Friday, July 27, 2012

21. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 11


ஒரு பாடலுக்குள்ளே கடல் மெதுவாக அசைந்து கொண்டிருக்க முடியுமா? "கடல்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமலேயே ஒரு பாடல் முழுதும் கடலின் வாசனை வீச முடியுமா? ஒரு பாடலே படகாக, அதன் மேல் நாம் அமர்ந்து, கடலில் மிதந்து, நினைவில் மூழ்கிக் கொண்டிருக்க முடியுமா? நிச்சயம் முடியும்.

அது என் ஏழாம் வகுப்பு ஆண்டு விடுமுறை நேரம். என் அப்பா பணிபுரிந்த நீதித்துறை சார்பில் ஊழியர்கள் மாநாடு கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது. இதை பயன்படுத்தி மாநாட்டின் முன்பின் தினங்களில் சுற்றுலாவும் சேர்க்கப்பட்டு ஊழியர்களின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர். ஒரு அதிகாலை பொழுதில் மதுரை கோர்ட் வளாகத்திலிருந்து நான்கைந்து "தீப்பெட்டி" வேன்கள் (அப்பொழுது இந்த வகை வேன்கள் மட்டுமே நிறைய பேர் சேர்ந்து பயணம் செய்வதற்கு புகழ் பெற்றிருந்தன) கிளம்பின. கடல் பார்க்கும் கனவுடன் அந்த வேன்களில் இருந்த பல சிறுவர்களில் நானும் ஒருவன்.

மதிய வேளை. உணவு நேரம். திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் காற்று நம்மை இழுத்துக் கொண்டு போய்விடும் என்று தோன்றிய அத்துவான காட்டில் வேன்கள் நிறுத்தப்பட்டன. சுற்றிலும் வான் தொடும் விசிறிகள் காற்றின் வேகத்திற்கு சுற்றிக் கொண்டிருந்தன. நாங்கள் இருந்த இடம், ஆசியாவில் அதிவேக காற்று வீசும் இடமான ஆரல்வாய்மொழி. கடல் எப்போது கண்ணில் தெரியும் என்ற ஏக்கமும் உணவின் ஊக்கமுமாய் வேகமாக சாப்பிட்டு முடிக்கையில் ஒரு வித "வாசனை" பிடிபட்டது. ஆம். கடலின் விரல் நம் மூக்கை தொடப்பார்க்கும் இடம் ஆரல்வாய்மொழி. "இன்னும் சற்று தொலைவில் தான் நான் இருக்கிறேன் வா" என்று காற்று மூலம் கடல் தெரிவிக்கும் இடங்கள் நம் மனதில் சட்டென்று ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். ஆரல்வாய்மொழியும் அத்தகைய இடமே...

உணவுக்குப் பின் சற்று நேரம் ஓய்வுக்கு விடப்பட்டது. வேன் டிரைவர் cassette playerரில் பாடல்கள் போட்டு விட்டு சீட்டில் சற்று அசந்திருந்தார். நாங்கள் வேன்களை சுற்றி "ஓடிப் பிடித்து" விளையாடிக் கொண்டிருந்தோம். என் வயதுக்குள் இளையராஜா கடலை ஊற்றப் போகிறார் என்று அப்போது தெரியாது. வரிசையாக வந்து கொண்டிருந்த பாடல்களின் நடுவே
தாலாட்டத் துவங்கியது வானம்! இந்த பாடலின் வசீகரத்தினால் நான் அன்று மெதுவாக ஓடி பலமுறை ஆட்டத்தில் "அவுட்" ஆனேனா என்று தெரியாது ஆனால் அந்த பேய் காற்று வீசும் ஆரல்வாய்மொழியும், மதிய நேர‌ அமைதியும் இந்தப் பாடலும் என் மனதை என்னவோ செய்திருக்க வேண்டும்.

அன்று இரவு, கடலுக்கு அருகில் இருக்கும் Vivekananda Ashram என்ற அற்புதமான இடத்தில் தங்கும் ஏற்பாடு. அந்த van driver ஒரு அசாத்தியமான இளையராஜா ரசிகராக இருக்க வேண்டும். நாங்கள் படுக்கச் செல்லும் பொழுதில், தென்னை, பனை மரங்களுக்கிடையில் "ஊ" என்று உற்சாகமாய் ஊரை சுற்றி வந்த கடல் காற்று நாங்கள் தங்கியிருந்த இடத்தையும் தழுவிப் போக மறக்கவில்லை. வேன் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு "தாலாட்டுதே வானம்" கேட்டுக் கொண்டிருந்தார். அன்று வரை, இந்தப் பாடல் காட்சியை நான் பார்த்ததில்லை. அதன் பின்னும் சில வருடங்கள் கழித்துத்தான் பாடல் வரும் காட்சியை பார்க்க நேர்ந்தது. ஆனால், அந்த அற்புத இரவிலேயே, இசையின் துடுப்பு மூலம் என்னை கரையிலிருந்து கடலுக்குள் செலுத்திக் கொண்டிருந்தார் இளையராஜா.


மறுநாள் காலை, விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி! படகில் செல்லும் பொழுது இந்தப் பாடல் ஏனோ நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. ஏன் இப்படி? என்று தெரிய ஐந்து வருடங்கள் ஆனது. அந்த இடைப்பட்ட ஐந்து வருடங்களில் இந்தப் பாடலை பலமுறை கேட்டு மனதுக்குள் பத்திரப்படுத்தியபின், வானம் இருட்டிக் கொண்டு வரும் ஒரு ஐப்பசி மாத பிற்பகலில் அதே விவேகானந்தர் பாறைக்கு போகும் படகில் காலம் என்னை ஏற்றியது.

எனக்கு முன்னரே படகில் ஏறிக் காத்திருந்தது "தாலாட்டுதே வானம்". இந்தப் பாட்டு படகில் மட்டுமா ஏறும்? கடல் முழுதும் ஏறுமே! நம் மனது முழுதும் ஊறுமே! "தள்ளாடுதே மேகம்"? மேகம் தள்ளாடுவதை பார்ப்பதற்கு நாம் கடலில் இருக்க வேண்டும். கடலின் கரங்கள் படகை அசைக்க, அந்த அசைவின் பிம்பம் போல வானத்தின் கண்ணாடியில் மேகங்கள் அசையும் காட்சி கண்ணுக்குள் புகுந்து நெஞ்சத்தை நிறைக்கும்.

இந்தப் பாடலில், பல இடங்களில், புல்லாங்குழல் மேலே நகர, அதனடியில் வயலின் நீளும். இப்படி நீளும் வயலின், பார்வையின் பரப்பில், படகின் அடியில் மோதும் அலைகள் பிடிமானம் இன்றி ஏற முயன்று, படகின் சுவர்களில் வழுக்கிக் கொண்டு மீண்டும் கடலுக்குள் விழும் அழகு போன்றது.

படகு நீரைக் கிழித்துக்கொண்டு முன்னேறுகையில் வரி வடிவங்களாய் நம்மை விட்டு நீங்கும் நீர், படகின் பின் முனையில் மறுபடியும் குழுமி நம்மைத் தொடரும் அழகியலை சொல்கிறதோ முதல் சரணத்திற்கு முன்பு வரும் வயலின்?

நம்மை வாரிச் சுருட்டிக் கொண்டு போவது போல அடுத்தடுத்து வரும் அலைகளின் உயரம் கூடிக் கொண்டே போகையில், அந்த அலைகளின் படிக்கட்டுக்களில் படகு ஏறி இறங்கும் லாவகத்துக்கு ஏற்ற லயத்தில் மனமும் ஏறி இறங்குமே...அது போன்றது இரண்டாவது சரணத்திற்கு முன்பு ஏறி இறங்கும் வயலின்.

நம் மீது ஆங்காங்கே தெறிக்கும் கடலின் துளிகள் தரும் தொடுகை உணர்வு போல  பாடலில் ஆங்காங்கே "வைத்து எடுக்கப்படும்" கப்பாஸ்!

நம் வீடுகளுக்கும் கடலுக்கும் பல நூறு மைல்கள் தொலைவு இருக்கலாம். ஆனால், வீட்டுக்குள்ளேயே கடலை வைத்திருக்கவும், விரும்பிய பொழுது "குளியல்" போடவும் உதவுகிறது இந்தப் பாடல்!

Sunday, July 15, 2012

ஆனந்த விகடனில் "பாடல் கேட்ட கதை"

இந்த வார ஆனந்த விகடன் இதழில், மதுரை என் விகடனில் வெளியான "பாடல் கேட்ட கதை" வலைப்பூ பற்றிய குறிப்பு...

Sunday, July 8, 2012

20. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 10


நம்மில் சிறு வயதில் கிரிகெட் கிறுக்கு பிடித்துத் திரியாமல் இருந்தவர்கள் மிகக் குறைவே. வாழ்க்கை நம் மேல் ஏறி விளையாடத் துவங்கியபின் விளையாட்டுக்களில் ஆர்வம் மெதுவாக நம் மீதிருந்து இறங்கி வடியத்துவங்குவதுதான் வயதின் இயல்பு இல்லையா?

நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். முதல் "unit test" - chemistry தேர்வு தினம். எங்கள் பள்ளி மைதானத்தில் TVS Srichakra அணிக்காக league cricket விளையாட அன்று  ஸ்ரீகாந்த் வந்திருந்தார். அவரையும் அவர் ஆட்டத்தையும் பார்க்கும் ஆர்வத்தில், தேர்வுத்தாளில் பேனா பெருவேகம் கொண்டு ஓடியது. சொற்ப நேரத்தில் அரையும் குறையுமாக அவசரத்தில் அள்ளித் தெளித்த விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்து விட்டு மைதானத்திற்கு ஓடிய அந்த தினத்தில், chemistry பாடத்தை விட‌ கிரிகெட்டே மனதை ஆக்ரமித்திருந்தது வயது.

மைதானம் என்றவுடன் பெரிதாக கற்பனை செய்ய வேண்டாம். ஆனால் எங்கள் பள்ளி மைதானம் அழகானது. நீள்வட்ட வடிவில், சீரிய இடைவெளியில் சுற்றிலும் மரங்களுடன் இருக்கும். இரண்டு முனைகளில் இருக்கும் மின்சார கம்பங்கள் மட்டுமே சற்று இடையூறு போலத் தோன்றும். நான் தேர்வு அறையிலிருந்து ஓடி வந்த பொழுது ஒரு விக்கெட் விழுந்திருந்தது.  ஸ்ரீகாந்த் நான்காவதாகத்தான் வருவார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.  அவரைப் பார்க்க நல்ல கூட்டம்.  எட்டிப் பார்த்தும் இடையில் நுழைந்து பார்த்தும் அவர் அரைகுறையாகத் தான் தெரிந்தார்.ஆட்டத்தையும் ஸ்ரீகாந்தையும் நன்றாக பார்க்க‌, நாங்கள் "மரக்குரங்கு" விளையாடும் மரம் நோக்கி வேக நடை போட்டேன். மரக்குரங்கு விளையாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பொருள் நயத்துடன் இந்த விளையாட்டுக்கு பெயர் வைத்தவர் யாரோ? எல்லா மரங்களிலும் மரக்குரங்கு விளையாட முடியாது. குறைந்த உயரத்தில் நிறைய கிளைகள் பிரியும் மரமே இந்த விளையாட்டுக்கு ஏற்றது. மைதானத்தில் இருந்த சுமார் ஐம்பது மரங்களில் 2 மரங்கள் மட்டுமே "மரங்குரங்கு மரங்கள்".

மரக்குரங்கு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். இன்னும் இரண்டு விக்கெட்டுகள் விழ பலத்த ஆரவாரத்திற்கு இடையே ஆட வந்தார்  ஸ்ரீகாந்த். முதல் பந்து, கண் சிமிட்டும் நேரத்தில், மைதானம் தாண்டி, பள்ளி தாண்டி, இரண்டு தெருக்கள் தாண்டியிருந்த ராமர் கோவில் உள்ளே போய் விழுந்தது. தேர்வை அவசரமாக எழுதியது வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி, அடுத்த பந்திலேயே காற்றிறங்கிய பலூன் போல ஆனது. மீண்டும் அதே போல் அடிக்க முயன்று "போல்ட்" ஆனார்  ஸ்ரீகாந்த். அவரின் மேல் கோபம் கோபமாக வர ஏமாற்றத்துடன் மரத்திலிருந்து இறங்கினேன். அவரின் ஆட்டத்தை மட்டுமே பார்க்க வந்த கூட்டம் கலைந்தது. மெதுவாக "team" அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு இருந்த சில உள்ளூர் வீரர்கள் transistor ஒன்றில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர். திருநெல்வேலி வானொலி நிலையம் என்று ஞாபகம். ஸ்ரீகாந்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த என் காதுகளில் நுழைந்து கொண்டிருந்தது "என் ஜீவன் பாடுது"...[நீதானா அந்த(க்) குயில் / 1986 / இளையராஜா / ஜேசுதாஸ்]

இந்த பாடல் நம் மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை ஏற்றி வைக்கும் இயல்புடையது. இளையராஜாவின் இவ்வகைப் பாடல்கள் சில சூழ்நிலைகளில் கேட்கும் பொழுது நம்மை அப்படியே விழுங்கி விடும். இந்தப் பாடலும் அப்படித்தான். இதன் அடியில் வழியும் உணர்வு மதிய நேரத்தில் கேட்கும் பொழுது வீரியம் மிக்கதாக தோன்றும்.

ஏதேனும் ஒரு மதிய வேளையில்,

இந்தப் பாடலை, ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில், ஒரு மர நிழலில் கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, பாழடைந்த பழைய கால கோயில் அருகிலோ சிதிலமடைந்த‌ கட்டடங்கள் அருகிலோ கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, பாறைகள் நிறைந்த குன்றின் மீதேறி போகையில் கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, காலி செய்யப்பட்டு நன்றாய் கழுவி விடப்பட்ட, பொருட்கள் ஏதுமற்ற வீட்டுக்குள் கேட்டிருக்கிறீர்களா?

இவையனைத்தும் இந்த "பாறாங்கல்லை" நம் மீது ஏற்றி வைக்க பயன்படும் இடங்கள்.

பாடல் துவங்கும் பொழுது, ஞாபகக் குடுவையில் ஊற்றிய நினைவின் திரவத்தை காலத்தின் அடுப்பில் guitar மூலம் பற்ற வைப்பார் இளையராஜா. பாடல் முழுவதுமே இந்த கிடார், தழல் போல் அடியில் எரிந்து கொண்டே இருக்கும். நினைவு திரவத்தை கிண்டி விடும் அகப்பை போல அடியிலும் மேலுமாக சுற்றிக் கொண்டிருக்கும் வயலின். ஒவ்வொரு சரணத்தின் இறுதியிலும் உச்சத்திற்கு சென்று சட்டென்று உடைந்து போகும் அந்த வயலின் - நம் நினைவு கொதித்து, அடுப்பு முழுதும் பெருகி வழிந்து சிதறும் உணர்வின் துகள்கள் உடைபடுவதுதான் அந்த உச்சத்தில் சட்டென்று முறியும் வயலினோ? வழிந்தொடும் நினைவை மீண்டும் அள்ளி கோப்பைக்குள் எப்படி போடுவது? இளையராஜாவின் உதவியுடன் கோப்பைக்குள் போட முயற்சிக்கலாம் - பாடல் முடிந்து விட்டதோ என்று நாம் நினைக்கையில் வரும் ஜேசுதாசின் குரலையும் அதன்பின் மெலிதாக கரையும் கிடாரையும் கேளுங்கள். வழிந்தோடிய நினைவுகளையும், உடைந்து போன "கோப்பைகளின்" துகள்களையும் மெதுவாக பொறுக்க முயலும் மனதை போல அது இருக்கும்.

ஸ்ரீகாந்த் ஆடிய காலம் முடிந்து சேவக் வந்து அவருக்கும் வயதாகி அடுத்த கட்ட வீரர்களும் வந்து விட்டார்கள். ஒரு நாள் போட்டியை கூட முழுவதுமாக பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டது. ஆனால் அன்று ஸ்ரீகாந்த் முகத்தை பார்த்தபடி கேட்ட "என் ஜீவன் பாடுது" ஜீவனுக்குள்ளே ஊறியபடியே இருப்பதை என்னவென்று சொல்வது?