Sunday, November 23, 2014

41. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 24

உடல் மட்டுமல்லாது மனதின் அடி முதல் நுனி வரை சில்லிடச் செய்யும் பனி விழும் இரவின் துவக்கத்தில் நண்பர்கள் குழுவுடன் ஊட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன் நான்...கோவைக்குச் செல்லும் இறுதிப் பேருந்து கிளம்புவதற்கு சற்று நேரமிருந்தது. வாயைத் திறந்து ஊதினாலே பனி பல வடிவமெடுத்து நம்முன் நடனமாடுவது போல நகர்ந்து போகும் அழகை பார்த்து வியந்து கொண்டிருந்தோம்...

அரசு பேருந்துக்கே உரிய அரைகுரையாக இயங்கும் ஷட்டர்களின் வழியே ஊடுருவிய பனிக்காற்றில் பேருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே ஸ்வெட்டர்கள் தாண்டி நாங்கள் சில்லிட்டுப் போயிருந்தோம்...வண்டியில் லைட் வெளிச்சத்தில் பனி படர்ந்த மரங்கள் அடர்ந்த மலைப்பாதை உருகிய மெழுகால் உருவாக்கப்பட்ட ஓவியம் போல இருந்தது...

குளிர் குறைந்ததாக உணர்ந்த போது நள்ளிரவுக்கு அருகில் எங்களை கோயமுத்தூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு ஷெட்டுக்கு போய் விட்டிருந்தது அந்த பேருந்து. அஞ்சு மணிக்குத்தான் மதுரைக்கு முதல் பஸ் என்று தெரிந்து வாயிலுக்கு அருகிலேயே இருந்த நடைபாதையில் அமர்ந்து கொண்டோம். அவ்வாறே இன்னும் சில பயணிகளும் ஆங்காங்கே நின்றும் அமர்ந்தும் அன்றையே இரவின் மறுபகுதியை கடக்க ஆயத்தமாயிருந்தனர்.

இருவர் தூங்க நால்வர் விழித்திருக்க அனைவருக்கும் ஒரு மணி நேரத் தூக்கம் என்ற திட்டத்துடன் அனைவரும் தூங்கி விழித்த போது பேருந்து நிறுத்த வாசலுக்குப் பக்கத்திலிருந்து வந்த ஊதுவத்தி மணமும் பாய்லர் சத்தமும் அதிகாலை நான்கைத் தாண்டியதை அறிவித்தது. அனைவரும் டீ வேண்டி அடுத்த நிமிடம் அக்கடை முன் இருந்தோம். டீக்கடைக் காரர் பத்து நிமிடம் ஆகுமென்றபடி அன்றைய கடைக்கான அன்றாட ஆயத்தங்களை செய்யத் துவங்கினார். திருநீறு நிரம்பிய நெற்றியும் தொப்பைக்குப் பொருந்தாத கலர் பனியனுமாய் அவர் அங்குமிங்கும் கடைக்குள் அலைவதை டீக்கான ஆவலுடன் பார்த்திருந்தோம்...

"மதுரையா?" என்றார் டீக்கடைக்காரர் எங்களிடம். நாம் பேசும் வார்த்தைகளையும் உச்சரிப்பையும் வைத்தே நம் ஊரை எவரேனும் கண்டுபிடிக்கும் போது ஒரு வித மகிழ்ச்சி மனதில் ஏற்படும். "ஆமா" என்று வெளிப்பட்ட அந்த மகிழ்ச்சியில் சேர்வது போல, "நானும் மதுரைதான் ஓடின ஓட்டத்துல கோயமுத்தூருக்கு வந்து நின்னாச்சு" என்று அசால்டாக ஒரு தத்துவத்தை போகிற போக்கில் சொல்லி விட்டு வேலையைத் தொடர்ந்தார்...

பொதுவாக டீக்கடைகளில் முதலில் ஏதேனும் பக்தி பாடல்கள் தான் போடுவார்கள். கடவுள் மீது பற்றா அல்லது வியாபாரம் பற்றியா கவலையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால் நாங்கள் நின்று கொண்டிருந்த டீக்கடையிலிருந்து, நெற்றியில் பட்டையுடன் இருந்தவரிடமிருந்து அந்த அதிகாலை வேளையில் "கும் கும்" என்று காதுக்குள் இடிப்பது போன்ற கிடார் சத்தத்துடன் ஒரு பாடல் [உன்னை வாழ்த்தி பாடுகிறேன் / 1991 / ஜேசுதாஸ் / ஜானகி] "ஒரு ராகம் தராத வீணை" என்று கிளம்பியதை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அமைதியாக இருந்த அந்த சூழலில், காற்றில் நடந்து வரத்துவங்கியது ஜானகியின் ஹம்மிங். பொழுதின் தொட்டிலில் நம்மை போட்டு தாலாட்டுவது போல இருந்தது அது. மிகவும் வித்தியாசமாக, மிக அதிகமாக "bass" வைத்தது போல, அந்தப் பாடல் கடையிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது. பால் கொதிப்பதை அறிந்த நாங்கள் அருகில் சென்று நின்று கொண்டோம்.

கடை கூரையின் நான்கு மூலைகளிலும் பானை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் இருந்துதான் அந்த "கும் கும்" வந்து கொண்டிருந்தது. நாங்கள் பானையை பார்த்தபடி இருந்ததை பார்த்த கடைக்காரர், "ஸ்பீக்கர்தான்... பானைக்குள்ள வச்சிருக்கேன் என்றார்". பானைக்குள் ஸ்பீக்கர் வச்சு கேட்டா பாட்டே வேற மாதிரி கேக்குமுங்க சாதா ஸ்பீக்கர் கூட தியேட்டர் எபெக்ட் கொடுக்கும் என்றார். உண்மையிலேயே அப்படித்தான் இருந்தது. ரப்பர் பேண்டை இழுத்து தோல் மேல் விட்டது போல விழுந்தது பாடலில் வரும் அனைத்து வாத்தியங்களிலும் விழுந்த ஒவ்வொரு அடியும். ஊர் திரும்பிய சில நாட்களில் தண்ணீர் பானையை ஸ்பீக்கர் மேல் கவிழ்த்தி வைத்த போது அம்மா, இவனுக்கு என்னாயிற்று என்ற கவலையுடன் என்னை பார்த்தது ஞாபகமிருக்கிறது. "இந்தப் பாட்ட ரெண்டு வருஷம் முன்னாடி கேட்டேன். அப்பறம் தினம் இந்தப் பாட்டப் போட்டுத்தான் பொழுத துவக்கறது. இளையராஜா பாட்டுன்னு தெரியும் ராகம்னா என்ன தாளம்னா என்னாங்கறதுலாம் நமக்கெதுக்குங்க காலைல பாட்டப்போட்டா ஒரு ஏலக்கா டீயை உள்ள இறக்கின மாதிரி இருக்கு" என்றபடி எங்களிடம் டீ கிளாஸ்களை நீட்டினார். பாடல் முடியும் தருணத்தில் இருந்தது. டீ குடிக்கும் முன்பாகவே குடித்து முடித்தது போன்ற நினைப்பு எங்களுக்கும் தோன்றியது. பாட்டு ஆரம்பத்துல வர ஜானகியோட ஹம்மிங்குக்கும் காலை நேரத்துக்கும் எப்படியோ இளையராஜா முடிச்சு போட்டுருக்கார் என்றான் நண்பன். ஊரெங்கும் பொழுது புலர்ந்திருந்தது...

Sunday, July 20, 2014

40. அந்த இரவு...

அந்த இரவு குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று சில நண்பர்களும் நன்றாக இருக்காது என்று வேறு சில நண்பர்களும் வெவ்வேறு எண்ணங்களில் இருந்தனர். கல்லூரியில் புதிதாய் சேர்ந்திருந்த‌ நாட்கள் அவை...

அந்த நாளும் வந்தது. மாலையில் நண்பர்கள் குழுவுடன் காந்தி மியூசியத்திற்குள் நுழைந்து மைதான சிமிண்ட் படிகளில் அமர்வதற்கும் வானில் நட்சத்திரங்கள் மின்னுவதற்கும் சரியாக இருந்தது. நல்ல கூட்டம். மேடையில் இசைக்குழு சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. இளையராஜாவுக்கு மட்டுமே இணங்க, இழைய, குழைய பழக்கப்பட்டிருந்த மனதை TMS சுசீலாவின் பழைய பாடல்கள் கச்சேரிக்கு அழைத்து வந்து அமர்த்தியிருந்தேன்....

ஒரு சில அர்த்தமுள்ள வரிகள், நல்ல பாடல்கள், இடையே அவர்கள் இருவரும் ஓய்வெடுக்கும் வேளையில் ஏதேதோ பாடல்கள் என மணி பதினொன்றை தாண்டியிருந்தது. ஆடிக்காற்று காந்தி மீயூசிய மரங்களில் இருந்து இலைகளை மைதானம் எங்கும் வீசியபடி உலா வந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான், அதன்பின் வருடக்கணக்கில் இரவுகளில் திடீரென்று காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும் அந்த ஏகாந்த நொடிக்கரைசலின் ஒலிப்பிம்பத்தின் மூலமான‌  "தேவன் வந்தாண்டி..." [உத்தமன் / 1976 /  KV Mahadevan / TMS - சுசீலா] என்றொரு மயக்கமூட்டும் குரல் மேலெழும்பி காற்றில் நகரும் இலைகள் போல மைதானம் எங்கும் பரவியது. சிறுசிறு பேச்சொலிகள் அடங்க, "தீபம் கொண்டாடி" என்று ஒலியின் மீதொரு ஒளி ஏறியது... மயிலிறகின் நுனிகளில் தென்றலை ஏந்தி நம் மீது தொட்டு தொட்டு வைத்துப் போவது போன்ற குரல். துவக்கத்திலேயே, இந்த இரண்டு வரிகளும் புடலை கொடியிலேறி படர்வது போல நம் மனதில் வளைந்து வளைந்து சுற்றி ஏறும்... அது மட்டுமல்ல. கண்ணதாசன் "டி"யை வைத்தே நம்மை ராட்டினம் ஏற்றப் போகிறார் என்பதும் தெரிந்து விடும்.

இந்த பாடலில் மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் இசை சற்றே இரைச்சலாக‌ இருப்பது போலக் கூடத் தோன்றும். "தேவன் வந்தாண்டி தீபம் கொண்டாடி" என்ற ஒற்றை வரியில் சுசீலா நம்மை எத்தனை நெளிவு சுளிவுகளுக்குள் தோய்த்து எடுக்கிறார் என்பதே இந்த பாடலின் அற்புதம். அதுவும் இரண்டாம் ஸ்டான்ஸா முடிந்த பின் திரும்ப வரும் பல்லவியில் அவர் தீபத்தில் உள்ள "தீ"யை இழுத்து  சுருக்கி "கொண்டாடி"யை நீட்டும் லயம் ஒரு மந்திரவாதி புதிதாக ஒரு ஸ்வரத்தை உண்டாக்கி நம் காதுகளில் ஊற்றும் அற்புத அனுபவம். ஐந்தே நொடிகளில் அவர் நிகழ்த்திக் காட்டும் அந்த சாகசம்...கேட்கும் பொழுதெல்லாம் பரவசம்...

பாடல் முடிந்தது. அனைவரும் அடுத்த பாடலுக்கு தயாராயினர். முன் வரிசைகளில் சலசலப்பு. சுசீலா புன்னகையுடன் வயலின் குழவை நோக்கி கையசைத்தார். அனைத்து வாசிப்பு கருவிகளும் சைலண்ட் ஆக வயலின் வாசிப்பவர்கள் மட்டும் தயார் நிலைக்கு வந்தனர். "தேவன் வந்தாண்டி" என்று பல்லவியை மீண்டும் பாடத்துவங்கினார். வயலின் மட்டும் மலரின் மீது வழியும் பனியின் துளி போல அவரின் குரலை பின் தொடர்ந்தது.
அந்த நிசப்தமான இரவில் சொர்க்கத்தின் முகவரியை காட்டி விட்டு அமர்ந்தார் சுசீலா. நினைப்பேதுமின்றி இசையின் அணைப்பே முனைப்பாக இருத்தல் மனதுக்கு சொர்க்கம் தானே?

நள்ளிரவு கடந்த பின் தமுக்கம் ரோட்டில் நடந்து கொண்டிருந்தோம். "தேவன் வந்தாண்டி"யின் மகிழ்ச்சியில் எத்தனை தொலைவும் நடக்கலாம் போலிருந்தது...காந்தி மியூசியத்திலிருந்து வைகை மேம்பாலம் வருவதற்குள் எத்தனை முறை ஏற்ற இறக்கங்களுடன் அந்த "தீபம் கொண்டாடி"யை பாடிப் பார்த்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது...அந்த வரியின் லாவகம் ஒரு ஒப்பற்ற குரல் தந்த சங்கதியின் உயிர்ப்பின் ரகசியம் போலத் தோன்றியது. வாகனங்கள் ஏதுமற்ற வைகை பாலத்தின் மீது நடக்கத் துவங்கினோம்...ஆற்றின் வாசனையை அள்ளி வந்து முகத்தில் அடித்தது காற்று...வைகையில் நீரோடிய வருடம் அது. பாலத்தின் சுவரில் சாய்ந்து கீழே ஓடிய நீரில் மின்னும் ஒளித்திவலைகளை பார்த்தபடி நின்றிருந்தோம்...எங்கிருந்தோ "தீபம் கொண்டாடி" என்று கேட்பது போல இருந்தது. ஒரு முறை வெளியேறிய உணர்வின் அலை எப்போதும் கால வெளியில் நீந்திக் கொண்டுதானே இருக்க வேண்டும்? அந்த இரவின் நொடிகளை, நிசப்தத்தை, வைகையில் ஜொலித்த நீர் இழைகளை, ஒன்றுக்குள் ஒன்றாய் கோர்த்து மனதின் ஓரமாய் நினைவின் வாசம் வீசும் மலரின் ஆரமாய் தோன்றிய பொழுதெல்லாம் பூத்தபடி இருக்கிறது "தேவன் வந்தாண்டி".

Sunday, March 16, 2014

39. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 23

எதிர்பாராத இடத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்கையில் அது எத்தகையதாகினும் அதற்குரிய உணர்வு அதற்கான இயல்பை விட‌ பல்மடங்கு பெருகியே நம்மிடம் சேரும். அதன் காரணமாகவே அது ஆழமாக பதிந்து விடவும் கூடும். இப்படியாகத்தான் ஒரு மாலை வேளையும் ஒரு சைக்கிள் கடை சிறுவனும் சேர்ந்து ஒரு பாட்டைக் காட்டி விட்டுப் போய் இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

பத்தாம் வகுப்பு பாஸ் செய்ததன் பொருட்டு மீனாட்சி கோயில் அருகில் உள்ள ஜான்சி ராணி பூங்காவின் எதிரில் இருந்த "கமலா சைக்கிள் மார்ட்" கடையில் வாங்கிய எனது சிறகுகள் வீட்டில் வந்திறங்கிய தினம், அதன் மேல் படிந்திருந்த சிறு சிறு தூசியை கூட துடைப்பதுமாகவும், டயர் அழுக்காகாமல் ரோட்டில் ஓட்டுவது எப்படி என்ற கவலையுடன் இரவு முழுவதும் கழிந்தது.

சைக்கிளை பயன்படுத்திட என்ன சாக்கு கிடைக்கும் என்ற தவிப்புகளுக்கிடையில் காற்றடிப்பது கூட களிப்பான வேலையாகத் தோன்ற, அதற்கென்றே வீட்டிலிருந்து "கமலா சைக்கிள் மார்ட்" வரை போய் காற்றடிக்கும் பழக்கம் தொற்றியது. சைக்கிள் கடையின் எதிரில் ஒரு ஸ்பீக்கர் கடை இருந்தது. விதவிதமாக வெவ்வேறு சைஸ்களில் ஸ்பீக்கர்களை அடுக்கி வைத்திருப்பார்கள். பூக்கடைக்கு மணம் போல, ஸ்பீக்கர் கடையென்றால் பாட்டு வாசம் வீச வேண்டுமே...எப்போதும் அந்தக் கடையில் ஏதேனும் பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சைக்கிள் கடையில் முதலாளி தவிர மூன்று நான்கு பேர் உண்டு. அதில், எடுபிடி வேலைக்கு என்னை விட வயதில் குறைந்த ஒரு சிறுவனும் இருந்தான். அங்கு வரும் சைக்கிள்களில் சிறு சிறு ரிப்பேர்  மற்றும் பஞ்சர் பார்ப்பதும் அவன் வேலைகளில் அடக்கம். அழுக்கைடந்த ஒரு முண்டா பணியனும் காக்கி டிராயருமாகத் திரியும் அவன் கையில் எப்பொழுதும் ஒரு ஸ்பானர் இருக்கும். எதிர்கடையிலிருந்து வரும் பாட்டுக்கு எசப்பாட்டு போல விசில் அடித்துக் கொண்டே வேலை செய்வது அவன் ஸ்டைலாக இருந்தது.

சில மாதங்களில், பல முறை சென்று வந்ததன் பயனாக, ஒரு புதிய விஷயம் அந்த சிறுவனை நெருக்கமாக பார்த்ததில் புரிந்தது. அவன் எப்பொழுதும், எந்தப் பாட்டை விசிலடிக்கத் துவங்கினாலும் சற்று நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டுக்குத் தாவி அதை விசிலடிப்பது அவனது வழக்கமாக இருந்தது. எந்த நேரத்தில் அந்தப் பாட்டுக்குத் தாவுவான் என்பது மிக இயல்பாக நெருடல் ஏதுமின்றி நிகழும் மாற்றமாக இருந்தது...

அதுவரை நான் அந்தப் பாடலை கேட்டிருக்கவில்லை. பிரபலமான பாடலாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையிலே, ஒரு நாள் பள்ளி முடிந்து காற்றடிக்கச் சென்றிருந்தேன். எதிர்கடையிலிருந்து "வா வெளியே இளம் பூங்குயிலே" [பாடு நிலாவே‍ - 1987] என்னும் ஒரு பாட்டு ஒலிக்கத் துவங்கியது. சிறுவனுக்கு குஷி தாளவில்லை. அவன் எல்லா பாடல்களுடன் இணைக்கும் விசில் இந்தப் பாடலே என்று விளங்கியது. இத்தனைக்கும் அது ஒரு மிகச் சாதாரணமான பாடலாகவே தோன்றியது.

இந்தப் பாடலின் துவக்கம், குழந்தைகள் விளையாடும் கீபோர்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பீட்களில் ஒன்று போலத்தான் இருக்கும். இந்தப் பாட்டில் என்ன இருந்து விடப் போகிறது என்று கவனச் சிதைவு ஏற்படுத்தும் துவக்கம் அது.

நம்மூர் பாடல்களுக்கு இரண்டு ஸ்டான்ஸா என்று உருவாக்கப்பட்டதே இளையராஜாவின் interlude களுக்காகத்தானோ? அப்படித்தானே அவர் தனது வயலின் கொண்டும் குழல் கொண்டும் ஏராளமான இரண்டாம் சரணங்களுக்குள் நம்மை மூழ்க வைத்திருக்கிறார்...இந்தப் பாட்டில் அதற்காக‌ காத்திருக்கும் பொழுதில் பேங்கோஸ் மீது சற்று இளைப்பாறலாம். பிறகு அந்த வயலினும் புல்லாங்குழலும் நிகழ்கிறது. காத்திருந்த பயன் கிடைக்கிறது. முப்பதே நொடிகள். ஒருவிதமான துன்பியலின் படிகளில் நம்மை அமர்த்தி விட்டு மீண்டும் சாதாரணத்தில் சறுக்கிக் கொண்டு போய் விடும் பாட்டு.

நம் சிறுவன் இந்தக் முப்பது நொடிக் கோர்வையை சற்றே நீட்டி இழுத்து வாசிக்கும் பொழுது அதில் ஒரு சோகத்தின் இழையை இழுப்பது போல இருக்கும். பிறகு சட்டென்று பாட்டின் முடிவில் வரும் சஞ்சாரங்களுக்குப் போய், தனக்குத் தோன்றிய ஸ்வரங்களை சேர்த்து வாசிப்பான். எண்ணம் என்பதே ஸ்வரம் தானே?

இரண்டு மூன்று வருடங்கள் கடந்திருக்கும். புதியதின் மீதிருக்கும் ஆர்வம் தரும் மகிழ்ச்சியின் சுழற்சிகள் பழக்கமான பின் அவற்றை மெல்ல வடிந்து போகச் செய்வது தானே காலத்தின் கோட்பாடு? சைக்கிள் அன்றாட வாழ்வின் அங்கமானது. போகும் வழியில் இருக்கும் எந்த கடையிலும் காற்றடிக்கும் "பக்குவம்" வந்து விட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின் கமலா சைக்கிள் மார்ட் செல்ல நேர்ந்த பொழுது சிறுவன் அங்கு இல்லை. முதலாளியிடம் "பையன் இல்லையா?" என்றேன். "சாப்பாடெல்லாம் போட்டு பாத்துகிட்டேன்...சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டான்" என்றார். அதில் கோபத்தை விட வலி அதிகம் இருப்பது போல இருந்தது. சொல்லலாம் என்று நினைத்தும் சொல்ல முடியாத நிலையில் நம்மை வைக்கும் கோடிக்கணக்கான நொடிகளை உருவாக்கும் காலத்தில் இதுவும் அத்தகைய இன்னொரு நொடியாக இருந்திருக்கக் கூடுமோ? யாருக்குத் தெரியும் யார் எதை சொல்ல நினைத்தார்கள் சொல்லாமல் போனார்கள் என்று?