Tuesday, September 20, 2011

2. பனி விழும் மலர் வனம்...

எங்கள் வீட்டுக்குள்ளேயே  3 ஆசிரியர்கள் (maths 2, chemistry 1) இருந்தும் அவர்கள் மெச்சும்படி நான் ஒரு முறை கூட mark வாங்கவில்லையே என்ற வருத்தம் இன்றும் எனக்கு உண்டு. அதிலும் கணக்கு மீது எனக்கு பிணக்கு. பரீட்சை அன்று காலை 100 வாங்கி விடுவோம் என்றும் எழுதி முடிக்கையில் 90 வந்து விடும் என்றும் வீட்டுக்கு வந்து பெரியப்பாவிடம் answer check செய்கையில் 80 ஆகி paper கைக்கு வரும் போது 70 இல் நிற்கும். வடிவேலு பாஷையில் "opening நல்லாத்தான் இருக்கு ஆனா உன்கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா..." என்றிருந்த என் நிலையை சரி செய்ய, பெரியப்பா என்னுடனேயே எழுந்து என்னுடனேயே தூங்கி என்று என்னவெல்லாமோ செய்து பார்த்தும் scooty இல் 60 க்கு மேல் போனால் வண்டி உதறுவது போல 70 க்கு மேல் போவதில் "ஞான உதறல்" இருந்தது!

அன்று இருட்டும் பொழுது...வாய்பாடுகள் வழக்கம் போல வில்லங்கம் செய்ய home work note [எனது மூத்த அண்ணன் கல்லூரி note book cover இல் bruce lee உடம்பில் பாம்பை சுற்றிக்கொண்டிருக்கும் enter the dragon பட அட்டை நன்றாக இருக்கும். internet போன்ற எந்த communication தொடர்பும் இல்லாத அந்த நாட்களில் எங்கோ இருந்த bruce lee மதுரையில் நோட் புக் அட்டையில் வரும் அளவு popular ஆனது எப்படி?] புரட்டி கொண்டிருந்த என் காதுக்கு வரண்டாவிலிருந்து வந்தது "பனி விழும் மலர் வனம்...". அப்பொழுதெல்லாம் "வயர் chair " பிரசித்தம். எங்கள் வீட்டில் வெள்ளை சிகப்பு, வெள்ளை பச்சை, வெள்ளை நீலம் என்ற color combinationல் chairகள் உண்டு. அதில் மேலிருந்த tapeல் ஒளிந்து கொண்டிருந்தது பல வருடங்கள் நாம் கேட்க ரெடியாக இருந்த "பனி விழும்...". பக்கத்திலேயே வெள்ளை நிற cassette cover "Shanth". "Coney", "TDK" போன்ற "மேல் தட்டு" cassette போல் அல்லாமல் 8 - 10 ரூபாய்க்கு கிடைத்ததாக சொன்னதாக ஞாபகம்.  இந்த பாட்டை தொடர்ந்து வரும் "நீதானே எந்தன் பொன் வசந்தம்" [அதில் வரும் 2nd stanza voilin  bit ] , அடுத்ததாக வரும் "ரோஜாவை தாலாட்டும்" காதல் பாட்டு என்றாலும், எல்லா உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும்    
thumb rule போன்ற "வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்" வரி என "நினைவெல்லாம் நித்யா" ஒரு நீண்ட கால நினைவு.

விடுமுறை நாட்களில் மதியம் வெள்ளை கலர் கை வண்டியில் அதன் மூடியை திறந்து மூடி சப்தம் செய்தபடி வரும் ஐஸ் வண்டிக்காரனிடம் அக்காக்களும் அண்ணன்களும் ஓடி  வாங்கி வரும் 10 பைசா பால் iceஐ  டம்ப்ளரில் போட்டு பாதி கடித்து மீதி உருகியபின் குடித்த கொண்டாட்டமான பொழுதுகளில் அறிமுகமான பாடல்கள்தான் எத்தனை எத்தனை!

1 . செவ்வானமே பொன்மேகமே [துவக்கத்தில் வரும் violin , 3rd stanza துவக்கத்தில் வரும் humming ] 2 . கண்ணன் ஒரு கைக்குழந்தை [பத்ரகாளி] 3 . பூப்போலே உன் புன்னகையில் [ கவரி மான்] 4 . நதியோரம் [அன்னை ஒரு ஆலயம்] 5 . நானொரு கோயில் [நெல்லிக்கனி] 6 . நானொரு பொன்னோவியம் கண்டேன் [கண்ணில் தெரியும் கதைகள்] 7 . குறிஞ்சி மலரில் [அழகே உன்னை ஆராதிக்கிறேன்] 8 . சமுத்ர ராஜகுமாரி [எங்கள் வாத்தியார்] 9 . சித்திர செவ்வானம் [காற்றினிலே வரும் கீதம்] 10 . சின்ன புறா ஒன்று [அன்பே சங்கீதா]........என்று நீண்டு கொண்டே போகிறது.....

இன்றும் மதுரை வீட்டில் மீதமிருக்கும் சில டம்ளர்களில் தண்ணீர் குடிக்கையில் வருடங்களையும் சேர்த்து விழுங்கி புரையேறும் பொழுது அது தற்செயலானது என்று தோணுவதில்லை [மற்றவர் நம்மை நினைத்தால் புரையேறும் என்றால் காலம் நம்மை நினைத்தாலோ காலத்தை நாம் நினைத்தாலோ புரையேறுதல் சாத்தியம்தானே?]. இன்று baskin-robbins போன்று பகட்டான பெயர்களில் பல வகை கலர்களில் கிடைக்கும் ஐஸ் கிரீம்கள் அந்த 10 பைசா பால் ஐஸ் நினைவின் சுவை தருமா?

"Coney "யில் பல வருடம் பேணிய "காதல் ஓவியம்" - இந்த படத்தின் பாட்டு வரிசை கிரமமாக மனதில் பதிந்தது போல் (a+b) whole cube forumla கூட பதியவில்லை. பூவில் வண்டு நுழைந்து பந்தம் ராக பந்தமாகி வெள்ளி சலங்கைகள் பூஜைக்காக வாடி அம்மா அழகே என்ற கீதத்தை நதியிலாடும் பூவனத்தில் குயில் கேட்க சொல்லி ஓயும் சங்கீத ஜாதி முல்லை வரை வாழ்க்கை முழுதும் ஞாபகமிருக்கும் வைரமுத்துவின் வரிகளை "food supplement"  போல் தின்ற வருடங்கள்...

"நதியிலாடும் பூவனம்" பாட்டில் வரும் "காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்" வரியில் எனக்கு அன்று ஒரு சந்தேகம். மதுரையில் பெரும்பாலான ஊர்வலங்கள் எங்கள் வீடு வழியேதான் போகும். "கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால்..." [என்னவாகும் என்றுதான் இன்று உலகத்துக்கே தெரியுமே] "பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருந்தவர் யார் " "நீங்க நல்ல இருக்கணும் நாடு முன்னேற" போன்ற பாடல்களுடன் சத்தமாக போகும் ஊர்வலங்களில் இந்த "தேவ ரோஜா" மட்டும் ஊர்வலம் போகவில்லையே என்றும் TPK சாலை தெரியும் அதென்ன "காமன் சாலை" என்றும் சந்தேகம். வருடங்கள் கழித்து இந்த வரிகள் புரிந்து பின் வயதாக வயதாக "எல்லா வித" ஊர்வலங்களிலும் அபத்தமே அதிகம் என்று தோன்றுகிறது.

 மழை வருவது போல் மேகம் இருக்க வேண்டும். காற்றில் மழை வாசம் வீச வேண்டும். ஆனால் மழை பெய்ய கூடாது. இத்தகைய சூழலில் மொட்டை மாடியில் பாயிலோ ஜமுக்காளத்தில்லோ வானம் பார்த்தபடி கீழ்க்கண்ட பாடல்கள் கேட்டால் பத்தாயிரம் செலவழித்து கேரளா aayurvedha massage எதற்கு?


அரிது - இனிது - பகுதி 2

1.தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்
2.மெட்டி ஒலி - மெட்டி
3.சாலையோரம் - பயணங்கள் முடிவதில்லை
4.பருவமே - நெஞ்சத்தை கிள்ளாதே
5.தாழம்பூவே - கை கொடுக்கும் கை
6.கண்மணியே - ஆறிலிருந்து அறுபது வரை
7.பூ வண்ணம் - அழியாத கோலங்கள் [salil choudri]
8.இதயம் போகுதே - புதிய வார்ப்புகள் [குறிப்பாக 2nd stanza இசை கோர்வை. இதில் வரும் 5 நொடி bitஐ  பிறகு பூவே பூச்சூடவாவில் "சின்ன குயில்" பாட்டில் அப்படியே reuse செய்திருப்பது ஏனோ இளையராஜா?]
9.ஆனந்த தாகம் - வா இந்த பக்கம்
10.புல்லாங்குழல் மொழி - பேரும் புகழும்


Sunday, September 11, 2011

1. நிழல்கள் - இது ஒரு பொன் மாலை.../ பூங்கதவே தாழ்திறவாய்...

கூட்டுக்குடும்பங்களின் இறுதி அத்தியாயம் துவங்கிய எழுபதுகளின் பிற்பகுதியில் பிறந்த என் போன்ற பலருக்கும் அந்த அத்தியாயத்தின் சில பக்கங்களை அர்த்தம் புரியாமல் புரட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கும். நான் அவ்வாறு புரட்டியது ஒரே வீடு தனி சமையல் என்னும் ஒரு விதமான கூட்டுக்குடும்பத்தின் பக்கங்களை...இது விஷிஷ்டாத்வைதம் போல விசித்திரமான கான்செப்ட். எது எதில் உள்ளது எதில் இல்லை என்பதில் அவ்வளவு தெளிவு இருக்காது. ஆனால் ஆனந்தமானது...

சிறியவர்களும் பெரியவர்களுமாய் 13 பேர் நிரம்பியிருந்த வீட்டின் முதன்மை  பொழுது போக்கு, கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டிருந்த "desk top monitor" அளவு இருக்கும் பளிங்கு நிற வால்வு ரேடியோ. வயர் கூடை designல் முன் பக்கம் முழுதும் ஓட்டைகளுடன்  on செய்தால் விரல் அளவு உள்ள பச்சை விளக்கு எரிய 10 நொடியும்  சத்தம் வர 10 நொடியும் ஆகும் இதை தொடுவதற்கே எனக்கு சில வருடங்கள் தேவைப்பட்டன. வீட்டின் பெரியவர்கள் சூடான காபி டம்ளரை நெற்றியில் உருட்டியபடி சரோஜ் நாராயண் சுவாமியை கேட்கும் பொழுது  தலைவலி தருபவை குடும்ப நடப்புகளா உலக நடப்புகளா என்று நமக்கு தெரியாத வயது. "சுழன்றும்  ஏர்பின்னது உலகம்" என்பதை நல்ல மெட்டுடன் பாடும் ஆண்குரல் பின்னர் பாக்டம்பாஸ் 20-20 ஐ எப்படி அதிக மகசூலுக்கு பயன்படுத்தலாம் என்று சொல்லிகொண்டிருக்கும் பொழுது திருச்சியில் இருக்கும் knob ஒரு முள் நகர்ந்து இலங்கையில் இறங்கினால் பெரும்பாலும் ஒலிப்பது "பொன் மாலை..." இன்றைய எரிச்சலூட்டும் டாப் 10 போல் அல்லாமல் இயற்கையான ரசனையுடன் [ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சர்வானந்தா, ஹப்துல் ஹமீது போன்றோரால்] தொகுத்து வழங்கப்படும் ஞாயிறு டாப் 10 நிகழ்ச்சியில் "பொன் மாலை பொழுது" நான் 1,2,3 வகுப்புகளின் "promoted" போஸ்ட் கார்டு வாங்கி 4 ஆம் வகுப்பு போன பின்பும் முதல் இடத்தில் தொடர்ந்தது. பின்னாளில் கல்லூரி நண்பர்களுடன் ooty 4th mile அருகில் உள்ள pine forestல் "வானம் எனக்கொரு போதி மரம்" கேட்ட நிமிடங்கள் சுஜாதாவின் தலைப்பு போல்  "ஏறக்குறைய சொர்க்கம்". ஆனால்  "விசால பார்வையால் விழுங்கு மக்களை" என்னும் பாரதிதாசன் வரியை ராஜசேகர் தப்பாக புரிந்து கொண்டாரோ என்ற  இன்று வரை எனக்கு சந்தேகம்தான்.
என் சகோதரர் 82-83'ல் டெல்லியிலிருந்து வாங்கி வந்த கெட்டியான கருப்பு உறை போட்ட tape recorder, 87'ல் அப்பா வாங்கிய கிரீம் கலர் national panasonic 2-in-1, 93'ல் மேல மாசி வீதியில் வாங்கிய 16w pmpo philips, 00'ல் domlur modern electricalsல் வாங்கிய 32w pmpo philips '01ல் tokyo akhiabaraவில் வாங்கிய சோனி walkman, '06ல் toronto searsல் வாங்கிய philips mp3 player என அனைத்திலுமே தேடிப்பிடித்து முதலில் கேட்டது பொன் மாலையும் இளைய நிலாவும்தான்.

முழு வீட்டிற்க்கும் சில கதவுகளே பார்த்து பார்த்து பழக்கப்பட்டு, இரண்டு பேருக்கு எதற்கு இதனை கதவுகள் திறக்கிறார்கள் என்ற சந்தேகம் முளைத்த குழந்தை வயதில் ஆசிரியையின் கண்டிப்புடன் குழைவும் சேர்ந்து வரும் உமா ரமணனின்   குரல் மெதுவாக மனதில் பதிந்தது "பூங்கதவே"வில்தான் [ இதில் வரும் நாதஸ்வரம் பிறகு புரட்சிக்காரன் என்னும் வறட்சியான படத்தில் "ஒற்றை பார்வையிலே" என்னும் அற்புதமான பாடலில் தவில் base வைத்து பாடல் முழுதும் வருடி விட்டிருந்தார் இளையராஜா]. உமாவின்  பாடல்களை ரசிக்கும் வயது வரும் பொழுது அவர் பாடுவதை நிறுத்தியிருந்தார். பெங்களூர்இல் வேலைக்கு சேர்ந்த பின்பு ஒரு முறை மதுரை செல்வதற்காக kalasipalyam KPN ல்    அமர்ந்திருந்த பொழுது குப்பைகளுக்கு நடுவில் திடீரென்று "மீட்டாத ஒரு வீணை" என்னும் பாட்டு துவங்க, என்னடா இது இந்த பாட்டை எப்படி விட்டோம் என்று யோசித்து டிரைவரிடம் CD cover கேட்க அவர் ஏற இறங்க பார்த்தபடி கொடுத்தார் - "பூந்தோட்டம்" என்னும் புது படம்! அதற்கு பின் அவரின் குரல் இன்று வரை புதியதாய் வரவில்லை.

நம் ஊர் தொலைகாட்சிகளில் வரும் ராசிக்கல் ஜோசியர்கள் சொல்லும் பலன் போல் இல்லாமல் கீழ்காணும் பாடல்களை ஞாயிறு இரவு நிலவும் அவசரமற்ற அமைதியில் கேட்டால் விசேஷ நிம்மதி கிட்டும்!

அரிது - இனிது - பகுதி 1

பாடல் - படம்

1 . எங்கெங்கோ செல்லும் - பட்டகத்தி பைரவன்
2. பூந்தென்றல் காற்றே - மஞ்சள் நிலா 
3. சிந்து நதிக்கரை - நல்லொதொரு குடும்பம்
4. மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை
5. அதிகாலை நேரமே - மீண்டும் ஒரு காதல் கதைFriday, September 9, 2011

அறிமுகம்

இசை பொதுவெனினும் அதை நம் வாழ்க்கையின் தனிப்பட்ட நொடிகளுக்குள் பத்திரப்படுத்தும் பொழுது அதில் கிடைக்கும் உணர்வுகள்  அலாதியானது. அவரவர்க்கு உரியது. கால வெளியில் சுற்றித்திரிய உதவும் கருவியாகவும் ஞாபக மரங்களின் அனுபவ நிழல்களில் இளைப்பாறவும் இசையின் விழுதுகள் நம்மை சுற்றிப்படரும் பொழுது சாத்தியமாகிறது.

மதுரையில் மலர்ந்த பெரும்பாலோர் தங்களை அறியாமலே காதுகளை பாடல்களுக்கு திறந்து வைத்தபடியே வளர்ந்தவர்கள். அம்மனுக்கு கூழ் ஊற்றுவதில் துவங்கி ஆளை அடக்கம் செய்வது வரை அதிகாலை துவங்கி அர்த்த ஜாமம் வரை நகரில் ("பெரிய கிராமத்தில்")  எதற்கோ எவர்க்கோ ஏதோ ஒரு பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கும். வசதியை பொறுத்து பச்சை நிற குழாய் ஒலிப்பெருக்கியோ கருப்பு நிற "பாக்ஸ் ஸ்பீக்கர்"ஒ...

இன்றைய அர்த்தமின்மை நேற்றைய அர்த்தத்தை இன்னும் ஆழமாக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் இன்றைய சத்தமிக்க அர்த்தமற்ற பாடல்கள் அன்றைய பாடல்களின் மகத்துவத்தை மேலும் மெருகூட்ட உதவுகிறது.

நம்மில் சிலருக்கு மட்டுமே சிறப்பான உணவை சமைக்க தெரியும். ஆனால் நிறைய பேருக்கு சிறப்பான உணவை ரசித்து உண்ணத்தெரியும். அதுபோல, சிறப்பான பாடலை தயாரிக்க ராகம், தாளம் போன்ற நுட்பமான ஞானம் வேண்டியிருப்பினும் அப்பாடல்களை ரசித்து உண்ண அதை உள்வாங்கி அனுபவிக்கும் உணர்வு போதும். இப்பகுதியும் அத்தகைய உணர்வின் அடிப்படையிலானதே...

இப்பகுதியில் பகிர்ந்து கொள்ளப்படும் பாடல்கள் மூலம் நீங்கள் தங்கிய ஏதோ ஒரு காலத்தை நீங்களே நினைவில் மீட்டெடுக்க முடியுமானால் அதுவே "பாடல் கேட்ட கதை"யின் கரு.