Sunday, July 19, 2015

43. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 26

ஒரு பாடலை நாம் எப்போது முதலில் கேட்டோம் என்று நம்மை நாமே தோண்டிக் கொண்டே போனால்...அதாவது, மனதின் சுவரில் நினைவின் ஆணியை காலச் சுத்தியலால் அடித்து உள்ளிறக்கிக் கொண்டே போனால்...ஓரிடத்தில் மேற்கொண்டு நகராது நிற்கும் நொடியில் அதை கண்டுபிடிக்க முடியக்கூடும்!

அப்படித்தான், இளையநிலா உலவிய இரவுகள் வழியே வருடங்களை அடித்து இறக்கி ஆழ்மனதில் மீதமிருக்கும் பால்யத்தின் மிச்சங்களில் மிதக்கத் துவங்குகையில் தென்படத்துவங்குகிறது அப்பாடல் கேட்ட முதற் பொழுதுகள்...

மதுரை வரலாற்றில் 1813ல் இருந்து நீதிமன்றங்கள் நகரின் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்ததாக தகவல்கள் உண்டு. அதில் ஓரிடமான டி.எம் கோர்ட் இருந்த இடத்தில் தான் எங்கள் பள்ளிப் பேருந்து நின்று செல்லும். வரலாற்றில் நாம் இடம் பிடிக்கிறோமோ இல்லையோ, அதன் சுவடின் மேல் நிற்கும் போதே நமக்கு ஒருவித புல்லரிப்பு நிகழத்தான் செய்கிறது. பெரியாரிலிருந்து தெப்பக்குளம் செல்லும் சாலை வழியாக மேல மாசி வீதி திரும்புகையில் அம்மா என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறாரா என்று பேருந்தின் ஜன்னல்கள் வழியே எட்டிப்பார்க்கையில் அவர் அங்கு நில்லாத நாள் என்று ஏதேனும் இருந்திருக்கிறதா என்று, இன்று அவர் இல்லாத பொழுது மனது நெகிழ்கிறது. கரையான் தின்ற கறுப்பு வெள்ளை புகைப்படம் போல பழுப்பாக மனதில் மீதமிருக்கும் அந்த மாலை நேரக் காட்சியில் அம்மாவின் மெலிந்த உருவத்தின் பின்புலத்தில் மேலெழும்பி நிற்கும் சாரத்தில் நின்றிருக்கும் விளம்பரத் தட்டியில் தான் "பயணங்கள் முடிவதில்லை" என்பதை எழுத்துக் கூட்டிப் படிக்கத் துவங்கியிருந்தேன்.... 50, 100, 150, 200, 250, 300 என்று "நாட்கள்" மட்டும் மாறிக்கொண்டே இருக்க "பயணங்கள் முடிவதில்லை" மட்டும் அந்தத் தட்டியில் தொடர்ந்து பயணித்து வந்தது.

எண்ணற்ற ஞாபகங்களின் சினைமுட்டைகளை சிந்தனையில் உருவாக்க உதவிய இலங்கை வானொலி தான் இளையநிலாவை என்னுள் இறக்கியது. ஒரு ஞாயிறு மதியம் மனதில் சூல் கொண்ட முகிலினங்கள் என்னுடன் வயது தோறும் மழை பொழிந்தபடி வலம் வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.அந்த வருடம் முழுவதும் விளம்பரத் தட்டியில் இருந்த இளையநிலா விதையை பார்வைத் தண்ணீரால் மட்டுமே பதியன் செய்து வந்த என் உள்ளத் தொட்டியில் கோடை விடுமுறைக்கு மெட்ராஸ் சென்ற பொழுது அந்த மறக்க முடியாத நாள் மொட்டு என் மாமாவின் தயவில் மலர்ந்தது. ஒரு வார இறுதியில் எங்கள் மாமா இருந்த தெருவே காலியாகி "பிளாஸா" தியேட்டரில் இடம் பெயர்ந்திருந்தது. சுமார் அறுபது டிக்கெட்டுக்களை மாமா கையால் எண்ணிய பொழுது நான் அவரின் சட்டை நுனியை பிடித்தவாறு நின்றிருந்தேன். இசையின் தரிசனம் புலன்களின் வழியே உள்ளிறங்கும் பொழுது ஏற்படும் உள்ளத்தின் பூரிப்பில் நீடிக்கும் நிச்சலமற்ற நிலையின் அனுபவிப்பின் ஆரம்பம் அன்று நிகழ்ந்தது. இலங்கை வானொலி அடைகாத்த முட்டைகள் உடைந்து உற்சாகத்தின் உயிர்ப்பு உருவமெடுத்து தியேட்டரின் இருபுற சுவர்களில் வரிசையாய் இருந்த பெரும் ஸ்பீக்கர்களின் வழியே ஆர்ப்பரித்து உலாவின...சில வரிகள் காலத்தின் பெருவெளியில் நீண்ட நாள் நீந்தும் என்பதை இப்படத்தின் இயக்குனரும் கேமிரா மேனும் உணர்ந்திருந்தார்கள் போலும். எனவே தான் "முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ" இரண்டாம் முறை பாடப்படும் பொழுது உணர்வின் எழிலை உதடுகளின் உச்சரிப்பின் வழியே பெண்மை முன் வைப்பது போல் படமாக்கினரோ...

அந்த நாள் நகர்ந்த பிறகு செவிகள் பெறும் இன்பத்தில் விழிகளுக்கும் பங்கு தர சில ஆண்டுகள் காத்திருந்த பின், தூர்தர்ஷன் தயவில் வெள்ளிக்கிழமை இரவு செவிகளும் விழிகளும் அதனதன் பங்கை பிரித்துக் கொண்டன. அதொன்றும் அத்தனை எளிதாக இல்லை. பெரும்பாலும் பழைய பாடலை ஒளியும் ஒலியும் இறுதியில்தான் போடுவார்கள். முகிலனங்கள் அலைவதை மனம் பார்க்கத் தயாராகும் பொழுது "செய்திகள் தொடரும்" ஸ்லைடு போட்டு மழை பொழிய காத்திருந்த மனதின் மேகத்தை கலைத்து விடுவார்கள்.

 மேல்நிலை வகுப்புகளிலும் கல்லூரி காலத்திலும் தேர்வுகளின் முன்னிரவுகளிலும் தேர்வுக்கு கிளம்பும் பொழுதுகளிலும் இளைய நிலா இறை வணக்கமாய் டேப் ரெக்கார்டரின் வழியே பலம் ஊட்டியது. இறைவனை விட இளையநிலா மனதை "வழிப்படுத்தும்" என்ற நம்பிக்கை எனக்கு! பெரும்பாலும் தேர்வுக்கு கிளம்பும் நேரத்தில் அம்மா என் நெற்றியில் வைக்கும் விபூதியில் அவரது நம்பிக்கையும், பிண்ணனியில் ஓடிக்கொண்டிருக்கும் இளைய நிலாவில் எனது நம்பிக்கையும் நங்கூரம் இட்டிருந்தன. இப்பாடல் ஓட்டியே அறுந்து சிதைந்த கேசட்டுகளின் எண்ணிக்கை கனிசமாய் இருக்கும்.

மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் உள்ளிருந்த கல்லூரிக்கு, குறிப்பிட்ட பேருந்தை தவற விட்டால் நடையே கதி. அப்போதெல்லாம் ஷாப்பிங் காம்ப்பெளக்ஸ் பக்கம் இருவழி போக்குவரத்து உண்டு.  பின்னர் தோன்றி இன்றிருக்கும் கே.பி.என் டிராவல்ஸ் எதிர்புறம் அன்று பஸ் ஸ்டாப் இருந்தது.அவ்வப்போது கல்லூரிப் பேருந்தா இல்லை இளைய நிலாவா என்று அந்த பஸ் ஸ்டாப்பில் என்னை கடவுள் பரிசோதித்து பார்ப்பதுண்டு . சளைக்காமல் நானும் இளைய நிலாவின் பக்கமே நிற்பேன். ஒரு முறை அப்பேருந்தின் வழக்கமான கண்டக்டர் "என்ன தம்பி காலேஜ் சேர்ந்தா பொண்ணுங்கள பார்க்கறதுக்கு நின்னுருவீங்களோ? காலேஜ் வரைக்கும் போற பஸ்ஸ விட்டுட்டு ஸ்டாப்ல சும்மா நின்னு பார்த்துகிட்டுருக்க‌..." என்று கேட்ட போது மனதுக்குள் சிரித்து கொண்டேன். சுட்டெரிக்கும் மதுரை வெயிலில் "வரும் வழியில் பனிமழை"யில் நனைந்து நின்றிருந்தேன் என்று அவரிடம் சொல்ல முடியுமா?சொன்னால்தான் புரியுமா?
 
பிறகு சாட்டிலைட் சேனல்கள் உதயமாயின. வீட்டின் எப்பகுதியில் நானிருந்தாலும் எந்த சேனலினிலேனும் இளையநிலா ஓடுவதை எதேச்சையாக அம்மா பார்க்க நேர்ந்தால் "உன் பாட்டு போடறாண்டா" என்று குரல் கொடுப்பார். பயணங்கள் முடிவதில்லை படம் போடப்படுகிறது என்று தெரிந்தால், படம் துவங்கி பத்தாவது நிமிடம் முடிகையில் எனக்கான தேநீர் காத்திருக்கிறது என்பதை அனுபவ வாயிலாக அறிந்து வைத்திருந்த நான், விளம்பர இடைவெளிகளை தோராயமாக கணக்கிட்டு அப்பாடலை மட்டும் பார்க்கும் வித்தை கற்றறிந்து களிப்படைந்த வருடங்கள்...நினைவின் பழுப்பேறிய வருடங்கள்...அம்மாவின் அழைப்புக் குரல் போல இப்பாடலும் இன்று வரை அலுக்கவேயில்லை - ‍இரண்டின் ஒலியலைகளும் நினைவின்அடுக்குக்களில் மட்டுமின்றி அதன் இடைவெளி இடுக்குகளிலும் எல்லாம் நுழைந்து அமர்ந்து விட்டதாலோ என்னவோ!


Sunday, May 17, 2015

42. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 25

1990களின் இறுதி...வேலைக்குச் சேர்ந்த புதிது...அதிக வேலைபளுவால் நீளும் அலுவலக இரவுகளை இலகுவாக்க அவ்வப்போது இளையராஜாவின் உதவியை நாடும் பழக்கம் எனக்கு உண்டு...அப்படித்தான் அன்றும், வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத குளிரூட்டப்பட்ட கூண்டுக்குள் நாளின் பெரும்பகுதியை கழிக்கும் என் போன்று மென்பொருள் இயந்திரங்களில் செயலற்று போயிருந்த மனதின் பொத்தானை அழுத்தியபடி எங்கள் தளம் முழுதும் பரவியது இளையநிலா.


குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளின் இளமைகளையேனும் ஊடுருவி நாளும் பொழுதும் எண்ணற்ற உதடுகள் முணுமுணுத்த பாடல் தான். ஆண்டுகள் கடந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற தூண்டுதல் சற்றும் குறைந்து விடாத வண்ணம் அழுந்தத் தடம் பதித்த பாடல் தான். இந்தப் பாடலின் கட்டமைப்பு பற்றியோ இசையும் வரிகளும் புரியும் அதிசயம் பற்றியோ நாம் பேசப்போவதில்லை. கரும்பு எப்படி இனிக்கும் என்பது பற்றி கட்டுரை தேவையா என்ன? இங்கு நாம் காணப்போவது ஒரு பாடல் பரப்பின் மீது படரும் காலம் நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை...அது நமக்குள் ஏற்படுத்தும் ஞாபகங்களின் தேக்கத்தை...


அந்த இரவின் பொழுதில் ஒரு முறை பொழிந்து முடித்த இளையநிலாவை "can you play that again " என்று தன் இருக்கையில் இருந்து அழைத்தார் ரஞ்சன். எங்கள் குழுவின் மேலாளர்களில் ஒருவர். மேலாளர்களுக்கான பாசாங்கற்றவர். பெங்காலிகள் கலை ஆர்வம் மிக்கவர்கள் என்ற கூற்றை நாம் நம்புவதற்கு மற்றுமொரு சாமானிய சான்று ரஞ்சன். கிடார் வாசிப்பார். மிக முக்கியமான நீண்ட மீட்டிங்குகளின் முடிவில் சோர்வேதுமின்றி ஏதோ ஒரு டுயூனை "லலலா" என்று முணுமுணுத்தபடி வெளியேறுவார்.

மீண்டும் ஒரு முறை இளைய நிலா பொழிந்த பின்பு என் தோளை பின்னிருந்து ஒரு கை தொட்டது. அவர்தான்...இது இளையராஜா தானே என்றார். நம்மவரை நாட்டின் மற்றொரு மூலையில் இருக்கும் ஒருவர், அவரின் படைப்பின் மூலமாகவே அடையாளம் காணும் பொழுது கணப்பொழுதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. பாடலின் முடிவில் வரும் கிடாரை இளையராஜாவைத் தவிர வேறொருவர் கோர்த்திருக்கக் கூடிய சாத்தியம் மிகக் குறைவு என்றவர் "நநந..." என்று அதை வாசிப்பதைப் போன்ற அபிநயங்களை கை மடக்கிக் காட்டியபடி பாடிய காட்சி அப்படியே புகைப்படம் எடுத்தது போல் இன்றும் தெளிவாய் நினைவிருக்கிறது. நான் இதை காப்பி செய்து கொள்கிறேன் என்று தனது கணிணியில் ஏற்றம் செய்து கொண்டார். சில மாதங்கள் கடந்திருக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை வேலை முடிந்து கிளம்பும் தறுவாயில், "நிறைய வேலை பார்த்தாயிற்று. இங்கு வா" என்று தன் இருக்கைக்கு அழைத்தார். அவரின் கணிணியிலிருந்து ஒரு வீடியோ போட்டார். இளையநிலாவின் இறுதியில் வரும் கிடாரை அவர் தன் வீட்டில் வாசித்துப் பார்க்கும் வீடியோ... "தினமும் சற்று நேரமேனும் இதை பிராக்டிஸ் செய்து வருகிறேன். கேட்கும்படியாகவது இருக்கிறதா" என்றார். "பிரமாதமாய் இருக்கிறது " என்றேன் நான். "அப்படிச் சொல்லாதே. இந்தப் பாடலில் counterpoints எக்கச்சக்கமான  இருக்கின்றன. அவை நமக்குப் பிடிபடுவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதன் பக்கத்தில் கூட என் வாசிப்பு இல்லை என்றார். counterpoint என்றால் என்ன என்று ஆவலுடன் கேட்டேன். இளையராஜாவை ரசிப்பவர்கள் கவுண்ட்டர் பாயிண்ட்களை அனுபவத்திருப்பார்கள். அந்தப் பெயர் மட்டும்தான் அவர்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும் என்று சிரித்தார். "இரண்டு வேறுபட்ட ஆனால் ஒன்றுக்கொன்று தேவைப்பட்ட‌ இசை கோர்வையோ, இசைக் கோர்வையும் வரியுமோ ஒரே தளத்தில் இணைந்து இசைக்கும் பொழுது வரும் இயைவுதான் counterpoint... ஈசியாக சொல்லிவிட்டேன். இவ்வாறு ஒன்றை உருவாக்குவது அத்தனை எளிதல்ல‌. கருவியும் கருவியும் கவுண்டர் பாயிண்ட் ஆகலாம். கருவியும் வார்த்தையும் counterpoint ஆகலாம். ஏன் ஒரே கருவியே கூட அவ்வாறு இயங்கலாம். இப்பாடலில் கிடாரும் கிடாருமே கவுண்டர் பாயிண்ட்களாக பல இடங்களில் வருகின்றன. நினைத்துப்பார்க்கவே கடினமான விஷயம் இது" என்றார்.

தான் கேட்ட வரையில் இந்தியாவில் இளையராஜா தவிர வேறு இசையமைப்பாளர்கள் எவருமே கவுண்ட்டர்பாயிண்ட் பக்கம் வருவதற்கே யோசிப்பார்கள் போல என்றவர், வடக்கே சலீல் சவுத்ரி சில அற்புதமான கம்போசிஷன்கள் செய்திருக்கிறார் என்றும் அவரும் இதை சில இடங்களில் கையாண்டிருக்கிறார் என்றும் சொன்னார். அவருக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க நினைத்த நான், என் இருக்கைக்கு வரும்படி வேண்டினேன். "பூ வண்ணம் போல நெஞ்சம்..." என்னும் "அழியாத கோலங்களை" ஓட விட்டேன். "இதுல salil சாயல் நிறைய இருக்கு" என்றவரிடம் "சாயல் இல்லை. இது அவரோடது தான்" என்றவுடன் அவர் முகத்தில் தெரிந்த உணர்வில், எனக்கும் அவருக்கும் ஒரு "counterpoint" ஏற்பட்டது போல இருந்தது.

தூய மழையை மலையின் மயிர்கால்களின் வழியே மண் முழுக்க தன் மூச்சாக உள்ளிழுத்து காடாக்கி ஆறாக்கி களத்து மேடுகளின் வழியே காய்கனியாய் உருமாறி கடைகளில் கண்டெடுத்து பசியாறும் சாமானிய மனிதர்களான நம் போன்றவர்களுக்கு, அத்தகைய மழை பயணிக்கும் பாதை எத்தகைய ரகசியமோ அதை ஒத்தது இசையின் ஆக்க ரகசியம். எனவே பசியாறுதலின் பொருட்டு இசை கேட்கும்நான் அதை என் மனக்கருவிக்கு ஏற்றவாறு அர்த்தம் செய்து கொண்டேன். ஒரு பாடலுக்குள் வரும் நொடிகளின் புள்ளிகளில் காலம் நம் நினைவின் சுள்ளிகளை பற்ற வைத்தால் அது நமக்கே நமக்கான பிரத்யேகமான கவுண்டர் பாயிண்ட் இல்லையா? அப்படி எத்தனை எத்தனை லட்சம் மனங்களில் எத்தனை எத்தனை கோடி கவுண்டர் பாயிண்ட்களை வைத்து வாழ்க்கை கோலம் போட்டிருக்கிறார் இளையராஜா?

அன்றிரவு அலுவலக வண்டியில் வீடு திரும்பும் பொழுது கவுண்ட்டர்பாயிண்ட் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென்று சில ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்தில் வந்தது. ஞாபகங்கள் என்பதே சட்டென்று வரும் "கவுண்டர்பாயிண்ட்"களின் கோர்வைகள் தானே? அப்போது நாங்கள் ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி பல சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டிருந்தோம். நான் டிரைவரை அவ்வப்போது ஓய்வு எடுக்கும்படியும் தொடர்ந்து ஓட்டாதீர்கள் என்றும் சொல்லியபடி இருந்தேன். ஒரு முறை அவர், "இளையராஜா கேஸட் நிறைய இருக்கு சார். போயிட்டே இருக்கலாம்" என்றார். போயிட்டே இருக்கலாம்...ஆம். வாகனத்தில் மட்டுமல்ல. வாழ்க்கை வண்டி ஏறி இறங்கும் மேடு பள்ளங்களில் கவிழ்ந்து விடாமல் நம்மை உணர்வுகளின் கவுண்ட்டர்பாயிண்ட்களில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் செல்லும் வாகனத்தின் இருக்கைகள் தானே இளையராஜாவின் counterpointக‌ள்?

என்பதுகளில் வளர்ந்தவர்களின் அனைவரின் நினைவுக் கோலங்களிலும் ஒரு counterpoint புள்ளியாக கட்டாயம் இடப்பட்டிருக்கும் இந்த இளையநிலா...அப்படியொரு புள்ளியை ஒரு பதிவில் அடக்க இயலுமா? தொடர்வோம்...

குறிப்பு: ஆங்கிலத்தில் நிகழ்ந்த ரஞ்சனுடனான உரையாடல்கள் இங்கு தமிழில் உருமாற்றப்பட்டிருக்கின்றன.

Sunday, November 23, 2014

41. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 24

உடல் மட்டுமல்லாது மனதின் அடி முதல் நுனி வரை சில்லிடச் செய்யும் பனி விழும் இரவின் துவக்கத்தில் நண்பர்கள் குழுவுடன் ஊட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன் நான்...கோவைக்குச் செல்லும் இறுதிப் பேருந்து கிளம்புவதற்கு சற்று நேரமிருந்தது. வாயைத் திறந்து ஊதினாலே பனி பல வடிவமெடுத்து நம்முன் நடனமாடுவது போல நகர்ந்து போகும் அழகை பார்த்து வியந்து கொண்டிருந்தோம்...

அரசு பேருந்துக்கே உரிய அரைகுரையாக இயங்கும் ஷட்டர்களின் வழியே ஊடுருவிய பனிக்காற்றில் பேருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே ஸ்வெட்டர்கள் தாண்டி நாங்கள் சில்லிட்டுப் போயிருந்தோம்...வண்டியில் லைட் வெளிச்சத்தில் பனி படர்ந்த மரங்கள் அடர்ந்த மலைப்பாதை உருகிய மெழுகால் உருவாக்கப்பட்ட ஓவியம் போல இருந்தது...

குளிர் குறைந்ததாக உணர்ந்த போது நள்ளிரவுக்கு அருகில் எங்களை கோயமுத்தூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு ஷெட்டுக்கு போய் விட்டிருந்தது அந்த பேருந்து. அஞ்சு மணிக்குத்தான் மதுரைக்கு முதல் பஸ் என்று தெரிந்து வாயிலுக்கு அருகிலேயே இருந்த நடைபாதையில் அமர்ந்து கொண்டோம். அவ்வாறே இன்னும் சில பயணிகளும் ஆங்காங்கே நின்றும் அமர்ந்தும் அன்றையே இரவின் மறுபகுதியை கடக்க ஆயத்தமாயிருந்தனர்.

இருவர் தூங்க நால்வர் விழித்திருக்க அனைவருக்கும் ஒரு மணி நேரத் தூக்கம் என்ற திட்டத்துடன் அனைவரும் தூங்கி விழித்த போது பேருந்து நிறுத்த வாசலுக்குப் பக்கத்திலிருந்து வந்த ஊதுவத்தி மணமும் பாய்லர் சத்தமும் அதிகாலை நான்கைத் தாண்டியதை அறிவித்தது. அனைவரும் டீ வேண்டி அடுத்த நிமிடம் அக்கடை முன் இருந்தோம். டீக்கடைக் காரர் பத்து நிமிடம் ஆகுமென்றபடி அன்றைய கடைக்கான அன்றாட ஆயத்தங்களை செய்யத் துவங்கினார். திருநீறு நிரம்பிய நெற்றியும் தொப்பைக்குப் பொருந்தாத கலர் பனியனுமாய் அவர் அங்குமிங்கும் கடைக்குள் அலைவதை டீக்கான ஆவலுடன் பார்த்திருந்தோம்...

"மதுரையா?" என்றார் டீக்கடைக்காரர் எங்களிடம். நாம் பேசும் வார்த்தைகளையும் உச்சரிப்பையும் வைத்தே நம் ஊரை எவரேனும் கண்டுபிடிக்கும் போது ஒரு வித மகிழ்ச்சி மனதில் ஏற்படும். "ஆமா" என்று வெளிப்பட்ட அந்த மகிழ்ச்சியில் சேர்வது போல, "நானும் மதுரைதான் ஓடின ஓட்டத்துல கோயமுத்தூருக்கு வந்து நின்னாச்சு" என்று அசால்டாக ஒரு தத்துவத்தை போகிற போக்கில் சொல்லி விட்டு வேலையைத் தொடர்ந்தார்...

பொதுவாக டீக்கடைகளில் முதலில் ஏதேனும் பக்தி பாடல்கள் தான் போடுவார்கள். கடவுள் மீது பற்றா அல்லது வியாபாரம் பற்றியா கவலையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால் நாங்கள் நின்று கொண்டிருந்த டீக்கடையிலிருந்து, நெற்றியில் பட்டையுடன் இருந்தவரிடமிருந்து அந்த அதிகாலை வேளையில் "கும் கும்" என்று காதுக்குள் இடிப்பது போன்ற கிடார் சத்தத்துடன் ஒரு பாடல் [உன்னை வாழ்த்தி பாடுகிறேன் / 1991 / ஜேசுதாஸ் / ஜானகி] "ஒரு ராகம் தராத வீணை" என்று கிளம்பியதை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அமைதியாக இருந்த அந்த சூழலில், காற்றில் நடந்து வரத்துவங்கியது ஜானகியின் ஹம்மிங். பொழுதின் தொட்டிலில் நம்மை போட்டு தாலாட்டுவது போல இருந்தது அது. மிகவும் வித்தியாசமாக, மிக அதிகமாக "bass" வைத்தது போல, அந்தப் பாடல் கடையிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது. பால் கொதிப்பதை அறிந்த நாங்கள் அருகில் சென்று நின்று கொண்டோம்.

கடை கூரையின் நான்கு மூலைகளிலும் பானை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் இருந்துதான் அந்த "கும் கும்" வந்து கொண்டிருந்தது. நாங்கள் பானையை பார்த்தபடி இருந்ததை பார்த்த கடைக்காரர், "ஸ்பீக்கர்தான்... பானைக்குள்ள வச்சிருக்கேன் என்றார்". பானைக்குள் ஸ்பீக்கர் வச்சு கேட்டா பாட்டே வேற மாதிரி கேக்குமுங்க சாதா ஸ்பீக்கர் கூட தியேட்டர் எபெக்ட் கொடுக்கும் என்றார். உண்மையிலேயே அப்படித்தான் இருந்தது. ரப்பர் பேண்டை இழுத்து தோல் மேல் விட்டது போல விழுந்தது பாடலில் வரும் அனைத்து வாத்தியங்களிலும் விழுந்த ஒவ்வொரு அடியும். ஊர் திரும்பிய சில நாட்களில் தண்ணீர் பானையை ஸ்பீக்கர் மேல் கவிழ்த்தி வைத்த போது அம்மா, இவனுக்கு என்னாயிற்று என்ற கவலையுடன் என்னை பார்த்தது ஞாபகமிருக்கிறது. "இந்தப் பாட்ட ரெண்டு வருஷம் முன்னாடி கேட்டேன். அப்பறம் தினம் இந்தப் பாட்டப் போட்டுத்தான் பொழுத துவக்கறது. இளையராஜா பாட்டுன்னு தெரியும் ராகம்னா என்ன தாளம்னா என்னாங்கறதுலாம் நமக்கெதுக்குங்க காலைல பாட்டப்போட்டா ஒரு ஏலக்கா டீயை உள்ள இறக்கின மாதிரி இருக்கு" என்றபடி எங்களிடம் டீ கிளாஸ்களை நீட்டினார். பாடல் முடியும் தருணத்தில் இருந்தது. டீ குடிக்கும் முன்பாகவே குடித்து முடித்தது போன்ற நினைப்பு எங்களுக்கும் தோன்றியது. பாட்டு ஆரம்பத்துல வர ஜானகியோட ஹம்மிங்குக்கும் காலை நேரத்துக்கும் எப்படியோ இளையராஜா முடிச்சு போட்டுருக்கார் என்றான் நண்பன். ஊரெங்கும் பொழுது புலர்ந்திருந்தது...

Sunday, July 20, 2014

40. அந்த இரவு...

அந்த இரவு குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று சில நண்பர்களும் நன்றாக இருக்காது என்று வேறு சில நண்பர்களும் வெவ்வேறு எண்ணங்களில் இருந்தனர். கல்லூரியில் புதிதாய் சேர்ந்திருந்த‌ நாட்கள் அவை...

அந்த நாளும் வந்தது. மாலையில் நண்பர்கள் குழுவுடன் காந்தி மியூசியத்திற்குள் நுழைந்து மைதான சிமிண்ட் படிகளில் அமர்வதற்கும் வானில் நட்சத்திரங்கள் மின்னுவதற்கும் சரியாக இருந்தது. நல்ல கூட்டம். மேடையில் இசைக்குழு சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. இளையராஜாவுக்கு மட்டுமே இணங்க, இழைய, குழைய பழக்கப்பட்டிருந்த மனதை TMS சுசீலாவின் பழைய பாடல்கள் கச்சேரிக்கு அழைத்து வந்து அமர்த்தியிருந்தேன்....

ஒரு சில அர்த்தமுள்ள வரிகள், நல்ல பாடல்கள், இடையே அவர்கள் இருவரும் ஓய்வெடுக்கும் வேளையில் ஏதேதோ பாடல்கள் என மணி பதினொன்றை தாண்டியிருந்தது. ஆடிக்காற்று காந்தி மீயூசிய மரங்களில் இருந்து இலைகளை மைதானம் எங்கும் வீசியபடி உலா வந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான், அதன்பின் வருடக்கணக்கில் இரவுகளில் திடீரென்று காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும் அந்த ஏகாந்த நொடிக்கரைசலின் ஒலிப்பிம்பத்தின் மூலமான‌  "தேவன் வந்தாண்டி..." [உத்தமன் / 1976 /  KV Mahadevan / TMS - சுசீலா] என்றொரு மயக்கமூட்டும் குரல் மேலெழும்பி காற்றில் நகரும் இலைகள் போல மைதானம் எங்கும் பரவியது. சிறுசிறு பேச்சொலிகள் அடங்க, "தீபம் கொண்டாடி" என்று ஒலியின் மீதொரு ஒளி ஏறியது... மயிலிறகின் நுனிகளில் தென்றலை ஏந்தி நம் மீது தொட்டு தொட்டு வைத்துப் போவது போன்ற குரல். துவக்கத்திலேயே, இந்த இரண்டு வரிகளும் புடலை கொடியிலேறி படர்வது போல நம் மனதில் வளைந்து வளைந்து சுற்றி ஏறும்... அது மட்டுமல்ல. கண்ணதாசன் "டி"யை வைத்தே நம்மை ராட்டினம் ஏற்றப் போகிறார் என்பதும் தெரிந்து விடும்.

இந்த பாடலில் மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் இசை சற்றே இரைச்சலாக‌ இருப்பது போலக் கூடத் தோன்றும். "தேவன் வந்தாண்டி தீபம் கொண்டாடி" என்ற ஒற்றை வரியில் சுசீலா நம்மை எத்தனை நெளிவு சுளிவுகளுக்குள் தோய்த்து எடுக்கிறார் என்பதே இந்த பாடலின் அற்புதம். அதுவும் இரண்டாம் ஸ்டான்ஸா முடிந்த பின் திரும்ப வரும் பல்லவியில் அவர் தீபத்தில் உள்ள "தீ"யை இழுத்து  சுருக்கி "கொண்டாடி"யை நீட்டும் லயம் ஒரு மந்திரவாதி புதிதாக ஒரு ஸ்வரத்தை உண்டாக்கி நம் காதுகளில் ஊற்றும் அற்புத அனுபவம். ஐந்தே நொடிகளில் அவர் நிகழ்த்திக் காட்டும் அந்த சாகசம்...கேட்கும் பொழுதெல்லாம் பரவசம்...

பாடல் முடிந்தது. அனைவரும் அடுத்த பாடலுக்கு தயாராயினர். முன் வரிசைகளில் சலசலப்பு. சுசீலா புன்னகையுடன் வயலின் குழவை நோக்கி கையசைத்தார். அனைத்து வாசிப்பு கருவிகளும் சைலண்ட் ஆக வயலின் வாசிப்பவர்கள் மட்டும் தயார் நிலைக்கு வந்தனர். "தேவன் வந்தாண்டி" என்று பல்லவியை மீண்டும் பாடத்துவங்கினார். வயலின் மட்டும் மலரின் மீது வழியும் பனியின் துளி போல அவரின் குரலை பின் தொடர்ந்தது.
அந்த நிசப்தமான இரவில் சொர்க்கத்தின் முகவரியை காட்டி விட்டு அமர்ந்தார் சுசீலா. நினைப்பேதுமின்றி இசையின் அணைப்பே முனைப்பாக இருத்தல் மனதுக்கு சொர்க்கம் தானே?

நள்ளிரவு கடந்த பின் தமுக்கம் ரோட்டில் நடந்து கொண்டிருந்தோம். "தேவன் வந்தாண்டி"யின் மகிழ்ச்சியில் எத்தனை தொலைவும் நடக்கலாம் போலிருந்தது...காந்தி மியூசியத்திலிருந்து வைகை மேம்பாலம் வருவதற்குள் எத்தனை முறை ஏற்ற இறக்கங்களுடன் அந்த "தீபம் கொண்டாடி"யை பாடிப் பார்த்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது...அந்த வரியின் லாவகம் ஒரு ஒப்பற்ற குரல் தந்த சங்கதியின் உயிர்ப்பின் ரகசியம் போலத் தோன்றியது. வாகனங்கள் ஏதுமற்ற வைகை பாலத்தின் மீது நடக்கத் துவங்கினோம்...ஆற்றின் வாசனையை அள்ளி வந்து முகத்தில் அடித்தது காற்று...வைகையில் நீரோடிய வருடம் அது. பாலத்தின் சுவரில் சாய்ந்து கீழே ஓடிய நீரில் மின்னும் ஒளித்திவலைகளை பார்த்தபடி நின்றிருந்தோம்...எங்கிருந்தோ "தீபம் கொண்டாடி" என்று கேட்பது போல இருந்தது. ஒரு முறை வெளியேறிய உணர்வின் அலை எப்போதும் கால வெளியில் நீந்திக் கொண்டுதானே இருக்க வேண்டும்? அந்த இரவின் நொடிகளை, நிசப்தத்தை, வைகையில் ஜொலித்த நீர் இழைகளை, ஒன்றுக்குள் ஒன்றாய் கோர்த்து மனதின் ஓரமாய் நினைவின் வாசம் வீசும் மலரின் ஆரமாய் தோன்றிய பொழுதெல்லாம் பூத்தபடி இருக்கிறது "தேவன் வந்தாண்டி".

Sunday, March 16, 2014

39. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 23

எதிர்பாராத இடத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்கையில் அது எத்தகையதாகினும் அதற்குரிய உணர்வு அதற்கான இயல்பை விட‌ பல்மடங்கு பெருகியே நம்மிடம் சேரும். அதன் காரணமாகவே அது ஆழமாக பதிந்து விடவும் கூடும். இப்படியாகத்தான் ஒரு மாலை வேளையும் ஒரு சைக்கிள் கடை சிறுவனும் சேர்ந்து ஒரு பாட்டைக் காட்டி விட்டுப் போய் இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

பத்தாம் வகுப்பு பாஸ் செய்ததன் பொருட்டு மீனாட்சி கோயில் அருகில் உள்ள ஜான்சி ராணி பூங்காவின் எதிரில் இருந்த "கமலா சைக்கிள் மார்ட்" கடையில் வாங்கிய எனது சிறகுகள் வீட்டில் வந்திறங்கிய தினம், அதன் மேல் படிந்திருந்த சிறு சிறு தூசியை கூட துடைப்பதுமாகவும், டயர் அழுக்காகாமல் ரோட்டில் ஓட்டுவது எப்படி என்ற கவலையுடன் இரவு முழுவதும் கழிந்தது.

சைக்கிளை பயன்படுத்திட என்ன சாக்கு கிடைக்கும் என்ற தவிப்புகளுக்கிடையில் காற்றடிப்பது கூட களிப்பான வேலையாகத் தோன்ற, அதற்கென்றே வீட்டிலிருந்து "கமலா சைக்கிள் மார்ட்" வரை போய் காற்றடிக்கும் பழக்கம் தொற்றியது. சைக்கிள் கடையின் எதிரில் ஒரு ஸ்பீக்கர் கடை இருந்தது. விதவிதமாக வெவ்வேறு சைஸ்களில் ஸ்பீக்கர்களை அடுக்கி வைத்திருப்பார்கள். பூக்கடைக்கு மணம் போல, ஸ்பீக்கர் கடையென்றால் பாட்டு வாசம் வீச வேண்டுமே...எப்போதும் அந்தக் கடையில் ஏதேனும் பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சைக்கிள் கடையில் முதலாளி தவிர மூன்று நான்கு பேர் உண்டு. அதில், எடுபிடி வேலைக்கு என்னை விட வயதில் குறைந்த ஒரு சிறுவனும் இருந்தான். அங்கு வரும் சைக்கிள்களில் சிறு சிறு ரிப்பேர்  மற்றும் பஞ்சர் பார்ப்பதும் அவன் வேலைகளில் அடக்கம். அழுக்கைடந்த ஒரு முண்டா பணியனும் காக்கி டிராயருமாகத் திரியும் அவன் கையில் எப்பொழுதும் ஒரு ஸ்பானர் இருக்கும். எதிர்கடையிலிருந்து வரும் பாட்டுக்கு எசப்பாட்டு போல விசில் அடித்துக் கொண்டே வேலை செய்வது அவன் ஸ்டைலாக இருந்தது.

சில மாதங்களில், பல முறை சென்று வந்ததன் பயனாக, ஒரு புதிய விஷயம் அந்த சிறுவனை நெருக்கமாக பார்த்ததில் புரிந்தது. அவன் எப்பொழுதும், எந்தப் பாட்டை விசிலடிக்கத் துவங்கினாலும் சற்று நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டுக்குத் தாவி அதை விசிலடிப்பது அவனது வழக்கமாக இருந்தது. எந்த நேரத்தில் அந்தப் பாட்டுக்குத் தாவுவான் என்பது மிக இயல்பாக நெருடல் ஏதுமின்றி நிகழும் மாற்றமாக இருந்தது...

அதுவரை நான் அந்தப் பாடலை கேட்டிருக்கவில்லை. பிரபலமான பாடலாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையிலே, ஒரு நாள் பள்ளி முடிந்து காற்றடிக்கச் சென்றிருந்தேன். எதிர்கடையிலிருந்து "வா வெளியே இளம் பூங்குயிலே" [பாடு நிலாவே‍ - 1987] என்னும் ஒரு பாட்டு ஒலிக்கத் துவங்கியது. சிறுவனுக்கு குஷி தாளவில்லை. அவன் எல்லா பாடல்களுடன் இணைக்கும் விசில் இந்தப் பாடலே என்று விளங்கியது. இத்தனைக்கும் அது ஒரு மிகச் சாதாரணமான பாடலாகவே தோன்றியது.

இந்தப் பாடலின் துவக்கம், குழந்தைகள் விளையாடும் கீபோர்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பீட்களில் ஒன்று போலத்தான் இருக்கும். இந்தப் பாட்டில் என்ன இருந்து விடப் போகிறது என்று கவனச் சிதைவு ஏற்படுத்தும் துவக்கம் அது.

நம்மூர் பாடல்களுக்கு இரண்டு ஸ்டான்ஸா என்று உருவாக்கப்பட்டதே இளையராஜாவின் interlude களுக்காகத்தானோ? அப்படித்தானே அவர் தனது வயலின் கொண்டும் குழல் கொண்டும் ஏராளமான இரண்டாம் சரணங்களுக்குள் நம்மை மூழ்க வைத்திருக்கிறார்...இந்தப் பாட்டில் அதற்காக‌ காத்திருக்கும் பொழுதில் பேங்கோஸ் மீது சற்று இளைப்பாறலாம். பிறகு அந்த வயலினும் புல்லாங்குழலும் நிகழ்கிறது. காத்திருந்த பயன் கிடைக்கிறது. முப்பதே நொடிகள். ஒருவிதமான துன்பியலின் படிகளில் நம்மை அமர்த்தி விட்டு மீண்டும் சாதாரணத்தில் சறுக்கிக் கொண்டு போய் விடும் பாட்டு.

நம் சிறுவன் இந்தக் முப்பது நொடிக் கோர்வையை சற்றே நீட்டி இழுத்து வாசிக்கும் பொழுது அதில் ஒரு சோகத்தின் இழையை இழுப்பது போல இருக்கும். பிறகு சட்டென்று பாட்டின் முடிவில் வரும் சஞ்சாரங்களுக்குப் போய், தனக்குத் தோன்றிய ஸ்வரங்களை சேர்த்து வாசிப்பான். எண்ணம் என்பதே ஸ்வரம் தானே?

இரண்டு மூன்று வருடங்கள் கடந்திருக்கும். புதியதின் மீதிருக்கும் ஆர்வம் தரும் மகிழ்ச்சியின் சுழற்சிகள் பழக்கமான பின் அவற்றை மெல்ல வடிந்து போகச் செய்வது தானே காலத்தின் கோட்பாடு? சைக்கிள் அன்றாட வாழ்வின் அங்கமானது. போகும் வழியில் இருக்கும் எந்த கடையிலும் காற்றடிக்கும் "பக்குவம்" வந்து விட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின் கமலா சைக்கிள் மார்ட் செல்ல நேர்ந்த பொழுது சிறுவன் அங்கு இல்லை. முதலாளியிடம் "பையன் இல்லையா?" என்றேன். "சாப்பாடெல்லாம் போட்டு பாத்துகிட்டேன்...சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டான்" என்றார். அதில் கோபத்தை விட வலி அதிகம் இருப்பது போல இருந்தது. சொல்லலாம் என்று நினைத்தும் சொல்ல முடியாத நிலையில் நம்மை வைக்கும் கோடிக்கணக்கான நொடிகளை உருவாக்கும் காலத்தில் இதுவும் அத்தகைய இன்னொரு நொடியாக இருந்திருக்கக் கூடுமோ? யாருக்குத் தெரியும் யார் எதை சொல்ல நினைத்தார்கள் சொல்லாமல் போனார்கள் என்று?



Sunday, September 29, 2013

38. ஆனந்த யாழை மீட்டுகிறாய்...

அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் நகரத்தின் மீது இரவை இழுத்துப் போர்த்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது காலம். இருப்பினும், அந்த ரயில் நிலையத்தில், காலத்தின் பகடை ஆட்டத்தில் தங்கள் மீது விழுந்த ஏதோ ஒரு நிகழ்தகவின் பொருட்டு எத்தனையோ பேர் எதனையோ தங்கள் எதிர்பார்ப்பாக்கி பயணத்தை துவக்க விரைந்து கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். எனது கம்பார்ட்மெண்ட் நோக்கி சென்று கொண்டிருக்கையில் பிளாட்பாரத்தில் தொங்க விடப்பட்டிருந்த டிவிகளில் இருந்து விளம்பரங்களுக்கிடையில் ஒலித்தது ஒரு குரல். "மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் ‍ முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று..." - "மட்டும்தான்" என்பது இந்த வரியின் பொருளை குறுக்கினாலும், ஒரு பெருங்கவிதை வெளியை நமக்கு(ள்) நாமே உருவாக்கி ஞாபக பாத்திகளின் வழியே கால நீருற்றி உணர்வின் பூக்கள் பூத்துக் குலுங்கும் நினைவுத் தோட்டத்திற்கான விதைகள் அந்த ஒற்றை வரிக்குள் ஒளிந்திருந்தன...சிலருக்கு இந்த வரி அர்த்தமற்றதாக தோன்றுகிறது. அர்த்தமுள்ளதோ அர்த்தமற்றதோ, இரண்டுமே நம் நினைப்பின் ரசம் பூசி நாம் எண்ணுவதையே சரி என்பது போல் காட்டும் மனக்கண்ணாடியின் மாயம் தானே?

எனது பெட்டியை அடைவதற்குள் இரண்டு மூன்று டிவிக்களை தாண்டியதில், அது ஒரு புதிய திரைப்படத்தின் விளம்பரம் என்ற செய்தியை கண்ணும் காதும் மூளையில் பதிய வைத்திருந்தது. அந்த வரியைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தின் நெரிசலையும் சத்தங்களையும் மீறி, வயல் வெளிகளில் நெற்கதிர்களின் தலை மேல் இறங்கி ஏறி ஒரு வித லயம் கலந்த அசைவுடன் சத்தமின்றி நம்மிடம் வந்து சேரும் சுகமான காற்றைப் போல ஒரு இசைத் துகள் என்னை சில நொடிகள் வருடிப் போனது. அதைத் தொடர்ந்து "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்றொரு குரல் மக்கள் திரளில் எழுந்த இரைச்சல்களின் ஊடே பயணம் செய்து உள்ளத்தின் ஏதோ ஒரு ஊற்றுக்கண்ணைத் திறப்பது போல இறங்கியது.. எனது இருக்கையில் அமர்ந்த பின்னும் அந்த "சுகமான காற்று" தீண்டுவது போன்ற உணர்வில் ஆழ்ந்திருந்தேன். அந்த இசைத் துகள் அவ்வப்பொழுது என்னுள் நகர்ந்து கொண்டே இருப்பது போன்ற உணர்வின் அசைவுடன்...

உலகியல் வேலைகளின் பின்னே மந்தையின் நடுவில் சிக்கிய ஆடு போல நாம் ஓடும் பொழுது, உள்ளத்தின் தேவைகளை அறிந்து அதன் வழியில் நம்மை ஆற்றுப்படுத்தும் அற்புத கருவியாய் கலைவடிவங்கள் தானே நம் ஆன்மத்தின் ஆதார ஸ்ருதியை நமக்கு மீட்டுக் கொடுக்கின்றன? எனவே தான் அவை இடம் பொருள் ஏவல் மீறி எங்கோ ஒரு நொடியில் நமக்குள் புகுந்து கொள்கின்றன. அப்படித்தான் அன்று நுழைந்தது "ஆனந்த யாழ்..."

சில தினங்கள் கழித்து ஒரு இரவில், அறையில் இருந்த என்னை சீக்கிரம் வரச்சொல்லி அழைத்த மனைவியின் குரல் ஹாலில் இருந்த டிவியின் முன் நிறுத்தியது. டிவியில், ஒரு புல்வெளி முழுவதும் புகுந்து நகரும் காற்று, திரையை விட்டிறங்கி நம் மேல் வீசுவது போல‌ ஆனந்த யாழை மீட்டிக்கொண்டிருந்தது. "உங்க லிஸ்டுல சேர்ந்துரும் போல" என்றார் என் மனைவி. "உங்க லிஸ்ட்" என்றால் என் அடி மனதின் சுவற்றில், ஒரு குகையின் சுவற்றில் வழியும் ஏதோ ஒரு ஊற்றின் நீர் கசிவு போல ஆங்காங்கே வழிந்தபடி இருக்கும் பாடல்களின் வரிசையில் இதுவும் இனி ஊறத்துவங்கும் என்று பொருள்.

"தங்க மீன்கள்" வேண்டி கணிணியில் "வலை" வீசி எனது ஒலிப்பேழையில் பிடித்து நீந்த விட்டேன். இரண்டு மாதங்களாக இரவில் துயில்வதற்கு முன் ஒலிப்பேழையிலிருந்து உள்ளத்தின் உள்ளே குதித்து நீந்தி விட்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தன "ஆனந்த யாழை" மற்றும் "நதி வெள்ளம் மேலே" என்னும் இரண்டு மீன்கள். செதில் செதிலாக அதில் பதிந்து இருந்தன உணர்வின் தறி ஏறக் காத்திருந்த இசையின் இழைகள். நெய்து நெய்து இழைகள் கூழாகி விழிப்படலத்தின் மீது நீரின் திரைச்சீலைகளை உருவாக்கும் மீன்கள் அவை.

இவ்வாறாக இசைப்பேழையில் என்னுடனேயே வந்து கொண்டிருந்தன இந்த மீன்கள். அலுவலகத்திலிருந்து ஒரு தினம் வேலை முடித்து நள்ளிரவை நெருங்கும் பின்னிரவு வேளையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
மாலை துவங்கிய மழை, ஆள் நடமாட்டம் குறைந்த பின், முழு சுதந்திரம் கிடைத்தது போல சாலை முழுவதும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. காற்றுடன் கைகோர்த்து அதன் நடனத்தின் வழியெங்கும் மரத்திலிருந்து இலைகளை பிடித்து, சாலையின் ஈரத்தில் ஒட்டி ஓடியாடிக் கொண்டிருந்தது மழை. கரும்பலகையில் வரைந்த நூற்றுக்கணக்கான இலைகளின் ஓவியம் போல தார்ச் சாலையெங்கும் இலைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

"நதி வெள்ளம் மேலே" துவங்கியது. இரண்டாம் ஸ்டான்ஸா துவக்கத்தில் வரும் குழலுக்கு ஏற்றவாறு, இருட்டிப்போய் ஆளரவமற்று இருந்த சாலையின் மரங்களிலிருந்து மழை சொட்டுகள் வெவ்வேறு கிளைகளிலிருந்து வெவ்வேறு இடைவெளியிலிருந்து உதிர்ந்து சாலையில் கலந்து நகர்ந்து கொண்டிருந்தன. சாலையில் என்னையும் மழையையும் தவிர யாருமில்லை. வண்டியை ஒரு நிமிடம் நிறுத்தலாம் எனத் தோன்றியது. பாடலை மீண்டும் ஓட விட்டேன். மரங்கள் அனைத்தும் ஏதோ துயரத்தின் வெளியில் தங்களை மெதுவாக அசைத்து கண்ணீர் சிந்துவது போல ஒரு மிகப்பெரும் சித்திரமாக சாலை என் முன் மாறியது. இப்பாடல் பாடியவர் பல்வேறு ஏற்ற இறக்கங்களில் ஜெயச்சந்திரனை ஞாபகப்படுத்தி எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நம்மை மூழ்க வைக்கிறார்.

இரவும் மழையும் இணையும் பொழுதுகளில் இந்த இரண்டு பாடல்களுமே நமக்குள் நன்றாக ஊடுருவுகிறது. கையடக்க ஒலிப்பேழை அத்தகைய இரவுகளை எதிர்நோக்கி என்னருகில் காத்திருக்கிறது.

Sunday, July 7, 2013

37. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 22

ஒரு மழை நமக்குள் பல நினைவுகளைத் தந்து போகக்கூடும். கெட்டித்து போன மண் மேல் முதலில் துளித்துளியாய் ஒட்டி, பிறகு மெல்ல பெருமழையாய் கொட்டி, இறுகியிருந்த மண் நெகிழ்ந்து, ஈரத்தினால் குழைந்து ஒரு வாசனை கிளம்புமே...அது மழை வாசமா? மண் வாசமா? அல்லது அந்தப் பொழுதுகள் நமக்குள் கிளப்பும் நினைவின் வாசமா?

மழைக்கும் மனதுக்கும் இடையே கிடக்கும் நினைவுப் புதையல்களை தோண்டி எடுக்கும் வேலையை சில பாடல்கள் செய்யும். பெருமழை பொழுதில் பேருந்துக்குள் அமர்ந்திருக்கிறீர்களா? மழையை ரசிக்கும் மனிதர்கள் பேருந்துகளுக்குள் இருப்பார்கள் என்று மழைக்குத் தெரியும் போலும். "நான் வெளியில் வந்திருக்கிறேன். உள்ளே என்ன செய்கிறாய்?" என்பது போல பேருந்தின் உலோகத் தகடுகளை தன் எண்ணற்ற கரங்களால் தட்டி நம்மை வெளியே வரச் சொல்லுவது போல அடித்துச் செல்லும் மழையின் சத்தம். அத்தகைய மழை தினத்தில் மழையின் வடிவத்தில் ஏறி மனதில் படிமமாய் ஊறிய‌ ஒரு பாடல், ஆயுளுக்கும் நினைவின் கிறக்கத்தை மனதுக்குள் இறக்கிச் செல்வதில் அதிசயமில்லை.

"பூமி குளிரட்டும் நல்லா அடிச்சு பெய்" என்று மழையிடம் பேசிக் கொண்டிருந்தார் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பாம்படம் அணிந்திருந்த ஒரு பக்குவப்பட்ட மூதாட்டி. அவரின் பேச்சை ரசித்தது போல‌, காற்றின் வழி பிடித்து தேடி வந்து கூடுதல் சாரல்களை அவர் மேல் கொட்டி கன்னத்தில் தட்டி விட்டுப் போனது மழை. நரைத்திருந்த அவரின் கூந்தலில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் போல மின்னிக் கொண்டிருந்தன மழையின் துளிகள். வானம் பார்த்து காத்திருந்து பாளம் பாளமாக பிளவுபட்ட‌ நிலத்தின் மீது பொழியும் மழை அந்தப் பிளவுகள் நோக்கி வழிந்தோடுவது போல, வயதின் சுருக்கங்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிய அந்த மூதாட்டியின் கன்னத்தில் இறங்கிய மழைத்துளிகள் அந்தச் சுருக்கங்கள் தந்த பிளவுகள் நோக்கி வழிந்து கொண்டிருந்தன. வழியும் மழைத்துளிகளிடம் வசப்பட்டதாலேயோ என்னவோ, துடைக்கும் நினைப்பின்றியோ மனமின்றியோ அமர்ந்திருந்தார் அவர்.

சற்றே ஓய்ந்தது போலிருந்த மழையின் ஒலியை வைத்து சாளரங்களை நன்றாக திறந்து வைக்கத் துவங்கினர் பயணிகள். அரசு பேருந்துகளுக்கே உரித்தான‌, விரித்தால் மடிக்க முடியாத, மடித்தால் விரிக்க முடியாத‌ ஷட்டரை முக்கால் பாகம் மேலேற்றி "ட" வடிவிலிருக்கும் துருப்பிடித்த இரும்பினுள் அடைக்கும் முயற்சியில் ஒரளவு வெற்றி அடைந்து அமர்ந்திருந்தேன் நான்.

பேருந்து நிலையத்தின் மேடு பள்ளங்களில் தேங்கியிருந்த மழை நீரின் மேல் விழுந்து சிதறும் தூறல்கள் நீரில் சிறு வட்டங்களைத் தோற்றுவித்து, அந்த வட்டங்களுக்குள் தோன்றும் புது வட்டம் சிறு வட்டங்களை பெருவட்டங்களாய் மாற்றி, விரிந்து கொண்டே போகும் வட்டம், ஏதோ ஒரு நொடியில் மறைந்து...புதிதாய் ஒரு வட்டம் நுழைந்து...இதுவே சுழற்சியாய்..மழை போடும் நீர் வட்டத்தின் ஆரம் போல பெருகிக் கொண்டே போகும் நினைவின் சாரம் சட்டென்று இன்னொரு நினைவைத் தோற்றுவித்து...அது பெருகி....ஒரு துளியின் தடத்தில் மறுதுளி...வட்டங்களுக்குள் வட்டங்கள்...நினைவுகளுக்குள் நினைவுகள்!

இந்தச் சுழற்சியை இசையின் பாதைக்குள் பொருத்தியது போல, நம்மையே அந்தச் சுழற்சியின் மையப் புள்ளியில் இருத்தியது போல, அடிமனதில் மெதுவாக அசையும் உணர்வுகளின் ஒலிவடிவம் போலத் துவங்கியது ஒரு பிளாட்பாரத்தில் இருந்த தேநீர் கடை ஒன்றிலிருந்து ஒலிக்கத் துவங்கிய "நிலவே நீ வர வேண்டும்" பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த அற்புதமான கிடார்.

பாடல் முடியும் வரை பேருந்தை கிளப்பாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு. தள்ளித் தனியே நின்றிருந்த ஓட்டுனர் தேநீர் கிளாசை சுழற்றியபடி அதிலிருந்து வெளியேறும் ஆவியை பார்த்தபடி இருந்தார். ஒரு வேளை அவரும் இந்தப் பாடல் முடியும் வரை காத்திருக்க நினைத்திருந்தாரோ என்னவோ? எவருக்குத் தெரியும் எவரின் நினைப்பு?

கரையிலிருந்து நீண்டு, நதியின் மீது படர்ந்திருக்கும் கிளைகளை உடைய மரத்தின் இலைகள் உதிர்ந்து நீரோட்டத்தில் மிதந்து செல்வது போல, இந்தப் பாடல் முழுவதுமே "bass guitar" மேல் மிதந்து நகர்கிறது. அந்தக் கிளையின் நிழல், தண்ணீரின் அசைவுக்கு ஏற்ப ஆடுவது போலத்தானே நம் நினைவுகளும் இந்தப் பாடலின் ஊடே அசைகிறது...நீரோட்டம் ஆங்காங்கே எழும்பி அடங்குகையில் அதன் மேலேறி இறங்கும் இலையின் பயணத்தை ஒத்ததாக இருக்கிறது "bass guitar" மேலே ஏறி இறங்கும் வரிகள்.. நினைவுகள் கொப்பளித்து நிகழ்காலத்தின் கோப்பையை மீறி வழிவது போல, ஆங்காங்கே அடியிலிருந்து மேலேறி வரிகளின் இடைவெளியில் பொங்கி உள்ளடங்கும் நொடிகள் அவை.

நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஊடகமாக மழை மாறிப் போகும் அதிசயத்தை முதல் ஸ்டான்ஸா துவக்கத்தில் வரும் புல்லாங்குழலில் புரிய வைக்கிறார் இளையராஜா. நம் மேல் விழும் மழைத்துளி உடலின் மீது வழிந்தோடும் வழித்தடங்களுக்கு எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளனவோ அத்தனை சாத்தியங்கள், அந்த துளியின் நகர்வு எத்தகைய நினைவின் துளிகளை நம்மிலிருந்து மீட்டெடுக்கும் என்பதற்கும் உண்டு. ஜன்னலின் மீது சாய்ந்து வானத்தை பார்த்தபடி இருந்த என் முகத்தை தாங்கியிருந்த கைகளின் மீது இறங்கி, மழையின் ஒரு குமிழ் அதற்குரிய நீர்த்தடத்தை உருவாக்கி விரல் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த புல்லாங்குழலின் தடம், குமிழின் தடத்தை ஒத்ததாகி ஒலித்தது. மழையின் குமிழும் புல்லாங்குழலும் அங்கு என்னவாகிப் போனது? மழையின் குமிழ், காலக் குமிழாகி, அது வேகமாக‌ உருண்டோடி, புல்லாங்குழலின் உள்ளோடி, ஒவ்வொரு துளையிலிருந்தும் சொட்டும் நினைவுகளின் சத்தத்தில் உள்ள உயிரின் ஸ்வரம்தானோ அந்த முதல் ஸ்டான்ஸா புல்லாங்குழல்? அத்தகைய சொட்டுக்களை வாங்கி, நமக்குரிய உணர்வுகளில் தாங்கி, மறுபடி நம் மனதுக்குள்ளேயே ஊற்றுகிறதோ அதன் பின் வரும் வயலின்?

பெய்து போன மழை நெய்து வைத்த மிச்சம் போல ஜன்னலின் விளிம்புகளில் மாலையாக கோர்த்திருந்த மழைத்துளிகள் ஒவ்வொன்றாக என் உச்சந்தலையில் இறங்கின. அந்த சிலிர்ப்பின் ஊடுருவல் மெதுவாகத் துவங்கி, மேலோங்கி வளர்ந்து, மனம் முழுதும் படர்ந்து நிற்கும் பொழுதுகளைத் தான் இரண்டாம் சரணத்திற்கு முன்னர் வரும் கிடாரும் வயலினும் தருகிறதோ? மனதில் தோன்றும் நினைவின் சிலிர்ப்புகள் இப்படித்தான் நிகழுமோ?

தமிழ் வகுப்புகளில் நாம் "மாத்திரை" பற்றி படித்திருப்போம். சொற்களுக்கான உச்சரிப்பின் கால அளவு "மாத்திரை" என்று தமிழாசிரியர் சொல்லும் பொழுதே சொற்கள் ஒரு குறிப்பிட்ட அளவின் வடிவமைப்பில் வாயில் உருள்வது போல இருக்கும். இப்பாடலில் "நீயின்றி வாடுதே...", "துன்பங்கள் சேர்ந்ததே" [முதல் ஸ்டான்ஸா] மற்றும் "மாயங்கள் செய்வதே...", "காயங்கள் ஆனதே..." [இரண்டாம் ஸ்டான்ஸா] என்னும் வரிகளின் அடியில் இளையராஜா என்ன செய்கிறார்? அந்த "bass guitar" இந்த வார்த்தைகளின் "மாத்திரைகளை" அப்படியே சாப்பிட்டு அதன் வடிவிலேயே வரிகளோடு உருகி ஓடுகிறதே...நினைவின் கரடு மேல் எத்தனை லாவகமாக நம்மை ஏற்றி இறக்குகிறார் இளையராஜா!

மழை, தான் தொடும் அனைத்தின் மீதும் காலத்தை ஊற்றி விட்டு போய்விடுகிறது. நனைதலும் காய்தலும் மனதுக்கே உரிய மழையின் சொல்லாடல்கள் தானே? மழை என்பதே நினைவுக்கான காலத்தின் குறியீடுதானே? இசையும் அத்தகையது தான் இல்லையா?

குறிப்பு: இதே பாடல் தந்த மற்றொரு அனுபவம் வாசிக்க இங்கே செல்லவும்...