Sunday, February 10, 2013

33. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 20


ஒரு பாடல் நம்மை எங்கெல்லாம் அழைத்துச் செல்லும்? அல்லது ஒரு பாடலால் என்னதான் செய்ய முடியும்? நிச்சயமாக, ஒரு வாழ்க்கைக்கு தேவையான, ஒரு வாழ்க்கை முழுவதும் நினைத்து நினைத்து பார்க்கக் கூடிய அனுபவங்களைத் ஒரு பாடலால் தர இயலும்.. காலத்தின் பாதைகளுக்குள்  அது நம்மை கூட்டிப் போகும். அது எப்பொழுது எங்கு நிகழும் என்று நம்மால் சொல்ல முடியாது.

பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், பெரியார் பேருந்து நிலையம் அருகே "வானுயர்ந்த சோலையிலே" வந்து கொண்டிருந்தது. "இதய கோயில்" வெளியாகி ஒன்றிரண்டு வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். எனவே "வானுயர்ந்த சோலையிலே" என்றால் இதய கோயில் என்று தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் அறிந்திருந்த நேரம். ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால், அந்த மாலை வேளையில் இந்தப் பாடலை SPBக்கு பதிலாக ஜெயச்சந்திரன் பாடிக்கொண்டிருந்தார். மெட்டும் வேறு.

பல்லவி மட்டுமே ஜெயச்சந்திரன் பாடியதிலும் SPB பாடியதிலும் ஒரே வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கும். சரணங்களின் வரிகள் வெவ்வேறு.
சட்டென்று மனதில் பதிந்து போனது ஜெயச்சந்திரன் பாடல். சில வாரங்கள் கழித்து, எனது அடுத்த cassette record செய்வதற்காக "shopping complex"ல் உள்ள‌ தேவி மியூசிக்கல்ஸ் சென்றிருந்தேன். அங்கிருந்தவரிடம் இதய கோயில் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய "வானுயர்ந்த சோலையிலே" இருக்கிறதா என்று கேட்டேன். அவரோ, "அது SPB பாடியது" என்றார். நான், "இல்லை. ஜெயச்சந்திரனும் வானுயர்ந்த சோலையிலே பாடியிருக்கிறார்" என்று அந்த மெட்டில் பாடிக் காட்ட, என்னை "ஒரு மாதிரியாக" பார்த்து, "இப்படியொரு பாட்டே கிடையாது" என்றார்.

இடையில் ஓடிய சில வருடங்களில் ஜெயச்சந்திரன் பாடிய வானுயர்ந்த சோலையிலே கேட்கும் வாய்ப்பு மறுபடி கிட்டவேயில்லை. இருப்பினும், கடற்கரையில் நடக்கையில் விரல்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட மணல் துகள் வீட்டுக்கு வந்த பின்னும் எங்கேயோ ஒட்டியிருப்பதைப் போல, இந்தப் பாடலும் என்னுடன் வந்து கொண்டேயிருந்தது.

அன்றெல்லாம்  பாட்டு கேசட் ரெகார்டு செய்யும் கடைகளில் பெரும்பாலானவை நம்மிடம் list வாங்கி வைத்துக் கொண்டு அவற்றை மொத்தமாக "record room" அனுப்பி record செய்து வாங்கி நம்மிடம் தரும். இந்த வகை கடைகளில், அரிதான பாடல்கள் பலவற்றை "இல்லை" என்று சொல்லி விடுவார்கள். கடைகளில் "collections" என்ற பெயரில் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யும் வகை கேசட்கள் எனக்கு சுத்தமாக ஒத்து வராது. ரசனையில் நெய்யப்பட்டு நினைவில் சேமிக்கப்பட வேண்டிய‌ இசையின் உணர்வுகளை பல சமயம் அது அறுத்தெரியும். உதாரணமாக, "சின்ன புறா ஒன்று" என்று உருகும் SPB உடனே "ஆத்தா ஆத்தோரமா வாரியா" என்று கேட்பார். அல்லது "திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே" என்று நாராயணனிடம் நற்கதி தேடும் யேசுதாஸ் அந்தர் பல்டி அடித்து அடுத்த பாடலிலேயே "வச்ச பார்வை தீராதடி" என்பார். எனவே நான் இத்தகைய, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விற்கப்படும் கேசட்டுகளை ஒதுக்கியே வந்தேன்.

அரிதான பாடல்களை பதிய முடியாமல், பல கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்த எனக்கு 1991ல் அந்த அதிர்ஷ்டம் கிட்டியது. இன்று போத்தீஸ் இருக்கும் தெருவில், அதற்கு எதிரே குறுகிய சந்துக்குள் ஒரு "recording room" இருப்பதை கண்டுபிடிக்க நேர்ந்தது. அங்கு நான் முதன்முதலாக ஒரு ஜெயச்சந்திரன் list வைத்துக் கொண்டுதான் சென்றேன். "தங்க ரங்கன்", "நெஞ்சிலாடும் பூ ஒன்று", "முடிவில்லா ஆரம்பம்", "வட்டத்துக்குள் சதுரம்", "மலர்களே மலருங்கள்", "நல்லதொரு குடும்பம்" என்று நிறைய கடைகள் இல்லையென்று கைவிரித்த விசித்திரமான பெயர்கள் கொண்ட படங்களில் இடம்பெற்ற ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் கொண்ட list அது.

கடையினுள் வெள்ளை வேட்டி சட்டையுடன் ஒரு முதியவர் இருந்தார். சிவகவி படத்திலிருந்து MKT பாட்டு ஒன்று சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. தனது கெட்டியான நீள்சதுர வடிவ கறுப்பு நிறக் கண்ணாடியை சரிசெய்தபடி எனது லிஸ்டை பார்த்தார். எனது ஜெயச்சந்திரன் பாட்டுப் பட்டியலில் "பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே; ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே..." (அலைகள், MSV, 1973) பாடலின் வரியை மட்டும் எழுதியிருந்தேன். என்ன படம் என்று தெரியவில்லை. வரிசையாக வாசித்து வந்த அவர், இந்தப் பாடல் வரி வந்தவுடன், சட்டென்று "அலைகள்" என்று சொல்லிக் கொண்டே எழுதினார். இதுதான் ஜெயச்சந்திரனின் முதல் தமிழ் பாடல் என்றும் சொல்லி வியக்க வைத்தார்.

இவரிடம் ஜெயச்சந்திரன் பாடிய "வானுயர்ந்த சோலையிலே" பற்றி கேட்கலாம் என்று தோன்றியதால் கேட்டேன். சிறிதும் தாமதமின்றி அது "நூலறுந்த பட்டம்" (1979) என்ற படம் என்றார். மேலும், அதற்கு இசை இளையராஜா இல்லை. ஸ்டாலின் வரதராஜன் என்பவர் இசையமைத்த பாட்டு. பிறகு "இதய கோயில்" படத்தில் இளையராஜாவால் இன்னும் மெருகேற்றப்பட்டது என்றார். நான் அவரை ஒருவித பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அவருக்கும் பதினைந்து வருட கால‌ தொடர்பை அந்தப் பாடல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...

தொடர்வோம்...

Sunday, January 27, 2013

32. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 19


நாம், சமூகத்துடன் நேரடி தொடர்பில் இறங்குவது பெரும்பாலும் கல்லூரியில் கால் வைக்கும் பொழுது துவங்குகிறது. இதன் ஒரு வடிவம், NCC, NSS போன்ற அமைப்புகளில் சேர்ந்து "நாட்டு நலப் பணி"களில் ஈடுபடுவது. நம்மில் பெரும்பாலானோர் நம் கல்லூரி நாட்களில் இதில் பங்கு பெற்றிருப்போம்..

எனது "இளங்கலை" பருவத்தில் NSS சார்பாக நாங்கள் traffic ஒழுங்குபடுத்தும் பணியில் சில பொழுது பணியாற்றியிருக்கிறோம். அத்தகைய ஒரு தினத்தின் மாலைப் பொழுதில், நெரிசல் மிகுந்த திண்டுக்கல் ரோடு சந்திப்பில் நாங்கள் நிறுத்தப் பட்டிருந்தோம். பழைய ஆரிய பவன் ஒரு முனையுமாய், முருகன் கோயில் மறு முனையுமாய் இருக்கும் அந்த நான்கு ரோடு சந்திப்பில், பக்கத்துக்கு நால்வர் வீதம் கைகளை இணைத்தபடி குறுக்கே நின்றால்  red signal ஒதுங்கினால் green! ஒருபக்கக் குழு ஒதுங்கி "green" செய்யும் பொழுது ஒரு விசில் தர வேண்டும். மறுபக்க குழு உடனே மறு விசில் கொடுத்து கைகளை கோர்த்தபடி மறித்து "red" செய்ய வேண்டும். இவ்வாறு நான்கு குழுக்களின் ஒருங்கிணைப்புடன், ஒவ்வொரு பக்கத்து சாலையிலும் போக்குவரத்து நின்று செல்லும்.

சாலை ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மதுரை மகாஜனம் "இது என்னடா புதுக் கூத்து" என்று எங்களை வினோதமாக பார்த்தபடி கைத்தடுப்புகளை மீறப் பார்க்கும்.  இந்த சந்திப்புக்கு அருகில் ஒரு சிறிய அம்மன் கோயில் சாலை நடைபாதையில் அந்நாளில் இருந்தது. அங்கு "கூழ்" ஊற்றும் திருவிழா. அப்புறம் என்ன, அங்கு இளையராஜா, ஒலிப்பெருக்கியின் வழியே மனதை நிரப்பும் இசையின் கூழை எடுத்து நமக்குள் ஊற்றுவார் என்பதை தனியே சொல்லவும் வேண்டுமா?

நாங்கள் பாடல்களை கேட்டவாறே எங்கள் வேலையை செய்து வந்தோம். அப்பொழுது "தங்க நிலவுக்குள்" (ரிக்க்ஷா மாமா / 1992 / Ilayaraja / SPB) பாடல் வந்தது.

இந்தப் பாடலில் சில அற்புதங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அதை தேடியெடுக்க, இளையராஜா செதுக்கியிருக்கும் வெவ்வேறு ஒலித்தளங்களின் தோட்டத்தில் நாம் நடக்க வேண்டும். அடித்தளத்தில் கிடார் மற்றும் தபேலாவின் கைப்பிடியை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு வயலின் மற்றும் புல்லாங்குழலின் படிகளில் ஏறிய பின், லயங்களின் லாவகத்துடன் ஒரு ஊஞ்சல், நாம் அமர்ந்தாட அமைக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு புரிய வரும்.

இதை எப்படிச் செய்திருக்கிறார் இளையராஜா? சில வரிகளைத் தவிர அனைத்து வரிகளின் முடிவிலும் வரும் புல்லாங்குழல் எப்படியிருக்கிறது? ஊஞ்சலில் நாம் உயரே செல்லும் பொழுது காதின் பின்புறத்தில் ஒரு காற்று வருடிச் செல்லும்...அனுபவத்திருக்கிறீர்களா? அதைப் போன்றது இந்த வரிகளின் பின்வரும் குழலின் வருடல். அந்த உச்சியில் ஒரு நொடி நின்று, மீண்டும் கீழிறங்கி, கால்கள் தரையைத் தொட்டு, ஒரு விசை உருவாகி மறு உச்சிக்கு போவோம்...அந்த உச்சிகளில் ஏற்படும் வருடல்களை ஆணியடித்து நிறுத்த முயல்வது போல சீரான இடைவெளியில் வரும் இரண்டு கப்பாஸ்... இந்த ஊஞ்சல் வீச்சில் தரைதொடும் நடுப்பொழுதை, காலக் கட்டுக்குள் கொண்டு வருவது போலவே, இரண்டு கப்பாஸ் நடுவே ஒலிக்கும் அந்த ஒற்றை மணியோசை...

இந்த பாடலின் வசீகரம் பற்றி பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு நிமிட மயக்கத்தில் எதிர் சாலையில் விசில் ஊதியது எங்கள் காதில் ஏறவில்லை. ஏறியிருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயம் என்று அப்போது எங்களுக்குத் தோன்றவும் இல்லை. பதில் விசில் ஊதி, கைகளை கோர்த்து உடனடி தடுப்பு ஏற்படுத்த வேண்டிய நாங்கள், இசை அடுப்பை ஊதிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட நிமிடத்துக் குழப்பத்தில், பெருநெரிசல் ஏற்பட்டு அந்த குறுகிய சாலைகளின் சந்திப்பு குழப்பமாகிப் போனது... "college பசங்க கிட்ட பொறுப்பான வேலைய‌ கொடுத்தா இப்படித்தான் ஆகும்" என்று சொல்லியபடி எங்களை கடந்து போனார் ஒருவர்.

இப்பொழுது அதே இடத்தில் "automatic signal" வந்து விட்டது. இன்றும் அந்த இடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம், அத்தனை நெரிசலிலும், இரைச்சலுடன் கடக்கும் வாகனங்களுக்கு இடையிலும், அனைத்து சத்தமும் மறைந்து போய், அந்த வரிகளுக்கு முடிவில் வரும் புல்லாங்குழல் எங்கிருந்தோ என் காது மடலை தொடுவது போன்ற ஒரு உணர்வு.

நாம் கடக்கும் சாலைகள் அனைத்துமே காலத்தின் பாதைகள் தானே?

Friday, January 11, 2013

31. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 18


நாம் பயணம் போகும் பொழுது எடுக்கும் பேருந்து பயணச்சீட்டுக்களை என்ன செய்வோம்? இறங்கியவுடன் கசக்கி எறிவோம். பக்கத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போடும் பழக்கம் கூட நமக்குக் கிடையாது. ஆனால் என்னிடம் ஒரு "40 பைசா" டிக்கெட் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பத்திரமாக இருக்கிறது. ரோஜா நிறத்தில் இருக்கும் அதன் உள்ளே கால ரோஜாவின் வாசனையை ஒளித்து வைத்திருக்கிறேன்.

அன்று வழக்கம் போல் பழங்கானத்தம் petrol bunk அருகே பேருந்து நின்றது. அதற்கு சில நிமிடங்கள் முன்னர் கூட்ட நெரிசலில் நான் "pass" எடுக்க எத்தனிப்பதை கவனித்த நடத்துனர் என்னை "வைத்துக் கொள்" என்று சைகை செய்து போய் விட்டார். பஸ் நின்ற இடத்தில் இரண்டு checkerக‌ள் நின்று கொண்டிருந்தனர்.டிக்கெட் எடுக்காததற்காக நான்கைந்து பேர்கள் சற்று தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பார்த்தவாறே படிக்கட்டில் இறங்கிய என்னை கீழே இருந்த checker நிறுத்தினார்.

நான் பழக்கமான உச்சரிப்பில் "pass" என்றேன். "எடு" என்றார் . பையின் பல இடங்களில் தேடியும் பாஸ் பிடிபடாததால் மெய்யில் ஒரு கலக்கம் தோன்றியது. "வீட்டுல மறந்து வச்சிட்டேன் சார்..." என்ற என் இழுவை முடியும் முன் என்னை அந்த வரிசையில் ஒதுக்கி நிற்க வைத்தார்.

வரிசையாக நின்றிருந்த பஸ்களின் உள்ளிருந்தவர்களும் நடந்து போகின்றவர்களும் பள்ளிச் சீருடையில் இருக்கும் என்னையே பார்ப்பது போல் அவமானம் பிடுங்க, என் காதுகள் சாலையின் எதிர்புறம் இருந்த டீ கடையின் ஒலிப்பெருக்கி நோக்கி ஓடியது...அது காலையில் "ஒருபடப் பாடல்கள்" வரும் நேரம். "கவிக்குயில்" [1977/ Ilayaraja] கூவிக் கொண்டிருந்தது.

எனது பேருந்தின் conductor, பெரியார் நிலையம் - திருப்பரங்குன்றம் வழித்தடத்தில் பயணம் செய்பவர்களுக்கு பரிச்சயமான முகமாக இருக்கலாம். நெற்றியில் சிறிய குங்குமப் பொட்டுடனும், அதிகளவு எண்ணெய் தடவப்பட்டு படிய வைக்கப்பட்ட தலையுடனும், சட்டையின் கையிடுக்குப் பகுதிகளில் பஸ் புழுக்கத்தின் வியர்வை, அதன் உப்பு மூலம் அடையாளம் வரைய, வலம் வரும் பொறுமைமிக்க மனிதர்.

ராதையை பூங்கோதையை கண்ணன் அழைப்பதாக என் காதை அடைந்த பாடலுக்கிடையில், தனது stage collection வெள்ளைப் பேப்பரை செக்கரிடம் கொடுத்து சரி பார்த்த conductor என்னைப் பார்த்தபடி, "தம்பி பாஸ் மறந்துருச்சு... நான் தான் முன்னாடி போயிட்டு வந்து ticket தாரேன்னு முன்னாடி போயிட்டேன்" என்று அந்த நாற்பது பைசா டிக்கெட்டை என் கையில் திணித்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழிக்க, "கிளம்பு கிளம்பு" என்றார். அவர் என்னையும் என் மறதியையும் காப்பாற்றியிருக்கிறார் என்று புரிய சில நிமிடங்கள் ஆனது.

நமக்கு சற்றும் சம்பந்தமில்லா மனிதருக்கும் உதவிட முடியும் என்று அடிமனதில் ஆணி அடித்துப் போனார் அந்த பேருந்து நடத்துனர். மெதுவாக நடந்து சற்று தூரம் கடந்து நான் திரும்பி பார்க்கையில் ஒரு பத்து பேராவது டிக்கெட் இல்லாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். தான் கண்ட காதல் ஓவியம், கனவோ நினைவோ என்று சாலையில் போய் வருவோரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் சுஜாதா

இவை நடந்த சுமார் பத்து நிமிட இடைவெளியில், "காதல் ஓவியம் கண்டேன்" மற்றும் "குயிலே கவிக்குயிலே" கடந்து போனதை அவ்வப்பொழுது நான் என்னையறியாமலே கவனித்து கொண்டிருந்திருக்கிறேன் என்பது, பின்னாளில் இந்தப் பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம், அந்த பத்து நிமிடங்கள், பளிங்கில் வரையப்பட்ட கருநிற ஓவியம் போல் துல்லியமாக நினைவில் மீண்டு வருவதன் மூலம் ஒரு வித பரவசம் கொடுக்கிறது.

"சின்னக் கண்ணன் அழைக்கிறான்" பாடலில் சில சிறப்புகள் உண்டு. தபேலாவில் தவழும் விரல்கள் விடுபடும் இடைவெளிகளை, கிடாரால் கோர்த்து ஒரே சரமாக கொண்டு செல்வார் இளையராஜா. பிற்பாடு ஆயிரக்கணக்கான பாடல்களில் அவர் இதைச் செய்திருந்தாலும், இந்த உத்தியின் மூலம் நம் மனதின் ரசனைக்கு உற்சாகமூட்ட‌ அவர் முயன்ற ஆரம்ப கட்ட நாட்களில், வெளிவந்த முக்கியமான பாடல்களில் இதுவும் ஒன்று.

பொதுவாக புல்லாங்குழல், வயலின், வீணை போன்றவற்றை ஒன்றுடன் மற்றொன்று ஒத்து, பின் தொடர்ந்து வருமாறு வைப்பது தான் இளையராஜா வழக்கம். இந்தப் பாடலின் இரண்டு சரணங்களுக்கு முன்னரும் ஒரு புல்லாங்குழல் மற்றொரு புல்லாங்குழலையே தொடர்வது நமக்கு வித்தியாசமான உணர்வு தரும் - ஒரு பாம்பின் மேல் மற்றொரு பாம்பு ஊர்வதை பார்ப்பது போல....

ஒவ்வொரு சரணமும் முடிந்து மீண்டும் பல்லவிக்குள் நுழைகையில் கிடார் "கண்ணன் அழைக்கிறான்" என்ற வார்த்தைக்குள்ளேயே ஒரு சுற்று சுற்றி அடங்கும்.

இதே படத்தில் வரும் "கவியே கவிக்குயிலே" பாடலின் tabla-guitar combination,அது வரை நாம் கேட்டிராத ஒரு கெட்டித்தன்மையுடன் இருக்கும். இதில் தபேலாவின் ஆழத்தையும் கிடாரின் ஆழத்தையும் எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று இளையராஜாவுக்கு எப்படித் தோன்றியதோ...ஆனால் அந்த விகிதம் இதுவரை வேறு எந்தப் பாடலிலும் அவர் பயன்படுத்தவில்லை.


அன்று duty முடிகையில் அவருக்கு நாற்பது பைசா இடித்திருக்கும். அந்த நாட்களில் நாற்பது பைசா என்பதற்கு மதிப்பு இருந்தது. ஆனாலும் அடுத்த நாள் அவரிடம் நாற்பது பைசாவை திருப்பிக் கொடுக்கையில் அவர் வாங்கவில்லை!

ஒரு வருடத்திற்கு முன் திருப்பரங்குன்றம் செல்லும் பேருந்தில் இவரை பார்க்க நேர்ந்தது. நன்றாக நரையேறிய தலையுடன், அதே குங்குமப் பொட்டுடன், அதே வழித்தடத்தில் அவர் இருக்கிறார். முன்னர் விரல்களுக்கிடையில் ரூபாய் நோட்டுக்களையும், விதவிதமான நிறத்தில் பயணச்சீட்டுகளையும் வைத்திருந்த இவரிடம் இப்போது பயணச்சீட்டு இயந்திரம் இருக்கிறது. பொத்தானை அழுத்த, எட்டு ரூபாய் என்று அச்சடிக்கப்பட்டு ஒரு வெள்ளை காகிதம் வெளிவர, கிழித்துக் கொடுத்தார் அவர். அதை வாங்கும் பொழுது, அந்த பயணச்சீட்டு மிகவும் கனமாகத் தோன்றியது. கால எடை! காலத்தின் கனத்தை எப்படி அளப்பது? வருடங்களைக் கொண்டு நாம் அளக்கலாம். நம் வாழ்க்கையைக் கொண்டு காலம் அளக்குமோ?

Saturday, December 8, 2012

30. இப்படியும் சில புதிய பாடல்கள் பகுதி 2


அந்த நெடுஞ்சாலையில், இரவின் அமைதியை துரத்திய படி வேகத்தில் வழுக்கிக் கொண்டிருந்தது பேருந்து. நினைவுகள் வழியும் மனதை நித்திரை தழுவியது போன்ற பாவனையில் கண் மூடியபடி இருந்த பல பயணிகளில் நானும் ஒருவன்.

"தினம் தினம் நான்" பாடலின் சுவை அதன் "rendering"ல் இருக்கிறது. பாடலின் எந்தெந்த வார்த்தைகளில் ஏகாரம் வருகிறதோ, எந்தெந்த வார்த்தைகளில் நெடில்கள் நேர்த்தியாக நீட்டிக்கப் பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் பாடகர் நம்மை உணர்வுகளின் சிகரங்களில் ஏற்றி இறக்குகிறார். பேருந்தின் அசைவின் மேல் மற்றொரு அடுக்காய் நகரும் இந்த "ஏற்ற இறக்கம்" துயரத்தின் சிறகுகளை நம் எண்ணத்தில் பொருத்தி, நினைவுகளில் மனதை இருத்தி, தண்ணீரில் தோய்த்து எடுக்கப்பட்ட பறவையின் தத்தளிக்கும் சிறகு போல தடுமாறி பறக்கிறது...

இப்படியாக எனது சிறகை நான் உலர்த்திக் கொண்டிருந்த பொழுதுதான் பக்கத்து இருக்கையிலிருந்த முதியவரிடமிருந்து அந்த ஒலி கேட்டது.  முதலில் அது அலைச்சலுக்கு பிந்தைய ஆயாசத்தின் ஒலி போன்ற தோன்றியது. "ச்" என்று அவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த‌ ஒலி,  முதுமை அர்த்தப்படுத்த முயலும் வெறுமையின் சித்தமாக‌ இருக்கலாம். அல்லது காலத்தின் முள் குத்திய இடத்தில் முதுமை இடும் முத்தமாகவும் இருக்கலாம். அல்லது பாடலின் ஏதோ வரி அவரின் நினைவு மீனை கால நதியிலிருந்து குத்தியெடுத்து கரையில் போடும் சத்தமாக இருக்கலாம்...

"வேர் நான் இழக்கிறேன்" என்னும் பொழுதும் அவரிடமிருந்து மீண்டும் அதே ஒலி. அவரின் நினைவு மீன் தரையில் குதிக்கிறதோ என்று நினைப்பதற்கான‌ சாத்தியக்கூறு அதிகமாயிற்று. இதற்கிடையில் இரண்டாம் சரணத்திற்கு முன் அபார வேகத்துடன் வந்து போன‌ வயலினை, பேருந்தின் வேகத்துடன் இணைந்து கேட்கையில், அந்த இரண்டின் இடையிலும் ஒரு லயம் இருப்பதாக வெளியில் மண்டியிருந்த இருள் பேருந்துடனே ஓடி வந்து சொன்னது.

"கனவாய் வாழ்க்கை கரைந்தால் நல்லது" என்ற போது, எதிரின் வந்த பேருந்து தந்த வெளிச்சத்தில் எனது கண்ணும் அவரின் காலமும் சந்தித்துக் கொண்டது அவரின் கண்ணில் தெரிந்தது. ஒரு நொடி என்னைப் பார்த்து, "பாட்டு நல்லாருக்குப்பா" என்றார். பிறகு அவரின் கரையில் விழுந்த மீனை மீண்டும் நதிக்குள் விடும் முயற்சியில் மெளனமானார். பேருந்தில், நிறைய பேரின் பிரத்யேக நதியிலிருந்து நிறைய மீன்கள் கரையில் விழுந்து கொண்டிருக்கக் கூடும்...கால நதி...நினைவு மீன்...

இத்தகைய பேருந்து பயணங்களில், பாடல்கள் முடிந்தபின், சட்டென்று ஒரு நிசப்தம் நிலவும். குளிர்விக்கப்பட்ட விளக்கில் மீதமிருக்கும் திரியின் வெப்பம் போல, அப்பொழுது வலம் வந்த நினைவுகளின் மீதம் சிறிது சிறிதாக ஞாபகப்பெட்டிக்குள் அடுக்கப்பட்டு பூட்டப்படும் பொழுதுகள் அவை.

அதிகாலை. அரைகுறை தூக்கத்துடன் பேருந்திலிருந்து அவரவரின் அன்றைய வாழ்க்கைக்கு வரிசையாக இறங்கினோம். "cooperative bank" பையுடன் இறங்கிய முதியவர், குளிர் வழியும் காலை நேர சாலையில் தனியே நடந்து சென்று கொண்டிருந்தார்...விருப்பமுற்றோ விருப்பமற்றோ நாம் தின்ற காலத்தை அல்லது அது நம்மைத் தின்ற மாயத்தை உணர்வுகளால் மீட்டெடுத்து ஞாபகத்தின் உலையிலிட்டு நினைவுகளாய் சமைத்து வைத்து மீண்டும் மீண்டும் வாயிலிட்டு மென்று விழுங்க முயல்வதே முதுமையா? அதற்கான ஏற்பாடுதான் இளமையா?



Thursday, November 22, 2012

29. இப்படியும் சில புதிய பாடல்கள்...


சமீபத்தில் ஒரு நீண்ட தூர பேருந்தில் இரவு நேர பயணம்...இப்பொழுதெல்லாம்,  a/c, a/c sleeper என பலவகை சொகுசு பேருந்துகள்  ஏகப்பட்டவை சர்வ சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்தாலும் இத்தகைய வசதியற்ற பேருந்தில் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு காற்றுக்கு தலையை கொடுத்தபடி பயணம் செய்யும் சுகம் தனி...அப்படிப்பட்ட பயணம் தான் அன்றைக்கு எனக்கு வாய்த்திருந்தது.

அற்புதமான speakers மற்றும் woofers அமைக்கப்பட்ட பேருந்து. இதன் வழியே 80கள் காதுக்குள் வழியாதா என்று எண்ணியபடி இருக்கையில் அமர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்னர் இசை என்பது அனுபவிக்கத்தக்க ஒன்றாக‌ இருந்தது. ஆனால் அந்த அனுபவத்தை மெருகேற்றும் ஒலிப்பேழைகள் அன்று இல்லை. இன்றோ ஒரு இசை கோர்வையின் ஒவ்வொரு இழையையும் நாம் பிரித்து ரசிக்கும் வண்ணம் வளர்ந்திருக்கிறது ஏராளமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள். ஆனால் தற்போது வெளிவரும் பாடல்களில் பெரும்பான்மையானவை, குப்பைத்தொட்டியில் குதித்த நாய், தன் கால்களால் கிளறி வெளியில் வீசும் குப்பை போல நாற்றமெடுக்கிறது. இது காலத்தின் முரண். நம் காதுகளுக்கும் முரண். இதை உறுதிப்படுத்தும் வகையில் பாடல் என்ற பெயரில் ஏதோ இரைந்து கொண்டிருந்தது.

என்னருகில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்து அமர்ந்தார். தலைக்கு மேலிருந்த இடத்தில் அவர் கொண்டு வந்த "கூட்டுறவு வங்கி" பை அமர்ந்து கொண்டது. அந்தப் பையின் கைப்பிடி அடைந்திருந்த தொய்வு, அவருடன் அது பல "பயணங்களில்" பல வருடங்கள் உடன் வந்திருக்கும் என்று காட்டியது. அல்லது வாழ்க்கையின் மீது அவரின் பிடி தொய்ந்ததை காட்டுவதாகவும் இருக்கலாம்...

நகரத்து நெரிசல் விலகி, வேகமெடுத்தது பேருந்து. ஆயிரக்கணக்கான மரங்களை கொன்று அதன் மேல் படுத்துக் கொண்டிருக்கும் நம் சுயநலத்தின் அடையாளமான நீண்ட நெடுஞ்சாலையை நம்முடனேயே பயணம் செய்து கண் சிமிட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தன நட்சத்திரங்கள். தொலைதூரத்தில் தெரிந்த கிராமத்து விளக்குகள் இரவின் உடம்பில் உருவான வெளிச்ச கொப்பளங்கள் போல வீங்குவதும் வெடிப்பதுமாக தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

ஒரு பாடல் முடிந்து சற்று நேர அமைதிக்குப் பின் ஒலிக்கத் துவங்கியது "உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்" [நான் / Vijay Antony / 2012] அடுத்த வரியிலேயே அதன் வசீகரம் இன்னும் கூடி "நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும்" என்று தொடர, சட்டென்று பாட்டில் ஒட்டிக் கொண்டது மனது. இரவின் வெளியில் நீந்திக் கொண்டிருக்கும் நினைவுகளை மண்ணில் விழும் மழை போல உறியத் துவங்கியது உள்ளம். மனதின் துவாரங்களில் இரவு எப்பொழுதுமே நினைவுகளை நிரப்ப முயன்று கொண்டே இருக்கிறது இல்லையா?

முதியவர் இந்த வரிகளை ரசிக்கிறார் என்பது, அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள் எனினும், அவரின் இருக்கை அசைவு என் இருக்கையை அசைக்கும் சுருதியில் தெரிந்தது. இந்தப் பாடலின் பல்லவி முடிகையில் "beat" அனைத்தும் நின்று விட, தனியே repeat ஆகும் முதல் வரி, பொட்டல் வெளியில் கொட்டும் இரவில் வானம் பார்த்தபடி மண்ணில் நகரும் நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போகிறது... இதே போன்று பாடல் முடிவிலும் ஒரு முறை வரும் என்று நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றம் அளிக்கிறார் இசையமைப்பாளர். இரண்டு சரணங்களையும் இவர் "close" செய்திருக்கும் விதம் நன்று.

இந்த பாடலிலும் நாம் பின்னர் பார்க்கப் போகும் "தினம் தினம் நான்" பாடலிலும் அத்தனை வரிகளிலும் வார்த்தைகள்! இதிலென்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றலாம்...ஆனால் அப்படித்தானே இன்றைய பாடல்கள் நம் எதிர்பார்ப்பை "இறக்கி" வைத்திருக்கின்றன?

நன்றாக இருக்கிறதே என்ற யோசனையை உடைத்து, "இரு, இந்த பாட்டையும் கேள்" என்பது போல ஆரம்பித்தது "தினம் தினம் நான்...". இந்த பாட்டின் அற்புதமான கமக்கங்கள் ஜன்னல் வழியே புகுந்து முகத்தை தழுவும் காற்றின் விரல்கள் நகர்வதை போன்ற‌ உணர்வு மயக்கம் கொடுத்துக் கொண்டிருந்தன.
அப்பொழுதுதான் அருகிருந்த முதியவரிடம் இருந்து அந்த ஒலி வெளிப்பட்டது. உணர்வின் ஒலியை ஒரு பதிவுக்குள் அடக்க வழியில்லையே... அடுத்த பதிவிலும் தொடர்வோம்...


Saturday, November 10, 2012

28. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 17

தீபாவளிக்கு முந்தைய இரவு எப்படிப்பட்டது? ஒவ்வொரு ஊரிலும் வீட்டிலும் வெவ்வேறு அனுபவங்களைத் தாங்கியதாக அது இருக்கும். மதுரையில் தீபாவளி இரவு என்பது "விளக்குத்தூண்" என்ற சொல்லின் அடையாளம் எனலாம். மதுரையில் வளர்ந்த அனைவருமே ஒரு முறையேனும், அந்த இரவில், நெட்டித் தள்ளும் மனித சமுத்திரத்தின் நடுவே விளக்குத்தூண் நோக்கி நடந்து போயிருப்பர்.

தீபாவளிக்கு முன் தினம் காலையிலிருந்தே நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாசி வீதிகளிலும், அவற்றின் குறுக்கே வெட்டிப் போகும் திண்டுக்கல் ரோடு,  town hall road போன்ற தெருக்களிலும் சாலை முழுவதும் கடைகள் முளைக்கும். குடை, குடம், சேலை என்று ஏதேதோ பொருட்கள் நினைக்க முடியாத‌ விலையில் கூவப்பட்டு ஆளை இழுக்கும். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் குவியத் துவங்குவர்.

மதியம் நடக்க முடிகின்ற அளவில் இருக்கும் கூட்டம், இரவு தொடங்கி, ஒவ்வொரு அடி முன்னேறுவதற்குள் மூச்சு முட்டும் அளவில் அதிகரிக்கும். சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் பூம்புகார் நகரத்தின் இந்திர விழா, இரவு நேரத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று தோன்றும்! இந்த இரவு "ரோந்து" முதன் முதலில் எனக்கு வாய்த்தது 1987ல்.

இரவு உணவு உண்டபின் சுமார் பத்து மணிக்கு துவங்கும் இந்த "சுற்று" விடிகாலை மூன்று மணியளவில் நிறைவுறும். "சிட்டி சினிமா" அருகில் மரத்தட்டிகளினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தெருவோர கடையொன்றில் "தாய்மார்களே..." என்று துவங்கி, ஒரு ஒலிபெருக்கி அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. இந்த "அழைப்பின்" இடையே, மீண்டும் மீண்டும் ஒரு இசை சில நொடிகள் வருவது போல "set" செய்திருந்தார்கள். அந்த இசைக்கு நடுவே மீண்டும் "தாய்மார்களே" என்று துவங்குவார். முப்பது ரூபாய் நாற்பது ரூபாய் என்று சேலைகளை ஒருவர் அலை போல வானத்தில் பறக்க விட, அந்த அறிவிப்புக்கு இடையே வந்த இசையின் உள்ளே இருந்த வயலின் சட்டென்று என்னைப் பிடித்துக் கொண்டது.

"மெல்ல மெல்ல" என்னும் பாடல் துவக்கத்தில் (வாழ்க்கை / 1984 / சுசீலா / ராஜ் சீதாராமன்) வருவதே அந்த வயலின்.வயலினை நம் வாய்க்குள் போட்டு சுவைக்க முடியுமா? இந்தப் பாட்டில் முடியும். இந்த வயலினை கேட்க கேட்க, அதன் நெளிவு சுளிவுகள் நம் நாக்கில் ஏறி உட்கார்ந்து கொள்ளும். பிறகு, நமக்கு பிடித்தமான மொழியில் பொருத்தமான எழுத்தை எடுத்து அதை நமக்குப் பிடித்தமான நினைவில் மடித்து, அந்த வயலினை, வார்த்தையாலேயே நாம் வாசிக்கலாம்! ஒரு "த" அல்லது "ன" அல்லது "ம்" எடுத்து, இந்த வயலின் ஓட்டத்திற்கு ஏற்றபடி சொல்லிப் பாருங்கள்...இதன் உதவியுடன், எத்தனை தொலைவையும் அலுப்பின்றி உற்சாகமாக‌ கடந்து சென்று கொண்டேயிருப்போம் நாம்!

"வெங்காய வெடி" மீது அந்நாட்களில் எனக்கு ஒரு கண். இந்த "மெல்ல மெல்ல" வயலினை வாயினால் வாசிக்க முயன்ற படி அந்த தீபாவளி இரவு முழுதும் வெங்காய வெடி கிடைக்கக் கூடிய குறிப்பிட்ட இடங்களில் வலம் வந்தோம். இறுதியாக, கீழவாசல் சந்திப்புக்கு முன்னர், இடது புறம் ஒரு இருட்டுச் சந்தில், சாக்குக்கு அடியிலிருந்து ஒரு "உறை" பையிலிருந்து அவர் எடுத்துக் கொடுத்த போது, இளையராஜா அங்கும் வந்து அந்த வயலினை மனதுக்குள் வாசித்துக் கொண்டிருந்தார்.

சுமார் பத்து வருடங்கள் கழித்து, மற்றுமொரு தீபாவளி இரவு..."உலா" போவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, சென்னை தொலைக்காட்சியில் இளையராஜாவின் குழுவில் இருந்த ஒருவரின் பேட்டி ஒலிபரப்பானது. அதை பார்த்து விட்டுக் கிளம்பலாம் என்று அமர்ந்திருந்தேன். பேட்டியின் இறுதியில், அவரை, பிடித்தமான ஒரு வயலின் bit வாசிக்கும்படி கேட்டார் கேள்வியாளர். "மெல்ல மெல்ல" பாட்டில் வரும் வயலின் எத்தனை கடினமானது என்று விளக்கிய அவர், தனக்கு மிகவும் பிடித்தமானது என்று  அதையே வாசிக்கத் துவங்க, நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள் திரையில் ஓடத்துவங்கின...

அதன் பின், அன்றைய இரவு நான் தீபாவளி உலா போன பாதையெங்கும், பத்து வருடத்திற்கு முந்தைய நினைவுகள், நிலா போல இரவு முழுதும் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது...மனதுக்குள் அந்த வயலினுடன்...

நினைவுகளை கோர்ப்பது காலத்தின் கயிறா? அல்லது கோர்க்கப்பட்ட நினைவுகளுக்கு காலம் என்று பெயரா?

Sunday, October 28, 2012

27. நீதானே என் பொன் வசந்தம் - இளையராஜா என்ன செய்தார்?


இளையராஜாவின் இசை விரும்பிகள் இப்போது சந்தித்து கொண்டால், அவர்கள் உரையாடலில் தவறாமல் இடம்பெறுவது, "நீதானே என் பொன் வசந்தம்" பாடல்கள் கேட்டாயா?" என்பது தான். அதிலும், நாற்பது வயது கடந்தவர்கள் இந்த கேள்வியை கேட்கும் பொழுது அவர்களின் கண்களை உற்றுப் பார்த்தால், அதில், கடந்த காலம் கொப்பளித்துக் கொண்டிருப்பது தெரியும்.

எனது ஒலிப்பேழையின் உள்ளே இந்தப் பாடல்களை தேக்கிய பின்னும் கேட்பதற்கான சரியான காலத்திற்காக சில வாரங்களாக காத்திருந்தேன்... ஏனென்றால், "நீதானே எந்தன் பொன் வசந்தம்" என்னும் "வரி"க்குதிரை லேசாக அதன் கால்களால் நம்மைத் தட்டினால் நாம் முப்பது ஆண்டுகள் முன்னர் போய் விழுவோம். நினைவெல்லாம் நித்யா, 80கள், நம் பால்யம் என்று நூல் பிடித்து நாம் எங்கோ திரியத் துவங்குவதற்கான வசதி இந்த வரியின் அடியில் ஒளிந்துள்ளது. எனவே, இதை தனித் திரியாக பிரித்து, பின்னர், புதிதாக வந்திருக்கும் பாடல்களை கேட்கும் அனுபவம் பெற‌ வேண்டும்.

சென்ற வாரம் மதுரைக்கு போகும் சந்தர்ப்பம். மழை பெய்த மதுரை இரவில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உலவும் வாய்ப்பு. பள்ளியில் படிக்கையில், "நினைவெல்லாம் நித்யா" நாட்களில், தினசரி மாலை, பெரும்பாலும் அம்மாவின் வாசம் நிறைந்த தேநீருடனும் "பனி விழும் மலர் வனம்" முடிந்து "நீதானே எந்தன்..." பாடல்களுடனும் இதே மொட்டை மாடியில் "home work" செய்யத் துவங்கிய வருடங்கள் நினைவில் எழ, ஒலிப்பேழையை ஓட விட்டேன். வெல்லத்தை கலத்தில் கொட்டி, கொதிக்க கொதிக்க, பாதி ஆவியாகி அடியில் பாகு கெட்டிப்பது போல ஆழமற்ற‌ பாடல்கள் முதல் கேட்பிலேயே ஆவியாக‌, மீதமிருந்தது "முதல் முறை" மற்றும் "சற்று முன்பு" பாடல்களின் வெல்லப்பாகு...

"முதல் முறை பார்த்த ஞாபகம்" பாடலில் சில அற்புதங்கள் இருக்கின்றன. எத்தனை நாட்கள் ஆகி விட்டன இது போன்ற "கனமான" வயலின் கோர்வையை காதுக்குள் ஊற்றி...

நம் உடலில் காயம் ஏற்பட்டால் அது காய்ந்து பொருக்காக மாறும். அந்த பொருக்கை விரலால் தடவுகையில் ஒரு வித நெருடல் தோன்றும். இதுவே, மனதில் விழுந்த நினைவின் பொருக்காக இருந்தால்? அதைத் தடவிப் பார்ப்பது எப்படி? அதைத் தான் இந்தப் பாடல் முழுவதும் இளையராஜாவின் violin நமக்குத் தருகிறது.

நம்மூரில் ஊர்களுக்கிடையே பயணம் செல்கையிலே சாலையோரம் இருக்கும் முள் மரங்கள் சில சமயம் நம்மேல் சட்டென்று கீறி விட்டு பின்னோக்கி ஓடி விடும். அந்தக் கீறல் ஒரு நொடி தான். ஆனால் அது நீண்ட நேரம் "எரியும்". அது போல, இந்தப் பாட்டின் சரணங்களில் ஆங்காங்கே வரும் அந்த violin ஒற்றை கீறல்க‌ள்!

"காற்றை கொஞ்சம்" பாடல் முழுவதும், பழைய இளையராஜாவின் வயலின் பாட்டுக்கு அடியில் ஓடுவது, மனதுக்கு இதம் அளிக்கிறது...

இனி சில ஏமாற்றங்கள்:

(i)இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு அடியில் நம்மை இறங்க வைத்த அந்த அற்புதமான தபேலா எங்கே? ஒரு இடத்தில் கூட தென்படவில்லையே? "இது இளையராஜா பாடல்" என்று இனம் காண வைத்த அந்த "bass guitar" எங்கே தேய்ந்து போனது?

(ii)பாட‌க‌ர்க‌ளுக்கு ப‌ஞ்ச‌மா? லயத்திலும் உச்சரிப்பிலும் நம்மை ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு ப‌ல‌ மைல் தொலைவில் இருக்கிறார்க‌ளே... அதிலும் "சாய்ந்து சாய்ந்து" பாட‌லின் த‌ர‌ம் அதைப் பாடிய‌வ‌ர்க‌ளால் பாதாள‌த்தில் சாய்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தே..."தேங்கிப் போன..." [ "சற்று முன்பு" பாடல்] வரிகளுக்காக மட்டும் ரம்யாவிற்கு ஒரு சபாஷ்.


(iii)ஒரு தலைமுறை, வருடக்கணக்கில் முணுமுணுத்த வரி தானே படத்தின் பெயராய் வைக்கப்பட்டிருக்கிறது...பிறகு ஏன் "எந்தன்" விடுத்து "என்"?
இளைய தமிழ் தலைமுறைக்கு "எந்தன்" என்பதன் அர்த்தம் தெரியாது, அதனால் "reach" குறைந்து விடும் என்ற அவநம்பிக்கையா?

(iv)இளையராஜாவின் ப‌ல‌ பாட‌ல்க‌ள், ந‌தியின் அடியில் த‌ங்கி விடும் கூழாங்க‌ற்க‌ள் போல‌ ந‌ம் நினைவில் நீண்ட‌ கால‌ம் ப‌டிந்து விடுப‌வை. ஆனால் "நீதானே என் பொன் வ‌ச‌ந்த‌ம்" பாட‌ல்க‌ள், ந‌ம் நினைவுக‌ளில் தேங்கும் அள‌வு ந‌ம‌க்குள் இற‌ங்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே...