Sunday, July 20, 2014

40. அந்த இரவு...

அந்த இரவு குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று சில நண்பர்களும் நன்றாக இருக்காது என்று வேறு சில நண்பர்களும் வெவ்வேறு எண்ணங்களில் இருந்தனர். கல்லூரியில் புதிதாய் சேர்ந்திருந்த‌ நாட்கள் அவை...

அந்த நாளும் வந்தது. மாலையில் நண்பர்கள் குழுவுடன் காந்தி மியூசியத்திற்குள் நுழைந்து மைதான சிமிண்ட் படிகளில் அமர்வதற்கும் வானில் நட்சத்திரங்கள் மின்னுவதற்கும் சரியாக இருந்தது. நல்ல கூட்டம். மேடையில் இசைக்குழு சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. இளையராஜாவுக்கு மட்டுமே இணங்க, இழைய, குழைய பழக்கப்பட்டிருந்த மனதை TMS சுசீலாவின் பழைய பாடல்கள் கச்சேரிக்கு அழைத்து வந்து அமர்த்தியிருந்தேன்....

ஒரு சில அர்த்தமுள்ள வரிகள், நல்ல பாடல்கள், இடையே அவர்கள் இருவரும் ஓய்வெடுக்கும் வேளையில் ஏதேதோ பாடல்கள் என மணி பதினொன்றை தாண்டியிருந்தது. ஆடிக்காற்று காந்தி மீயூசிய மரங்களில் இருந்து இலைகளை மைதானம் எங்கும் வீசியபடி உலா வந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான், அதன்பின் வருடக்கணக்கில் இரவுகளில் திடீரென்று காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும் அந்த ஏகாந்த நொடிக்கரைசலின் ஒலிப்பிம்பத்தின் மூலமான‌  "தேவன் வந்தாண்டி..." [உத்தமன் / 1976 /  KV Mahadevan / TMS - சுசீலா] என்றொரு மயக்கமூட்டும் குரல் மேலெழும்பி காற்றில் நகரும் இலைகள் போல மைதானம் எங்கும் பரவியது. சிறுசிறு பேச்சொலிகள் அடங்க, "தீபம் கொண்டாடி" என்று ஒலியின் மீதொரு ஒளி ஏறியது... மயிலிறகின் நுனிகளில் தென்றலை ஏந்தி நம் மீது தொட்டு தொட்டு வைத்துப் போவது போன்ற குரல். துவக்கத்திலேயே, இந்த இரண்டு வரிகளும் புடலை கொடியிலேறி படர்வது போல நம் மனதில் வளைந்து வளைந்து சுற்றி ஏறும்... அது மட்டுமல்ல. கண்ணதாசன் "டி"யை வைத்தே நம்மை ராட்டினம் ஏற்றப் போகிறார் என்பதும் தெரிந்து விடும்.

இந்த பாடலில் மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் இசை சற்றே இரைச்சலாக‌ இருப்பது போலக் கூடத் தோன்றும். "தேவன் வந்தாண்டி தீபம் கொண்டாடி" என்ற ஒற்றை வரியில் சுசீலா நம்மை எத்தனை நெளிவு சுளிவுகளுக்குள் தோய்த்து எடுக்கிறார் என்பதே இந்த பாடலின் அற்புதம். அதுவும் இரண்டாம் ஸ்டான்ஸா முடிந்த பின் திரும்ப வரும் பல்லவியில் அவர் தீபத்தில் உள்ள "தீ"யை இழுத்து  சுருக்கி "கொண்டாடி"யை நீட்டும் லயம் ஒரு மந்திரவாதி புதிதாக ஒரு ஸ்வரத்தை உண்டாக்கி நம் காதுகளில் ஊற்றும் அற்புத அனுபவம். ஐந்தே நொடிகளில் அவர் நிகழ்த்திக் காட்டும் அந்த சாகசம்...கேட்கும் பொழுதெல்லாம் பரவசம்...

பாடல் முடிந்தது. அனைவரும் அடுத்த பாடலுக்கு தயாராயினர். முன் வரிசைகளில் சலசலப்பு. சுசீலா புன்னகையுடன் வயலின் குழவை நோக்கி கையசைத்தார். அனைத்து வாசிப்பு கருவிகளும் சைலண்ட் ஆக வயலின் வாசிப்பவர்கள் மட்டும் தயார் நிலைக்கு வந்தனர். "தேவன் வந்தாண்டி" என்று பல்லவியை மீண்டும் பாடத்துவங்கினார். வயலின் மட்டும் மலரின் மீது வழியும் பனியின் துளி போல அவரின் குரலை பின் தொடர்ந்தது.
அந்த நிசப்தமான இரவில் சொர்க்கத்தின் முகவரியை காட்டி விட்டு அமர்ந்தார் சுசீலா. நினைப்பேதுமின்றி இசையின் அணைப்பே முனைப்பாக இருத்தல் மனதுக்கு சொர்க்கம் தானே?

நள்ளிரவு கடந்த பின் தமுக்கம் ரோட்டில் நடந்து கொண்டிருந்தோம். "தேவன் வந்தாண்டி"யின் மகிழ்ச்சியில் எத்தனை தொலைவும் நடக்கலாம் போலிருந்தது...காந்தி மியூசியத்திலிருந்து வைகை மேம்பாலம் வருவதற்குள் எத்தனை முறை ஏற்ற இறக்கங்களுடன் அந்த "தீபம் கொண்டாடி"யை பாடிப் பார்த்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது...அந்த வரியின் லாவகம் ஒரு ஒப்பற்ற குரல் தந்த சங்கதியின் உயிர்ப்பின் ரகசியம் போலத் தோன்றியது. வாகனங்கள் ஏதுமற்ற வைகை பாலத்தின் மீது நடக்கத் துவங்கினோம்...ஆற்றின் வாசனையை அள்ளி வந்து முகத்தில் அடித்தது காற்று...வைகையில் நீரோடிய வருடம் அது. பாலத்தின் சுவரில் சாய்ந்து கீழே ஓடிய நீரில் மின்னும் ஒளித்திவலைகளை பார்த்தபடி நின்றிருந்தோம்...எங்கிருந்தோ "தீபம் கொண்டாடி" என்று கேட்பது போல இருந்தது. ஒரு முறை வெளியேறிய உணர்வின் அலை எப்போதும் கால வெளியில் நீந்திக் கொண்டுதானே இருக்க வேண்டும்? அந்த இரவின் நொடிகளை, நிசப்தத்தை, வைகையில் ஜொலித்த நீர் இழைகளை, ஒன்றுக்குள் ஒன்றாய் கோர்த்து மனதின் ஓரமாய் நினைவின் வாசம் வீசும் மலரின் ஆரமாய் தோன்றிய பொழுதெல்லாம் பூத்தபடி இருக்கிறது "தேவன் வந்தாண்டி".