Thursday, November 22, 2012

29. இப்படியும் சில புதிய பாடல்கள்...


சமீபத்தில் ஒரு நீண்ட தூர பேருந்தில் இரவு நேர பயணம்...இப்பொழுதெல்லாம்,  a/c, a/c sleeper என பலவகை சொகுசு பேருந்துகள்  ஏகப்பட்டவை சர்வ சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்தாலும் இத்தகைய வசதியற்ற பேருந்தில் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு காற்றுக்கு தலையை கொடுத்தபடி பயணம் செய்யும் சுகம் தனி...அப்படிப்பட்ட பயணம் தான் அன்றைக்கு எனக்கு வாய்த்திருந்தது.

அற்புதமான speakers மற்றும் woofers அமைக்கப்பட்ட பேருந்து. இதன் வழியே 80கள் காதுக்குள் வழியாதா என்று எண்ணியபடி இருக்கையில் அமர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்னர் இசை என்பது அனுபவிக்கத்தக்க ஒன்றாக‌ இருந்தது. ஆனால் அந்த அனுபவத்தை மெருகேற்றும் ஒலிப்பேழைகள் அன்று இல்லை. இன்றோ ஒரு இசை கோர்வையின் ஒவ்வொரு இழையையும் நாம் பிரித்து ரசிக்கும் வண்ணம் வளர்ந்திருக்கிறது ஏராளமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள். ஆனால் தற்போது வெளிவரும் பாடல்களில் பெரும்பான்மையானவை, குப்பைத்தொட்டியில் குதித்த நாய், தன் கால்களால் கிளறி வெளியில் வீசும் குப்பை போல நாற்றமெடுக்கிறது. இது காலத்தின் முரண். நம் காதுகளுக்கும் முரண். இதை உறுதிப்படுத்தும் வகையில் பாடல் என்ற பெயரில் ஏதோ இரைந்து கொண்டிருந்தது.

என்னருகில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்து அமர்ந்தார். தலைக்கு மேலிருந்த இடத்தில் அவர் கொண்டு வந்த "கூட்டுறவு வங்கி" பை அமர்ந்து கொண்டது. அந்தப் பையின் கைப்பிடி அடைந்திருந்த தொய்வு, அவருடன் அது பல "பயணங்களில்" பல வருடங்கள் உடன் வந்திருக்கும் என்று காட்டியது. அல்லது வாழ்க்கையின் மீது அவரின் பிடி தொய்ந்ததை காட்டுவதாகவும் இருக்கலாம்...

நகரத்து நெரிசல் விலகி, வேகமெடுத்தது பேருந்து. ஆயிரக்கணக்கான மரங்களை கொன்று அதன் மேல் படுத்துக் கொண்டிருக்கும் நம் சுயநலத்தின் அடையாளமான நீண்ட நெடுஞ்சாலையை நம்முடனேயே பயணம் செய்து கண் சிமிட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தன நட்சத்திரங்கள். தொலைதூரத்தில் தெரிந்த கிராமத்து விளக்குகள் இரவின் உடம்பில் உருவான வெளிச்ச கொப்பளங்கள் போல வீங்குவதும் வெடிப்பதுமாக தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

ஒரு பாடல் முடிந்து சற்று நேர அமைதிக்குப் பின் ஒலிக்கத் துவங்கியது "உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்" [நான் / Vijay Antony / 2012] அடுத்த வரியிலேயே அதன் வசீகரம் இன்னும் கூடி "நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும்" என்று தொடர, சட்டென்று பாட்டில் ஒட்டிக் கொண்டது மனது. இரவின் வெளியில் நீந்திக் கொண்டிருக்கும் நினைவுகளை மண்ணில் விழும் மழை போல உறியத் துவங்கியது உள்ளம். மனதின் துவாரங்களில் இரவு எப்பொழுதுமே நினைவுகளை நிரப்ப முயன்று கொண்டே இருக்கிறது இல்லையா?

முதியவர் இந்த வரிகளை ரசிக்கிறார் என்பது, அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள் எனினும், அவரின் இருக்கை அசைவு என் இருக்கையை அசைக்கும் சுருதியில் தெரிந்தது. இந்தப் பாடலின் பல்லவி முடிகையில் "beat" அனைத்தும் நின்று விட, தனியே repeat ஆகும் முதல் வரி, பொட்டல் வெளியில் கொட்டும் இரவில் வானம் பார்த்தபடி மண்ணில் நகரும் நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போகிறது... இதே போன்று பாடல் முடிவிலும் ஒரு முறை வரும் என்று நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றம் அளிக்கிறார் இசையமைப்பாளர். இரண்டு சரணங்களையும் இவர் "close" செய்திருக்கும் விதம் நன்று.

இந்த பாடலிலும் நாம் பின்னர் பார்க்கப் போகும் "தினம் தினம் நான்" பாடலிலும் அத்தனை வரிகளிலும் வார்த்தைகள்! இதிலென்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றலாம்...ஆனால் அப்படித்தானே இன்றைய பாடல்கள் நம் எதிர்பார்ப்பை "இறக்கி" வைத்திருக்கின்றன?

நன்றாக இருக்கிறதே என்ற யோசனையை உடைத்து, "இரு, இந்த பாட்டையும் கேள்" என்பது போல ஆரம்பித்தது "தினம் தினம் நான்...". இந்த பாட்டின் அற்புதமான கமக்கங்கள் ஜன்னல் வழியே புகுந்து முகத்தை தழுவும் காற்றின் விரல்கள் நகர்வதை போன்ற‌ உணர்வு மயக்கம் கொடுத்துக் கொண்டிருந்தன.
அப்பொழுதுதான் அருகிருந்த முதியவரிடம் இருந்து அந்த ஒலி வெளிப்பட்டது. உணர்வின் ஒலியை ஒரு பதிவுக்குள் அடக்க வழியில்லையே... அடுத்த பதிவிலும் தொடர்வோம்...


Saturday, November 10, 2012

28. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 17

தீபாவளிக்கு முந்தைய இரவு எப்படிப்பட்டது? ஒவ்வொரு ஊரிலும் வீட்டிலும் வெவ்வேறு அனுபவங்களைத் தாங்கியதாக அது இருக்கும். மதுரையில் தீபாவளி இரவு என்பது "விளக்குத்தூண்" என்ற சொல்லின் அடையாளம் எனலாம். மதுரையில் வளர்ந்த அனைவருமே ஒரு முறையேனும், அந்த இரவில், நெட்டித் தள்ளும் மனித சமுத்திரத்தின் நடுவே விளக்குத்தூண் நோக்கி நடந்து போயிருப்பர்.

தீபாவளிக்கு முன் தினம் காலையிலிருந்தே நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாசி வீதிகளிலும், அவற்றின் குறுக்கே வெட்டிப் போகும் திண்டுக்கல் ரோடு,  town hall road போன்ற தெருக்களிலும் சாலை முழுவதும் கடைகள் முளைக்கும். குடை, குடம், சேலை என்று ஏதேதோ பொருட்கள் நினைக்க முடியாத‌ விலையில் கூவப்பட்டு ஆளை இழுக்கும். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் குவியத் துவங்குவர்.

மதியம் நடக்க முடிகின்ற அளவில் இருக்கும் கூட்டம், இரவு தொடங்கி, ஒவ்வொரு அடி முன்னேறுவதற்குள் மூச்சு முட்டும் அளவில் அதிகரிக்கும். சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் பூம்புகார் நகரத்தின் இந்திர விழா, இரவு நேரத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று தோன்றும்! இந்த இரவு "ரோந்து" முதன் முதலில் எனக்கு வாய்த்தது 1987ல்.

இரவு உணவு உண்டபின் சுமார் பத்து மணிக்கு துவங்கும் இந்த "சுற்று" விடிகாலை மூன்று மணியளவில் நிறைவுறும். "சிட்டி சினிமா" அருகில் மரத்தட்டிகளினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தெருவோர கடையொன்றில் "தாய்மார்களே..." என்று துவங்கி, ஒரு ஒலிபெருக்கி அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. இந்த "அழைப்பின்" இடையே, மீண்டும் மீண்டும் ஒரு இசை சில நொடிகள் வருவது போல "set" செய்திருந்தார்கள். அந்த இசைக்கு நடுவே மீண்டும் "தாய்மார்களே" என்று துவங்குவார். முப்பது ரூபாய் நாற்பது ரூபாய் என்று சேலைகளை ஒருவர் அலை போல வானத்தில் பறக்க விட, அந்த அறிவிப்புக்கு இடையே வந்த இசையின் உள்ளே இருந்த வயலின் சட்டென்று என்னைப் பிடித்துக் கொண்டது.

"மெல்ல மெல்ல" என்னும் பாடல் துவக்கத்தில் (வாழ்க்கை / 1984 / சுசீலா / ராஜ் சீதாராமன்) வருவதே அந்த வயலின்.வயலினை நம் வாய்க்குள் போட்டு சுவைக்க முடியுமா? இந்தப் பாட்டில் முடியும். இந்த வயலினை கேட்க கேட்க, அதன் நெளிவு சுளிவுகள் நம் நாக்கில் ஏறி உட்கார்ந்து கொள்ளும். பிறகு, நமக்கு பிடித்தமான மொழியில் பொருத்தமான எழுத்தை எடுத்து அதை நமக்குப் பிடித்தமான நினைவில் மடித்து, அந்த வயலினை, வார்த்தையாலேயே நாம் வாசிக்கலாம்! ஒரு "த" அல்லது "ன" அல்லது "ம்" எடுத்து, இந்த வயலின் ஓட்டத்திற்கு ஏற்றபடி சொல்லிப் பாருங்கள்...இதன் உதவியுடன், எத்தனை தொலைவையும் அலுப்பின்றி உற்சாகமாக‌ கடந்து சென்று கொண்டேயிருப்போம் நாம்!

"வெங்காய வெடி" மீது அந்நாட்களில் எனக்கு ஒரு கண். இந்த "மெல்ல மெல்ல" வயலினை வாயினால் வாசிக்க முயன்ற படி அந்த தீபாவளி இரவு முழுதும் வெங்காய வெடி கிடைக்கக் கூடிய குறிப்பிட்ட இடங்களில் வலம் வந்தோம். இறுதியாக, கீழவாசல் சந்திப்புக்கு முன்னர், இடது புறம் ஒரு இருட்டுச் சந்தில், சாக்குக்கு அடியிலிருந்து ஒரு "உறை" பையிலிருந்து அவர் எடுத்துக் கொடுத்த போது, இளையராஜா அங்கும் வந்து அந்த வயலினை மனதுக்குள் வாசித்துக் கொண்டிருந்தார்.

சுமார் பத்து வருடங்கள் கழித்து, மற்றுமொரு தீபாவளி இரவு..."உலா" போவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, சென்னை தொலைக்காட்சியில் இளையராஜாவின் குழுவில் இருந்த ஒருவரின் பேட்டி ஒலிபரப்பானது. அதை பார்த்து விட்டுக் கிளம்பலாம் என்று அமர்ந்திருந்தேன். பேட்டியின் இறுதியில், அவரை, பிடித்தமான ஒரு வயலின் bit வாசிக்கும்படி கேட்டார் கேள்வியாளர். "மெல்ல மெல்ல" பாட்டில் வரும் வயலின் எத்தனை கடினமானது என்று விளக்கிய அவர், தனக்கு மிகவும் பிடித்தமானது என்று  அதையே வாசிக்கத் துவங்க, நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள் திரையில் ஓடத்துவங்கின...

அதன் பின், அன்றைய இரவு நான் தீபாவளி உலா போன பாதையெங்கும், பத்து வருடத்திற்கு முந்தைய நினைவுகள், நிலா போல இரவு முழுதும் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது...மனதுக்குள் அந்த வயலினுடன்...

நினைவுகளை கோர்ப்பது காலத்தின் கயிறா? அல்லது கோர்க்கப்பட்ட நினைவுகளுக்கு காலம் என்று பெயரா?