Thursday, January 19, 2012

9. கமலம் டீச்சர் - 1

ரெண்டு சுழி மூணு சுழிகளுக்கிடையே சிக்கிக்கொண்டிருந்த என் ஏழாம் வகுப்புத் தமிழை சீர் செய்யத் துவங்கியவர் கமலம் டீச்சர். நெற்றி வகிட்டில் குங்குமம் பதித்து மஞ்சள் பூசிய முகத்துடன் புடவையை முழுதாய் போர்த்தி அதன் மறுபுறத்தை இடது கை விரல்களில் பிடித்தபடி வரும் கமலம் டீச்சர் என்னை உளியால் செதுக்கிய வருடங்களில் ஒரு முறை கூட அவர்  வகுப்பறைக்குள் செருப்பணிந்து பார்த்ததில்லை. அறிவின் பலமோ குணமோ - அவர் நடக்கையில் மெட்டியின் சத்தம் பல "rows" வரைக்கும் கேட்கும். சுமார் 5 வருடங்கள் - "பிச்சை புகினும் கற்கை நன்றே" துவங்கி  "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" வரை அவர் ஊற்றிய தமிழ், அறிவுக்கு போகும் வழியில் ரத்தத்திலும் ஊறிப்போனது. அதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் அவர் ஒரு நொடியில் என் ஒரு ஜென்மத்திற்கு தேவையான பாடம் நடத்தியது ஒரு சாட்சி.

அப்பொழுதெல்லாம் 10, 12 வகுப்புகளில் தமிழுக்கு சங்கம் மன்றம் தேர்வுகள் உண்டு. அறிவியல், கணக்கு போன்றவற்றை விட தமிழில் அதிக மதிப்பெண் வருவது எனக்கும் வீட்டினருக்கும் விசித்திரமாக இருக்கும். 12 ஆம் வகுப்பு அரையாண்டு முடிந்து, கமலம் டீச்சர் மன்றம் மதிப்பெண் பட்டியல் மற்றும் பள்ளியின் வழக்கமான அரையாண்டு தமிழ் விடைத்தாள்கள் தாங்கி வகுப்பறைக்குள் நுழைந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பது இன்றும் ஞாபகம் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் கமலம் டீச்சருக்கு  கூடுதலாக ஒரு "அம்மன்" களை வந்து விடும். இப்போது போல் language பாடங்களில் 180, 190 என்றெல்லாம் அப்போது எளிதில் போட மாட்டார்கள். எனது விடைத்தாளை அனைவருக்கும்  முன் தூக்கிப் பிடித்தபடி  நான் 186 வாங்கியிருப்பதாகவும் 2nd paper இல் 96 மதிப்பெண் என்றும் கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருப்பதாகவும் சிலவற்றை வாசித்தும் காட்டி என்னை விடைத்தாள் பெற்று கொள்ள அழைத்தார். அந்த சில நிமிட புகழ்ச்சியில் எனக்கேறிய தலைக்கனத்துடன் அவர் முன் சென்று என் இடக்கையை எனையறியாமல் நீட்ட, ஒரு நொடி என்னையும் இடக்கையையும் மாறி மாறி பார்த்த அவர் விடைத்தாளை வகுப்புக்கு வெளியே வேகமாய் விட்டெறிந்து "போய் எடுத்துக்கோ" என்றார். மாடியிலிருந்த வகுப்பிலிருந்து பறந்து, நடைபாதை தாண்டி கீழே கிரௌண்டில் விழும்படி இருந்த அந்த வேகம் பக்கங்கள் கட்டியிருந்த வெள்ளை நூலை அறுத்து பக்கமெல்லாம் தனித்தனியாக கிடக்க அதை எடுக்கையில் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்தோம் என்று மனது குறுகிப்போனது. அதன் பின் என்னுடன் அவர் என்றுமே பேசியதில்லை. அன்று பசியில்லை. தவறுக்கும் பசிக்கும் தொடர்புண்டு போலும். இல்லாத பசியை அம்மாவிடம் சொல்லாமல் தட்டுடன் அமர்ந்த பொழுது "ஒளியும் ஒலியும்" இறுதிப் பாட்டு வருவதற்கு சரியாக இருந்தது (நமக்கு பிடித்த பாடல்கள் பெரும்பாலும் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் கடைசியாகத்தான் வரும். பாதிப்பாட்டிலேயே "செய்திகள் தொடரும்" slide போட்டு விடுவார்கள்). "kaise kahoon kuch kahna sakoon..." [Ilayaraja / Bhupindar singh / Janaki] என்று துவங்கும் "நண்டு" படத்தின் முழு நீள hindi பாட்டு. "அனைவரின் விதியும் அவரவர்க்குள்; விதியின் விதியோ  அவ்விதிக்குள்" "விதியின் ஸ்வரங்கள் யார் கண்டார்" போன்ற அற்புதமான பொருள் தரும் வரிகள் அடங்கிய இப்பாட்டு [தட்டித் தடுமாறி நான் பாஸ் பண்ணிய hindi இது போன்ற விஷயங்களுக்கு கைகொடுக்கிறது!] "காலச்சலனம்" மிக்கது - கேட்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் நம்மை தூக்கிகொண்டு போய்விடும். வழக்கமான இளையராஜா 2nd stanza special இந்த பாட்டிலும் உண்டு. ஆண் குரல் ஒரு "flat terrain" இல் பயணித்தாலும் Janaki கொண்டு வரும் ஏற்ற இறக்கங்கள் அற்புதம். மாலைப்பொழுதில் பரந்த வெளியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி ரயிலில் நம்முடன் வரும் பிரமாண்டமான மலைகளுக்கு இடையில் சூரியன் மறைந்து கொண்டிருக்கும் பொழுது இந்தப் பாட்டை கேட்டுப்பாருங்கள்...அல்லது மரங்கள் மூடிய சாலையில் மழை  பெய்து முடிந்த பின் நடந்து போகையில் கேட்டு பாருங்கள்...

 www.youtube.com/watch?v=yUI1FLexJrY என்ற link போட்ட அந்த புண்ணியவானுக்கு நன்றி.
  
கமலம் டீச்சர் வீசி எறிந்த விடைத்தாள் என் பழைய பெட்டியில் இன்றும் உள்ளது. அன்றைக்குப் பிறகு என்றுமே என் இடக்கை எந்த பொருள் பெறவும் நீண்டதே இல்லை என்பது மட்டுமல்ல... அதன்பின் எப்பொழுதெல்லாம் தலைக்கனத்தின் சாயல் தலை தூக்கும் என்று தோன்றுகிறதோ அதற்கு முன்னரே கமலம் டீச்சர் என் நினைவில் வந்து என்னை குட்டி விட்டு போய் விடுகிறார்.




Tuesday, January 3, 2012

8. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி - 4

கால்கள் தரையில் பாவாமல், நாமே இயக்கி, நாம் நகரும் அனுபவம் நமக்கு பெரும்பாலும் முதல் முறை வாய்ப்பது சைக்கிளில் தான். ஜாதி மத பேதமின்றி உலகமெங்கும் அனைவருமே, தன் உறவுக்கார பையனோ, பக்கத்துக்கு வீட்டு பையனோ முதல் சில நாட்கள் handle bar வளைந்து நாம் சைக்கிளுடன் சாய்கையில் தாங்கிப்பிடிக்கவும் பின்னர் சில நாட்கள் நம்முடன் ஓடிவரவும் அப்பாவின் மேற்பார்வையில் "பாடம்" படித்திருப்போம். 


என் பெரியம்மா ஒருவருக்கு Race course colonyயில்  ஜாகை. நடுவில் ஒரு ground இருக்க நாற்புறமும் இன்றைய "apartment" வகையறாக்களுக்கு முன்னோடியான வடிவத்தில் A,B,C.. "Block"க்குகளாக வீடுகள். Colony வாயிலில் ஒரு பிள்ளையார் கோயில். அதனருகில் ஒரு வாடகை சைக்கிள் கடை (எல்லா கடைகளிலும் ஏன்  துருபிடித்த சில சைக்கிள்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது அன்று ஒரு புதிர்). ஒரு மணி நேரத்திற்கு 50 paisa வாடகை. ஐந்தாம் வகுப்பு அரையாண்டு விடுமுறையில் முதல் முறை சைக்கிள் ஸ்பரிசம்... திரும்பும்  வளைவுகளில் என் பயிற்சியின்மையை பறைசாற்றும் வகையில் ஒரு பக்கமாய் சரிந்து விழுந்து கொண்டிருக்கும் நொடிகளில் வயிற்றில் ஏற்படும் ஒரு இம்சை... (பயத்தின் சாயல்களுக்கெல்லாம் ஒரே ரேகைதானோ?) சைக்கிள் ஒட்டிப்பார்த்த  பரவசம் அன்றைய நாள் முழுதும் பச்சை மாங்காய் சுவைத்த நாக்கு போல் ஒரு தினுசாக ஒட்டியிருக்கும். அருகிலிருக்கும் reserve line groundல் மாதத்திற்கு சில நாட்கள் திரை கட்டி இரவில் படம் போடுவார்கள். படத்திற்கு முன் பாடல்களும் ஒலிக்கும். குடும்பம் குடும்பமாக மணலில் அமர்ந்து படம் பார்ப்பார்கள். மனதில் சைக்கிள் ஒட்டிய நினைவும் நாளை எப்படி ஓட்ட வேண்டும் என்ற கனவுமாக அந்த மணலில் அமர்ந்திருந்த நாட்களில் சில பாடல்கள் சுவடாய் தேங்கிப் போயின..

"தேவன் தந்த வீணை" ["நான் பாடும் பாடல்"] - SPB, Janaki, Jeyachandran என்று இந்த பாடலுக்கு 3 versions. ஆனால், Jayachandran குரலும், அந்த verionனுக்கு மட்டும் ilayaraja base guitarல் கொடுத்த extra வருடலும் வரியின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அந்த வருடலும் ஏறி இறங்குவதுமாய் தோட்டத்தில் வீசும் காற்றில் ஊஞ்சலாடுவது போல் ஒரு சுகம் இந்த பாடலை கேட்கும் பொழுது (head phone அவசியம் தேவை)...

பரபரப்பான violin தரும் tea குடித்த தெம்புடன் துவங்கும் "பூமாலையே தோள் சேரவா" என்னும் "கீதாஞ்சலி" பாடல் நிறைய பேரின் விருப்பம். இதே கீதாஞ்சலியில் "மலரே பேசு மௌன மொழி" என்னும் பாட்டு ஒரு தபேலா-கப்பாஸ்-வீணை combination ஸ்பெஷல்.  எந்த ஒரு பாடலிலும் ஒரு violin அல்லது flute bit போட்டு அதை நாம் வாழ்நாள் முழுதும் "வாசித்து" கொண்டே இருக்க வைக்கா விட்டால் இளையராஜாவுக்கு தூக்கம் வாராது போலும்! அத்தகைய flute bit இந்த பாட்டிலும் உண்டு.

"சிறிய பறவை" ["அந்த ஒரு நிமிடம்" - வைரமுத்து] வல்லின வார்த்தைகள் வரிசையாய் வந்த பின் "மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்" என்று காதல் பாட்டில் இலக்கணம் புகுத்தி..

அடுத்த நாள் மட்டுமல்ல சைக்கிள் பழகிய நாட்கள் தோறும் அந்த மணலில் கேட்ட இத்தகைய பாடல்கள் சைக்கிளில் தொற்றிக்  கொண்டு வந்தது என்று சொல்லவும் வேண்டுமோ? காலத்தின் கைக்குழந்தையாய் அதன் பின்னே தவழும் நாட்களில் நம்முடன் வரும் இத்தகைய பாடல்களை தள்ளத்தான் தோன்றுமோ?









Thursday, December 15, 2011

7. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 3

நம் வீட்டுத்  திருமணங்கள் சொந்த ஊரில் நடந்தால் திருமணத்திற்கு வேண்டிய ஏதேனும் பொருளை வீட்டிலேயே வைத்து விட்டு மண்டபத்துக்கு வந்து விடுவது என்பது எழுதப்படாத "மரபு". அந்த மரபை கடைபிடித்து மதுரை தல்லாகுளத்தில் '93 இல் நடந்த  எங்கள் வீட்டுத்  திருமணம் ஒன்றில் வீட்டில் மறந்து வைத்த பொருளை எடுப்பதற்காக வீட்டிற்கு வரும் வழியில் பார்த்தது தான் வாழ்கையில் கண் முன்னே பார்த்த முதல் "major accident". Railway station அருகில் எனது சைக்கிளின் முன்னே ஒரு பைக் மீது பஸ் மோத... சாலையில் நான் பார்த்த முதல் இரத்தம்...மங்கம்மாள் சத்திரத்தின் அருகில் இருக்கும் CLS Book Shop பக்கத்தில் உள்ள டீ கடையில் சத்தமாக வந்து கொண்டிருந்த "அவளொரு மேனகை என் அபிமான தாரகை" [["நட்சத்திரம்" படத்தில் SPB]  இந்த பாடல் மிதமாக ஆரம்பித்து அருவிக்குள் தலையை திடீரென்று நுழைத்தது போல மூச்சு முட்ட முடியும்], கூடிய கூட்டம், ஆங்காங்கே சிதறிக்கிடந்த உதிரத்துளிகள்... இந்தப் பாட்டில் "தாமரைப் பூவின் சூரிய தாகம்" என்னும் சிறப்பான வரியும் உண்டு.
அரை மணி நேரத்தில் மீண்டும் கல்யாண மண்டபம் சென்ற பின் அங்கே பார்த்த மகிழ்ச்சி கொப்பளிக்கும் முகங்களும் சற்று முன் பார்த்த உயிருக்கு துடித்த உருவமும் வாழ்கையின் நிரந்தரமின்மையை அறைந்தாற்போல் சொன்னாலும் அது அரைகுறையாய் புரியும் வயது!

 சமீபத்தில் அனைவராலும் உச்சரிக்கப்படும் "முல்லைப் பெரியார்" dam மேல் '93 இல் சைக்கிளில் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நண்பர்களுடன் சென்ற சுற்றுலாவில் மதகுகள் மேலே இருக்கும் பாலத்தில் அக்கரைக்கு நடந்து போகும் பொழுது சுத்தமான காற்று நுரையீரலை நிரப்ப, பச்சைப் போர்த்திய மலைகள் பார்வையை வருட, சொர்கத்தின் "demo" version போலும் என்று நினைக்க வைத்த முல்லைப் பெரியாரில் என் காலில் முள் குத்த அங்கிருந்த காவலர் "கர்ணன்" என்னை சைக்கிளில் வைத்து மறுகரையில் விட்டது மறக்க முடியாத நினைவு. "கர்ணன்" ஒரு transistor வைத்திருந்தார் [வனச்சரகத்தில் வேலை பார்க்கும் அலுவலர்கள் தங்கள் தனிமை குறைக்க பலர் பல வழிகள் வைத்திருக்கின்றனர். கர்ணனுக்கு transistor. "ஏதோ நினைவுகள்" [அகல் விளக்கு - Shoba / Jency], "பனி மழை விழும்" ["எனக்காக காத்திரு" - Deepan Chakravarty] ஆகியவை இந்தக் கர்ணன் அந்த சைக்கிள் பயணத்தில் transistor மூலம் எனக்களித்த "முல்லைப் பெரியார் கொடை". இப்படிப்பட்ட பாடல்களை கேட்டுக்கொண்டு இயற்கையில் நம்மை நனைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு என்ன பெயர்? தனிமையில் இனிமை. இன்று, அவசரமான பகல்கள் தரும் ஆயாசமான இரவுகளில், எப்பொழுதேனும் நள்ளிரவுக்கு முன் channel மாற்றுகையில் "ஏதோ நினைவுகள்" சிக்கும். எதிர்பாராமல் சிக்கும் நினைவுகளில் நாம் சிக்குவது எளிதன்றோ!
Benny Cook இந்த Mullai Periyar Dam கட்ட தன் நாட்டிற்குச்  சென்று சொத்தை விற்று வந்து பணம் கொட்டினார் என்கிறது சரித்திரம். இன்று ஒரே நாட்டில் இருக்கும் பக்கத்து பக்கத்து மாநிலங்கள் பேதங்களை தீர்ப்பதற்கு பதில் வளர்ப்பது பக்குவத்தை பீடித்த தரித்திரம். இம்மாதிரி சமயங்களில் Sardar Patel பற்றி படித்தவை ஞாபகம் வருகிறது. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவுடன் சேர மறுத்த சமஸ்தானங்களை எப்படி வழிக்கு கொண்டு வந்தார்...இவர் போன்றவர்கள் இன்றிருந்தால் முல்லைப் பெரியார் விவகாரம் ஒரு நாள் தாங்குமா?   
   

Wednesday, November 30, 2011

6. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 2

நான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம்...மதுரை நகருக்குள் அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட "சைக்கிள் குழு" எங்கள் வீட்டின் பின்புறம் பெருமாள் கோவில் தெருவில் முகாமிட்டிருந்தது. நம்மூர் மக்களுக்கு புரளி கிளப்புவதில் கிடைக்கும் திருப்தி பெரிது போலும். அவர்கள் இமயமலையில் சைக்கிள் விட்டவர்கள் என்றும் ராஜஸ்தான்காரர்கள் அங்கிருந்து கண்ணை கட்டி கொண்டு சைக்கிளில் வந்திருக்கிறார்கள் என்றும் இஷ்டத்திற்கு கதை கட்ட, தினமும் மாலை தெருவில் கூட்டம் அம்மும். அக்குழுவின் hero சுமார் 3 வாரங்கள் சைக்கிள் மீதே இருப்பார். தினமும் மாலை வித்தைகள் நடக்கும். தெருவின் இருமருங்கிலும் கட்டப்பட்ட கம்பங்களில் ஒளிரும் tube lights, நடுவே மேடை, அதை சுற்றி சுற்றி வரும் cycle hero, தொடர்ந்து ஒளிப்பரப்பாகும் பாடல்கள், "காஜிமார் பாய் பத்து, பெருமாள் கோவில் பட்டர் பத்து" என்று இடையிடையே ஒலிக்கும் "உபயம்" பற்றிய அறிவிப்புகள் என்று அந்த வாரங்களின் காட்சி கனவு போல விரிகிறது...

tea stall காரர் டிபன் தருகிறார் ஆர்ய பவன் உணவு தருகிறது என்று தினம் ஒரு செய்தியுடன் அன்றைய மாலை ஆரம்பமாகும். பள்ளியிலிருந்து திரும்பியவுடன் மொட்டை மாடிக்கு சென்று "குழு" என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பார்ப்பதும் அன்றைய வித்தைகள் என்னவென்று கேட்பதும் போக பாடல்கள் காதில் வந்து விழுந்தபடியே இருக்கும். இந்த நாட்களில் மட்டுமே கேட்டு பிறகு எந்த "பொது இடத்திலும்" கேட்கவே வாய்ப்பு வாராமல் போன  பாடல்கள்தான் எத்தனை... "ஸ்ரீதேவி என் வாழ்வில்" ["இளமை கோலங்கள்" கவனிக்க: இளமை காலங்கள் அல்ல], "சங்கீதமே" ["கோவில் புறா"],"காளிதாசன் கண்ணதாசன்" ["சூரக்கோட்டை சிங்கக்குட்டி"] - இதை பிற்பகலில் கிராமத்து பம்பு செட்டில் குளித்துக்கொண்டே  கேட்டுப்பாருங்கள்],"தேனருவியில் நனைந்திடும் மலரோ" ["ஆகாய கங்கை"], "வண்ணம் நீ விரும்பிய வண்ணம்" ["பிரேம பாசம்"]

சிறிது நாட்களில் சைக்கிளில் சுற்றுபவர் உடல்நிலை மோசமானதாகவும் மயக்கம் போட்டதாகவும் தகவல் பரவியது. ஆனாலும் மாலையில் சென்று பார்த்தால் அவர் பாட்டுக்கு மேடையை சுற்றிகொண்டிருந்தார். "Climax" தினம் நெருங்கிக்கொண்டிருந்தது. தெரு முழுதும் வைக்கோல் பரப்பி அதில் தீ மூட்ட, பற்றியெரியும் நெருப்பில் tube lights சிதற அதன் நடுவில் அவர் சைக்கிளில் வர வேண்டும். இரு நாட்கள் முன்னராகவே இந்த "climax" மூடிற்கு மக்களை கொண்டு வர ஒரே தத்துவ பாடல்களாக ஒலிக்கத்துவங்கியது. இதில் கேட்கத் துவங்கியதுதான் கண்ணதாசனும் TMSசும். அர்த்தம் ஒன்று கூட புரியாவிடிலும் ஒரு வித "heaviness" உண்டாக்கும் அப்பாடல்களை இரவு பகலாக ஒலிக்கவிட்டு மனதில் தங்கவிட்டு சென்றனர் அந்த சைக்கிள் குழுவினர்.
"மனிதன் நினைப்பதுண்டு", "ஆறு மனமே ஆறு", "சட்டி சுட்டதடா", "உள்ளம் என்பது", "நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு", "கால தேவனின் மயக்கம்","எந்தன் பொன்வண்ணமே", "நிலவை பார்த்து" போன்றவை அந்தப்பட்டியலில் முக்கியமானவை. அவர் சைக்கிளில் நெருப்புக்குள் நுழைவதற்கு முன் போடப்பட்ட பாடல் "சிவப்பு விளக்கு எரியுதம்மா" அதன் பின் விளக்குகள் எல்லாம் நெருப்பினால் உடைந்து வெளிச்சமான தெரு 10 நிமிடம் இருட்டானதும் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று அனைவரும் பதறியதும் மறக்க முடியாத நாள்.

இவரின் அடுத்த தலைமுறை இன்று JAVA Code எழுதிக்கொண்டிருக்குமோ?

Monday, November 7, 2011

5. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 1

பத்தாம் வகுப்பில் சொல்லிக்கொள்ளும்படி மதிப்பெண் வாங்கிவில்லை. இருப்பினும் என் அண்ணன் madurai jansi rani பூங்கா அருகில் உள்ள சைக்கிள் கடையில் 1990ல் ஒரு செவ்வாய் மாலை என்னை கூட்டி சென்று BSA SLR ("white walled tyre" உடன்) வாங்கித்தந்தார் (நீ வாங்கிய மார்க்குக்கு ஒரு டயர் மட்டும்தான் நியாயப்படி தரவேண்டும் என்று சொன்னதாக ஞாபகம்).  வீட்டினரின் ஏகோபித்த கவலைகளுக்கு நடுவில் வரண்டாவில் ஜம்மென்று வந்து நிறுத்தப்பட்டது சிகப்பு கலர் BSA SLR. சாப்பாடு, தூக்கம், இயற்கை அழைப்பு இந்த மூன்றைத்தவிர வேறு அனைத்தையும் சைக்கிள் பயன்படுத்தி எப்படி செய்யலாம் என்று யோசிக்க வைத்தது புது சைக்கிள் ஆர்வம்.
சைக்கிளும் பாட்டு கேட்கும் பழக்கமும் சேர்ந்து சில வினோதமான அனுபவங்களை நினைவில் இறக்கிய அந்த நாட்கள் சில...


"உதடுகளில் உனது பெயர் ஒட்டி கொண்டது அதை உச்சரிக்கும் பொது உள்ளம் தித்திக்கின்றது கனவுகளில் உன்னை கண்டு வெட்கம் வந்தது அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிச்சென்றது..." [வெட்கம் என்றொரு குணம் நம் சமூகத்தில் முன்பு இருந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிக!] என்னும் ஜெயச்சந்திரன் பாடல் என்னை சில மாதங்களாக படுத்திக் கொண்டிருந்தது. முதலிலோ, நடுவிலோ, கடைசியிலோ என்று பிட் பிட்டாக கேட்க முடிந்ததே தவிர முழு பாட்டும் கேட்கும் வாய்ப்போ என்ன படம் என்று கண்டுபிடிக்கும் வாய்ப்போ நழுவிக்கொண்டே இருந்தது. ஒரு முறை மேல மாசி வீதி வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்படி பெரியப்பா அனுப்ப, திரும்பி வரும் வழியில் ஆரிய பவன் முனையில்  இருக்கும் டீ கடையிலிருந்து உதட்டில் மீண்டும் பெயர் ஒட்டிக்கொண்டதாக ஜெயச்சந்திரன் அழைக்க முன் பக்கம் தொங்க விட்டிருந்த brown color பையுடன் சைக்கிளை நிறுத்தி "தங்க ரங்கன்" [எப்படித்தான் இப்படியெல்லாம் பெயர் வைத்தார்களோ!] என்று படப்பெயரை கண்டுபிடித்த திருப்தியுடன் வீட்டின் முன் வந்து சைக்கிளை நிறுத்தும் பொழுது வயிறு வாய்க்கு வந்து விட்டது - பை இல்லை. பிறகு நடந்தது தனிக்கதை. மதுரையின் பெரும்பாலான cassette கடைகளில் இப்படியொரு படமே கிடையாது என்று சொல்லி விட்டார்கள். Ceylone ரேடியோவில் தவறு நடக்காது என்ற நம்பிக்கையில் வருடக்கணக்கில் இந்த பாட்டை record செய்யும் முயற்சி தொடர்ந்தது. '79ல் வெளியான இந்த பாடலை '88 ல் முதலில் கேட்டு அதன் பின் சுமார் 15 வருடங்கள் துரத்தி சில வருடங்களுக்கு முன் சென்னை கோடம்பாக்கத்தில்  அலிகான் என்பவரின் "பழைய பாடல்கள் ஆவணக் காப்பகம்" தெரிந்து அதில் பதிவு செய்து ஒரு இரவில் நிதனாமாக கேட்ட போது பாட்டுடன் பதினைந்து வருடங்களும் பெருகி வழிய...இதே போல் "நெருப்பிலே பூத்த மலர்" படத்தின் "எங்கெங்கும் அவள் முகம்",  "பாலூட்டி வளர்த்த கிளி" படத்தின் "நான் பேச வந்தேன்", "கொக்கரக்கோ" படத்தின் "கீதம் சங்கீதம்" "ஆட்டோ ராஜா" படத்தின் "சங்கத்தில் பாடாத" என்று நீளும் கணக்கற்ற பாடல்களை என்னிடம் சேர்த்த BSA SLR க்கு நன்றி. இந்த படத்தின் பெயர்களை எல்லாம் கடைகளில் நெளிந்தபடி கேட்டு அலைந்ததும் cassette வந்த பின் கேட்கும் பொழுது கிடைக்கும் விளக்க இயலாத சந்தோஷமும் தனி.

"padmanabhan" enbhadhu "பேபி"யாகி மரியாதை நிமித்தம் "பேபியப்பா" என்றழைக்கப்பட்ட, எனக்கு கிரிக்கெட் அறிமுகம் செய்த Kapil Dev இன் தீவிர ரசிகரான என் மற்றொரு பெரியப்பா [இவர் டிவி இல்லாத அந்த காலத்தில் எந்த நாட்டில் match நடந்தாலும் ABC, BBC என்று அந்த நாட்டு stationஐ தன் radioவில் பிடித்து விடுவார்]   ஒரு அதிகாலை சர்க்கரை நோயிடம் முழுவதுமாக தோற்ற பொழுது குடும்ப வைத்தியரை அழைத்து வரும்படி என் அப்பா அனுப்ப மாலை முரசு office அருகே செயின் அறுந்து விட்டது. "K,A,D,A,L கடலா காதலா? கடல் shampoo தான் குளிச்சா நல்லாருக்கும்" என்று நாளுக்கு நூறு முறை ஒலிக்கும் அர்த்தமில்லா advertisement முடிந்து காலை 7.30 மணி திருச்சி வானொலியின் முதல் பாட்டாக "மெட்டி ஒலி காற்றோடு" எதிரில் உள்ள டீ கடையில் ஓடிக்கொண்டிருக்க அதில் வரும் "துருதூ துதுதூ.. என்னும் humming, அதை தொடர்ந்து வரும் violin இவற்றுக்கிடையில்  எவ்வளவு போராடியும் செயின் துருப்பிடித்து இருந்ததால் மாட்ட முடியாமல் கிட்டத்தட்ட அழுகை எட்டிப்பார்க்கையில் என் அப்பா  "எண்ணெய் போடுடா" என்று சொல்லி சொல்லி அலுத்து போனது ஞாபகம் வர  அக்கடையில் வடை போட்டுக் கொண்டிருந்த முதியவர் chain போட உதவி செய்து "தம்பி அடிக்கடி எண்ணெய் போடணும்" என்று சொல்லிவிட்டு போக doctor இல்லாமல் வெறுங்கையுடன் வீட்டில் நுழைந்த போது எத்தனையோ score கள் சொன்ன அந்த வெள்ளை நிற பாக்கெட் transistor யும் பெரியாப்பவையும் பார்ப்பது அன்றே கடைசி என்று புரிந்தது. அதன் பின் சைக்கிள் செயினுக்கு மட்டுமில்லை எந்த இயந்திரத்தின் பராமரிப்பையும் எளிதில் மறந்ததில்லை. 
இந்த "மெட்டி ஒலி" பாட்டின் ஆரம்பத்தில் ஏன் ரேடியோவில் வருவது போல் noise irukkiradhu? ["தோகை இளமையில்..." பாட்டில் "பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் போட வேண்டும் புதுத்தென்றலோ பூக்களில் வசிக்கும்" வரிகளில் வரும் noise போல]
குறிப்பு: அரிது - இனிது "மிதிவண்டியும் மீளா நினைவும்"பகுதிகளின்  முடிவில்.

Sunday, October 16, 2011

4. பாடலும் பாடமும்...

சிறிய விஷயங்களில் பல சமயம் வினோதம் ஒளிந்திருக்கும். அப்படிப்பட்ட ஒன்று - UKG துவங்கி MCA வரை ஒவ்வொரு வகுப்பிலும் என்னுடன்  Ravi, Sujatha,Venkatesh என்ற பெயரில் மூன்று பேர்கள்  தொடர்ந்து படித்தது...இதில் ஆறாம் வகுப்பு annual exam துவங்கும் முன் இறுதி வாரத்தில் நிகழ்ந்த "இங்க் அடிக்கும்" சம்பவம்  - எனக்கு பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பையன்கள் முன்னிருக்கையில் இருந்த பெண்கள் மேல் ink அடிக்க நடுவில் அமர்ந்திருந்த நான் தான் தெளித்ததாக Sujatha எங்கள் class teacher Janaki teacher ரிடம் புகார் செய்தார். ஜானகி டீச்சர் எனக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை maths teacher மற்றும் class teacher. நீ செய்தாயா என்று கேட்காமல் "why are you behaving like this" என்று கேட்டு class வெளியே நிற்க சொல்லி விட்டார். அன்றும் அதற்கு அடுத்த நாளும் சரியான முகூர்த்த நாட்கள். மதுரையில் முகூர்த்த நாள் என்றால் சந்து பொந்தெங்கும் பாட்டு கேட்டு கொண்டிருக்கும்.
செய்யாத ஒன்றுக்கு இப்படி செய்து விட்டாரே என்ற ஆத்திரத்துடன் வீட்டுக்கு வரும் வழியில் ஏகப்பட்ட கல்யாண மண்டபங்கள். வசந்த நகர் அருகில் உள்ள ஒரு மண்டபத்திலிருந்து கேட்டது  "சிறை பறவை"யின் "ஆனந்தம் பொங்கிட". வழக்கமான violin bit  துடன் சேர்ந்து கலக்கும் வீணை bit டும் இந்த பாட்டின் special. இதைப்பாடிய Sunandha நிறைய பாடல்கள் பாடாமல் போனது ஏனோ? வீட்டுக்கு வந்த பின் எனது வழக்கமான
யதாஸ்தானமான மொட்டை மாடிக்கு சென்று படிக்கத்துவங்குகையில் பின்தெருவில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் "ஒலிபரப்பு" துவங்கியிருந்தார்கள்.
நம் மக்களின் ரசனையே அலாதி. கல்யாணத்திற்கு முன் தினம் மாலை 4 மணிக்கு பந்தலில் speaker கட்டும் போதே பக்கத்துக்கு வீடுகளில் இருக்கும் நமக்கு குஷி பிறக்கும்.  கடவுளை கவர  முதல் அரை மணி நேரம் "விநாயகனே வினை தீர்ப்பவனே" ["வேழம் என்றால் யானை என்று அறிந்து கொண்டது இந்த பாட்டினால்தான்] என்று ஆரம்பித்து ஒரே பக்தி ரசம். திடீரென்று அப்பொழுது வெளி வந்திருக்கும் latest படத்தின் அதிரடி பாட்டுடன் பக்தியை மூட்டை கட்டி பரவசத்திற்கு தாவுவார்கள். இந்த மாற்றம் பெரும்பாலும் காலை 6.30 க்கும் மாலை 5.30 க்கும் நடக்கும். புதுப்பாட்டு புளித்து போனபின் "medium" பழைய [வந்து 3-5 வருடங்களான] பாடல்கள் துவங்கும். "மனமகளே மனமகளே வா வா" கேட்கிறதென்றால் கல்யாணம் முடிந்தது என்று அர்த்தம். பிறகு "பழைய" பாடல்கள் துவங்கும். அப்படித்தான் அன்றும் - செய்யாத ஒன்றுக்கு வெளியில் நிப்பாட்டி வைத்தார்களே என்று மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கையில் "ராசாத்தி உன்ன" - வைதேகி காத்திருந்தாள், "மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்" - நானே ராஜா நானே மந்திரி[இந்த படத்தில் வரும் "தேகம் சிறகடிக்கும்" பாடல் இதை விட நன்றாக இருந்தும் hit இல்லை],"அழகாக சிரித்தது" - டிசம்பர் பூக்கள், "பூ முடித்து" - என் புருஷன் தான்  எனக்கு மட்டும்தான், "விழியே விளக்கொன்று" - தழுவாத கைகள், "பூவிலே மேடை" - [பகல் நிலவு] போன்ற பாடல்கள் Jayachandran ஐ எனக்கு அறிமுகம் செய்தன. இந்த பாடல்களை கேட்டுக்கொண்டே மாடியிலிருந்து கீழே வந்து "Bril" ink bottle ஐ எனது mickey mouse படம் போட்ட கறுப்பு கலர் bag இல் வைத்து விட்டேன். அடுத்த நாள் maths period வரை காத்திருந்து sujatha வின் முதுகில் அப்படியே ink bottle ஐ கவிழ்த்த பின்  ஒரு சந்தோஷம். இதுவரை அடித்தே பார்த்திராத janaki teacher என்ன தைரியம் இருந்தா பாத்தா சாது இருந்துட்டு திருப்பியும் இப்படி பண்ணுவ என்று ஓரடி scaleஆல் உள்ளங்கையில் அடித்தது இன்னும் நினைவில் வலிக்கிறது. அன்று கிட்டத்தட்ட அழும் நிலையில் பழங்காநத்தம் bus stop இல் 5ஆம் நம்பர் பஸ் பிடித்து வசந்த நகர் கடக்கையில் மீண்டும் "சிறை பறவை" - அதே மண்டபம், அதே பாட்டு ஆனால் வேறொரு திருமணத்திற்காக. 4 வருடம் கழித்து 10th TC வாங்கும் பொழுது school office ரூமில் ஜானகி teacherரிடம் "I didn't spray ink first day. You did not believe so I did next day" என்று சொன்னதும் அவர் "I know" என்று என் முதுகை தட்டிக்கொடுத்ததும் மறக்க முடியாதவை. ஜெய்ஹிந்திபுரம் பகுதியிலிருந்து தினமும் தன் அண்ணன் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து பள்ளிக்கு வரும் இவர் இப்பொழுது எங்கிருக்கிறாரோ? "ஆனந்தம் பொங்கிட" கேட்கும் பொழுதெல்லாம் 4 சுஜாதாக்கள், திருப்பரங்குன்றம் பெரியார் 5ஆம் நம்பர் பஸ், janaki teacher, கல்யாண மண்டபங்கள், அதில் ஒலிக்கும் பாடல்கள், வசந்த நகரில் வளையும் சாலை, என்று நினைவுகள் படர்வது நிரந்தரமானது.

அரிது - இனிது set 4:
இந்த பாடல்களை இன்று வரை திருப்தியாக record செய்ய முடியவில்லை. ஒன்று clarity இருப்பதில்லை அல்லது கிடைப்பதே இல்லை. இப்பொழுது 50 வயது நெருங்கும் அன்றைய இளம் வயதினர் இவற்றை ரசித்திருக்கக்கூடும். படத்தின் பெயர்களும் சரியாக நினைவில் இல்லை.

1. பெண் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே... 
2. மழை தருமோ என் மேகம்...[மனிதரில் இத்தனை நிறங்களா?]
3. தென்றலுக்கு என்றும் வயது...
4. பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு...
5. ஒரு சின்னப்பறவை அன்னையைத்தேடி.. [அன்னப்பறவை? ] 
   


Saturday, October 1, 2011

3. முதல் மழை

முதல் முறை நம்மை நனைத்த மழை நம் நினைவில் இல்லாமலிருக்கலாம். ஆனால் நம் நினைவில் இருக்கும் முதல் மழை நம்மை நிச்சயம் நனைத்திருக்கக்கூடும். "Gas Stove" இல்லாத நாட்கள் அவை. "Nutan" stove நிரப்ப மண்ணெண்ணெய் வாங்க செல்லும் அம்மாவின் கையையும் புடவைத்தலைப்பையும்  பிடித்து கொண்டு பல முறை ரேஷன் கடைக்கு சென்று வந்தது இன்னும் காட்சியாக ஞாபகம் இருக்கிறது. அத்தகைய ஒரு மத்தியானம் - பொசுக்கும் வெய்யிலுக்கு பெயர் போன மதுரையில் "எட்டு ஊருக்கு எத்தம் கூட்டியது" மழை. ஒரு கையில் kerosene டின் மறு கையில் நான் என நடந்த, நவாப்பழ  கலரில் மாங்காய் டிசைன் போட்ட நைலெக்ஸ்  புடவை கட்டிய அம்மாவை பிடித்த படி பெருமாள் கோயில் அருகில் வரும் போது வழக்கம் போல் கோயில் யானை கொட்டடியில் "நொண்டி யானை"யை [பெயருக்கு மன்னிக்கவும். அழைக்கும் பொழுது சங்கடமாக இருக்கும். ஆனால் இதுதான் அதன் வட்டாரப்பெயர்]  குளுப்பாட்டி கொண்டிருந்தார்கள். இந்த சற்றே கால் வளைந்த யானை சுமார்  15 வருடம்  என்னுடனே வளர்ந்து நான் B.Sc படிக்கும் போது இறந்தது. இதுவும் மீனாட்சி கோவிலின் "பெரிய யானை"யும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது உறவினர் போல வருடம் தோறும் சந்தித்து கொள்ளும். பெரிய யானையின் தும்பிக்கை முன் புறம், காது ஆகியவை பழுப்பு கலரில் brown புள்ளிகளுடன் இருக்கும்[சுமார் 50 வருடம் மீனாட்சி கோயிலில் இருந்து June 2001 ல் பெரிய யானை இறந்ததும் அதற்கு மதுரை மக்கள் கொடுத்த பிரியாவிடையும் தனிக்கதை]. எங்கள் பெருமாள் கோவில் யானைப்பாகன் பல முறை "நாம தப்புத்தண்டா பண்ணினாதான் யானை ஏதாவது பண்ணும் இல்லேனா ஒண்ணும் செய்யாது" என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். சிறியவர்களை விட நிறைய பெரியவர்கள் யானைக்கருகில் சென்றிட பயப்படுவதற்கும் பாகன் சொன்னதற்கும்  தொடர்பு இருக்குமோ?
 . யானை பார்க்கவென்றே கோயிலுக்கு போகும் எனக்கு, இன்றும் "திருப்புகழ் சபை" அருகில் இருக்கும் மிகப்பெரிய யானைக்கொட்டடியை [இங்கு 10 பைசா கொடுத்தால் யானை, ஒட்டகம், டும் டும்" மாடு ஆகிவற்றை அருகில் சென்று பார்க்கலாம்] கடக்கையில், அன்று  உயரமாக கம்பீரமாக நடந்து போகும் பெரிய யானையும் அதை பல முறை பல வகையில் பல நிகழ்வில் அம்மாவுடன் பார்த்து ரசித்ததும்  நினைவில் வரத்தவறுவதில்லை. அன்றைய மழைக்கு மீண்டும் வருவோம். "பாத்தது போதும். தினம்தானே இங்கயே உக்காந்து யானைய பாதுண்ட்ருக்க. மழை வருது ஜலதோஷம் பிடிக்கும்" என்று அக்கறையுடன்  திட்டியபடி வீட்டிற்கு இழுத்து கொண்டு போகையில் யானை கொட்டடிக்கு எதிரில் இருக்கும் 
tea  கடையில் ஒலித்தது "உறவுகள் தொடர்கதை". இந்த பாட்டு ஓரளவுக்கு  புரிவதற்கு ஒரு 20 வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் "உறவுகள் சிறுகதை உணர்வுகள் தொடர்கதை" என்றிருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்று தோன்றும்.
"உன் கண்ணிலோ ஈரம் என் நெஞ்சிலோ பாரம்" என்னும் simple வரி எந்த இரு மனிதருக்கிடையில் ஏற்படும் misunderstandingலும்  இந்த இரண்டில் ஏதோ ஒன்றில்தான் உணர்வு நிற்கும் என்பதை அழகுபடுத்துகிறது. "...வாழ்வென்பதோர்..." என்ற வரியின் முன்னால் வரும்  பத்து நொடி flute ல் கடைசி இரண்டு நொடி மற்றொரு வசீகரம்!

மழையும் காலமும் சேர்ந்து ஆடும் ஆட்டத்தில் நாம் அனைவரும் பெரும்பாலும் வெறும் பார்வையாளர்கள்தானே...  அம்மாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து விட்டு திரும்பும் பொழுது கொட்டித்தீர்த்த பெருமழையில்  மண்டபம் camp கடக்கையில்  ரோட்டோர கடையிலிருந்து ஒலித்தது இதே பாட்டு.
அம்மாவுடன் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நியூ சினிமா தியேட்டரில் பார்த்த "தாய் மூகாம்பிகை" - இதில் வரும் "ஜனனி ஜனனி" பாட்டில் வரும்  kollur இடங்களை 
2002 ல் அம்மாவுடனேயே நேரில் பார்த்தது, சாந்தி தியேட்டரில் அம்மாவுடன் பார்த்த "அலைகள் ஓய்வதில்லை" [ஒருவரின் விரலை இன்னொருவர் தொட்டால் shock அடிக்குமோ என்று பயப்பட வைத்த பாரதிராஜாவின் visuals...] , நான் வீட்டின் எந்த மாடியில் எந்த மூலையில் இருந்தாலும் அம்மா கூப்பிட்டு அனுப்பும் "செந்தாழம்பூவில்"...., சென்னை plaza தியேட்டரில் பார்த்த "பயணங்கள் முடிவதில்லை", கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள தியேட்டரில் பார்த்த "உதய கீதம்" [இவை பற்றி விரிவாக பின்னர்]
இவையும் இன்னும் பலவும் நினைவு விளக்கின் திரியை தூண்டி விட உதவும் எரிந்து முடிந்த தீக்குச்சிகள் போன்றவை.
சமீபத்தில் வந்த "பிச்சைப்பாத்திரம்" பாடலை வெகுவாக ரசித்த அம்மா  பூஜை புனஸ்காரங்களில் கொண்டிருந்த நம்பிக்கையும் அவரின்  நம்பிக்கைக்கு  ஆதாரமான கடவுள் கூட்டம் வெட்கி தலைகுனியும்படி நினைவு பிறழ்ந்து உருவம் குலைந்து  சிறிது சிறிதாய் சிதைந்து hospitalல் காலனுடன்  பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு "பிச்சைப்பாத்திரம்" பாட்டு கேட்க வேண்டும் என்று திடீரென்று ஏதேதோ முனகல்களுக்கிடையில் சொன்னதும்  அடுத்த நாள் வீட்டிலிருந்து mp3 player எடுத்து வருவதற்குள் நினைவு நிரந்தரமாக தப்பியதும் "வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்"  வரியின் வார்ப்பு.

சாதாரண பாடலுக்குள்ளும் "சரக்கு" இருக்கக்கூடும் என்பதை நிரூபிக்கும் அரிது - இனிது பகுதி 3:

1. காலை நேரக்காற்றே - பகவதிபுரம் ரயில்வே கேட்
2. கண்விழி என்பது - வளையல் சத்தம்
3. வண்ணம் வண்ணம் - பிரேம பாசம்
4. ஆனந்த தேன்காற்று - மணிப்பூர் மாமியார்
5. கோடி இன்பம் - நெஞ்சிலாடும் பூ ஒன்று