Sunday, July 19, 2015

43. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 26

ஒரு பாடலை நாம் எப்போது முதலில் கேட்டோம் என்று நம்மை நாமே தோண்டிக் கொண்டே போனால்...அதாவது, மனதின் சுவரில் நினைவின் ஆணியை காலச் சுத்தியலால் அடித்து உள்ளிறக்கிக் கொண்டே போனால்...ஓரிடத்தில் மேற்கொண்டு நகராது நிற்கும் நொடியில் அதை கண்டுபிடிக்க முடியக்கூடும்!

அப்படித்தான், இளையநிலா உலவிய இரவுகள் வழியே வருடங்களை அடித்து இறக்கி ஆழ்மனதில் மீதமிருக்கும் பால்யத்தின் மிச்சங்களில் மிதக்கத் துவங்குகையில் தென்படத்துவங்குகிறது அப்பாடல் கேட்ட முதற் பொழுதுகள்...

மதுரை வரலாற்றில் 1813ல் இருந்து நீதிமன்றங்கள் நகரின் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்ததாக தகவல்கள் உண்டு. அதில் ஓரிடமான டி.எம் கோர்ட் இருந்த இடத்தில் தான் எங்கள் பள்ளிப் பேருந்து நின்று செல்லும். வரலாற்றில் நாம் இடம் பிடிக்கிறோமோ இல்லையோ, அதன் சுவடின் மேல் நிற்கும் போதே நமக்கு ஒருவித புல்லரிப்பு நிகழத்தான் செய்கிறது. பெரியாரிலிருந்து தெப்பக்குளம் செல்லும் சாலை வழியாக மேல மாசி வீதி திரும்புகையில் அம்மா என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறாரா என்று பேருந்தின் ஜன்னல்கள் வழியே எட்டிப்பார்க்கையில் அவர் அங்கு நில்லாத நாள் என்று ஏதேனும் இருந்திருக்கிறதா என்று, இன்று அவர் இல்லாத பொழுது மனது நெகிழ்கிறது. கரையான் தின்ற கறுப்பு வெள்ளை புகைப்படம் போல பழுப்பாக மனதில் மீதமிருக்கும் அந்த மாலை நேரக் காட்சியில் அம்மாவின் மெலிந்த உருவத்தின் பின்புலத்தில் மேலெழும்பி நிற்கும் சாரத்தில் நின்றிருக்கும் விளம்பரத் தட்டியில் தான் "பயணங்கள் முடிவதில்லை" என்பதை எழுத்துக் கூட்டிப் படிக்கத் துவங்கியிருந்தேன்.... 50, 100, 150, 200, 250, 300 என்று "நாட்கள்" மட்டும் மாறிக்கொண்டே இருக்க "பயணங்கள் முடிவதில்லை" மட்டும் அந்தத் தட்டியில் தொடர்ந்து பயணித்து வந்தது.

எண்ணற்ற ஞாபகங்களின் சினைமுட்டைகளை சிந்தனையில் உருவாக்க உதவிய இலங்கை வானொலி தான் இளையநிலாவை என்னுள் இறக்கியது. ஒரு ஞாயிறு மதியம் மனதில் சூல் கொண்ட முகிலினங்கள் என்னுடன் வயது தோறும் மழை பொழிந்தபடி வலம் வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.அந்த வருடம் முழுவதும் விளம்பரத் தட்டியில் இருந்த இளையநிலா விதையை பார்வைத் தண்ணீரால் மட்டுமே பதியன் செய்து வந்த என் உள்ளத் தொட்டியில் கோடை விடுமுறைக்கு மெட்ராஸ் சென்ற பொழுது அந்த மறக்க முடியாத நாள் மொட்டு என் மாமாவின் தயவில் மலர்ந்தது. ஒரு வார இறுதியில் எங்கள் மாமா இருந்த தெருவே காலியாகி "பிளாஸா" தியேட்டரில் இடம் பெயர்ந்திருந்தது. சுமார் அறுபது டிக்கெட்டுக்களை மாமா கையால் எண்ணிய பொழுது நான் அவரின் சட்டை நுனியை பிடித்தவாறு நின்றிருந்தேன். இசையின் தரிசனம் புலன்களின் வழியே உள்ளிறங்கும் பொழுது ஏற்படும் உள்ளத்தின் பூரிப்பில் நீடிக்கும் நிச்சலமற்ற நிலையின் அனுபவிப்பின் ஆரம்பம் அன்று நிகழ்ந்தது. இலங்கை வானொலி அடைகாத்த முட்டைகள் உடைந்து உற்சாகத்தின் உயிர்ப்பு உருவமெடுத்து தியேட்டரின் இருபுற சுவர்களில் வரிசையாய் இருந்த பெரும் ஸ்பீக்கர்களின் வழியே ஆர்ப்பரித்து உலாவின...சில வரிகள் காலத்தின் பெருவெளியில் நீண்ட நாள் நீந்தும் என்பதை இப்படத்தின் இயக்குனரும் கேமிரா மேனும் உணர்ந்திருந்தார்கள் போலும். எனவே தான் "முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ" இரண்டாம் முறை பாடப்படும் பொழுது உணர்வின் எழிலை உதடுகளின் உச்சரிப்பின் வழியே பெண்மை முன் வைப்பது போல் படமாக்கினரோ...

அந்த நாள் நகர்ந்த பிறகு செவிகள் பெறும் இன்பத்தில் விழிகளுக்கும் பங்கு தர சில ஆண்டுகள் காத்திருந்த பின், தூர்தர்ஷன் தயவில் வெள்ளிக்கிழமை இரவு செவிகளும் விழிகளும் அதனதன் பங்கை பிரித்துக் கொண்டன. அதொன்றும் அத்தனை எளிதாக இல்லை. பெரும்பாலும் பழைய பாடலை ஒளியும் ஒலியும் இறுதியில்தான் போடுவார்கள். முகிலனங்கள் அலைவதை மனம் பார்க்கத் தயாராகும் பொழுது "செய்திகள் தொடரும்" ஸ்லைடு போட்டு மழை பொழிய காத்திருந்த மனதின் மேகத்தை கலைத்து விடுவார்கள்.

 மேல்நிலை வகுப்புகளிலும் கல்லூரி காலத்திலும் தேர்வுகளின் முன்னிரவுகளிலும் தேர்வுக்கு கிளம்பும் பொழுதுகளிலும் இளைய நிலா இறை வணக்கமாய் டேப் ரெக்கார்டரின் வழியே பலம் ஊட்டியது. இறைவனை விட இளையநிலா மனதை "வழிப்படுத்தும்" என்ற நம்பிக்கை எனக்கு! பெரும்பாலும் தேர்வுக்கு கிளம்பும் நேரத்தில் அம்மா என் நெற்றியில் வைக்கும் விபூதியில் அவரது நம்பிக்கையும், பிண்ணனியில் ஓடிக்கொண்டிருக்கும் இளைய நிலாவில் எனது நம்பிக்கையும் நங்கூரம் இட்டிருந்தன. இப்பாடல் ஓட்டியே அறுந்து சிதைந்த கேசட்டுகளின் எண்ணிக்கை கனிசமாய் இருக்கும்.

மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் உள்ளிருந்த கல்லூரிக்கு, குறிப்பிட்ட பேருந்தை தவற விட்டால் நடையே கதி. அப்போதெல்லாம் ஷாப்பிங் காம்ப்பெளக்ஸ் பக்கம் இருவழி போக்குவரத்து உண்டு.  பின்னர் தோன்றி இன்றிருக்கும் கே.பி.என் டிராவல்ஸ் எதிர்புறம் அன்று பஸ் ஸ்டாப் இருந்தது.அவ்வப்போது கல்லூரிப் பேருந்தா இல்லை இளைய நிலாவா என்று அந்த பஸ் ஸ்டாப்பில் என்னை கடவுள் பரிசோதித்து பார்ப்பதுண்டு . சளைக்காமல் நானும் இளைய நிலாவின் பக்கமே நிற்பேன். ஒரு முறை அப்பேருந்தின் வழக்கமான கண்டக்டர் "என்ன தம்பி காலேஜ் சேர்ந்தா பொண்ணுங்கள பார்க்கறதுக்கு நின்னுருவீங்களோ? காலேஜ் வரைக்கும் போற பஸ்ஸ விட்டுட்டு ஸ்டாப்ல சும்மா நின்னு பார்த்துகிட்டுருக்க‌..." என்று கேட்ட போது மனதுக்குள் சிரித்து கொண்டேன். சுட்டெரிக்கும் மதுரை வெயிலில் "வரும் வழியில் பனிமழை"யில் நனைந்து நின்றிருந்தேன் என்று அவரிடம் சொல்ல முடியுமா?சொன்னால்தான் புரியுமா?
 
பிறகு சாட்டிலைட் சேனல்கள் உதயமாயின. வீட்டின் எப்பகுதியில் நானிருந்தாலும் எந்த சேனலினிலேனும் இளையநிலா ஓடுவதை எதேச்சையாக அம்மா பார்க்க நேர்ந்தால் "உன் பாட்டு போடறாண்டா" என்று குரல் கொடுப்பார். பயணங்கள் முடிவதில்லை படம் போடப்படுகிறது என்று தெரிந்தால், படம் துவங்கி பத்தாவது நிமிடம் முடிகையில் எனக்கான தேநீர் காத்திருக்கிறது என்பதை அனுபவ வாயிலாக அறிந்து வைத்திருந்த நான், விளம்பர இடைவெளிகளை தோராயமாக கணக்கிட்டு அப்பாடலை மட்டும் பார்க்கும் வித்தை கற்றறிந்து களிப்படைந்த வருடங்கள்...நினைவின் பழுப்பேறிய வருடங்கள்...அம்மாவின் அழைப்புக் குரல் போல இப்பாடலும் இன்று வரை அலுக்கவேயில்லை - ‍இரண்டின் ஒலியலைகளும் நினைவின்அடுக்குக்களில் மட்டுமின்றி அதன் இடைவெளி இடுக்குகளிலும் எல்லாம் நுழைந்து அமர்ந்து விட்டதாலோ என்னவோ!


No comments:

Post a Comment