Sunday, October 28, 2012

27. நீதானே என் பொன் வசந்தம் - இளையராஜா என்ன செய்தார்?


இளையராஜாவின் இசை விரும்பிகள் இப்போது சந்தித்து கொண்டால், அவர்கள் உரையாடலில் தவறாமல் இடம்பெறுவது, "நீதானே என் பொன் வசந்தம்" பாடல்கள் கேட்டாயா?" என்பது தான். அதிலும், நாற்பது வயது கடந்தவர்கள் இந்த கேள்வியை கேட்கும் பொழுது அவர்களின் கண்களை உற்றுப் பார்த்தால், அதில், கடந்த காலம் கொப்பளித்துக் கொண்டிருப்பது தெரியும்.

எனது ஒலிப்பேழையின் உள்ளே இந்தப் பாடல்களை தேக்கிய பின்னும் கேட்பதற்கான சரியான காலத்திற்காக சில வாரங்களாக காத்திருந்தேன்... ஏனென்றால், "நீதானே எந்தன் பொன் வசந்தம்" என்னும் "வரி"க்குதிரை லேசாக அதன் கால்களால் நம்மைத் தட்டினால் நாம் முப்பது ஆண்டுகள் முன்னர் போய் விழுவோம். நினைவெல்லாம் நித்யா, 80கள், நம் பால்யம் என்று நூல் பிடித்து நாம் எங்கோ திரியத் துவங்குவதற்கான வசதி இந்த வரியின் அடியில் ஒளிந்துள்ளது. எனவே, இதை தனித் திரியாக பிரித்து, பின்னர், புதிதாக வந்திருக்கும் பாடல்களை கேட்கும் அனுபவம் பெற‌ வேண்டும்.

சென்ற வாரம் மதுரைக்கு போகும் சந்தர்ப்பம். மழை பெய்த மதுரை இரவில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உலவும் வாய்ப்பு. பள்ளியில் படிக்கையில், "நினைவெல்லாம் நித்யா" நாட்களில், தினசரி மாலை, பெரும்பாலும் அம்மாவின் வாசம் நிறைந்த தேநீருடனும் "பனி விழும் மலர் வனம்" முடிந்து "நீதானே எந்தன்..." பாடல்களுடனும் இதே மொட்டை மாடியில் "home work" செய்யத் துவங்கிய வருடங்கள் நினைவில் எழ, ஒலிப்பேழையை ஓட விட்டேன். வெல்லத்தை கலத்தில் கொட்டி, கொதிக்க கொதிக்க, பாதி ஆவியாகி அடியில் பாகு கெட்டிப்பது போல ஆழமற்ற‌ பாடல்கள் முதல் கேட்பிலேயே ஆவியாக‌, மீதமிருந்தது "முதல் முறை" மற்றும் "சற்று முன்பு" பாடல்களின் வெல்லப்பாகு...

"முதல் முறை பார்த்த ஞாபகம்" பாடலில் சில அற்புதங்கள் இருக்கின்றன. எத்தனை நாட்கள் ஆகி விட்டன இது போன்ற "கனமான" வயலின் கோர்வையை காதுக்குள் ஊற்றி...

நம் உடலில் காயம் ஏற்பட்டால் அது காய்ந்து பொருக்காக மாறும். அந்த பொருக்கை விரலால் தடவுகையில் ஒரு வித நெருடல் தோன்றும். இதுவே, மனதில் விழுந்த நினைவின் பொருக்காக இருந்தால்? அதைத் தடவிப் பார்ப்பது எப்படி? அதைத் தான் இந்தப் பாடல் முழுவதும் இளையராஜாவின் violin நமக்குத் தருகிறது.

நம்மூரில் ஊர்களுக்கிடையே பயணம் செல்கையிலே சாலையோரம் இருக்கும் முள் மரங்கள் சில சமயம் நம்மேல் சட்டென்று கீறி விட்டு பின்னோக்கி ஓடி விடும். அந்தக் கீறல் ஒரு நொடி தான். ஆனால் அது நீண்ட நேரம் "எரியும்". அது போல, இந்தப் பாட்டின் சரணங்களில் ஆங்காங்கே வரும் அந்த violin ஒற்றை கீறல்க‌ள்!

"காற்றை கொஞ்சம்" பாடல் முழுவதும், பழைய இளையராஜாவின் வயலின் பாட்டுக்கு அடியில் ஓடுவது, மனதுக்கு இதம் அளிக்கிறது...

இனி சில ஏமாற்றங்கள்:

(i)இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு அடியில் நம்மை இறங்க வைத்த அந்த அற்புதமான தபேலா எங்கே? ஒரு இடத்தில் கூட தென்படவில்லையே? "இது இளையராஜா பாடல்" என்று இனம் காண வைத்த அந்த "bass guitar" எங்கே தேய்ந்து போனது?

(ii)பாட‌க‌ர்க‌ளுக்கு ப‌ஞ்ச‌மா? லயத்திலும் உச்சரிப்பிலும் நம்மை ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு ப‌ல‌ மைல் தொலைவில் இருக்கிறார்க‌ளே... அதிலும் "சாய்ந்து சாய்ந்து" பாட‌லின் த‌ர‌ம் அதைப் பாடிய‌வ‌ர்க‌ளால் பாதாள‌த்தில் சாய்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தே..."தேங்கிப் போன..." [ "சற்று முன்பு" பாடல்] வரிகளுக்காக மட்டும் ரம்யாவிற்கு ஒரு சபாஷ்.


(iii)ஒரு தலைமுறை, வருடக்கணக்கில் முணுமுணுத்த வரி தானே படத்தின் பெயராய் வைக்கப்பட்டிருக்கிறது...பிறகு ஏன் "எந்தன்" விடுத்து "என்"?
இளைய தமிழ் தலைமுறைக்கு "எந்தன்" என்பதன் அர்த்தம் தெரியாது, அதனால் "reach" குறைந்து விடும் என்ற அவநம்பிக்கையா?

(iv)இளையராஜாவின் ப‌ல‌ பாட‌ல்க‌ள், ந‌தியின் அடியில் த‌ங்கி விடும் கூழாங்க‌ற்க‌ள் போல‌ ந‌ம் நினைவில் நீண்ட‌ கால‌ம் ப‌டிந்து விடுப‌வை. ஆனால் "நீதானே என் பொன் வ‌ச‌ந்த‌ம்" பாட‌ல்க‌ள், ந‌ம் நினைவுக‌ளில் தேங்கும் அள‌வு ந‌ம‌க்குள் இற‌ங்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே...

Friday, October 12, 2012

26. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 16


கதைகளிலும் பாடல்களிலும் மட்டுமே தன் வடிவை காட்டி, கற்பனைகளில் மட்டுமே அதன் அழகு பற்றிய சிந்தனையை ஊட்டி வருடங்களை கடத்திக் கொண்டிருந்த காவிரியை உடம்பில் ஊற்றி உள்ளத்தில் ஏற்றும் சந்தர்ப்பம் 1991 ஆண்டு வாய்த்தது.

நதி என்பது எத்தனை அதிசயங்களை தன்னுள் வைத்திருக்கிறது!ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு விதம். அவற்றில் ஓடும் நீரின் தன்மை வேறு. அத்தகைய நீர் நிற்கும் மண்ணின் அமைப்பு வேறு. அந்த மண் மேல் வாழும் உயிர்களின் பண்பு வேறு. நதியின் அதிசயங்கள் பூமிக்கு அவசியம். நதிக்கும் உயிர் உண்டு. அதனுடன் நமக்கு உறவு உண்டு. அதனால் தான் நாம் நீராடும் வெவ்வேறு நதிகள் வெவ்வேறு உணர்வுகளை, நினைவுகளை நமக்குக் கொடுத்துப் போகிறதோ? "நான் தாமிரபரணி தண்ணீர் குடித்து வளர்ந்தவன்", "எனக்குள் காவிரி ஓடுகிறது" என்று நாம் சொல்கிற போதே, மனது முழுதும் ஒரு சுவை ஓடுகிறதே...நம்மை நதியின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா அல்லது நதியை காலத்தின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா?

எந்த ஊருக்குச் செல்வதாக இருந்தாலும், எனக்கு எழும் முதல் சிந்தனை, அந்த ஊரில் கடலோ நதியோ மலையோ இருக்கிறதா என்பது தான். 1991 வருடம் குடியரசு தினத்திற்கு முந்தைய நாட்களில் என் உறவினர் ஒருவரின் திருமணம் ஸ்ரீரங்க‌ம் ஊரில் நடந்தது. அந்த திருமண அறிவிப்பு வந்தது முதற்கொண்டு, காவிரியில் குளித்தாக வேண்டும் என்ற ஆவல், பாலில் கொட்டிய அவல் போல மனதில் குழைய‌த் துவங்கியிருந்தது. Srirangam கோபுர வாயிலுக்கு போகும் தெருவில்,கோபுரத்திற்கு நேரெதிர் திசையில் நடந்தால், வலப்புறம் வரும் "ராகவேந்திர மடம்" கடந்து, இடது புறம், ரயில்வே தண்டவாளத்திற்கு ஒட்டியவாறு இருந்தது அந்த திருமண மண்டபம்.

கல்யாணம் முழுவதும் காவிரியை நினைத்தபடி திரிந்தேன் நான். திருமண தினத்தன்று மதியம், எனது "பிடுங்கல்" தாங்காமல், உறவினர் கூட்டமொன்று எவரெவரிடமோ வாங்கிய சைக்கிள்களில் என்னையும் ஏற்றிக் கொண்டு பெயர் தெரியா வீதிகளில்... தென்னந்தோப்புகளின் இடையே மெலிந்திருக்கும் மண் சாலைகளின் வழியே... எனச் சுற்றி, ஒரு படித்துறையில் இறங்கியது. காவிரியில் என் முதல் குளியல்! தலைமுடிகளின் பல நுனிகளில் காவிரியின் குமிழ்கள் கண்சிமிட்டியபடி என்னுடன் வர, காவிரியில் குளித்த மகிழ்ச்சியின் வடிவம் எப்படியிருக்கும் என்று பார்ப்பதற்காக அந்த பெருநதியின் சிறு குமிழ்களில் ஒன்றை உருவி விரல்களில் வைத்துப் பார்த்திருக்கிறேன்..பாதி காய்ந்த தலையுடன் திரும்பி வரும் வழியில் தென்பட்ட "பெட்டிக் கடை" ஒன்றில் "கலர்" குடிக்கையில் மனதில் வாசமேற்றத் துவங்கியது "திருச்சி வானொலியில்" பூத்த "தாழம்பூவே வாசம் வீசு" [கை கொடுக்கும் கை / SPB - Janaki / 1984 / ].

நம் நெஞ்சின் மீது பாறாங்கல்லை தூக்கி வைப்பதற்கு இளையராஜாவின் கைகளில் இருக்கும் எடையற்ற‌ வயலின் bow ஒன்று போதும். இந்தப் பாடலின் "பேசும் போது..." மற்றும் "நீரும் போனா..." ஆகிய இரண்டு இடங்களில் நம் மன வயலில் இறங்கும் வயலின், உழுது உழுது, நீண்டு வளைந்து, ஏறி இறங்கி விதைக்கும் இனம் புரியாத பாரத்தின் விளைச்சலை காலத்தின் பயிர் எனலாமோ?

அன்று இரவு, மாடியில், தென்னை மரங்களை பார்த்த வாக்கில் படுக்கை. நிலவின் கீற்று தென்னங் கீற்றுகளில் முகம் பார்த்துக் கொண்டிருக்க, எத்தனை முறை என்னுடன் புரண்டது அந்த இரண்டு சரணங்களின் இடைவிடாத வயலின்!


இப்பொழுது என்னை ஸ்ரீரங்கம் கொண்டு போய் விட்டாலும், அந்த ஊர் அடையாளம் தெரியாமல் மாற்றம் கண்டிருந்தாலும், காலத்தின் முதுகில் ஏறிக்கொண்டால் அதே படித்துறைக்கு அது என்னை இட்டுச் சென்று விடும் என்று திடமாக நம்புகிறேன்.

காவிரி மட்டுமா? கால நதி புரண்டோடும் வழியெங்கும் மீதமிருப்பது நினைவின் படித்துறைகள் தானே?