையும் பார்க்கும் ஆர்வத்தில், தேர்வுத்தாளில் பேனா பெருவேகம் கொண்டு ஓடியது. சொற்ப நேரத்தில் அரையும் குறையுமாக அவசரத்தில் அள்ளித் தெளித்த விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்து விட்டு மைதானத்திற்கு ஓடிய அந்த தினத்தில், chemistry பாடத்தை விட‌ கிரிகெட்டே மனதை ஆக்ரமித்திருந்தது வயது.

மைதானம் என்றவுடன் பெரிதாக கற்பனை செய்ய வேண்டாம். ஆனால் எங்கள் பள்ளி மைதானம் அழகானது. நீள்வட்ட வடிவில், சீரிய இடைவெளியில் சுற்றிலும் மரங்களுடன் இருக்கும். இரண்டு முனைகளில் இருக்கும் மின்சார கம்பங்கள் மட்டுமே சற்று இடையூறு போலத் தோன்றும். நான் தேர்வு அறையிலிருந்து ஓடி வந்த பொழுது ஒரு விக்கெட் விழுந்திருந்தது.  ஸ்ரீகாந்த் நான்காவதாகத்தான் வருவார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.  அவரைப் பார்க்க நல்ல கூட்டம்.  எட்டிப் பார்த்தும் இடையில் நுழைந்து பார்த்தும் அவர் அரைகுறையாகத் தான் தெரிந்தார்.ஆட்டத்தையும் ஸ்ரீகாந்தையும் நன்றாக பார்க்க‌, நாங்கள் "மரக்குரங்கு" விளையாடும் மரம் நோக்கி வேக நடை போட்டேன். மரக்குரங்கு விளையாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பொருள் நயத்துடன் இந்த விளையாட்டுக்கு பெயர் வைத்தவர் யாரோ? எல்லா மரங்களிலும் மரக்குரங்கு விளையாட முடியாது. குறைந்த உயரத்தில் நிறைய கிளைகள் பிரியும் மரமே இந்த விளையாட்டுக்கு ஏற்றது. மைதானத்தில் இருந்த சுமார் ஐம்பது மரங்களில் 2 மரங்கள் மட்டுமே "மரங்குரங்கு மரங்கள்".

மரக்குரங்கு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். இன்னும் இரண்டு விக்கெட்டுகள் விழ பலத்த ஆரவாரத்திற்கு இடையே ஆட வந்தார்  ஸ்ரீகாந்த். முதல் பந்து, கண் சிமிட்டும் நேரத்தில், மைதானம் தாண்டி, பள்ளி தாண்டி, இரண்டு தெருக்கள் தாண்டியிருந்த ராமர் கோவில் உள்ளே போய் விழுந்தது. தேர்வை அவசரமாக எழுதியது வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி, அடுத்த பந்திலேயே காற்றிறங்கிய பலூன் போல ஆனது. மீண்டும் அதே போல் அடிக்க முயன்று "போல்ட்" ஆனார்  ஸ்ரீகாந்த். அவரின் மேல் கோபம் கோபமாக வர ஏமாற்றத்துடன் மரத்திலிருந்து இறங்கினேன். அவரின் ஆட்டத்தை மட்டுமே பார்க்க வந்த கூட்டம் கலைந்தது. மெதுவாக "team" அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு இருந்த சில உள்ளூர் வீரர்கள் transistor ஒன்றில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர். திருநெல்வேலி வானொலி நிலையம் என்று ஞாபகம். ஸ்ரீகாந்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த என் காதுகளில் நுழைந்து கொண்டிருந்தது "என் ஜீவன் பாடுது"...[நீதானா அந்த(க்) குயில் / 1986 / இளையராஜா / ஜேசுதாஸ்]

இந்த பாடல் நம் மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை ஏற்றி வைக்கும் இயல்புடையது. இளையராஜாவின் இவ்வகைப் பாடல்கள் சில சூழ்நிலைகளில் கேட்கும் பொழுது நம்மை அப்படியே விழுங்கி விடும். இந்தப் பாடலும் அப்படித்தான். இதன் அடியில் வழியும் உணர்வு மதிய நேரத்தில் கேட்கும் பொழுது வீரியம் மிக்கதாக தோன்றும்.

ஏதேனும் ஒரு மதிய வேளையில்,

இந்தப் பாடலை, ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில், ஒரு மர நிழலில் கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, பாழடைந்த பழைய கால கோயில் அருகிலோ சிதிலமடைந்த‌ கட்டடங்கள் அருகிலோ கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, பாறைகள் நிறைந்த குன்றின் மீதேறி போகையில் கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, காலி செய்யப்பட்டு நன்றாய் கழுவி விடப்பட்ட, பொருட்கள் ஏதுமற்ற வீட்டுக்குள் கேட்டிருக்கிறீர்களா?

இவையனைத்தும் இந்த "பாறாங்கல்லை" நம் மீது ஏற்றி வைக்க பயன்படும் இடங்கள்.

பாடல் துவங்கும் பொழுது, ஞாபகக் குடுவையில் ஊற்றிய நினைவின் திரவத்தை காலத்தின் அடுப்பில் guitar மூலம் பற்ற வைப்பார் இளையராஜா. பாடல் முழுவதுமே இந்த கிடார், தழல் போல் அடியில் எரிந்து கொண்டே இருக்கும். நினைவு திரவத்தை கிண்டி விடும் அகப்பை போல அடியிலும் மேலுமாக சுற்றிக் கொண்டிருக்கும் வயலின். ஒவ்வொரு சரணத்தின் இறுதியிலும் உச்சத்திற்கு சென்று சட்டென்று உடைந்து போகும் அந்த வயலின் - நம் நினைவு கொதித்து, அடுப்பு முழுதும் பெருகி வழிந்து சிதறும் உணர்வின் துகள்கள் உடைபடுவதுதான் அந்த உச்சத்தில் சட்டென்று முறியும் வயலினோ? வழிந்தொடும் நினைவை மீண்டும் அள்ளி கோப்பைக்குள் எப்படி போடுவது? இளையராஜாவின் உதவியுடன் கோப்பைக்குள் போட முயற்சிக்கலாம் - பாடல் முடிந்து விட்டதோ என்று நாம் நினைக்கையில் வரும் ஜேசுதாசின் குரலையும் அதன்பின் மெலிதாக கரையும் கிடாரையும் கேளுங்கள். வழிந்தோடிய நினைவுகளையும், உடைந்து போன "கோப்பைகளின்" துகள்களையும் மெதுவாக பொறுக்க முயலும் மனதை போல அது இருக்கும்.

ஸ்ரீகாந்த் ஆடிய காலம் முடிந்து சேவக் வந்து அவருக்கும் வயதாகி அடுத்த கட்ட வீரர்களும் வந்து விட்டார்கள். ஒரு நாள் போட்டியை கூட முழுவதுமாக பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டது. ஆனால் அன்று ஸ்ரீகாந்த் முகத்தை பார்த்தபடி கேட்ட "என் ஜீவன் பாடுது" ஜீவனுக்குள்ளே ஊறியபடியே இருப்பதை என்னவென்று சொல்வது?

Saturday, June 23, 2012

19. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 9


மதுரை நகரம் முழுவதும் மத்தளம் போன்ற இடியுடன் மழை இறங்கிய ஒரு மாலை வேளை. முன்னர் கண்டிராத அளவு மூன்று நாட்கள் கொட்டித் தீர்க்கப் போகிறது மழை என்று தெரியாமல் , வழக்கமான மழை என்று நினைத்து கிடைத்த இடங்களில் ஒதுங்கினோர் ஏராளம்.சற்று நேரத்தில் நின்று விடும் என்று காத்திருந்த எண்ணற்ற பேரில் நானும் ஒருவனாய், உயர்நிலைப் பள்ளியின் முதல் ஆண்டு மாணவனாய், பழங்கானத்தம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன்...

இரண்டு பேர் சந்தித்துக் கொண்டாலே, "வாங்க காபி சாப்பிடுவோம்" என்று அருகிலுள்ள கடையில் நுழையும் மதுரை மக்களின் மனது அறிந்தே, அனைத்து பேருந்து நிறுத்தங்களின் அருகிலும் குறைந்தது ஒரு காபி கடையையாவது நீங்கள் மதுரையில் பார்க்கலாம். சூடான பாலில் சுவையான காபி தேநீர் மட்டுமல்ல, அத்துடன் வாடிக்கையாளரை மகிழ்விக்க சங்கீதமும் போடத்தெரிந்த ரசனை மிகுந்தவர்கள் மதுரை டீ கடைக் காரர்கள்.

மழைக்கு ஒதுங்கியவர்களும் காபி குடிப்போருமாய் கூட்டம் நிறைந்திருந்த கூரை வேயப்பட்ட டீக்கடையில் ஒலிக்கத்துவங்கியது "நிலவே நீ வர வேண்டும்..." [என்னருகில் நீ இருந்தால் / Ilayaraja / 1990-91]. இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் அற்புதமான கிடார், கூரையிலிருந்து மழை நீர்த்தாரைகள் தரையில் தேங்கியிருந்த தண்ணீர் மேல் விழும் தாளக்கட்டில் துள்ளத் துவங்கியது. மழையின் துளிகள் இந்த கிடாரின் இழையை பிடித்து மனதுக்குள் இறங்குவது போன்ற ஒரு உணர்வு.

காலக் கிணற்றின் மீட்க முடியாத ஆழத்தில் வீசப்பட்ட நினைவின் கல்லில் இருந்து கசியும் நீர் போல நம்முள் ஏதோ ஒன்று வழிந்து கொண்டே இருக்கும் இப்பாடல் முழுவதும். அந்த கசிவின் வடிவம் போல‌"bass guitar", மெலிதாக, அனைத்திற்கும் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் நளினம் இளையாராஜாவுக்கு மட்டுமே சாத்தியம்.

முதல் stanza ஆரம்பத்தில் வரும் அந்த புல்லாங்குழல்... அதை வாசிப்பவர் குழலின் துளைகளின் வழியே அனுப்புவது காற்றையா அல்லது நம் காலத்தையா? அல்லது புல்லாங்குழலே காலத்தின் துளைகளால் செய்யப்பட்ட கருவியா? அத்துளைகளுக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போய், "அனைத்தும் கடந்து போகும்" என்று நம்மை ஆரத்தழுவுவது போல இருக்கிறது இல்லையா?

"இணைந்து இருந்த சோலைகள் உலகை மறந்த கோலங்கள்" [1st stanza இறுதி இரண்டு வரிகள்] , "கலைந்து பிரிந்த மேகங்கள் இழந்த காதல் சோகங்கள்" [2nd stanza இறுதி இரண்டு வரிகள்] என்ற வரிகளின் பின்னே சட்டென்று சொட்டும் வயலின் துளிகளை தனியே பிரித்தெடுங்கள்...மழை பெய்து ஒய்ந்த வேளையில் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்ந்து அமர்ந்திருக்கிறீர்கள். மழையின் துளி ஜன்னலின் மேற்பகுதியிலிருந்து சொட்டி உங்கள் உச்சந்தலைக்குள் இறங்குகிறது...அந்த உணர்வின் ஊடுருவலை ப்ரதிபலிப்பது போலிருக்கும் இந்த வயலின் சொட்டுக்கள்...!

அப்படியே சற்றே பின்னால் நகர்ந்து அதற்கு முந்தைய வரிகளுக்கு அடியில் செல்லுங்கள்... "நீ இன்றி வாடுதே பூஞ்சோலை மலரே...துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே"  1st stanza] , "மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே காயங்கள் ஆனதே என் நோய்க்கு மருந்தே"  [2nd stanza]. இந்த வரிகளின் பின்னே வரும் வயலின் எப்படி இருக்கிறது? தலையில் இறங்கிய நீர்த்துளி காதோரமாய் வழிந்து நம் கன்னத்தை தாங்கியிருக்கும் கைகளில் இறங்கி அந்த துளி, கை முழுதும் பயணம் செய்து முழங்கை வழியே பேருந்தின் ஜன்னல் இரும்பில் வழிந்தோடும் நொடிகள் போன்றது அது. இங்கே வழிவது மழையின் மொழியா? வயலின் ஒலியா? வாழ்க்கையின் துளியா ?

குறிப்பு: கடந்த சில நாட்களாக, இளையராஜாவின் பாடல் London Olympics துவக்க விழாவில் இடம்பெறுவதனால் அவருக்கு அங்கீகாரம் என்று வரும் செய்திகள் குறித்த "ஆதங்கம்" படிக்க:
இளையராஜாவை நாம் இழிவு செய்கிறோமா?

Saturday, June 9, 2012

18. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 8

TV அரக்கன் ஊருக்குள் புகுந்து நேர‌த்தை தின்ன‌த் துவ‌ங்காத‌ 1980களின் ஆரம்ப வருடங்கள்...அந்த நாட்களில் ஞாயிறு மாலை நேர‌ம் என்பது ஆற்றங்கரை படிக்கட்டில் அமர்ந்து நாம் பார்க்கும் நீர் போல மெதுவாக அழகாக ஊர்ந்து போகும். எங்கள் வீட்டில் பொன்னி என்றொருவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரின் தங்கை காந்தி. சில சமயங்களில் ஒருவருக்கு பதில் மற்றொருவரோ, அல்லது இருவரும் சேர்ந்தே வேலைக்கு வருவார்கள்.

சில ஞாயிறுகளில் இவர்கள் வேலை முடிந்தபின் வீட்டின் சிறார் குழுவை மொட்டை மாடிக்கு அழைத்து போவார்கள். பொன்னி அத்தகைய சமயங்களில் கதை சொல்வார். ஞாயிறு மாலைகளில் மொட்டை மாடியில் கதை கேட்பது பலாச்சுளை சுவை போன்றது என்றால், அப்போது மழை திரண்டு வந்தால், பலாச்சுளை மேல் தேன் ஊற்றியது போல இருக்கும் இல்லையா? அப்ப‌டி ஒரு தேனூறிய‌ ப‌லா போன்ற‌தொரு ஞாயிறு மாலையில் நாங்க‌ள் மொட்டை மாடியில் ஒரு க‌தையை பொன்னி சொல்ல, கேட்க‌த் துவ‌ங்கினோம்.

"இப்ப‌டியொரு இடி இடிக்கும் பொழுதில் ம‌ழைக்கு முன் வீட்டுக்கு போக‌ வேண்டும் என்று அவ‌ன்  வேகமாக‌ நடந்தான்" என்று பொன்னி ஆர‌ம்பித்த‌து ஒரு பேய் க‌தை. சிறுவ‌ய‌தில் நாம் அனைவ‌ருமே பேய் ப‌ற்றி ஒரு முறையேனும் யோசித்தோ ப‌ய‌ந்தோ இருப்போம். வ‌ள‌ர்ந்த‌ பின், ச‌மூக‌த்தில் ப‌ல‌ வித‌ கொடூர‌மான‌ பேய்களுடன் (நம்மையும் சேர்த்து) ப‌ழ‌கி, உண்மையான‌ பேயே தேவ‌லாம் என்று முதிர்ச்சி அடைந்திருப்போம்.

பொன்னி, சொல்லும் க‌தையின் சுவை கூட்ட‌ ச‌ம‌யோஜித‌மாக‌ செய‌ல்ப‌டுவார். பேய் பற்றிய கதை என்பதால், த‌ன் கூந்த‌லின் பின்ன‌லை அவிழ்த்து விட்டுக் கொண்டார். க‌ருத்து க‌விழ்ந்த‌ மேக‌ங்க‌ளின் பிண்ண‌னியில் த‌லைவிரித்திருந்த‌ பொன்னி அந்த‌ சூழ‌லுக்கு ந‌ன்றாக‌வே அச்ச‌மேற்றினார்.

இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்னரே, என் இன்னொரு அண்ணன், அப்போது பிரபலமாக இருந்த‌ "உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வ‌ச்ச‌ கிளி" பாட‌லை ("ரோசாப்பூ ர‌விக்கைக்காரி" / SPB ) கேட்டால் பயத்தில் ஓடி ஒளிந்து கொள்வார் என்று வீடு முழுதும் அறிந்திருந்தது. இந்தப் பாடலை, பொன்னி கதைக்கு  இடையிடையே பயன்படுத்திக்கொண்டார்.

இந்த‌ பாட‌ல் முழுவ‌துமே இளைய‌ராஜா ந‌ம் ம‌ன‌தை க‌ரும்பு மிஷின் உள்ளே விட்டு பிழிந்தெடுத்திருப்பார். பிழியும் வித‌த்தில் பிழிந்தால், ம‌ன‌ம் ச‌க்கையானாலும் அனுப‌வ‌த்தின் ருசி என்ப‌து அடியிலிருக்கும் பாத்திர‌த்தில் சேரும் க‌ருப்புச் சாறு போலிருக்கும் இல்லையா? பாட‌ல் ஆரம்பத்தில் வ‌ரும் இசையிலேயே சொட்ட‌த் துவ‌ங்கும் சாறு, முத‌ல்  stanza முன்ன‌ர் வரும் "ஆரீராரோ" வில் கொட்டி நிர‌ம்பும்!
மூன்றாவது stanza துவக்கத்தில் வரும் SPBயின் அந்த "தனன..."வும் அதை தொட‌ர்ந்து வ‌ரும் அந்த‌ "Cornet" இசையும், வெறித்த வானத்தின் நடுவே நகரும் ஒற்றை மேகத்தை போல ஒரு சோக நிழல் கவிழும்.

பாட‌லில் ஆங்காங்கே வ‌ரும் வ‌ய‌லினை நாம் எப்ப‌டி அர்த்த‌ப்ப‌டுத்துவ‌து? வ‌ய‌லினா அது? bowவை வயலின் மீதா இழுக்கிறார் ilayaraja ? கால‌த்தின் க‌ண்க‌ளை மூடியிருக்கும் ஞாப‌க‌ இமைக‌ளின் மீது violin bow வைத்து இழுத்த‌து போல‌ல்ல‌வா  பெருகி வ‌ழிகிற‌து துய‌ர‌த்தின் ஒலி!

க‌தை உச்ச‌க்க‌ட்ட‌த்தை நெருங்கிய‌ பொழுது, அச்ச‌த்தின் பிடியில் அம‌ர்ந்திருந்த‌ எங்க‌ளுக்கு, வாடைக் காற்றில் மொட்டை மாடி வாச‌ல் க‌த‌வு "ப‌ட் ப‌ட்" என்று எழுப்பிய‌ பெருத்த‌ ச‌த்த‌ம் கிலி கிள‌ப்பிய‌தில் விய‌ப்பில்லை. அல‌றி அடித்து ப‌டிக‌ளில் இற‌ங்கிய‌தில் த‌வ‌றி விழுந்து என் முட்டி பெய‌ர்ந்த‌து. விளையாடும் பொழுது விழுந்த‌தாக‌ வீட்டில் நினைத்துக் கொண்டார்க‌ள். "க‌தை கார‌ண‌ம்" வெளியிட்டால் இனி க‌தையே கிடையாது என்று பொன்னி சொல்லிய‌தால், பேய்க்க‌தையால் முட்டி பெய‌ர்ந்த‌ க‌தை எங்க‌ள் அனைவ‌ராலும் பெரியவர்களிடமிருந்து "அமுக்க‌ப்ப‌ட்டது".

பாட்டு வ‌ரிக‌ளின் உள்ள‌ர்த்த‌ம் தெரியாம‌ல், இது ந‌ட‌ந்து சில‌ வ‌ருட‌ங்க‌ள் வ‌ரை, பால் திரிந்தால் பேய் வ‌ரும் என்றும் ("ப‌ட்டியில‌ மாடு க‌ட்டி பால‌ க‌ற‌ந்து வ‌ச்சா..."),க‌ரும்பின் அடியில் இருக்கும் செம்ம‌ண் பார்த்து ("பொங்க‌லுக்கு பூங்க‌ருப்பு...") க‌ரையான் என்றும், க‌ருப்ப‌ட்டி பார்த்தால் ஒரு இன‌ம் தெரியாத‌ ப‌ய‌மும் ("வ‌ட்ட‌க் க‌ருப்ப‌ட்டிய‌ வாச‌முள்ள‌ ரோசாவ‌..."), பிச்சிப் பூவிலும் ம‌லைக‌ளிலும் பேய் இருக்குமென்றும்...வெளியில் சொன்னால் பொன்னியின் க‌தைக‌ள் கிடைக்காது என்ப‌தால் உள்ளேயே வைத்து கொண்டு பயத்துடன் திரிந்த‌ சிறு வ‌ய‌து நாட்க‌ள்...சீக்கிரத்தில் மறக்க முடியாது.

என்னுடன் அமர்ந்து கதை கேட்ட Lakshmi, Jayashree அக்காக்க‌ள் இருவரும் காலத்தின் ஊருக்கு மாற்றலாகிப் "போய் விட்டார்கள்". பொன்னியை பார்த்து இருப‌து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. காந்தி அன்று வெள்ளை நிற முழுக்கை ஆண் ச‌ட்டை போட்டுக் கொண்டு "ஒடாத‌ விழ‌ப்போற‌" என்று என் பின்னே ஓடி வந்தது புகை போட்ட காட்சி போலத் தெரிகிறது.

இப்பொழுதெல்லாம் இந்தப் பாடல் அதிகமாக காதில் விழுவதில்லை. சில மாதங்கள் முன் கோயப்பேடு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொழுது ஒரு கடையிலிருந்து எதிர்பாராமல் எழுந்து வந்தது "உச்சி வகுந்தெடுத்து"...சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் போனாலே முக்கால் மணியாகும்.இளையராஜாவின் இசைவாகனத்தில் ஏறினால் கண் சிமிட்டும் நேரத்தில், காத தூரம் காலவெளியில் போகலாமே...அதில் மதுரை சென்னை தூரமெல்லாம் ஒரு தூரமா? எனவே ஒரே நொடியில், கோயம்பேட்டிலிருந்து எங்கள் வீட்டு மொட்டை மாடியில் முப்பதாண்டுகள் எம்பிக் குதித்தேன்...பிச்சிப் பூ நெடியில் வழிந்தோடியது அந்த நொடி...

Friday, May 25, 2012

17. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 7

உங்களின் முதல் மலை பிரதேச பயணத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலும் அது ஊட்டி அல்லது கொடைக்கானல் என்று இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏழாம் வகுப்பு காலாண்டு விடுமுறையில் கொடைக்கானல் சென்றதே, நான் மலை அன்னையின் மடியில் ஏறி மகிழ்ச்சி பெற்ற  முதல் அனுபவம். இந்த பயணம் நேர்வதற்கு சில வாரங்கள் முன்னரே, கேட்கும் திசையெங்கும் தேநீர் கடைகளின் உபயத்தில், காதுகளில் பாய்ந்தபடி இருந்தன "இதயகோவில்" பாடல்கள். "இதயம்" என்றால் biology பாடம் தாண்டி என்னவென்றே தெரியாத வயது...

மனதின் நீரோட்டத்தில் நினைவின் குமிழ்கள் மீண்டும் எழுந்து உடைகிறது...முதல் முதலாக மலை மேல் மனம் குதிக்கும் பரவசம் பார்த்து கிட்டத்தட்ட  25 ஆண்டுகள் ஆயிற்று.பலவகை உறவுகளுடன், பலவகை உணர்வுகளுடன் கொடைக்கானல் மலையை பலமுறை ஏறி இறங்கியாயிற்று... ஒரு ஆத்மார்த்தமான தோழன் / தோழி போல,  எதிர்பார்த்து, காத்திருந்து, மலையேறும் பொழுது, ஏதோ ஒரு மலைப்பாதையின் திருப்பத்தில் திடீரென்று ஒட்டிக்   கொள்ளும் "இதய கோவில்" பாடல்கள்.

கொடைக்கானல் செல்லும் பேருந்துகள் அனைத்துமே வத்தலகுண்டு கடந்தவுடன், மலை அடிவாரத்தில் இருக்கும் கடை ஒன்றில் காபி டிபன் சாப்பிட நிறுத்துவது வழக்கம். இங்குதான் "இதய கோவிலின்" "மதில் சுவர்" தென்படத் துவங்கியது...கல் போன்ற மனமோ களிமண் போன்ற மூளையோ எதுவாயிருப்பினும் இசையின் மீது லயிப்பு ஏற்படுத்தும் இளையராஜாவின் இதய கோவில் பாடல்கள் என்னை அறியாமலே எனக்குள் ஊடுருவியது  அந்த முதல் பயணத்தில் தான்...

பேருந்து மலை ஏறத்துவங்கியவுடன், சட்டென்று வெப்பம் வடிந்து சில்லென்ற காற்று மேனியை வருட, மலை, தன்  பசுமை கூந்தலை அள்ளி முடியாது பறக்க விட்டது போல் அசையும் பச்சைகள் ஆச்சர்யமூட்ட, "கூட்டத்திலே கோவில் புறா" என்னுடன் பறந்து வந்து கொண்டே இருந்தது...ஒரு humming அல்லது ஒரு chorus இத்தனை வசீகரமாக இருக்க முடியுமா? "இதயம் ஒரு கோவில்" பாட்டின் துவக்கத்தில் வரும் அந்த SPB...[இளையராஜா பாடும் இதே பாடலின் மற்றொரு version ஆரம்பத்தில் Janaki],"வானுயர்ந்த சோலையிலே" துவக்கத்திலும் ."கூடத்திலே கோவில் புறா " இடையிலும் வரும் அந்த ஜானகி...என்று எத்தனை இனிமை ! "மலைகளின் இளவரசி உங்களை வரவேற்கிறாள்" என்னும் பலகை பார்க்கும் வரை காணும் காட்சிகளின் பின்னணி இசை போல இந்த பாடல்கள் மனதை தொடர்ந்த போது, நான் "இதய கோவிலின்" இசைத் தூண்கள் நிரம்பிய பிரகாரத்தை வலம் வரத் துவங்கியிருக்கிறேன் என்று உணரவில்லை.

இன்று பொதுக் குளியலறை போல் நீர் வழியும் "silver cascade" அன்றைய காலங்களில், ஆரவாரமாக,  "அருவி" என்ற  பெயருக்கு ஏற்ப இருந்தது...கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இறங்கி நடக்கையில், பனி நகர்வதை பார்வையில் பார்த்த அந்த முதல் நாள்...வாயிலிருந்து காற்றை ஊதி அது பனியின் வடிவமுடன் படர்வதை பார்த்த அந்த  முதல் நாள்...புற்களின் மெத்தையில் பூத்திருக்கும் நீர்த்துளியை பற்கள் நடுங்க பார்த்த அந்த முதல் நாள்...என்று எத்தனை "முதல்" அந்த ஒரே நாளில்...!

"kodaikanal lake" படகு சவாரியில் ஏரியின் நீரை ஏந்தித்  தெளித்து ஏற்பட்ட மகிழ்ச்சியின் நடுவே மழை வர, இன்னும் படகு பயணம் வேண்டும் என்று இதயம் கேட்க, வேறு வழியின்றி இடையில் இறங்கி மழைக்கு ஒதுங்க, "படகு குழாம்" எதிரே இருந்த கடையில் ஒலித்த "யார் வீட்டு ரோஜா"வும் அந்த மதிய நேர மழை காட்சியும் உயிருக்குள் காலம் ஒட்டிய ஓவியம்! சில வாரங்களுக்கு முன், ஏரியின் மீதிருந்த இருள் போர்வையை சூரியன் விலக்க சோம்பல் முறித்த ஏரியின் மேல் சாரல் விழும் அதிகாலை பொழுதில் "நடை" போடும் வாய்ப்பு கிடைத்தது...ஏரியை சுற்றி வரும் ஆளரவமற்ற சாலையில் என் மனைவியுடன் நடந்து கொண்டிருந்தேன்...மனிதர்களின் வாசனை ஏதுமின்றி மழையின் வாசனையில் ஊறியிருந்தது ஏரி ! அதிகாலை என்பதே உள்ளும் புறமும் அசுத்தமற்ற வடிவத்தின் அச்சோ?

ஏரியின் நீர்பரப்பில் சாரல் விழுந்து தண்ணீரில் தோன்றிய சிறு வட்டங்கள் ஏரியின் மேனியில் ஏற்பட்ட புல்லரிப்புகள் போல் கிளம்பி மறைந்தன.  "படகு குழாம்"! எதிரே இருந்த கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. அந்த இடத்தை நான் நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்று காலத்துக்கு தெரியும். எனவே எனக்கும் தெரிந்தது.சாலையோர மரங்களில் இருந்த இலைகளின் வழியே இறங்கிய சாரல் என்னை நனைக்கத் துவங்கியது. கால்கள் தானாக  காலத்தின் பிடியில் இறுகி மெது நடையானது. "...வான் மேகம் மோதும் மழைதனிலே நான் பாடும் பாடல் நனைகிறதே..." மாறிவிட்ட வயது...மாறி விட்ட வாழ்க்கை...இடம் மட்டும் இருபத்தி ஐந்து ஆண்டின் தடம்! இந்த பாட்டு இப்போது வெளியில் இருந்து வரவில்லை. எனக்கும் காலத்திற்கும் உண்டான தனிப்பட்ட உறவின் அம்சமாக காலம் பாடலை எனக்குள் இருந்து எடுத்து இறைத்துக் கொட்டிக் கொண்டிருந்தது போலும். "coakers walk" உள்ளே மூதாட்டியிடம் சோளம் வாங்கும் பொழுது..., "bryant park" உள்ளே சிவப்புக்கும் ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட நிறத்தில் இருந்த பூவை எப்படி இயற்கை உண்டாக்கியிருக்கிறது என்று திகைத்த போது ...என்று அன்று முழுவதும் வெவ்வேறு இடங்களில் இந்த பாடல் என் தோளேறி விளயாடிப் போனது."...பாடல் இங்கே நனைவதனாலே நனையும் வார்த்தை கரையுது இங்கே..."

இப்படித்தான், பல ஆண்டுகள் முன்பு ஒரு நாள், வெறித்திருந்த வானம் தந்த வெளிச்சமான  மதியம், "pine forest" காண நேர்ந்தது. "வானுயர்ந்த சோலையிலே" அங்கு வரவேற்றது...சட்டென்று கருக்கத்துவங்கிய வானம்...நம் மேல் விழுந்து விடுமோ என்ற கணத்துடன் நகரும் மேகம் என அந்த சூழலே மாறிப்போனது...கொட்டப்போகும் மழையை எட்டிப்பார்ப்பது போல் உயர்ந்திருந்த மரங்களும் ஊசியாய் துளைத்த காற்றும்...இந்த பாட்டின் இரண்டு சரணங்கள் முழுவதும் வரிகளின் பின்னே நீந்தித் திரியும் violin...! ஒரு வேளை  "pine forest" இறக்கங்களில் நம் நினைவுகளை  உருட்டி விட்டால் நிகழும் உணர்வும் இந்த வயலின் தரும் ஒலியிழைகளும் ஒரே ஸ்வரமோ? "வானுயர்ந்த சோலையிலே" கேட்டால் நாம் "நான் பாடும் மௌன  ராகம்" பாடலையும் தவிர்க்க இயலாது...இந்த இரண்டு பாடல்களுமே இரட்டைப்  பிறவி போல...ஒன்றினால் மற்றொன்று ஞாபகம் வரும்.இந்த பாடலில், முதல் stanza துவக்கத்தில், அழுகையின் முதல் துளி, விழுவதற்காக திரண்டு, இமையின் இரண்டு மயிரிழைகளுக்கு இடையில் நகரும் உணர்வு போல தள்ளாடும்  வயலின்...!

நீங்களும் முயன்று பாருங்கள்...அதிகாலை பொழுதில் சாரல்களின் விழுதை பிடித்தபடி ஏரியின் ஓரமாக நடந்து பாருங்கள்....இளையராஜாவின் ஏதோ ஒரு பாடல் சட்டென்று உங்கள் மனதின் விரலை பிடித்தபடி உங்களுடன் நடக்கத் துவங்கும்! அதன் வேகத்திற்கு ஒரு போதும் நாம் ஈடு கொடுக்க முடியாது - ஏனென்றால் அது ஒரு காலக்குதிரை. "லகான்"  பற்றிய  அவசியமோ அச்சமோ இல்லாத காலக்குதிரை! அதன் நாலு கால் பாய்ச்சலில் நம் பயணம் வித்தியாசமானது...ஏனென்றால், இது போன்ற காலக்குதிரையின் பாய்ச்சல் பெரும்பாலும் பின்னோக்கி இருக்கும்தானே?



Saturday, May 12, 2012

16. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 6

நாம் வசிக்கும் பகுதிகளில் கட்டாயம் ஒரு மாறுபட்ட மனநிலை மனிதரையேனும் நாம் அடிக்கடி கடந்து வந்திருப்போம்...இவர்களுக்கு, நாமும், நம் தேவைக்கேற்ப ஒளிந்து கொள்ள நமக்கு பயன்படும் சமூகமும் சேர்ந்து "பை..." என்று பெயரும் வைத்திருப்போம். நான் பார்த்த வரையில், ஏதேனும் ஒன்றின் பின்னால் தறிகெட்டு அலையும் நமக்கு பொருந்தும் அளவு, இப்பெயர், மாறுமட்ட மனநிலை மனிதர்களுக்கு பொருந்துவதில்லை என்றே தோன்றுகிறது. இத்தகைய மனிதர் ஒருவர், சுமார் முப்பது வருடங்கள் எங்கள் தெருவில் தெருவே வீடாக குடியிருந்தார். 1970 - 2000 ஆண்டுகளுக்கு இடையில் மதுரை மைய பகுதிகளில் வசித்த எவருக்கும் இவர் அறிமுகம் தேவையில்லை.

வெள்ளை அங்கியும், நீண்ட தாடியுமாக ஆறடிக்கு மேல் ஒடிசலான தேகத்துடன் வளைய வரும் இவர், கிழக்கே விளக்குத்தூண், மேற்கே பெரியார்   பேருந்து நிலையம், வடக்கே நேதாஜி சாலை, தெற்கே வெளி வீதி என்ற எல்லைக்குள் தன்னை அடக்கிக் கொள்வார். இவர், ஒரு முறையேனும் எவரிடமும் காசு கேட்டோ பேசியோ பார்த்ததில்லை. சில சமயம் "over coat" அணிந்து கொண்டு டாக்டர் போல நடமாடுவார். பகல்களில் ஊசி வைத்து ஏதேனும் துணியை தைத்து கொண்டும் இரவுகளில் குப்பைகளை குவித்து தீ மூட்டி அதன் நாக்கையே உற்று பார்த்துகொண்டிருப்பதுமாய் கரைந்து கொண்டிருக்கும் இவர் ஜீவன். பள்ளி நாட்களில் இவர் அருகில் செல்லவே பயமாக இருக்கும். இவரை கடக்க வேண்டியிருப்பின் தெருவின் எதிர்புறம் சென்று மீண்டும் வருவது போன்ற செயல்களை சிறுவயதில் செய்திருக்கிறேன். இவரை பற்றி நான் வைத்திருந்த பிம்பத்தை சுக்கு நூறாக்கிய அந்த நாளும் வந்தது...

நான் ஒன்பதாவது படித்து கொண்டிருந்த  நேரம்.Ravi Shastri இறங்கி வந்து long on மேல் சிக்ஸ் அடிப்பது போலவும், Kapil Dev இரண்டு கால்களும் அந்தரத்தில் மடங்கியபடிஇடக்கையை (ஒரு கையால் சாமி கும்பிட்டால் எப்படி இருக்குமோ அவ்வாறு) கழுத்துக்கு கீழ் வைத்து பந்து வீசப்போகும் காட்சி போலவும் இருக்கும் அட்டை போட்ட நோட்டுக்களையே தேடி வாங்குவது என் பழக்கம். நேதாஜி சாலையில் இன்றும் இருக்கும் "insania" கடையே எங்கள் ஆஸ்தான புத்தகக்கடை.அன்றும் நோட்டு வாங்குவதற்காக இன்சானியா முன் நின்றிருந்தேன். இந்தக் கடைக்கு சற்று தள்ளியுள்ள அம்மன் கோவிலில் விழா...கடையின் இடப்பக்கம் உள்ள மூலையில் நம்மவர் சில குப்பைகளை போட்டு எரித்துக்  கொண்டிருந்தார். கடைக்காரர் சிக்ஸர் அடிக்கும் ravi shastriயை தேடிக்கொண்டிருந்தார்..."நான் வாழ வைப்பேன்" [1979 / TMS / கண்ணதாசன் / இளையராஜா] படத்திலிருந்து "எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே..." கோவில் குழாய் ஒலிபெருக்கிகளில் கசிந்து கொண்டிருந்தது...மாலை நேர கூட்டம் நடைபாதைகளில் நிரம்பியிருக்க TMS உருகும் இந்த பாட்டில் மொத்தம் 3 stanza.பொட்டல் வெளியில் பொசுக்கும் வெய்யிலில் தனியே நடக்கும் தகிப்பை கொடுக்கும் வயலினும் புல்லாங்குழலும் வரும் ஒவ்வொரு stanza துவக்கமும் இந்த பாட்டின் இளையராஜா special. திடீரென்று பீறிட்டு கிளம்பிய அழுகை ஒலி வந்த திசை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தீயை உற்று நோக்கியபடி பெரும் ஓலத்துடன் அழுத நம் நண்பருக்கும் இந்த பாட்டுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ? ஒரு வேளை "நீ வாடினால் வண்ண பூ பூ வாடுமே" என்பது போல இவரின் தோட்டத்தில்மலர வேண்டிய ஒரு பூ  வாடியதால் இவர் வாழ்வு வாடி விட்டதோ?
"கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை; நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை" என்ற ஆதங்கத்தின் உச்சத்தை தான் அவர் தீயிலே எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தாரோ? "காலம் வரும் அந்த தெய்வம் வரும் அந்த நாளும் வரும் நல்ல வாழுவும் வரும்" என்று இவர் நம்பியிருந்து, அந்த காலமும் தெய்வமும் கூட்டு சேர்ந்து இவர் வாழ்வின் மீதேறி மிதித்து கூழாக்கி விட்டதோ? 

பாட்டு முடிந்த சில  நொடிகளில் இவர் அழுகை நின்று விட்டது. பார்த்திருந்தவர்களின் மானுடம் உறைந்து போய் கிடக்க  அவர் தன் உடமைகளுடன் நடக்கத் துவங்கினார்...அன்று நள்ளிரவே நான் மொட்டை மாடியிலிருந்து பார்க்கையில் எங்கள் வீட்டருகில் இவர் மீண்டும் தீயை மூட்டியிருந்தார். "தீக்குள் விரலை வைத்தால்..." என்ற வரிக்கு ஆயிரம் அர்த்தங்கள் இல்லையா? வெள்ளைத் தாளில் வரைந்த  சோகச்சித்திரம் போல எங்கள் தெருவில் உலவிய இவர் கசங்கிய காகிதமாய் காலத்துடன் போனார்...

நாம் சாலையை கடக்கும் வேளையிலோ பேருந்து நிலையங்களின் அழுக்கான  மூலையிலோ இவர் போன்ற பலரை பார்க்கிறோம். இவர்கள் இப்படி ஆனதன் ஆதார நொடிகளின் பின்னணி இசை போல ஏதேனும் ஒரு பாடல் இவர்களுக்குள் பதிந்து, அந்த  பாடல் இவர்களின் மூளைக்குள் உலை போல் எப்போதும் கொதித்துக்கொண்டே இருக்குமோ? இவர்களை குறிக்க நாம் பயன்படுத்தும் "பை..." வார்த்தையை உபயோகத்திலிருந்து நீக்கலாம் இல்லையா?

பி.கு: 

(i) இளையராஜா இந்த பாடலை, இன்றைய நவீன recording முறைகளை பயன்படுத்தி மெருகூட்டி, பாடல் முழுதும் அடியில் guitar ஒட விட்டு, மது பாலகிருஷ்ணன் போன்ற ஒருவரை பாட வைத்து தன் படத்தில் மீண்டும் வெளியிட்டு "remix" என்றால் இதுதான் என்று நம்மை மகிழ வைப்பாரா?

(ii)இதே படத்தில் வரும் "திருத்தேரில் வரும் சிலையோ" பாடலுக்கு முன் வரும் இசை, சற்றே மாறுப்பட்ட பல்லவி design ஆகிய இரண்டையும் தவற விடாதீர்கள்...