Showing posts with label Janaki. Show all posts
Showing posts with label Janaki. Show all posts

Friday, October 12, 2012

26. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 16


கதைகளிலும் பாடல்களிலும் மட்டுமே தன் வடிவை காட்டி, கற்பனைகளில் மட்டுமே அதன் அழகு பற்றிய சிந்தனையை ஊட்டி வருடங்களை கடத்திக் கொண்டிருந்த காவிரியை உடம்பில் ஊற்றி உள்ளத்தில் ஏற்றும் சந்தர்ப்பம் 1991 ஆண்டு வாய்த்தது.

நதி என்பது எத்தனை அதிசயங்களை தன்னுள் வைத்திருக்கிறது!ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு விதம். அவற்றில் ஓடும் நீரின் தன்மை வேறு. அத்தகைய நீர் நிற்கும் மண்ணின் அமைப்பு வேறு. அந்த மண் மேல் வாழும் உயிர்களின் பண்பு வேறு. நதியின் அதிசயங்கள் பூமிக்கு அவசியம். நதிக்கும் உயிர் உண்டு. அதனுடன் நமக்கு உறவு உண்டு. அதனால் தான் நாம் நீராடும் வெவ்வேறு நதிகள் வெவ்வேறு உணர்வுகளை, நினைவுகளை நமக்குக் கொடுத்துப் போகிறதோ? "நான் தாமிரபரணி தண்ணீர் குடித்து வளர்ந்தவன்", "எனக்குள் காவிரி ஓடுகிறது" என்று நாம் சொல்கிற போதே, மனது முழுதும் ஒரு சுவை ஓடுகிறதே...நம்மை நதியின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா அல்லது நதியை காலத்தின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா?

எந்த ஊருக்குச் செல்வதாக இருந்தாலும், எனக்கு எழும் முதல் சிந்தனை, அந்த ஊரில் கடலோ நதியோ மலையோ இருக்கிறதா என்பது தான். 1991 வருடம் குடியரசு தினத்திற்கு முந்தைய நாட்களில் என் உறவினர் ஒருவரின் திருமணம் ஸ்ரீரங்க‌ம் ஊரில் நடந்தது. அந்த திருமண அறிவிப்பு வந்தது முதற்கொண்டு, காவிரியில் குளித்தாக வேண்டும் என்ற ஆவல், பாலில் கொட்டிய அவல் போல மனதில் குழைய‌த் துவங்கியிருந்தது. Srirangam கோபுர வாயிலுக்கு போகும் தெருவில்,கோபுரத்திற்கு நேரெதிர் திசையில் நடந்தால், வலப்புறம் வரும் "ராகவேந்திர மடம்" கடந்து, இடது புறம், ரயில்வே தண்டவாளத்திற்கு ஒட்டியவாறு இருந்தது அந்த திருமண மண்டபம்.

கல்யாணம் முழுவதும் காவிரியை நினைத்தபடி திரிந்தேன் நான். திருமண தினத்தன்று மதியம், எனது "பிடுங்கல்" தாங்காமல், உறவினர் கூட்டமொன்று எவரெவரிடமோ வாங்கிய சைக்கிள்களில் என்னையும் ஏற்றிக் கொண்டு பெயர் தெரியா வீதிகளில்... தென்னந்தோப்புகளின் இடையே மெலிந்திருக்கும் மண் சாலைகளின் வழியே... எனச் சுற்றி, ஒரு படித்துறையில் இறங்கியது. காவிரியில் என் முதல் குளியல்! தலைமுடிகளின் பல நுனிகளில் காவிரியின் குமிழ்கள் கண்சிமிட்டியபடி என்னுடன் வர, காவிரியில் குளித்த மகிழ்ச்சியின் வடிவம் எப்படியிருக்கும் என்று பார்ப்பதற்காக அந்த பெருநதியின் சிறு குமிழ்களில் ஒன்றை உருவி விரல்களில் வைத்துப் பார்த்திருக்கிறேன்..பாதி காய்ந்த தலையுடன் திரும்பி வரும் வழியில் தென்பட்ட "பெட்டிக் கடை" ஒன்றில் "கலர்" குடிக்கையில் மனதில் வாசமேற்றத் துவங்கியது "திருச்சி வானொலியில்" பூத்த "தாழம்பூவே வாசம் வீசு" [கை கொடுக்கும் கை / SPB - Janaki / 1984 / ].

நம் நெஞ்சின் மீது பாறாங்கல்லை தூக்கி வைப்பதற்கு இளையராஜாவின் கைகளில் இருக்கும் எடையற்ற‌ வயலின் bow ஒன்று போதும். இந்தப் பாடலின் "பேசும் போது..." மற்றும் "நீரும் போனா..." ஆகிய இரண்டு இடங்களில் நம் மன வயலில் இறங்கும் வயலின், உழுது உழுது, நீண்டு வளைந்து, ஏறி இறங்கி விதைக்கும் இனம் புரியாத பாரத்தின் விளைச்சலை காலத்தின் பயிர் எனலாமோ?

அன்று இரவு, மாடியில், தென்னை மரங்களை பார்த்த வாக்கில் படுக்கை. நிலவின் கீற்று தென்னங் கீற்றுகளில் முகம் பார்த்துக் கொண்டிருக்க, எத்தனை முறை என்னுடன் புரண்டது அந்த இரண்டு சரணங்களின் இடைவிடாத வயலின்!


இப்பொழுது என்னை ஸ்ரீரங்கம் கொண்டு போய் விட்டாலும், அந்த ஊர் அடையாளம் தெரியாமல் மாற்றம் கண்டிருந்தாலும், காலத்தின் முதுகில் ஏறிக்கொண்டால் அதே படித்துறைக்கு அது என்னை இட்டுச் சென்று விடும் என்று திடமாக நம்புகிறேன்.

காவிரி மட்டுமா? கால நதி புரண்டோடும் வழியெங்கும் மீதமிருப்பது நினைவின் படித்துறைகள் தானே?



Thursday, January 19, 2012

9. கமலம் டீச்சர் - 1

ரெண்டு சுழி மூணு சுழிகளுக்கிடையே சிக்கிக்கொண்டிருந்த என் ஏழாம் வகுப்புத் தமிழை சீர் செய்யத் துவங்கியவர் கமலம் டீச்சர். நெற்றி வகிட்டில் குங்குமம் பதித்து மஞ்சள் பூசிய முகத்துடன் புடவையை முழுதாய் போர்த்தி அதன் மறுபுறத்தை இடது கை விரல்களில் பிடித்தபடி வரும் கமலம் டீச்சர் என்னை உளியால் செதுக்கிய வருடங்களில் ஒரு முறை கூட அவர்  வகுப்பறைக்குள் செருப்பணிந்து பார்த்ததில்லை. அறிவின் பலமோ குணமோ - அவர் நடக்கையில் மெட்டியின் சத்தம் பல "rows" வரைக்கும் கேட்கும். சுமார் 5 வருடங்கள் - "பிச்சை புகினும் கற்கை நன்றே" துவங்கி  "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" வரை அவர் ஊற்றிய தமிழ், அறிவுக்கு போகும் வழியில் ரத்தத்திலும் ஊறிப்போனது. அதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் அவர் ஒரு நொடியில் என் ஒரு ஜென்மத்திற்கு தேவையான பாடம் நடத்தியது ஒரு சாட்சி.

அப்பொழுதெல்லாம் 10, 12 வகுப்புகளில் தமிழுக்கு சங்கம் மன்றம் தேர்வுகள் உண்டு. அறிவியல், கணக்கு போன்றவற்றை விட தமிழில் அதிக மதிப்பெண் வருவது எனக்கும் வீட்டினருக்கும் விசித்திரமாக இருக்கும். 12 ஆம் வகுப்பு அரையாண்டு முடிந்து, கமலம் டீச்சர் மன்றம் மதிப்பெண் பட்டியல் மற்றும் பள்ளியின் வழக்கமான அரையாண்டு தமிழ் விடைத்தாள்கள் தாங்கி வகுப்பறைக்குள் நுழைந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பது இன்றும் ஞாபகம் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் கமலம் டீச்சருக்கு  கூடுதலாக ஒரு "அம்மன்" களை வந்து விடும். இப்போது போல் language பாடங்களில் 180, 190 என்றெல்லாம் அப்போது எளிதில் போட மாட்டார்கள். எனது விடைத்தாளை அனைவருக்கும்  முன் தூக்கிப் பிடித்தபடி  நான் 186 வாங்கியிருப்பதாகவும் 2nd paper இல் 96 மதிப்பெண் என்றும் கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருப்பதாகவும் சிலவற்றை வாசித்தும் காட்டி என்னை விடைத்தாள் பெற்று கொள்ள அழைத்தார். அந்த சில நிமிட புகழ்ச்சியில் எனக்கேறிய தலைக்கனத்துடன் அவர் முன் சென்று என் இடக்கையை எனையறியாமல் நீட்ட, ஒரு நொடி என்னையும் இடக்கையையும் மாறி மாறி பார்த்த அவர் விடைத்தாளை வகுப்புக்கு வெளியே வேகமாய் விட்டெறிந்து "போய் எடுத்துக்கோ" என்றார். மாடியிலிருந்த வகுப்பிலிருந்து பறந்து, நடைபாதை தாண்டி கீழே கிரௌண்டில் விழும்படி இருந்த அந்த வேகம் பக்கங்கள் கட்டியிருந்த வெள்ளை நூலை அறுத்து பக்கமெல்லாம் தனித்தனியாக கிடக்க அதை எடுக்கையில் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்தோம் என்று மனது குறுகிப்போனது. அதன் பின் என்னுடன் அவர் என்றுமே பேசியதில்லை. அன்று பசியில்லை. தவறுக்கும் பசிக்கும் தொடர்புண்டு போலும். இல்லாத பசியை அம்மாவிடம் சொல்லாமல் தட்டுடன் அமர்ந்த பொழுது "ஒளியும் ஒலியும்" இறுதிப் பாட்டு வருவதற்கு சரியாக இருந்தது (நமக்கு பிடித்த பாடல்கள் பெரும்பாலும் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் கடைசியாகத்தான் வரும். பாதிப்பாட்டிலேயே "செய்திகள் தொடரும்" slide போட்டு விடுவார்கள்). "kaise kahoon kuch kahna sakoon..." [Ilayaraja / Bhupindar singh / Janaki] என்று துவங்கும் "நண்டு" படத்தின் முழு நீள hindi பாட்டு. "அனைவரின் விதியும் அவரவர்க்குள்; விதியின் விதியோ  அவ்விதிக்குள்" "விதியின் ஸ்வரங்கள் யார் கண்டார்" போன்ற அற்புதமான பொருள் தரும் வரிகள் அடங்கிய இப்பாட்டு [தட்டித் தடுமாறி நான் பாஸ் பண்ணிய hindi இது போன்ற விஷயங்களுக்கு கைகொடுக்கிறது!] "காலச்சலனம்" மிக்கது - கேட்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் நம்மை தூக்கிகொண்டு போய்விடும். வழக்கமான இளையராஜா 2nd stanza special இந்த பாட்டிலும் உண்டு. ஆண் குரல் ஒரு "flat terrain" இல் பயணித்தாலும் Janaki கொண்டு வரும் ஏற்ற இறக்கங்கள் அற்புதம். மாலைப்பொழுதில் பரந்த வெளியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி ரயிலில் நம்முடன் வரும் பிரமாண்டமான மலைகளுக்கு இடையில் சூரியன் மறைந்து கொண்டிருக்கும் பொழுது இந்தப் பாட்டை கேட்டுப்பாருங்கள்...அல்லது மரங்கள் மூடிய சாலையில் மழை  பெய்து முடிந்த பின் நடந்து போகையில் கேட்டு பாருங்கள்...

 www.youtube.com/watch?v=yUI1FLexJrY என்ற link போட்ட அந்த புண்ணியவானுக்கு நன்றி.
  
கமலம் டீச்சர் வீசி எறிந்த விடைத்தாள் என் பழைய பெட்டியில் இன்றும் உள்ளது. அன்றைக்குப் பிறகு என்றுமே என் இடக்கை எந்த பொருள் பெறவும் நீண்டதே இல்லை என்பது மட்டுமல்ல... அதன்பின் எப்பொழுதெல்லாம் தலைக்கனத்தின் சாயல் தலை தூக்கும் என்று தோன்றுகிறதோ அதற்கு முன்னரே கமலம் டீச்சர் என் நினைவில் வந்து என்னை குட்டி விட்டு போய் விடுகிறார்.