Saturday, December 8, 2012

30. இப்படியும் சில புதிய பாடல்கள் பகுதி 2


அந்த நெடுஞ்சாலையில், இரவின் அமைதியை துரத்திய படி வேகத்தில் வழுக்கிக் கொண்டிருந்தது பேருந்து. நினைவுகள் வழியும் மனதை நித்திரை தழுவியது போன்ற பாவனையில் கண் மூடியபடி இருந்த பல பயணிகளில் நானும் ஒருவன்.

"தினம் தினம் நான்" பாடலின் சுவை அதன் "rendering"ல் இருக்கிறது. பாடலின் எந்தெந்த வார்த்தைகளில் ஏகாரம் வருகிறதோ, எந்தெந்த வார்த்தைகளில் நெடில்கள் நேர்த்தியாக நீட்டிக்கப் பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் பாடகர் நம்மை உணர்வுகளின் சிகரங்களில் ஏற்றி இறக்குகிறார். பேருந்தின் அசைவின் மேல் மற்றொரு அடுக்காய் நகரும் இந்த "ஏற்ற இறக்கம்" துயரத்தின் சிறகுகளை நம் எண்ணத்தில் பொருத்தி, நினைவுகளில் மனதை இருத்தி, தண்ணீரில் தோய்த்து எடுக்கப்பட்ட பறவையின் தத்தளிக்கும் சிறகு போல தடுமாறி பறக்கிறது...

இப்படியாக எனது சிறகை நான் உலர்த்திக் கொண்டிருந்த பொழுதுதான் பக்கத்து இருக்கையிலிருந்த முதியவரிடமிருந்து அந்த ஒலி கேட்டது.  முதலில் அது அலைச்சலுக்கு பிந்தைய ஆயாசத்தின் ஒலி போன்ற தோன்றியது. "ச்" என்று அவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த‌ ஒலி,  முதுமை அர்த்தப்படுத்த முயலும் வெறுமையின் சித்தமாக‌ இருக்கலாம். அல்லது காலத்தின் முள் குத்திய இடத்தில் முதுமை இடும் முத்தமாகவும் இருக்கலாம். அல்லது பாடலின் ஏதோ வரி அவரின் நினைவு மீனை கால நதியிலிருந்து குத்தியெடுத்து கரையில் போடும் சத்தமாக இருக்கலாம்...

"வேர் நான் இழக்கிறேன்" என்னும் பொழுதும் அவரிடமிருந்து மீண்டும் அதே ஒலி. அவரின் நினைவு மீன் தரையில் குதிக்கிறதோ என்று நினைப்பதற்கான‌ சாத்தியக்கூறு அதிகமாயிற்று. இதற்கிடையில் இரண்டாம் சரணத்திற்கு முன் அபார வேகத்துடன் வந்து போன‌ வயலினை, பேருந்தின் வேகத்துடன் இணைந்து கேட்கையில், அந்த இரண்டின் இடையிலும் ஒரு லயம் இருப்பதாக வெளியில் மண்டியிருந்த இருள் பேருந்துடனே ஓடி வந்து சொன்னது.

"கனவாய் வாழ்க்கை கரைந்தால் நல்லது" என்ற போது, எதிரின் வந்த பேருந்து தந்த வெளிச்சத்தில் எனது கண்ணும் அவரின் காலமும் சந்தித்துக் கொண்டது அவரின் கண்ணில் தெரிந்தது. ஒரு நொடி என்னைப் பார்த்து, "பாட்டு நல்லாருக்குப்பா" என்றார். பிறகு அவரின் கரையில் விழுந்த மீனை மீண்டும் நதிக்குள் விடும் முயற்சியில் மெளனமானார். பேருந்தில், நிறைய பேரின் பிரத்யேக நதியிலிருந்து நிறைய மீன்கள் கரையில் விழுந்து கொண்டிருக்கக் கூடும்...கால நதி...நினைவு மீன்...

இத்தகைய பேருந்து பயணங்களில், பாடல்கள் முடிந்தபின், சட்டென்று ஒரு நிசப்தம் நிலவும். குளிர்விக்கப்பட்ட விளக்கில் மீதமிருக்கும் திரியின் வெப்பம் போல, அப்பொழுது வலம் வந்த நினைவுகளின் மீதம் சிறிது சிறிதாக ஞாபகப்பெட்டிக்குள் அடுக்கப்பட்டு பூட்டப்படும் பொழுதுகள் அவை.

அதிகாலை. அரைகுறை தூக்கத்துடன் பேருந்திலிருந்து அவரவரின் அன்றைய வாழ்க்கைக்கு வரிசையாக இறங்கினோம். "cooperative bank" பையுடன் இறங்கிய முதியவர், குளிர் வழியும் காலை நேர சாலையில் தனியே நடந்து சென்று கொண்டிருந்தார்...விருப்பமுற்றோ விருப்பமற்றோ நாம் தின்ற காலத்தை அல்லது அது நம்மைத் தின்ற மாயத்தை உணர்வுகளால் மீட்டெடுத்து ஞாபகத்தின் உலையிலிட்டு நினைவுகளாய் சமைத்து வைத்து மீண்டும் மீண்டும் வாயிலிட்டு மென்று விழுங்க முயல்வதே முதுமையா? அதற்கான ஏற்பாடுதான் இளமையா?Thursday, November 22, 2012

29. இப்படியும் சில புதிய பாடல்கள்...


சமீபத்தில் ஒரு நீண்ட தூர பேருந்தில் இரவு நேர பயணம்...இப்பொழுதெல்லாம்,  a/c, a/c sleeper என பலவகை சொகுசு பேருந்துகள்  ஏகப்பட்டவை சர்வ சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்தாலும் இத்தகைய வசதியற்ற பேருந்தில் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு காற்றுக்கு தலையை கொடுத்தபடி பயணம் செய்யும் சுகம் தனி...அப்படிப்பட்ட பயணம் தான் அன்றைக்கு எனக்கு வாய்த்திருந்தது.

அற்புதமான speakers மற்றும் woofers அமைக்கப்பட்ட பேருந்து. இதன் வழியே 80கள் காதுக்குள் வழியாதா என்று எண்ணியபடி இருக்கையில் அமர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்னர் இசை என்பது அனுபவிக்கத்தக்க ஒன்றாக‌ இருந்தது. ஆனால் அந்த அனுபவத்தை மெருகேற்றும் ஒலிப்பேழைகள் அன்று இல்லை. இன்றோ ஒரு இசை கோர்வையின் ஒவ்வொரு இழையையும் நாம் பிரித்து ரசிக்கும் வண்ணம் வளர்ந்திருக்கிறது ஏராளமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள். ஆனால் தற்போது வெளிவரும் பாடல்களில் பெரும்பான்மையானவை, குப்பைத்தொட்டியில் குதித்த நாய், தன் கால்களால் கிளறி வெளியில் வீசும் குப்பை போல நாற்றமெடுக்கிறது. இது காலத்தின் முரண். நம் காதுகளுக்கும் முரண். இதை உறுதிப்படுத்தும் வகையில் பாடல் என்ற பெயரில் ஏதோ இரைந்து கொண்டிருந்தது.

என்னருகில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்து அமர்ந்தார். தலைக்கு மேலிருந்த இடத்தில் அவர் கொண்டு வந்த "கூட்டுறவு வங்கி" பை அமர்ந்து கொண்டது. அந்தப் பையின் கைப்பிடி அடைந்திருந்த தொய்வு, அவருடன் அது பல "பயணங்களில்" பல வருடங்கள் உடன் வந்திருக்கும் என்று காட்டியது. அல்லது வாழ்க்கையின் மீது அவரின் பிடி தொய்ந்ததை காட்டுவதாகவும் இருக்கலாம்...

நகரத்து நெரிசல் விலகி, வேகமெடுத்தது பேருந்து. ஆயிரக்கணக்கான மரங்களை கொன்று அதன் மேல் படுத்துக் கொண்டிருக்கும் நம் சுயநலத்தின் அடையாளமான நீண்ட நெடுஞ்சாலையை நம்முடனேயே பயணம் செய்து கண் சிமிட்டியபடி பார்த்துக் கொண்டிருந்தன நட்சத்திரங்கள். தொலைதூரத்தில் தெரிந்த கிராமத்து விளக்குகள் இரவின் உடம்பில் உருவான வெளிச்ச கொப்பளங்கள் போல வீங்குவதும் வெடிப்பதுமாக தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

ஒரு பாடல் முடிந்து சற்று நேர அமைதிக்குப் பின் ஒலிக்கத் துவங்கியது "உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்" [நான் / Vijay Antony / 2012] அடுத்த வரியிலேயே அதன் வசீகரம் இன்னும் கூடி "நினைவுகள் பல சுமக்கும் நிஜத்தினில் எது நடக்கும்" என்று தொடர, சட்டென்று பாட்டில் ஒட்டிக் கொண்டது மனது. இரவின் வெளியில் நீந்திக் கொண்டிருக்கும் நினைவுகளை மண்ணில் விழும் மழை போல உறியத் துவங்கியது உள்ளம். மனதின் துவாரங்களில் இரவு எப்பொழுதுமே நினைவுகளை நிரப்ப முயன்று கொண்டே இருக்கிறது இல்லையா?

முதியவர் இந்த வரிகளை ரசிக்கிறார் என்பது, அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள் எனினும், அவரின் இருக்கை அசைவு என் இருக்கையை அசைக்கும் சுருதியில் தெரிந்தது. இந்தப் பாடலின் பல்லவி முடிகையில் "beat" அனைத்தும் நின்று விட, தனியே repeat ஆகும் முதல் வரி, பொட்டல் வெளியில் கொட்டும் இரவில் வானம் பார்த்தபடி மண்ணில் நகரும் நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போகிறது... இதே போன்று பாடல் முடிவிலும் ஒரு முறை வரும் என்று நம்மை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றம் அளிக்கிறார் இசையமைப்பாளர். இரண்டு சரணங்களையும் இவர் "close" செய்திருக்கும் விதம் நன்று.

இந்த பாடலிலும் நாம் பின்னர் பார்க்கப் போகும் "தினம் தினம் நான்" பாடலிலும் அத்தனை வரிகளிலும் வார்த்தைகள்! இதிலென்ன அதிசயம் என்று நமக்குத் தோன்றலாம்...ஆனால் அப்படித்தானே இன்றைய பாடல்கள் நம் எதிர்பார்ப்பை "இறக்கி" வைத்திருக்கின்றன?

நன்றாக இருக்கிறதே என்ற யோசனையை உடைத்து, "இரு, இந்த பாட்டையும் கேள்" என்பது போல ஆரம்பித்தது "தினம் தினம் நான்...". இந்த பாட்டின் அற்புதமான கமக்கங்கள் ஜன்னல் வழியே புகுந்து முகத்தை தழுவும் காற்றின் விரல்கள் நகர்வதை போன்ற‌ உணர்வு மயக்கம் கொடுத்துக் கொண்டிருந்தன.
அப்பொழுதுதான் அருகிருந்த முதியவரிடம் இருந்து அந்த ஒலி வெளிப்பட்டது. உணர்வின் ஒலியை ஒரு பதிவுக்குள் அடக்க வழியில்லையே... அடுத்த பதிவிலும் தொடர்வோம்...


Saturday, November 10, 2012

28. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 17

தீபாவளிக்கு முந்தைய இரவு எப்படிப்பட்டது? ஒவ்வொரு ஊரிலும் வீட்டிலும் வெவ்வேறு அனுபவங்களைத் தாங்கியதாக அது இருக்கும். மதுரையில் தீபாவளி இரவு என்பது "விளக்குத்தூண்" என்ற சொல்லின் அடையாளம் எனலாம். மதுரையில் வளர்ந்த அனைவருமே ஒரு முறையேனும், அந்த இரவில், நெட்டித் தள்ளும் மனித சமுத்திரத்தின் நடுவே விளக்குத்தூண் நோக்கி நடந்து போயிருப்பர்.

தீபாவளிக்கு முன் தினம் காலையிலிருந்தே நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாசி வீதிகளிலும், அவற்றின் குறுக்கே வெட்டிப் போகும் திண்டுக்கல் ரோடு,  town hall road போன்ற தெருக்களிலும் சாலை முழுவதும் கடைகள் முளைக்கும். குடை, குடம், சேலை என்று ஏதேதோ பொருட்கள் நினைக்க முடியாத‌ விலையில் கூவப்பட்டு ஆளை இழுக்கும். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் குவியத் துவங்குவர்.

மதியம் நடக்க முடிகின்ற அளவில் இருக்கும் கூட்டம், இரவு தொடங்கி, ஒவ்வொரு அடி முன்னேறுவதற்குள் மூச்சு முட்டும் அளவில் அதிகரிக்கும். சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் பூம்புகார் நகரத்தின் இந்திர விழா, இரவு நேரத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று தோன்றும்! இந்த இரவு "ரோந்து" முதன் முதலில் எனக்கு வாய்த்தது 1987ல்.

இரவு உணவு உண்டபின் சுமார் பத்து மணிக்கு துவங்கும் இந்த "சுற்று" விடிகாலை மூன்று மணியளவில் நிறைவுறும். "சிட்டி சினிமா" அருகில் மரத்தட்டிகளினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தெருவோர கடையொன்றில் "தாய்மார்களே..." என்று துவங்கி, ஒரு ஒலிபெருக்கி அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. இந்த "அழைப்பின்" இடையே, மீண்டும் மீண்டும் ஒரு இசை சில நொடிகள் வருவது போல "set" செய்திருந்தார்கள். அந்த இசைக்கு நடுவே மீண்டும் "தாய்மார்களே" என்று துவங்குவார். முப்பது ரூபாய் நாற்பது ரூபாய் என்று சேலைகளை ஒருவர் அலை போல வானத்தில் பறக்க விட, அந்த அறிவிப்புக்கு இடையே வந்த இசையின் உள்ளே இருந்த வயலின் சட்டென்று என்னைப் பிடித்துக் கொண்டது.

"மெல்ல மெல்ல" என்னும் பாடல் துவக்கத்தில் (வாழ்க்கை / 1984 / சுசீலா / ராஜ் சீதாராமன்) வருவதே அந்த வயலின்.வயலினை நம் வாய்க்குள் போட்டு சுவைக்க முடியுமா? இந்தப் பாட்டில் முடியும். இந்த வயலினை கேட்க கேட்க, அதன் நெளிவு சுளிவுகள் நம் நாக்கில் ஏறி உட்கார்ந்து கொள்ளும். பிறகு, நமக்கு பிடித்தமான மொழியில் பொருத்தமான எழுத்தை எடுத்து அதை நமக்குப் பிடித்தமான நினைவில் மடித்து, அந்த வயலினை, வார்த்தையாலேயே நாம் வாசிக்கலாம்! ஒரு "த" அல்லது "ன" அல்லது "ம்" எடுத்து, இந்த வயலின் ஓட்டத்திற்கு ஏற்றபடி சொல்லிப் பாருங்கள்...இதன் உதவியுடன், எத்தனை தொலைவையும் அலுப்பின்றி உற்சாகமாக‌ கடந்து சென்று கொண்டேயிருப்போம் நாம்!

"வெங்காய வெடி" மீது அந்நாட்களில் எனக்கு ஒரு கண். இந்த "மெல்ல மெல்ல" வயலினை வாயினால் வாசிக்க முயன்ற படி அந்த தீபாவளி இரவு முழுதும் வெங்காய வெடி கிடைக்கக் கூடிய குறிப்பிட்ட இடங்களில் வலம் வந்தோம். இறுதியாக, கீழவாசல் சந்திப்புக்கு முன்னர், இடது புறம் ஒரு இருட்டுச் சந்தில், சாக்குக்கு அடியிலிருந்து ஒரு "உறை" பையிலிருந்து அவர் எடுத்துக் கொடுத்த போது, இளையராஜா அங்கும் வந்து அந்த வயலினை மனதுக்குள் வாசித்துக் கொண்டிருந்தார்.

சுமார் பத்து வருடங்கள் கழித்து, மற்றுமொரு தீபாவளி இரவு..."உலா" போவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, சென்னை தொலைக்காட்சியில் இளையராஜாவின் குழுவில் இருந்த ஒருவரின் பேட்டி ஒலிபரப்பானது. அதை பார்த்து விட்டுக் கிளம்பலாம் என்று அமர்ந்திருந்தேன். பேட்டியின் இறுதியில், அவரை, பிடித்தமான ஒரு வயலின் bit வாசிக்கும்படி கேட்டார் கேள்வியாளர். "மெல்ல மெல்ல" பாட்டில் வரும் வயலின் எத்தனை கடினமானது என்று விளக்கிய அவர், தனக்கு மிகவும் பிடித்தமானது என்று  அதையே வாசிக்கத் துவங்க, நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள் திரையில் ஓடத்துவங்கின...

அதன் பின், அன்றைய இரவு நான் தீபாவளி உலா போன பாதையெங்கும், பத்து வருடத்திற்கு முந்தைய நினைவுகள், நிலா போல இரவு முழுதும் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது...மனதுக்குள் அந்த வயலினுடன்...

நினைவுகளை கோர்ப்பது காலத்தின் கயிறா? அல்லது கோர்க்கப்பட்ட நினைவுகளுக்கு காலம் என்று பெயரா?

Sunday, October 28, 2012

27. நீதானே என் பொன் வசந்தம் - இளையராஜா என்ன செய்தார்?


இளையராஜாவின் இசை விரும்பிகள் இப்போது சந்தித்து கொண்டால், அவர்கள் உரையாடலில் தவறாமல் இடம்பெறுவது, "நீதானே என் பொன் வசந்தம்" பாடல்கள் கேட்டாயா?" என்பது தான். அதிலும், நாற்பது வயது கடந்தவர்கள் இந்த கேள்வியை கேட்கும் பொழுது அவர்களின் கண்களை உற்றுப் பார்த்தால், அதில், கடந்த காலம் கொப்பளித்துக் கொண்டிருப்பது தெரியும்.

எனது ஒலிப்பேழையின் உள்ளே இந்தப் பாடல்களை தேக்கிய பின்னும் கேட்பதற்கான சரியான காலத்திற்காக சில வாரங்களாக காத்திருந்தேன்... ஏனென்றால், "நீதானே எந்தன் பொன் வசந்தம்" என்னும் "வரி"க்குதிரை லேசாக அதன் கால்களால் நம்மைத் தட்டினால் நாம் முப்பது ஆண்டுகள் முன்னர் போய் விழுவோம். நினைவெல்லாம் நித்யா, 80கள், நம் பால்யம் என்று நூல் பிடித்து நாம் எங்கோ திரியத் துவங்குவதற்கான வசதி இந்த வரியின் அடியில் ஒளிந்துள்ளது. எனவே, இதை தனித் திரியாக பிரித்து, பின்னர், புதிதாக வந்திருக்கும் பாடல்களை கேட்கும் அனுபவம் பெற‌ வேண்டும்.

சென்ற வாரம் மதுரைக்கு போகும் சந்தர்ப்பம். மழை பெய்த மதுரை இரவில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உலவும் வாய்ப்பு. பள்ளியில் படிக்கையில், "நினைவெல்லாம் நித்யா" நாட்களில், தினசரி மாலை, பெரும்பாலும் அம்மாவின் வாசம் நிறைந்த தேநீருடனும் "பனி விழும் மலர் வனம்" முடிந்து "நீதானே எந்தன்..." பாடல்களுடனும் இதே மொட்டை மாடியில் "home work" செய்யத் துவங்கிய வருடங்கள் நினைவில் எழ, ஒலிப்பேழையை ஓட விட்டேன். வெல்லத்தை கலத்தில் கொட்டி, கொதிக்க கொதிக்க, பாதி ஆவியாகி அடியில் பாகு கெட்டிப்பது போல ஆழமற்ற‌ பாடல்கள் முதல் கேட்பிலேயே ஆவியாக‌, மீதமிருந்தது "முதல் முறை" மற்றும் "சற்று முன்பு" பாடல்களின் வெல்லப்பாகு...

"முதல் முறை பார்த்த ஞாபகம்" பாடலில் சில அற்புதங்கள் இருக்கின்றன. எத்தனை நாட்கள் ஆகி விட்டன இது போன்ற "கனமான" வயலின் கோர்வையை காதுக்குள் ஊற்றி...

நம் உடலில் காயம் ஏற்பட்டால் அது காய்ந்து பொருக்காக மாறும். அந்த பொருக்கை விரலால் தடவுகையில் ஒரு வித நெருடல் தோன்றும். இதுவே, மனதில் விழுந்த நினைவின் பொருக்காக இருந்தால்? அதைத் தடவிப் பார்ப்பது எப்படி? அதைத் தான் இந்தப் பாடல் முழுவதும் இளையராஜாவின் violin நமக்குத் தருகிறது.

நம்மூரில் ஊர்களுக்கிடையே பயணம் செல்கையிலே சாலையோரம் இருக்கும் முள் மரங்கள் சில சமயம் நம்மேல் சட்டென்று கீறி விட்டு பின்னோக்கி ஓடி விடும். அந்தக் கீறல் ஒரு நொடி தான். ஆனால் அது நீண்ட நேரம் "எரியும்". அது போல, இந்தப் பாட்டின் சரணங்களில் ஆங்காங்கே வரும் அந்த violin ஒற்றை கீறல்க‌ள்!

"காற்றை கொஞ்சம்" பாடல் முழுவதும், பழைய இளையராஜாவின் வயலின் பாட்டுக்கு அடியில் ஓடுவது, மனதுக்கு இதம் அளிக்கிறது...

இனி சில ஏமாற்றங்கள்:

(i)இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு அடியில் நம்மை இறங்க வைத்த அந்த அற்புதமான தபேலா எங்கே? ஒரு இடத்தில் கூட தென்படவில்லையே? "இது இளையராஜா பாடல்" என்று இனம் காண வைத்த அந்த "bass guitar" எங்கே தேய்ந்து போனது?

(ii)பாட‌க‌ர்க‌ளுக்கு ப‌ஞ்ச‌மா? லயத்திலும் உச்சரிப்பிலும் நம்மை ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு ப‌ல‌ மைல் தொலைவில் இருக்கிறார்க‌ளே... அதிலும் "சாய்ந்து சாய்ந்து" பாட‌லின் த‌ர‌ம் அதைப் பாடிய‌வ‌ர்க‌ளால் பாதாள‌த்தில் சாய்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தே..."தேங்கிப் போன..." [ "சற்று முன்பு" பாடல்] வரிகளுக்காக மட்டும் ரம்யாவிற்கு ஒரு சபாஷ்.


(iii)ஒரு தலைமுறை, வருடக்கணக்கில் முணுமுணுத்த வரி தானே படத்தின் பெயராய் வைக்கப்பட்டிருக்கிறது...பிறகு ஏன் "எந்தன்" விடுத்து "என்"?
இளைய தமிழ் தலைமுறைக்கு "எந்தன்" என்பதன் அர்த்தம் தெரியாது, அதனால் "reach" குறைந்து விடும் என்ற அவநம்பிக்கையா?

(iv)இளையராஜாவின் ப‌ல‌ பாட‌ல்க‌ள், ந‌தியின் அடியில் த‌ங்கி விடும் கூழாங்க‌ற்க‌ள் போல‌ ந‌ம் நினைவில் நீண்ட‌ கால‌ம் ப‌டிந்து விடுப‌வை. ஆனால் "நீதானே என் பொன் வ‌ச‌ந்த‌ம்" பாட‌ல்க‌ள், ந‌ம் நினைவுக‌ளில் தேங்கும் அள‌வு ந‌ம‌க்குள் இற‌ங்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே...

Friday, October 12, 2012

26. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 16


கதைகளிலும் பாடல்களிலும் மட்டுமே தன் வடிவை காட்டி, கற்பனைகளில் மட்டுமே அதன் அழகு பற்றிய சிந்தனையை ஊட்டி வருடங்களை கடத்திக் கொண்டிருந்த காவிரியை உடம்பில் ஊற்றி உள்ளத்தில் ஏற்றும் சந்தர்ப்பம் 1991 ஆண்டு வாய்த்தது.

நதி என்பது எத்தனை அதிசயங்களை தன்னுள் வைத்திருக்கிறது!ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு விதம். அவற்றில் ஓடும் நீரின் தன்மை வேறு. அத்தகைய நீர் நிற்கும் மண்ணின் அமைப்பு வேறு. அந்த மண் மேல் வாழும் உயிர்களின் பண்பு வேறு. நதியின் அதிசயங்கள் பூமிக்கு அவசியம். நதிக்கும் உயிர் உண்டு. அதனுடன் நமக்கு உறவு உண்டு. அதனால் தான் நாம் நீராடும் வெவ்வேறு நதிகள் வெவ்வேறு உணர்வுகளை, நினைவுகளை நமக்குக் கொடுத்துப் போகிறதோ? "நான் தாமிரபரணி தண்ணீர் குடித்து வளர்ந்தவன்", "எனக்குள் காவிரி ஓடுகிறது" என்று நாம் சொல்கிற போதே, மனது முழுதும் ஒரு சுவை ஓடுகிறதே...நம்மை நதியின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா அல்லது நதியை காலத்தின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா?

எந்த ஊருக்குச் செல்வதாக இருந்தாலும், எனக்கு எழும் முதல் சிந்தனை, அந்த ஊரில் கடலோ நதியோ மலையோ இருக்கிறதா என்பது தான். 1991 வருடம் குடியரசு தினத்திற்கு முந்தைய நாட்களில் என் உறவினர் ஒருவரின் திருமணம் ஸ்ரீரங்க‌ம் ஊரில் நடந்தது. அந்த திருமண அறிவிப்பு வந்தது முதற்கொண்டு, காவிரியில் குளித்தாக வேண்டும் என்ற ஆவல், பாலில் கொட்டிய அவல் போல மனதில் குழைய‌த் துவங்கியிருந்தது. Srirangam கோபுர வாயிலுக்கு போகும் தெருவில்,கோபுரத்திற்கு நேரெதிர் திசையில் நடந்தால், வலப்புறம் வரும் "ராகவேந்திர மடம்" கடந்து, இடது புறம், ரயில்வே தண்டவாளத்திற்கு ஒட்டியவாறு இருந்தது அந்த திருமண மண்டபம்.

கல்யாணம் முழுவதும் காவிரியை நினைத்தபடி திரிந்தேன் நான். திருமண தினத்தன்று மதியம், எனது "பிடுங்கல்" தாங்காமல், உறவினர் கூட்டமொன்று எவரெவரிடமோ வாங்கிய சைக்கிள்களில் என்னையும் ஏற்றிக் கொண்டு பெயர் தெரியா வீதிகளில்... தென்னந்தோப்புகளின் இடையே மெலிந்திருக்கும் மண் சாலைகளின் வழியே... எனச் சுற்றி, ஒரு படித்துறையில் இறங்கியது. காவிரியில் என் முதல் குளியல்! தலைமுடிகளின் பல நுனிகளில் காவிரியின் குமிழ்கள் கண்சிமிட்டியபடி என்னுடன் வர, காவிரியில் குளித்த மகிழ்ச்சியின் வடிவம் எப்படியிருக்கும் என்று பார்ப்பதற்காக அந்த பெருநதியின் சிறு குமிழ்களில் ஒன்றை உருவி விரல்களில் வைத்துப் பார்த்திருக்கிறேன்..பாதி காய்ந்த தலையுடன் திரும்பி வரும் வழியில் தென்பட்ட "பெட்டிக் கடை" ஒன்றில் "கலர்" குடிக்கையில் மனதில் வாசமேற்றத் துவங்கியது "திருச்சி வானொலியில்" பூத்த "தாழம்பூவே வாசம் வீசு" [கை கொடுக்கும் கை / SPB - Janaki / 1984 / ].

நம் நெஞ்சின் மீது பாறாங்கல்லை தூக்கி வைப்பதற்கு இளையராஜாவின் கைகளில் இருக்கும் எடையற்ற‌ வயலின் bow ஒன்று போதும். இந்தப் பாடலின் "பேசும் போது..." மற்றும் "நீரும் போனா..." ஆகிய இரண்டு இடங்களில் நம் மன வயலில் இறங்கும் வயலின், உழுது உழுது, நீண்டு வளைந்து, ஏறி இறங்கி விதைக்கும் இனம் புரியாத பாரத்தின் விளைச்சலை காலத்தின் பயிர் எனலாமோ?

அன்று இரவு, மாடியில், தென்னை மரங்களை பார்த்த வாக்கில் படுக்கை. நிலவின் கீற்று தென்னங் கீற்றுகளில் முகம் பார்த்துக் கொண்டிருக்க, எத்தனை முறை என்னுடன் புரண்டது அந்த இரண்டு சரணங்களின் இடைவிடாத வயலின்!


இப்பொழுது என்னை ஸ்ரீரங்கம் கொண்டு போய் விட்டாலும், அந்த ஊர் அடையாளம் தெரியாமல் மாற்றம் கண்டிருந்தாலும், காலத்தின் முதுகில் ஏறிக்கொண்டால் அதே படித்துறைக்கு அது என்னை இட்டுச் சென்று விடும் என்று திடமாக நம்புகிறேன்.

காவிரி மட்டுமா? கால நதி புரண்டோடும் வழியெங்கும் மீதமிருப்பது நினைவின் படித்துறைகள் தானே?Saturday, September 29, 2012

25. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 15


சமீபத்தில் சிவகாசியில் நிகழ்ந்த கோரமான விபத்தை பற்றிய செய்திகளை படிக்கையில் ஏற்படும் சோகத்துடன் சேர்ந்து, நம் அனைவரின் ஞாபகமும் ஒரு நொடியேனும் நம் சிறுவயது பட்டாசு தாகத்தின் மீது சென்று திரும்பியிருக்கும். தீபாவளி சமயத்தில் மட்டும் முளைக்கும் மதுரை வக்கீல் புதுத்தெருவில் இருந்த (கடை இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை) "அணில் பட்டாசு கூட்டுறவு விற்பனை" நிலையத்தில் நான் அடம்பிடித்து வாங்கிய 1983ஆம் ஆண்டுக்கான பட்டாசு முப்பத்தெட்டு ரூபாய் நாற்பது பைசாவிற்கான பில் ஒன்று என்னிடம் இருக்கிறது.

நாற்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் கூட, பை கொள்ளாமல் நிரம்பி வழியும் பட்டாசுகளுடன் வீடு திரும்பிய காலம் அது. தீபாவளிக்கு இரு வாரங்கள் முன்பே, அணில் படம் போட்ட விலைப்பட்டியல் ஒன்றை அப்பா வாங்கி வந்து விடுவார். எனது பள்ளிப்புத்தகங்களில் குடியிருக்கும் "அணில்" என்னுடனே பள்ளி சென்று வரும். எந்த பாடம் படிக்கிறேனோ, அந்தப் புத்தகத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும். நூறு ரூபாயில் துவங்கும் அந்த வருடத்திற்கான பட்டாசு கனவு, தினமும், "காசை கரியாக்காதே" "உபயோகமாக செலவழி" போன்ற பொருளாதார மேம்பாட்டு அறிவுரைகளினால் தேய்ந்து, நாற்பதில் வந்து நிற்கும். கடலில் குளிக்க நினைக்கும் ஒருவன், கப்பில் நீர் பிடித்து கால் கழுவுவது போன்ற வேறுபாடு அது.

இவ்வளவு தான் பட்ஜெட் என்று உறுதியானவுடன், ஆயிரம் வாலாக்கள் அமைதியாக உறங்கி விட, லட்சுமி வெடி போன்ற, "குறைந்த விலை, அதிக சத்தம், நிறைய பேப்பர்" போன்ற "நடுத்தர வர்க்கத்தின் நண்பர்கள்" வகை பட்டாசுகளை "டிக்" செய்து, "எத்தனை" என்ற column கீழ், பத்தில் எழுதத் துவங்கி, இரண்டு வாரங்களில், அது மூன்று , நான்கு என்று மாறி, எங்கோ துவங்கி எங்கோ முடித்தாலும், அந்த சிறிய தொகையிலும், மனதையும் கையையும் நிறைத்தன அன்றைய தீபாவளிகள்.

நன்றாக நினைவிருக்கிறது அந்த 1983 தீபாவளி. என் அப்பாவுடன் நான் மேற்சொன்ன "அணில்" கடையில் நின்றிருந்தேன். நன்றாக இருட்டி விட்ட வேளை. லேசான தூறல்கள் பட்டாசு வெடிக்க முடியாமல் போய் விடுமோ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஒரு நாள் கழித்து தீபாவளி. கடையிலிருக்கும் அனைத்தையும் வாங்கி வெடிக்க முடியாதா என்று நினைக்கும் வயது. பட்டாசுகளை நவராத்திரி கொலு பொம்மைகள் போல படிகளில் அடுக்கி வைத்திருந்தார்கள். அந்த பொம்மைகளின் நடுவே ஒரு பொம்மைபோல ஒரு ரேடியோவும் இருந்தது. "அப்படி இல்லை. தம்பி எவ்வளவு நல்லா..."என்று ஒருவர் சொல்லும், பல‌ முறை கேட்டும் சலிக்காத அந்த பாடலின் ["அமுதே தமிழே" / Suseela , Uma Ramanan / கோவில் புறா / 1981] துவக்கத்தை அப்போதுதான் முதல் முறையாக கேட்டேன்.

"அமுதே தமிழே" பாடலை, குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் சரணங்களுக்கு முன்னர் வரும் இசையை, அதன் நடுவில் வரும் புல்லாங்குழலை, இறங்கு வெய்யில், மரங்களுக்கிடையில் பேருந்தை துரத்தி நம் மேல் விட்டு விட்டு சுடும் மாலைப் பொழுதில், எதிர்காத்து முகத்தில் அறைய ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி கேட்டுப் பாருங்கள்!

இந்தப் பாடல் "கோவில் புறா" என்று கண்டறிந்து, அதன் மூலம் "வேதம் நீ" மற்றும் "சங்கீதமே" பாடல்களுக்குள் நுழைந்து...

"வேதம் நீ" பாடலில் வார்த்தைகளுக்கு சேதாரம் இல்லாமல், இசையின் funnel எடுத்து நேராக நம் மனக்குழிக்குள் சொருகி வரிகளை ஊற்றும் வேலையை இளையராஜா செய்கிறார்.

பட்டாசு வாங்கும் பொழுது பிடித்த கோவில் புறாவின் அழகில் பல ஆண்டுகள் வளர்ந்த‌ பின், தஞ்சாவூரிலிருந்து ஒரு பின்னிரவு பேருந்து ஏறி விடியலில் நாலு மணி அளவில் மதுரையில் இறங்கி உள்ளூர் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தேன். டீக்கடையில் பாய்லர்கள் முதல் கொதிநீருக்கான தங்கள் தினத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்தன. சட்டென்று மணிக்கட்டு நரம்பை சுண்டிவிட்டது போல "சங்கீதமே" பாடலின் துவக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி வரும் அந்த guitar stroke, நாதஸ்வரம் மற்றும் ஜானகியின்  humming  பேருந்து நிலையத்தையே ஒரு சோகக் கரைசலில் முக்கி எடுப்பது போல ஒலித்தது...

கிடாரின் மேல் நாதஸ்வரம் உட்கார்ந்தால் நாம் என்னாவோம் என்பதை நமக்கு இளையராஜாவைத் தவிர யார் உணர்த்தியிருக்கிறார்கள்?

"பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்" என்னும் வரி நமக்கு புரியத்துவங்கும் பொழுது நாம் வாழ்க்கையில் திரும்ப முடியாத தொலைவில் வயது நம்மை வைத்து விடுகிறது இல்லையா? அப்பொழுது நமக்கு நாமே "ஆதாரம் என நான் தேடியது ஆகாததென ஏன் ஆகியது?" என்று கேள்வி கேட்டுக் கொள்வோமோ?

Thursday, September 6, 2012

24. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 14


நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் காலம் வரையும் ஓவியம் என்று சொல்லலாம் இல்லையா? ஒரு முறை வரைந்த ஓவியத்தை காலம் பெரும்பாலும் மறுபடி வரைவதே இல்லை. மறுமுறை வரைந்தாலும் அதன் "வண்ணம்" முன்னர் வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணம் போல் இருப்பதே இல்லை. காலம் வரைந்த அத்தகைய ஓவியங்களை நாம் மீண்டும் மீண்டும் துடைத்து வாழ்க்கைச்சுவரில் அடிக்கப்பட்ட‌ வயதின் ஆணியில் மாட்டுவதுதான் நினைவு என்பதோ?

செந்தில் குமார் அன்று "ஊரெல்லாம் உன் பாட்டுதான்" பாடலை குழலில் வடித்தபின், "உங்களுக்கு இந்த பாட்டில் எந்த வரி பிடிக்கும்?" என்றார். "ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி" என்றேன். சூழலுக்கு பொருத்தமாக நாங்கள் அமர்ந்திருந்த ஆலமரமும், தனது மகிழ்ச்சியை காட்டுவது போல் விழுதுகளை லேசாக அசைத்தபடி இருந்தது. அந்த வரியை ஒருமுறை பாடிப் பார்த்த அவர், "நீங்கள் நினைவுகளை விழுது போல பார்க்கிறீர்கள். நாங்கள் விழுதை நினைவாக பார்க்கிறோம்." என்றார். நாக்கின் மேல் கல்லை வைத்தது போல நகர்த்த முடியாத‌ வார்த்தைகளுடன் நின்றேன் நான்.

இந்தப் பாடலை ஊன்றி கவனித்தால்,

மூன்று விதமாக பாடப்படும், மூன்று முறை வரும் இந்தப் பாடலில் ஒரே ஒரு சொல் மட்டுமே மாறுபடும். நினைவுகள் (நினைவுகளினால்?) வாடுவதற்கும் வாழ்வதற்கும் உண்டான வித்தியாசமே அது.

ஸ்வர்ணலதா பாடுவதில், உள்ளத்தில் ஆடும் உணர்வின் அண்மையும், ஜேசுதாஸ் பாடுவதில், நழுவிக் கொண்டிருக்கும் உணர்வில் நாட்டம் கொள்ளும் தன்மையும், இளையராஜா பாடுவதில் ஒன்றில் ஒட்டியிருந்தும் எட்டி நிற்கும் பன்மையும் வெளிப்படும். அதற்கு அச்சாரம் போடுவது போல, பாடலின் துவக்கத்தில் வரும் கிடார் ஸ்வர்ணலதாவுடனும் ஜேசுதாசுடனும் வெவ்வேறு "கனம்" தாங்கித் துவங்கும். இளையராஜாவிடம் இந்தத் துவக்கமே இராது.

இந்த‌ உணர்வுகளின் திரியை பிரித்துக் காட்டும் விதமாக, மூன்று பேரின் பாடல்களிலும் இசையின் அமைப்பு ஆங்காங்கே வேறுபடும்.

ஸ்வர்ணலதா மற்றும் ஜேசுதாஸ் பாடும் இரண்டு பாடல்களிலும், சரணங்களின் வரிகளுக்கு அடியிலும் இடையிலும்  வயலின் அமைதி காத்து, "பாதச்சுவடுகள் போகும்" மற்றும் "ஆலம் விழுதுகள் போலே" ஆகிய வரிகளுக்கு முன் மீண்டும் தலை தூக்கி, இரண்டே வரிகளில் அடங்கி விடும்.

இளையராஜா பாடுவதை கேளுங்கள்...ஒரே சரணம் தான். அந்த சரணத்தின் துவக்கத்தில் வருவதும் மற்ற இருவர் பாடுகையில் வரும் அதே வயலின் தான். ஆனால் இப்போது புல்லாங்குழல் என்னும் "பாத்திரம்" வயலினிலிருந்து வழியும் உணர்வை, அதே வடிவில் தேக்கி வைத்துக் கொள்ள உடன் வருகிறது!

ஒரு அகலமான சாலையில் நாம் பயணம் செய்யும் பொழுது, ஒரு கீறலாக கிளம்பி, எங்கோ நீண்டு கொண்டு போகும் ஒற்றையடிப் பாதைகள் போல, அந்த பாதை எங்கு போகுமோ என்று நம்மை நினைக்க வைப்பது போல, ஒவ்வொரு வரியின் முடிவிலும் புல்லாங்குழல் நீண்டு புரள்கிறது...

மற்ற இருவர் பாடுகையில் "ஆலம் விழுதுகள் போலே" வரிகளின் வேரில் பொங்கி வழியும் வயலின், இளையராஜாவின் ஆலம் விழுதில் அமைதியாகி மறைந்து விடும்! அந்த அமைதியின் ஆழத்தை மேலும் தோண்ட முயல்கிறது தபேலா. அதில் சிதறும் நினைவை கொத்தியெடுத்து நம் மீதே மீண்டும் பூசுகிறது அதனுடன் வரும் கப்பாஸ். அவ்வாறு மறைந்து போன அதே வயலின், அந்த இரண்டு வரிகள் முடிந்தபின் மீண்டு வந்து காற்றில் நீந்துவது மற்ற இருவரின் அதே வரிகளில் கிடையாது!

செந்தில் குமார் வாசித்த புல்லாங்குழலின் வழியே காலம் வரைந்து போன அந்த மதியம் கடந்து சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து, நான் MCA இறுதி ஆண்டில் இருந்தேன். தினமும் பசுமலை பள்ளியை கடந்து தான் எங்கள் கல்லூரிக்கு போய் வர வேண்டும். ஒரு நாள் மாலை நான் திருப்பரங்குன்றத்திலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். பசுமலை bus stop அருகில் அவரை போன்ற‌ ஒருவர், ஒரு பெண்மணியுடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நான் பேருந்திலிருந்து இறங்கி, அவர் அருகே சென்று "நீங்கள் செந்தில் குமார்தானே..." என்றேன். எனக்கு இருந்த சிறிதளவு சந்தேகம் கூட இல்லாமல் "என்ன குமரன் எப்படி இருக்கீங்க" என்றார் தாமதமின்றி. அவரின் மனைவியை அறிமுகப்படுத்தி, இருவருமே இசைப்பள்ளியில் பணிபுரிவதாக சொன்னார். செந்தில் குமாருக்கு இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரி "விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம்தான்". அவர் மனைவிக்கும் அது பிடித்த வரியாக இருக்கக் கூடும் என்பது, அவர்களிடம் விடைபெற்று பேருந்தில் ஏறிய பின்,  அவர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடி தொலைவில் நடப்பதை பார்க்கையில் தோன்றியது.

"ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி". அந்த விழுதுகளின் அர்த்தத்தைத் தானே நாம் நிகழ்காலத்தில் தேடி, எதிர்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?

Saturday, August 25, 2012

23. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 13


ஒரு பாடல் எப்பொழுது, எப்படி நம் மனதுக்குள் இறங்குகிறது? இந்த உலகை நிர்வகிக்கும் காலத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்றோ? ஏதோ ஒரு நிகழ்வில் ஒரு பாடல் முழுதுமோ அல்லது அதன் ஒரு துளியோ நம் காதில் விழுகிறது. அதை நாம் கேட்ட நொடியில், பிறகு பலமுறை கேட்கும் நொடிகள் உரசி உரசி காலத்தின் இழை பாடலுக்குள் நுழைந்து மேலும் மேலும் நினைவுகளை கோர்த்துக் கொண்டே போகிறது இல்லையா? இதில் மனதுக்குள் இறங்கிய நொடி என்று எதை அடையாளப்படுத்துவது?

இப்படித்தான், நான் B.Sc படித்துக் கொண்டிருந்த பொழுது, பசுமலை பள்ளியில் பார்வையற்றோர் எழுதும் தேர்வுக்கு எங்கள் கல்லூரி மூலம் சென்றிருந்தேன். அவர்கள் விடை சொல்லச் சொல்ல‌ நாம் எழுத வேண்டும். செந்தில் குமார் என்பவருக்கு தேர்வு எழுத நான் அவர் அருகில் அமர்ந்தேன். அவர், பிறந்த பொழுதிலிருந்து மனதின் மூலமே உலகைப்பார்த்து வளர்ந்தவர். பசுமலையில், சாலையில் இருந்து நீண்டு அடிவாரத்தில் முடியும் அழகிய பாதையின் முடிவில் இருந்தது தேர்வு அறை.

செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, "நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது". எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம் வரை நடந்து வருவோம். சரியான இடங்களில்,  தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை "hum" செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.

அப்படிப்பட்ட தேர்வு முடிந்த வெயில் நிறைந்த மதிய வேளை ஒன்றில் தான் அவர் "ஊரெல்லாம் உன் பாட்டுதான்" (ஊரெல்லாம் உன் பாட்டு / 1991 / 3 versions Yesudoss, Swarnalatha, Ilayaraja) - முணுமுணுத்தபடி மூன்றாக மடித்திருந்த தன் ஊன்றுகோலை பிரித்து நீட்டிக் கொண்டிருந்தார். இந்தப் பாடல் மூன்று பேரால், மூன்று வெவ்வேறு இசைத் தளங்களில், மூன்று முறை பாடப்படும். இந்த மூன்று  மூன்று வெவ்வேறான உணர்வின் ரேகைகளை மனதில் வரையக்கூடியவை. எனக்கு இரண்டாம் stanzaவில் வரும் வயலின் மீது ஒரு அதீத பிடிப்பு. இளையராஜா பாடும் version ஒரு stanza மட்டுமே கொண்டது என்றாலும் அதிலும் இந்த வயலின் கோர்வை வரும்.

இசைக் கல்லூரியில் பயிலும் அவரிடம் இந்தப் பாட்டின் இரண்டாம் stanza வயலின் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது அதை உங்கள் புல்லாங்குழலில் வாசியுங்களேன் என்றேன். லேசாக சிரித்தபடி தன் ஜோல்னா பையை தடவிக்கொண்டார். அதனுள் உறங்கிக்கொண்டிருக்கும் குழலை எழுப்பினாரோ என்னவோ...

சற்று தூரம் நடந்த பின், அடிவேர்கள் பரந்திருந்த ஆல மரத்தின் அடியிலிருந்த சிமிண்ட் திட்டில் அமர்ந்து புல்லாங்குழலை வெளியில் எடுத்தார். காலத்தின் துளைகளில் நினைவை இட்டு நிரப்பக் காத்திருந்தது போல பேசாமல் இருந்தது அந்த புல்லாங்குழல். பெருகி வரும் காட்டருவியின் நீர் பிரிந்து, சிற்றோடை போல இரு கரைகளிலும் இருக்கும் சிறு சிறு பாறைகளின் நடுவே காலகாலமாக வழிந்தோடி வழிந்தோடி, பச்சை பூத்து ஒரு வாசம் வீசுமே..அந்த சூழலையும் அந்த வாசனையும் நுகரும் பொழுது ஒரு உணர்வு தோன்றுமே...அதைப்போன்றதொரு உணர்வை பீறிட்டு கிளப்பியது அவர் வாசித்த "ஊரெல்லாம் உன் பாட்டு".

அந்த இரண்டாம் stanza  துவக்கத்தில் வரும் வயலின் நடுவே, வயலினை வைத்தே ஒரு ஒற்றை stroke போட்டிருப்பார் இளையராஜா...அதை அப்படியே புல்லாங்குழலில், ஒரு காலத்துகளுக்குள் நினைவின் ஒரு சொட்டை தொட்டு எடுப்பது போல், குழலின் துளையில் விரலை வைத்தெடுத்து வாசித்தார் செந்தில் குமார். பாடலின் ஒரு மிக அற்புதமான நொடிக்குள் நம்மைத் தூக்கியெறியும் அந்த வயலின் நொடிகள்...ஒருவேளை அந்த இரண்டாம் stanzaவில் முழுவதுமே புல்லாங்குழலை வைத்திருக்கலாமோ இளையராஜா என்றேன் நான். இது நடந்தது 1993ல்.

இந்தப் பாடலில் வரும் கப்பாஸில் ஒரு மாயம் இருக்கிறது. நதியோ, அருவியோ ‍ ஏதோ ஒரு நீரோட்டத்தில் கால்களை ஆட்டியபடி இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். எத்தனை வேறுபட்ட வேகத்தில் கால்கள் ஆடத்துவங்கினாலும், பாடல் செல்ல செல்ல, தானாகவே அந்த கப்பாஸ் ஒலிக்கும் இடைவெளியின் லயத்திற்கேற்றவாறே நம் கால்கள் நீரில் அலையத்துவங்கும்!

இந்தப் பாடல் பற்றி ஒரு பதிவில் முடிக்க இயலவில்லை. காலத்தின் நீள அகலங்களை நம் வசதிக்கேற்றபடி நீட்டவோ சுருக்கவோ, நினைக்கவோ மறக்கவோ நமக்கு உரிமை இருக்கிறதா என்ன? காலம் வரையும் வடிவத்திற்கேற்றவாறு படிந்து கிடக்கும் ஞாபகங்கள் தானே நம் மனதின் வடிவம்? எனவே அடுத்த பதிவிலும் "ஊரெல்லாம் உன் பாட்டு" தொடரும்...

Saturday, August 11, 2012

22. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 12


நமது வேர்கள் மூன்று விதமாக மண்ணில் படிந்திருக்கக் கூடும். ஒன்று - நகரத்திலேயே பிறந்து வளர்ந்து, கிராமங்களின் வாசனையை வாகனங்களில் கடக்கும் பொழுது மட்டும் நுகரும் வகை. இரண்டு - முந்தைய தலைமுறை கிராமத்தில் இருந்து, இன்றைய தலைமுறை நகரத்திற்கு மாறி, நினைவில்   மட்டும் கிராமங்களை சுமக்கும் நிலை. மூன்று - விட்ட குறை தொட்ட குறை கிராமத்தில் தொடர, என்றோ ஒரு நாள், நகரத்திலிருந்து கிராமம் சென்று நினைவை அறுவடை செய்து வருபவர்கள். வகைகள் மூன்று என்றாலும் அதன் வாசனை ஒன்றே!

சமீபத்தில் ஒரு பிற்பகல் வேளையில் மதுரை காரியாபட்டி அருகில் இருக்கும் எங்கள் "விட்ட குறை" கிராமத்திற்கு சென்றிருந்தேன். முன்பெல்லாம் மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். இப்போது கிராமம் வரை பஸ் போகிறது. ஆனால் அந்த நடையில் ஒரு சுகம் உண்டு. கால சுகம். புதிதாக போடப்படும் தார் சாலைகளில் நாம் நடக்கையில் செருப்பில் தார் ஒட்டுவது போல, சில சாலைகளில் நாம் நடக்கையில் கால்களில் காலம் ஒட்டிக் கொள்ளும். இது போன்ற‌ சாலைகளில் தாருக்குப் பதில் காலத்தை உருக்கி ஊற்றி விட்டார்களோ என்னவோ? அது இழுக்கும் இழுப்பில் நடையின் வேகம் தானாகவே தடைபடும். ஊருக்குள் செல்லும் பஸ்சை வேண்டுமென்றே தவறவிட்டு நடந்தேன். பஸ்ஸில் இருப்பவர்கள் பார்வையில் ஒரு பைத்தியக்காரன் நடந்து கொண்டிருந்தான். காலத்துடன் உறவாட சில சமயம் சற்று பைத்தியக்காரத்தனம் தேவைப்படுகிறது இல்லையா?

சிறு வயதில் கிராமத்துக்கு போகையில் எப்போது "கண்மாய்" பக்கம் போவாம் என்று இருக்கும். "சும்மா சும்மா" கண்மாய் பக்கம் போக வீட்டில் விட மாட்டார்கள் என்பதால் மதுரையில் இருந்து வேண்டுமென்றே "இயற்கை அழைப்பை" அடக்கிக் கொண்டு கிராமத்திற்கு போன நாட்கள் அவை. இப்படித்தான் ஏழாம் வகுப்பு விடுமுறையில் கிராமத்திற்கு "ஆர்வமுடன்" சென்றேன். வீடு முழுவதும் ஒரு சடங்கிற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருக்க, யாருமறியாது கண்மாய் கரையோரம் நழுவினேன். கருக்கல் நேரம். கருவேல மரங்களின் ஒல்லியான நிழல்கள் கரையெங்கும் பரவியிருக்க, முட்டியளவு நீர் "சளக் சளக்" என்று அசைந்து கொடுக்க, நீர் அருகே அமர்ந்தேன். கண்மாயின் மறுபுறம் இருக்கும் காட்டில் முயல், நரிகள் உண்டு. ஏதேனும் கண்ணில் தெரிகிறதா என்று பார்த்த கண்களை மூட வைத்தது காது. எங்கள் கிராமத்திற்கு அருகே "நரிக்குடி" என்றொரு ஊர். அந்த ஊர் இருக்கும் திசையிலிருந்து காற்றில் பறக்கும் இலை போன்ற ஏறி இறங்கி, அங்கும் இங்கும் ஒழுங்கின்றி திரிந்தபடி காதுக்கு வந்தது "கண்ணா உன்னை தேடுகிறேன்" (உனக்காகவே வாழ்கிறேன் / 1986 / Ilayaraja / SPB - Janaki).

இது ஒரு சாதாரணமான பாடல்தான். ஆனால், கேட்பவர்களுக்கு தங்களுக்கென தயார் செய்யப்பட்ட ஞாபகங்களை தரக்கூடிய மந்திரச் சாவியினால் இப்பாட்டினைப் பூட்டியிருப்பார் இளையராஜா. காற்றின் கைவரிசையால் இந்த பாடலில் வரும் அழகான வயலின் இடங்கள், குறிப்பாக இரண்டாம் stanza துவக்கத்தில் விட்டு விட்டு  வரும் வயலின் இசை, கண்மாயின் இரு கரைகளிலும் மாறி மாறி குதித்து வருவது போல இருந்தது. அதே போல், பாடலின் துவக்கத்தில் வரும் வயலின்,  வீசும் காற்றில் கிராமத்தையே தட்டாமாலை சுற்றுவது போல இருந்தது. எண்பதுகளின் நடுவில் "உண்மையான‌ காதல்" செய்ய முயன்று அல்லது செய்து உழன்று, இன்று முதுமையின் அருகே இருக்கும் பலருக்கும் இந்தப் பாடலின் "ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை" வரிகள் இன்றும் ஞாபகம் இருக்கக்கூடும்.

இந்தப் பாடல் முடிந்ததும் "கால் கழுவ" மனமின்றி அப்படியே அமர வைக்கும் விதமாக வந்தது அதே படத்தின் "இளஞ்சோலை பூத்ததா..." . இந்தப் பாடல் ஆரம்பத்தில் வரும் SPB குரலும் புல்லாங்குழலும், நீரோட்டம் உள்ள இடத்தில், வானமே கூரையாக நாம் அமர்ந்து கேட்கும் பொழுது மாறுபட்ட அனுபவம் தருவது நிச்சயம். கவிதை வரியின் ஆழத்திற்கு வெகு அருகில் நம்மை இட்டுச் செல்லும் "ஒரு மௌனம் தீர்ந்தது" போன்ற வரிகள் வைரமுத்துவை எளிதாய் அடையாளம் காட்டும்.

நிறைய நேரம் ஆகி விட்டது போலும்...வீட்டிலிருந்து ஆள் தேடி வருவதும் உரத்த குரலில் என்னை அழைப்பதும் தொலைவில் தெரிந்தது. எத்தனை திட்டுக்கள் வாங்கினாலும் அவை இந்த ஞாபக தட்டுக்களை சேகரிக்க உதவியதாகவே இருந்தது அன்று.

சமீபத்திய பயணத்தில், அன்று கேட்ட அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன் நான். கண்மாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. ஆடுகள் "மே(ய்) மே(ய்)" என்றபடி மேய்ந்து கொண்டிருந்தன. மண்ணுக்கும் நமக்குமான இன்றைய உறவை சொல்வது போல பாளம் பாளமாக தரை வெடித்திருந்தது. "கண்ணா உன்னை" பாடல் ஒலிப்பது போலவே மனதுக்கு  மனதுக்குத் தோன்றியது. நரிக்குடி பக்கம் கவனித்துப் பார்த்தும் காற்றின் ஒலி கூட கேட்கவில்லை.பாட்டு ஒலிக்க வேண்டும் என்ற எண்ணமா அல்லது ஏற்கனவே ஒலித்த கால பிம்பமா என்று யோசிக்கத் தேவையின்றி என்னைப் பின்னிழுத்துக் கொண்டிருந்தது காலம். ஒரு முறை கொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் நினைக்க வைப்பது தானே காலத்தின் மூளை! அதில் மூழ்கி மூழ்கி எழுவதுதானே மனதின் வேலை!

Friday, July 27, 2012

21. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 11


ஒரு பாடலுக்குள்ளே கடல் மெதுவாக அசைந்து கொண்டிருக்க முடியுமா? "கடல்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமலேயே ஒரு பாடல் முழுதும் கடலின் வாசனை வீச முடியுமா? ஒரு பாடலே படகாக, அதன் மேல் நாம் அமர்ந்து, கடலில் மிதந்து, நினைவில் மூழ்கிக் கொண்டிருக்க முடியுமா? நிச்சயம் முடியும்.

அது என் ஏழாம் வகுப்பு ஆண்டு விடுமுறை நேரம். என் அப்பா பணிபுரிந்த நீதித்துறை சார்பில் ஊழியர்கள் மாநாடு கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது. இதை பயன்படுத்தி மாநாட்டின் முன்பின் தினங்களில் சுற்றுலாவும் சேர்க்கப்பட்டு ஊழியர்களின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர். ஒரு அதிகாலை பொழுதில் மதுரை கோர்ட் வளாகத்திலிருந்து நான்கைந்து "தீப்பெட்டி" வேன்கள் (அப்பொழுது இந்த வகை வேன்கள் மட்டுமே நிறைய பேர் சேர்ந்து பயணம் செய்வதற்கு புகழ் பெற்றிருந்தன) கிளம்பின. கடல் பார்க்கும் கனவுடன் அந்த வேன்களில் இருந்த பல சிறுவர்களில் நானும் ஒருவன்.

மதிய வேளை. உணவு நேரம். திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் காற்று நம்மை இழுத்துக் கொண்டு போய்விடும் என்று தோன்றிய அத்துவான காட்டில் வேன்கள் நிறுத்தப்பட்டன. சுற்றிலும் வான் தொடும் விசிறிகள் காற்றின் வேகத்திற்கு சுற்றிக் கொண்டிருந்தன. நாங்கள் இருந்த இடம், ஆசியாவில் அதிவேக காற்று வீசும் இடமான ஆரல்வாய்மொழி. கடல் எப்போது கண்ணில் தெரியும் என்ற ஏக்கமும் உணவின் ஊக்கமுமாய் வேகமாக சாப்பிட்டு முடிக்கையில் ஒரு வித "வாசனை" பிடிபட்டது. ஆம். கடலின் விரல் நம் மூக்கை தொடப்பார்க்கும் இடம் ஆரல்வாய்மொழி. "இன்னும் சற்று தொலைவில் தான் நான் இருக்கிறேன் வா" என்று காற்று மூலம் கடல் தெரிவிக்கும் இடங்கள் நம் மனதில் சட்டென்று ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். ஆரல்வாய்மொழியும் அத்தகைய இடமே...

உணவுக்குப் பின் சற்று நேரம் ஓய்வுக்கு விடப்பட்டது. வேன் டிரைவர் cassette playerரில் பாடல்கள் போட்டு விட்டு சீட்டில் சற்று அசந்திருந்தார். நாங்கள் வேன்களை சுற்றி "ஓடிப் பிடித்து" விளையாடிக் கொண்டிருந்தோம். என் வயதுக்குள் இளையராஜா கடலை ஊற்றப் போகிறார் என்று அப்போது தெரியாது. வரிசையாக வந்து கொண்டிருந்த பாடல்களின் நடுவே
தாலாட்டத் துவங்கியது வானம்! இந்த பாடலின் வசீகரத்தினால் நான் அன்று மெதுவாக ஓடி பலமுறை ஆட்டத்தில் "அவுட்" ஆனேனா என்று தெரியாது ஆனால் அந்த பேய் காற்று வீசும் ஆரல்வாய்மொழியும், மதிய நேர‌ அமைதியும் இந்தப் பாடலும் என் மனதை என்னவோ செய்திருக்க வேண்டும்.

அன்று இரவு, கடலுக்கு அருகில் இருக்கும் Vivekananda Ashram என்ற அற்புதமான இடத்தில் தங்கும் ஏற்பாடு. அந்த van driver ஒரு அசாத்தியமான இளையராஜா ரசிகராக இருக்க வேண்டும். நாங்கள் படுக்கச் செல்லும் பொழுதில், தென்னை, பனை மரங்களுக்கிடையில் "ஊ" என்று உற்சாகமாய் ஊரை சுற்றி வந்த கடல் காற்று நாங்கள் தங்கியிருந்த இடத்தையும் தழுவிப் போக மறக்கவில்லை. வேன் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு "தாலாட்டுதே வானம்" கேட்டுக் கொண்டிருந்தார். அன்று வரை, இந்தப் பாடல் காட்சியை நான் பார்த்ததில்லை. அதன் பின்னும் சில வருடங்கள் கழித்துத்தான் பாடல் வரும் காட்சியை பார்க்க நேர்ந்தது. ஆனால், அந்த அற்புத இரவிலேயே, இசையின் துடுப்பு மூலம் என்னை கரையிலிருந்து கடலுக்குள் செலுத்திக் கொண்டிருந்தார் இளையராஜா.


மறுநாள் காலை, விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி! படகில் செல்லும் பொழுது இந்தப் பாடல் ஏனோ நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. ஏன் இப்படி? என்று தெரிய ஐந்து வருடங்கள் ஆனது. அந்த இடைப்பட்ட ஐந்து வருடங்களில் இந்தப் பாடலை பலமுறை கேட்டு மனதுக்குள் பத்திரப்படுத்தியபின், வானம் இருட்டிக் கொண்டு வரும் ஒரு ஐப்பசி மாத பிற்பகலில் அதே விவேகானந்தர் பாறைக்கு போகும் படகில் காலம் என்னை ஏற்றியது.

எனக்கு முன்னரே படகில் ஏறிக் காத்திருந்தது "தாலாட்டுதே வானம்". இந்தப் பாட்டு படகில் மட்டுமா ஏறும்? கடல் முழுதும் ஏறுமே! நம் மனது முழுதும் ஊறுமே! "தள்ளாடுதே மேகம்"? மேகம் தள்ளாடுவதை பார்ப்பதற்கு நாம் கடலில் இருக்க வேண்டும். கடலின் கரங்கள் படகை அசைக்க, அந்த அசைவின் பிம்பம் போல வானத்தின் கண்ணாடியில் மேகங்கள் அசையும் காட்சி கண்ணுக்குள் புகுந்து நெஞ்சத்தை நிறைக்கும்.

இந்தப் பாடலில், பல இடங்களில், புல்லாங்குழல் மேலே நகர, அதனடியில் வயலின் நீளும். இப்படி நீளும் வயலின், பார்வையின் பரப்பில், படகின் அடியில் மோதும் அலைகள் பிடிமானம் இன்றி ஏற முயன்று, படகின் சுவர்களில் வழுக்கிக் கொண்டு மீண்டும் கடலுக்குள் விழும் அழகு போன்றது.

படகு நீரைக் கிழித்துக்கொண்டு முன்னேறுகையில் வரி வடிவங்களாய் நம்மை விட்டு நீங்கும் நீர், படகின் பின் முனையில் மறுபடியும் குழுமி நம்மைத் தொடரும் அழகியலை சொல்கிறதோ முதல் சரணத்திற்கு முன்பு வரும் வயலின்?

நம்மை வாரிச் சுருட்டிக் கொண்டு போவது போல அடுத்தடுத்து வரும் அலைகளின் உயரம் கூடிக் கொண்டே போகையில், அந்த அலைகளின் படிக்கட்டுக்களில் படகு ஏறி இறங்கும் லாவகத்துக்கு ஏற்ற லயத்தில் மனமும் ஏறி இறங்குமே...அது போன்றது இரண்டாவது சரணத்திற்கு முன்பு ஏறி இறங்கும் வயலின்.

நம் மீது ஆங்காங்கே தெறிக்கும் கடலின் துளிகள் தரும் தொடுகை உணர்வு போல  பாடலில் ஆங்காங்கே "வைத்து எடுக்கப்படும்" கப்பாஸ்!

நம் வீடுகளுக்கும் கடலுக்கும் பல நூறு மைல்கள் தொலைவு இருக்கலாம். ஆனால், வீட்டுக்குள்ளேயே கடலை வைத்திருக்கவும், விரும்பிய பொழுது "குளியல்" போடவும் உதவுகிறது இந்தப் பாடல்!

Sunday, July 15, 2012

ஆனந்த விகடனில் "பாடல் கேட்ட கதை"

இந்த வார ஆனந்த விகடன் இதழில், மதுரை என் விகடனில் வெளியான "பாடல் கேட்ட கதை" வலைப்பூ பற்றிய குறிப்பு...

Sunday, July 8, 2012

20. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 10


நம்மில் சிறு வயதில் கிரிகெட் கிறுக்கு பிடித்துத் திரியாமல் இருந்தவர்கள் மிகக் குறைவே. வாழ்க்கை நம் மேல் ஏறி விளையாடத் துவங்கியபின் விளையாட்டுக்களில் ஆர்வம் மெதுவாக நம் மீதிருந்து இறங்கி வடியத்துவங்குவதுதான் வயதின் இயல்பு இல்லையா?

நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். முதல் "unit test" - chemistry தேர்வு தினம். எங்கள் பள்ளி மைதானத்தில் TVS Srichakra அணிக்காக league cricket விளையாட அன்று  ஸ்ரீகாந்த் வந்திருந்தார். அவரையும் அவர் ஆட்டத்தையும் பார்க்கும் ஆர்வத்தில், தேர்வுத்தாளில் பேனா பெருவேகம் கொண்டு ஓடியது. சொற்ப நேரத்தில் அரையும் குறையுமாக அவசரத்தில் அள்ளித் தெளித்த விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்து விட்டு மைதானத்திற்கு ஓடிய அந்த தினத்தில், chemistry பாடத்தை விட‌ கிரிகெட்டே மனதை ஆக்ரமித்திருந்தது வயது.

மைதானம் என்றவுடன் பெரிதாக கற்பனை செய்ய வேண்டாம். ஆனால் எங்கள் பள்ளி மைதானம் அழகானது. நீள்வட்ட வடிவில், சீரிய இடைவெளியில் சுற்றிலும் மரங்களுடன் இருக்கும். இரண்டு முனைகளில் இருக்கும் மின்சார கம்பங்கள் மட்டுமே சற்று இடையூறு போலத் தோன்றும். நான் தேர்வு அறையிலிருந்து ஓடி வந்த பொழுது ஒரு விக்கெட் விழுந்திருந்தது.  ஸ்ரீகாந்த் நான்காவதாகத்தான் வருவார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.  அவரைப் பார்க்க நல்ல கூட்டம்.  எட்டிப் பார்த்தும் இடையில் நுழைந்து பார்த்தும் அவர் அரைகுறையாகத் தான் தெரிந்தார்.ஆட்டத்தையும் ஸ்ரீகாந்தையும் நன்றாக பார்க்க‌, நாங்கள் "மரக்குரங்கு" விளையாடும் மரம் நோக்கி வேக நடை போட்டேன். மரக்குரங்கு விளையாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பொருள் நயத்துடன் இந்த விளையாட்டுக்கு பெயர் வைத்தவர் யாரோ? எல்லா மரங்களிலும் மரக்குரங்கு விளையாட முடியாது. குறைந்த உயரத்தில் நிறைய கிளைகள் பிரியும் மரமே இந்த விளையாட்டுக்கு ஏற்றது. மைதானத்தில் இருந்த சுமார் ஐம்பது மரங்களில் 2 மரங்கள் மட்டுமே "மரங்குரங்கு மரங்கள்".

மரக்குரங்கு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். இன்னும் இரண்டு விக்கெட்டுகள் விழ பலத்த ஆரவாரத்திற்கு இடையே ஆட வந்தார்  ஸ்ரீகாந்த். முதல் பந்து, கண் சிமிட்டும் நேரத்தில், மைதானம் தாண்டி, பள்ளி தாண்டி, இரண்டு தெருக்கள் தாண்டியிருந்த ராமர் கோவில் உள்ளே போய் விழுந்தது. தேர்வை அவசரமாக எழுதியது வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி, அடுத்த பந்திலேயே காற்றிறங்கிய பலூன் போல ஆனது. மீண்டும் அதே போல் அடிக்க முயன்று "போல்ட்" ஆனார்  ஸ்ரீகாந்த். அவரின் மேல் கோபம் கோபமாக வர ஏமாற்றத்துடன் மரத்திலிருந்து இறங்கினேன். அவரின் ஆட்டத்தை மட்டுமே பார்க்க வந்த கூட்டம் கலைந்தது. மெதுவாக "team" அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு இருந்த சில உள்ளூர் வீரர்கள் transistor ஒன்றில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர். திருநெல்வேலி வானொலி நிலையம் என்று ஞாபகம். ஸ்ரீகாந்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த என் காதுகளில் நுழைந்து கொண்டிருந்தது "என் ஜீவன் பாடுது"...[நீதானா அந்த(க்) குயில் / 1986 / இளையராஜா / ஜேசுதாஸ்]

இந்த பாடல் நம் மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை ஏற்றி வைக்கும் இயல்புடையது. இளையராஜாவின் இவ்வகைப் பாடல்கள் சில சூழ்நிலைகளில் கேட்கும் பொழுது நம்மை அப்படியே விழுங்கி விடும். இந்தப் பாடலும் அப்படித்தான். இதன் அடியில் வழியும் உணர்வு மதிய நேரத்தில் கேட்கும் பொழுது வீரியம் மிக்கதாக தோன்றும்.

ஏதேனும் ஒரு மதிய வேளையில்,

இந்தப் பாடலை, ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில், ஒரு மர நிழலில் கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, பாழடைந்த பழைய கால கோயில் அருகிலோ சிதிலமடைந்த‌ கட்டடங்கள் அருகிலோ கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, பாறைகள் நிறைந்த குன்றின் மீதேறி போகையில் கேட்டிருக்கிறீர்களா?

இந்தப் பாடலை, காலி செய்யப்பட்டு நன்றாய் கழுவி விடப்பட்ட, பொருட்கள் ஏதுமற்ற வீட்டுக்குள் கேட்டிருக்கிறீர்களா?

இவையனைத்தும் இந்த "பாறாங்கல்லை" நம் மீது ஏற்றி வைக்க பயன்படும் இடங்கள்.

பாடல் துவங்கும் பொழுது, ஞாபகக் குடுவையில் ஊற்றிய நினைவின் திரவத்தை காலத்தின் அடுப்பில் guitar மூலம் பற்ற வைப்பார் இளையராஜா. பாடல் முழுவதுமே இந்த கிடார், தழல் போல் அடியில் எரிந்து கொண்டே இருக்கும். நினைவு திரவத்தை கிண்டி விடும் அகப்பை போல அடியிலும் மேலுமாக சுற்றிக் கொண்டிருக்கும் வயலின். ஒவ்வொரு சரணத்தின் இறுதியிலும் உச்சத்திற்கு சென்று சட்டென்று உடைந்து போகும் அந்த வயலின் - நம் நினைவு கொதித்து, அடுப்பு முழுதும் பெருகி வழிந்து சிதறும் உணர்வின் துகள்கள் உடைபடுவதுதான் அந்த உச்சத்தில் சட்டென்று முறியும் வயலினோ? வழிந்தொடும் நினைவை மீண்டும் அள்ளி கோப்பைக்குள் எப்படி போடுவது? இளையராஜாவின் உதவியுடன் கோப்பைக்குள் போட முயற்சிக்கலாம் - பாடல் முடிந்து விட்டதோ என்று நாம் நினைக்கையில் வரும் ஜேசுதாசின் குரலையும் அதன்பின் மெலிதாக கரையும் கிடாரையும் கேளுங்கள். வழிந்தோடிய நினைவுகளையும், உடைந்து போன "கோப்பைகளின்" துகள்களையும் மெதுவாக பொறுக்க முயலும் மனதை போல அது இருக்கும்.

ஸ்ரீகாந்த் ஆடிய காலம் முடிந்து சேவக் வந்து அவருக்கும் வயதாகி அடுத்த கட்ட வீரர்களும் வந்து விட்டார்கள். ஒரு நாள் போட்டியை கூட முழுவதுமாக பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டது. ஆனால் அன்று ஸ்ரீகாந்த் முகத்தை பார்த்தபடி கேட்ட "என் ஜீவன் பாடுது" ஜீவனுக்குள்ளே ஊறியபடியே இருப்பதை என்னவென்று சொல்வது?

Saturday, June 23, 2012

19. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 9


மதுரை நகரம் முழுவதும் மத்தளம் போன்ற இடியுடன் மழை இறங்கிய ஒரு மாலை வேளை. முன்னர் கண்டிராத அளவு மூன்று நாட்கள் கொட்டித் தீர்க்கப் போகிறது மழை என்று தெரியாமல் , வழக்கமான மழை என்று நினைத்து கிடைத்த இடங்களில் ஒதுங்கினோர் ஏராளம்.சற்று நேரத்தில் நின்று விடும் என்று காத்திருந்த எண்ணற்ற பேரில் நானும் ஒருவனாய், உயர்நிலைப் பள்ளியின் முதல் ஆண்டு மாணவனாய், பழங்கானத்தம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன்...

இரண்டு பேர் சந்தித்துக் கொண்டாலே, "வாங்க காபி சாப்பிடுவோம்" என்று அருகிலுள்ள கடையில் நுழையும் மதுரை மக்களின் மனது அறிந்தே, அனைத்து பேருந்து நிறுத்தங்களின் அருகிலும் குறைந்தது ஒரு காபி கடையையாவது நீங்கள் மதுரையில் பார்க்கலாம். சூடான பாலில் சுவையான காபி தேநீர் மட்டுமல்ல, அத்துடன் வாடிக்கையாளரை மகிழ்விக்க சங்கீதமும் போடத்தெரிந்த ரசனை மிகுந்தவர்கள் மதுரை டீ கடைக் காரர்கள்.

மழைக்கு ஒதுங்கியவர்களும் காபி குடிப்போருமாய் கூட்டம் நிறைந்திருந்த கூரை வேயப்பட்ட டீக்கடையில் ஒலிக்கத்துவங்கியது "நிலவே நீ வர வேண்டும்..." [என்னருகில் நீ இருந்தால் / Ilayaraja / 1990-91]. இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் அற்புதமான கிடார், கூரையிலிருந்து மழை நீர்த்தாரைகள் தரையில் தேங்கியிருந்த தண்ணீர் மேல் விழும் தாளக்கட்டில் துள்ளத் துவங்கியது. மழையின் துளிகள் இந்த கிடாரின் இழையை பிடித்து மனதுக்குள் இறங்குவது போன்ற ஒரு உணர்வு.

காலக் கிணற்றின் மீட்க முடியாத ஆழத்தில் வீசப்பட்ட நினைவின் கல்லில் இருந்து கசியும் நீர் போல நம்முள் ஏதோ ஒன்று வழிந்து கொண்டே இருக்கும் இப்பாடல் முழுவதும். அந்த கசிவின் வடிவம் போல‌"bass guitar", மெலிதாக, அனைத்திற்கும் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் நளினம் இளையாராஜாவுக்கு மட்டுமே சாத்தியம்.

முதல் stanza ஆரம்பத்தில் வரும் அந்த புல்லாங்குழல்... அதை வாசிப்பவர் குழலின் துளைகளின் வழியே அனுப்புவது காற்றையா அல்லது நம் காலத்தையா? அல்லது புல்லாங்குழலே காலத்தின் துளைகளால் செய்யப்பட்ட கருவியா? அத்துளைகளுக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போய், "அனைத்தும் கடந்து போகும்" என்று நம்மை ஆரத்தழுவுவது போல இருக்கிறது இல்லையா?

"இணைந்து இருந்த சோலைகள் உலகை மறந்த கோலங்கள்" [1st stanza இறுதி இரண்டு வரிகள்] , "கலைந்து பிரிந்த மேகங்கள் இழந்த காதல் சோகங்கள்" [2nd stanza இறுதி இரண்டு வரிகள்] என்ற வரிகளின் பின்னே சட்டென்று சொட்டும் வயலின் துளிகளை தனியே பிரித்தெடுங்கள்...மழை பெய்து ஒய்ந்த வேளையில் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்ந்து அமர்ந்திருக்கிறீர்கள். மழையின் துளி ஜன்னலின் மேற்பகுதியிலிருந்து சொட்டி உங்கள் உச்சந்தலைக்குள் இறங்குகிறது...அந்த உணர்வின் ஊடுருவலை ப்ரதிபலிப்பது போலிருக்கும் இந்த வயலின் சொட்டுக்கள்...!

அப்படியே சற்றே பின்னால் நகர்ந்து அதற்கு முந்தைய வரிகளுக்கு அடியில் செல்லுங்கள்... "நீ இன்றி வாடுதே பூஞ்சோலை மலரே...துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே"  1st stanza] , "மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே காயங்கள் ஆனதே என் நோய்க்கு மருந்தே"  [2nd stanza]. இந்த வரிகளின் பின்னே வரும் வயலின் எப்படி இருக்கிறது? தலையில் இறங்கிய நீர்த்துளி காதோரமாய் வழிந்து நம் கன்னத்தை தாங்கியிருக்கும் கைகளில் இறங்கி அந்த துளி, கை முழுதும் பயணம் செய்து முழங்கை வழியே பேருந்தின் ஜன்னல் இரும்பில் வழிந்தோடும் நொடிகள் போன்றது அது. இங்கே வழிவது மழையின் மொழியா? வயலின் ஒலியா? வாழ்க்கையின் துளியா ?

குறிப்பு: கடந்த சில நாட்களாக, இளையராஜாவின் பாடல் London Olympics துவக்க விழாவில் இடம்பெறுவதனால் அவருக்கு அங்கீகாரம் என்று வரும் செய்திகள் குறித்த "ஆதங்கம்" படிக்க:
இளையராஜாவை நாம் இழிவு செய்கிறோமா?

Saturday, June 9, 2012

18. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 8

TV அரக்கன் ஊருக்குள் புகுந்து நேர‌த்தை தின்ன‌த் துவ‌ங்காத‌ 1980களின் ஆரம்ப வருடங்கள்...அந்த நாட்களில் ஞாயிறு மாலை நேர‌ம் என்பது ஆற்றங்கரை படிக்கட்டில் அமர்ந்து நாம் பார்க்கும் நீர் போல மெதுவாக அழகாக ஊர்ந்து போகும். எங்கள் வீட்டில் பொன்னி என்றொருவர் வேலை செய்து கொண்டிருந்தார். இவரின் தங்கை காந்தி. சில சமயங்களில் ஒருவருக்கு பதில் மற்றொருவரோ, அல்லது இருவரும் சேர்ந்தே வேலைக்கு வருவார்கள்.

சில ஞாயிறுகளில் இவர்கள் வேலை முடிந்தபின் வீட்டின் சிறார் குழுவை மொட்டை மாடிக்கு அழைத்து போவார்கள். பொன்னி அத்தகைய சமயங்களில் கதை சொல்வார். ஞாயிறு மாலைகளில் மொட்டை மாடியில் கதை கேட்பது பலாச்சுளை சுவை போன்றது என்றால், அப்போது மழை திரண்டு வந்தால், பலாச்சுளை மேல் தேன் ஊற்றியது போல இருக்கும் இல்லையா? அப்ப‌டி ஒரு தேனூறிய‌ ப‌லா போன்ற‌தொரு ஞாயிறு மாலையில் நாங்க‌ள் மொட்டை மாடியில் ஒரு க‌தையை பொன்னி சொல்ல, கேட்க‌த் துவ‌ங்கினோம்.

"இப்ப‌டியொரு இடி இடிக்கும் பொழுதில் ம‌ழைக்கு முன் வீட்டுக்கு போக‌ வேண்டும் என்று அவ‌ன்  வேகமாக‌ நடந்தான்" என்று பொன்னி ஆர‌ம்பித்த‌து ஒரு பேய் க‌தை. சிறுவ‌ய‌தில் நாம் அனைவ‌ருமே பேய் ப‌ற்றி ஒரு முறையேனும் யோசித்தோ ப‌ய‌ந்தோ இருப்போம். வ‌ள‌ர்ந்த‌ பின், ச‌மூக‌த்தில் ப‌ல‌ வித‌ கொடூர‌மான‌ பேய்களுடன் (நம்மையும் சேர்த்து) ப‌ழ‌கி, உண்மையான‌ பேயே தேவ‌லாம் என்று முதிர்ச்சி அடைந்திருப்போம்.

பொன்னி, சொல்லும் க‌தையின் சுவை கூட்ட‌ ச‌ம‌யோஜித‌மாக‌ செய‌ல்ப‌டுவார். பேய் பற்றிய கதை என்பதால், த‌ன் கூந்த‌லின் பின்ன‌லை அவிழ்த்து விட்டுக் கொண்டார். க‌ருத்து க‌விழ்ந்த‌ மேக‌ங்க‌ளின் பிண்ண‌னியில் த‌லைவிரித்திருந்த‌ பொன்னி அந்த‌ சூழ‌லுக்கு ந‌ன்றாக‌வே அச்ச‌மேற்றினார்.

இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்னரே, என் இன்னொரு அண்ணன், அப்போது பிரபலமாக இருந்த‌ "உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வ‌ச்ச‌ கிளி" பாட‌லை ("ரோசாப்பூ ர‌விக்கைக்காரி" / SPB ) கேட்டால் பயத்தில் ஓடி ஒளிந்து கொள்வார் என்று வீடு முழுதும் அறிந்திருந்தது. இந்தப் பாடலை, பொன்னி கதைக்கு  இடையிடையே பயன்படுத்திக்கொண்டார்.

இந்த‌ பாட‌ல் முழுவ‌துமே இளைய‌ராஜா ந‌ம் ம‌ன‌தை க‌ரும்பு மிஷின் உள்ளே விட்டு பிழிந்தெடுத்திருப்பார். பிழியும் வித‌த்தில் பிழிந்தால், ம‌ன‌ம் ச‌க்கையானாலும் அனுப‌வ‌த்தின் ருசி என்ப‌து அடியிலிருக்கும் பாத்திர‌த்தில் சேரும் க‌ருப்புச் சாறு போலிருக்கும் இல்லையா? பாட‌ல் ஆரம்பத்தில் வ‌ரும் இசையிலேயே சொட்ட‌த் துவ‌ங்கும் சாறு, முத‌ல்  stanza முன்ன‌ர் வரும் "ஆரீராரோ" வில் கொட்டி நிர‌ம்பும்!
மூன்றாவது stanza துவக்கத்தில் வரும் SPBயின் அந்த "தனன..."வும் அதை தொட‌ர்ந்து வ‌ரும் அந்த‌ "Cornet" இசையும், வெறித்த வானத்தின் நடுவே நகரும் ஒற்றை மேகத்தை போல ஒரு சோக நிழல் கவிழும்.

பாட‌லில் ஆங்காங்கே வ‌ரும் வ‌ய‌லினை நாம் எப்ப‌டி அர்த்த‌ப்ப‌டுத்துவ‌து? வ‌ய‌லினா அது? bowவை வயலின் மீதா இழுக்கிறார் ilayaraja ? கால‌த்தின் க‌ண்க‌ளை மூடியிருக்கும் ஞாப‌க‌ இமைக‌ளின் மீது violin bow வைத்து இழுத்த‌து போல‌ல்ல‌வா  பெருகி வ‌ழிகிற‌து துய‌ர‌த்தின் ஒலி!

க‌தை உச்ச‌க்க‌ட்ட‌த்தை நெருங்கிய‌ பொழுது, அச்ச‌த்தின் பிடியில் அம‌ர்ந்திருந்த‌ எங்க‌ளுக்கு, வாடைக் காற்றில் மொட்டை மாடி வாச‌ல் க‌த‌வு "ப‌ட் ப‌ட்" என்று எழுப்பிய‌ பெருத்த‌ ச‌த்த‌ம் கிலி கிள‌ப்பிய‌தில் விய‌ப்பில்லை. அல‌றி அடித்து ப‌டிக‌ளில் இற‌ங்கிய‌தில் த‌வ‌றி விழுந்து என் முட்டி பெய‌ர்ந்த‌து. விளையாடும் பொழுது விழுந்த‌தாக‌ வீட்டில் நினைத்துக் கொண்டார்க‌ள். "க‌தை கார‌ண‌ம்" வெளியிட்டால் இனி க‌தையே கிடையாது என்று பொன்னி சொல்லிய‌தால், பேய்க்க‌தையால் முட்டி பெய‌ர்ந்த‌ க‌தை எங்க‌ள் அனைவ‌ராலும் பெரியவர்களிடமிருந்து "அமுக்க‌ப்ப‌ட்டது".

பாட்டு வ‌ரிக‌ளின் உள்ள‌ர்த்த‌ம் தெரியாம‌ல், இது ந‌ட‌ந்து சில‌ வ‌ருட‌ங்க‌ள் வ‌ரை, பால் திரிந்தால் பேய் வ‌ரும் என்றும் ("ப‌ட்டியில‌ மாடு க‌ட்டி பால‌ க‌ற‌ந்து வ‌ச்சா..."),க‌ரும்பின் அடியில் இருக்கும் செம்ம‌ண் பார்த்து ("பொங்க‌லுக்கு பூங்க‌ருப்பு...") க‌ரையான் என்றும், க‌ருப்ப‌ட்டி பார்த்தால் ஒரு இன‌ம் தெரியாத‌ ப‌ய‌மும் ("வ‌ட்ட‌க் க‌ருப்ப‌ட்டிய‌ வாச‌முள்ள‌ ரோசாவ‌..."), பிச்சிப் பூவிலும் ம‌லைக‌ளிலும் பேய் இருக்குமென்றும்...வெளியில் சொன்னால் பொன்னியின் க‌தைக‌ள் கிடைக்காது என்ப‌தால் உள்ளேயே வைத்து கொண்டு பயத்துடன் திரிந்த‌ சிறு வ‌ய‌து நாட்க‌ள்...சீக்கிரத்தில் மறக்க முடியாது.

என்னுடன் அமர்ந்து கதை கேட்ட Lakshmi, Jayashree அக்காக்க‌ள் இருவரும் காலத்தின் ஊருக்கு மாற்றலாகிப் "போய் விட்டார்கள்". பொன்னியை பார்த்து இருப‌து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. காந்தி அன்று வெள்ளை நிற முழுக்கை ஆண் ச‌ட்டை போட்டுக் கொண்டு "ஒடாத‌ விழ‌ப்போற‌" என்று என் பின்னே ஓடி வந்தது புகை போட்ட காட்சி போலத் தெரிகிறது.

இப்பொழுதெல்லாம் இந்தப் பாடல் அதிகமாக காதில் விழுவதில்லை. சில மாதங்கள் முன் கோயப்பேடு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொழுது ஒரு கடையிலிருந்து எதிர்பாராமல் எழுந்து வந்தது "உச்சி வகுந்தெடுத்து"...சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் போனாலே முக்கால் மணியாகும்.இளையராஜாவின் இசைவாகனத்தில் ஏறினால் கண் சிமிட்டும் நேரத்தில், காத தூரம் காலவெளியில் போகலாமே...அதில் மதுரை சென்னை தூரமெல்லாம் ஒரு தூரமா? எனவே ஒரே நொடியில், கோயம்பேட்டிலிருந்து எங்கள் வீட்டு மொட்டை மாடியில் முப்பதாண்டுகள் எம்பிக் குதித்தேன்...பிச்சிப் பூ நெடியில் வழிந்தோடியது அந்த நொடி...

Friday, May 25, 2012

17. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 7

உங்களின் முதல் மலை பிரதேச பயணத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலும் அது ஊட்டி அல்லது கொடைக்கானல் என்று இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏழாம் வகுப்பு காலாண்டு விடுமுறையில் கொடைக்கானல் சென்றதே, நான் மலை அன்னையின் மடியில் ஏறி மகிழ்ச்சி பெற்ற  முதல் அனுபவம். இந்த பயணம் நேர்வதற்கு சில வாரங்கள் முன்னரே, கேட்கும் திசையெங்கும் தேநீர் கடைகளின் உபயத்தில், காதுகளில் பாய்ந்தபடி இருந்தன "இதயகோவில்" பாடல்கள். "இதயம்" என்றால் biology பாடம் தாண்டி என்னவென்றே தெரியாத வயது...

மனதின் நீரோட்டத்தில் நினைவின் குமிழ்கள் மீண்டும் எழுந்து உடைகிறது...முதல் முதலாக மலை மேல் மனம் குதிக்கும் பரவசம் பார்த்து கிட்டத்தட்ட  25 ஆண்டுகள் ஆயிற்று.பலவகை உறவுகளுடன், பலவகை உணர்வுகளுடன் கொடைக்கானல் மலையை பலமுறை ஏறி இறங்கியாயிற்று... ஒரு ஆத்மார்த்தமான தோழன் / தோழி போல,  எதிர்பார்த்து, காத்திருந்து, மலையேறும் பொழுது, ஏதோ ஒரு மலைப்பாதையின் திருப்பத்தில் திடீரென்று ஒட்டிக்   கொள்ளும் "இதய கோவில்" பாடல்கள்.

கொடைக்கானல் செல்லும் பேருந்துகள் அனைத்துமே வத்தலகுண்டு கடந்தவுடன், மலை அடிவாரத்தில் இருக்கும் கடை ஒன்றில் காபி டிபன் சாப்பிட நிறுத்துவது வழக்கம். இங்குதான் "இதய கோவிலின்" "மதில் சுவர்" தென்படத் துவங்கியது...கல் போன்ற மனமோ களிமண் போன்ற மூளையோ எதுவாயிருப்பினும் இசையின் மீது லயிப்பு ஏற்படுத்தும் இளையராஜாவின் இதய கோவில் பாடல்கள் என்னை அறியாமலே எனக்குள் ஊடுருவியது  அந்த முதல் பயணத்தில் தான்...

பேருந்து மலை ஏறத்துவங்கியவுடன், சட்டென்று வெப்பம் வடிந்து சில்லென்ற காற்று மேனியை வருட, மலை, தன்  பசுமை கூந்தலை அள்ளி முடியாது பறக்க விட்டது போல் அசையும் பச்சைகள் ஆச்சர்யமூட்ட, "கூட்டத்திலே கோவில் புறா" என்னுடன் பறந்து வந்து கொண்டே இருந்தது...ஒரு humming அல்லது ஒரு chorus இத்தனை வசீகரமாக இருக்க முடியுமா? "இதயம் ஒரு கோவில்" பாட்டின் துவக்கத்தில் வரும் அந்த SPB...[இளையராஜா பாடும் இதே பாடலின் மற்றொரு version ஆரம்பத்தில் Janaki],"வானுயர்ந்த சோலையிலே" துவக்கத்திலும் ."கூடத்திலே கோவில் புறா " இடையிலும் வரும் அந்த ஜானகி...என்று எத்தனை இனிமை ! "மலைகளின் இளவரசி உங்களை வரவேற்கிறாள்" என்னும் பலகை பார்க்கும் வரை காணும் காட்சிகளின் பின்னணி இசை போல இந்த பாடல்கள் மனதை தொடர்ந்த போது, நான் "இதய கோவிலின்" இசைத் தூண்கள் நிரம்பிய பிரகாரத்தை வலம் வரத் துவங்கியிருக்கிறேன் என்று உணரவில்லை.

இன்று பொதுக் குளியலறை போல் நீர் வழியும் "silver cascade" அன்றைய காலங்களில், ஆரவாரமாக,  "அருவி" என்ற  பெயருக்கு ஏற்ப இருந்தது...கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இறங்கி நடக்கையில், பனி நகர்வதை பார்வையில் பார்த்த அந்த முதல் நாள்...வாயிலிருந்து காற்றை ஊதி அது பனியின் வடிவமுடன் படர்வதை பார்த்த அந்த  முதல் நாள்...புற்களின் மெத்தையில் பூத்திருக்கும் நீர்த்துளியை பற்கள் நடுங்க பார்த்த அந்த முதல் நாள்...என்று எத்தனை "முதல்" அந்த ஒரே நாளில்...!

"kodaikanal lake" படகு சவாரியில் ஏரியின் நீரை ஏந்தித்  தெளித்து ஏற்பட்ட மகிழ்ச்சியின் நடுவே மழை வர, இன்னும் படகு பயணம் வேண்டும் என்று இதயம் கேட்க, வேறு வழியின்றி இடையில் இறங்கி மழைக்கு ஒதுங்க, "படகு குழாம்" எதிரே இருந்த கடையில் ஒலித்த "யார் வீட்டு ரோஜா"வும் அந்த மதிய நேர மழை காட்சியும் உயிருக்குள் காலம் ஒட்டிய ஓவியம்! சில வாரங்களுக்கு முன், ஏரியின் மீதிருந்த இருள் போர்வையை சூரியன் விலக்க சோம்பல் முறித்த ஏரியின் மேல் சாரல் விழும் அதிகாலை பொழுதில் "நடை" போடும் வாய்ப்பு கிடைத்தது...ஏரியை சுற்றி வரும் ஆளரவமற்ற சாலையில் என் மனைவியுடன் நடந்து கொண்டிருந்தேன்...மனிதர்களின் வாசனை ஏதுமின்றி மழையின் வாசனையில் ஊறியிருந்தது ஏரி ! அதிகாலை என்பதே உள்ளும் புறமும் அசுத்தமற்ற வடிவத்தின் அச்சோ?

ஏரியின் நீர்பரப்பில் சாரல் விழுந்து தண்ணீரில் தோன்றிய சிறு வட்டங்கள் ஏரியின் மேனியில் ஏற்பட்ட புல்லரிப்புகள் போல் கிளம்பி மறைந்தன.  "படகு குழாம்"! எதிரே இருந்த கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. அந்த இடத்தை நான் நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்று காலத்துக்கு தெரியும். எனவே எனக்கும் தெரிந்தது.சாலையோர மரங்களில் இருந்த இலைகளின் வழியே இறங்கிய சாரல் என்னை நனைக்கத் துவங்கியது. கால்கள் தானாக  காலத்தின் பிடியில் இறுகி மெது நடையானது. "...வான் மேகம் மோதும் மழைதனிலே நான் பாடும் பாடல் நனைகிறதே..." மாறிவிட்ட வயது...மாறி விட்ட வாழ்க்கை...இடம் மட்டும் இருபத்தி ஐந்து ஆண்டின் தடம்! இந்த பாட்டு இப்போது வெளியில் இருந்து வரவில்லை. எனக்கும் காலத்திற்கும் உண்டான தனிப்பட்ட உறவின் அம்சமாக காலம் பாடலை எனக்குள் இருந்து எடுத்து இறைத்துக் கொட்டிக் கொண்டிருந்தது போலும். "coakers walk" உள்ளே மூதாட்டியிடம் சோளம் வாங்கும் பொழுது..., "bryant park" உள்ளே சிவப்புக்கும் ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட நிறத்தில் இருந்த பூவை எப்படி இயற்கை உண்டாக்கியிருக்கிறது என்று திகைத்த போது ...என்று அன்று முழுவதும் வெவ்வேறு இடங்களில் இந்த பாடல் என் தோளேறி விளயாடிப் போனது."...பாடல் இங்கே நனைவதனாலே நனையும் வார்த்தை கரையுது இங்கே..."

இப்படித்தான், பல ஆண்டுகள் முன்பு ஒரு நாள், வெறித்திருந்த வானம் தந்த வெளிச்சமான  மதியம், "pine forest" காண நேர்ந்தது. "வானுயர்ந்த சோலையிலே" அங்கு வரவேற்றது...சட்டென்று கருக்கத்துவங்கிய வானம்...நம் மேல் விழுந்து விடுமோ என்ற கணத்துடன் நகரும் மேகம் என அந்த சூழலே மாறிப்போனது...கொட்டப்போகும் மழையை எட்டிப்பார்ப்பது போல் உயர்ந்திருந்த மரங்களும் ஊசியாய் துளைத்த காற்றும்...இந்த பாட்டின் இரண்டு சரணங்கள் முழுவதும் வரிகளின் பின்னே நீந்தித் திரியும் violin...! ஒரு வேளை  "pine forest" இறக்கங்களில் நம் நினைவுகளை  உருட்டி விட்டால் நிகழும் உணர்வும் இந்த வயலின் தரும் ஒலியிழைகளும் ஒரே ஸ்வரமோ? "வானுயர்ந்த சோலையிலே" கேட்டால் நாம் "நான் பாடும் மௌன  ராகம்" பாடலையும் தவிர்க்க இயலாது...இந்த இரண்டு பாடல்களுமே இரட்டைப்  பிறவி போல...ஒன்றினால் மற்றொன்று ஞாபகம் வரும்.இந்த பாடலில், முதல் stanza துவக்கத்தில், அழுகையின் முதல் துளி, விழுவதற்காக திரண்டு, இமையின் இரண்டு மயிரிழைகளுக்கு இடையில் நகரும் உணர்வு போல தள்ளாடும்  வயலின்...!

நீங்களும் முயன்று பாருங்கள்...அதிகாலை பொழுதில் சாரல்களின் விழுதை பிடித்தபடி ஏரியின் ஓரமாக நடந்து பாருங்கள்....இளையராஜாவின் ஏதோ ஒரு பாடல் சட்டென்று உங்கள் மனதின் விரலை பிடித்தபடி உங்களுடன் நடக்கத் துவங்கும்! அதன் வேகத்திற்கு ஒரு போதும் நாம் ஈடு கொடுக்க முடியாது - ஏனென்றால் அது ஒரு காலக்குதிரை. "லகான்"  பற்றிய  அவசியமோ அச்சமோ இல்லாத காலக்குதிரை! அதன் நாலு கால் பாய்ச்சலில் நம் பயணம் வித்தியாசமானது...ஏனென்றால், இது போன்ற காலக்குதிரையின் பாய்ச்சல் பெரும்பாலும் பின்னோக்கி இருக்கும்தானே?Saturday, May 12, 2012

16. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 6

நாம் வசிக்கும் பகுதிகளில் கட்டாயம் ஒரு மாறுபட்ட மனநிலை மனிதரையேனும் நாம் அடிக்கடி கடந்து வந்திருப்போம்...இவர்களுக்கு, நாமும், நம் தேவைக்கேற்ப ஒளிந்து கொள்ள நமக்கு பயன்படும் சமூகமும் சேர்ந்து "பை..." என்று பெயரும் வைத்திருப்போம். நான் பார்த்த வரையில், ஏதேனும் ஒன்றின் பின்னால் தறிகெட்டு அலையும் நமக்கு பொருந்தும் அளவு, இப்பெயர், மாறுமட்ட மனநிலை மனிதர்களுக்கு பொருந்துவதில்லை என்றே தோன்றுகிறது. இத்தகைய மனிதர் ஒருவர், சுமார் முப்பது வருடங்கள் எங்கள் தெருவில் தெருவே வீடாக குடியிருந்தார். 1970 - 2000 ஆண்டுகளுக்கு இடையில் மதுரை மைய பகுதிகளில் வசித்த எவருக்கும் இவர் அறிமுகம் தேவையில்லை.

வெள்ளை அங்கியும், நீண்ட தாடியுமாக ஆறடிக்கு மேல் ஒடிசலான தேகத்துடன் வளைய வரும் இவர், கிழக்கே விளக்குத்தூண், மேற்கே பெரியார்   பேருந்து நிலையம், வடக்கே நேதாஜி சாலை, தெற்கே வெளி வீதி என்ற எல்லைக்குள் தன்னை அடக்கிக் கொள்வார். இவர், ஒரு முறையேனும் எவரிடமும் காசு கேட்டோ பேசியோ பார்த்ததில்லை. சில சமயம் "over coat" அணிந்து கொண்டு டாக்டர் போல நடமாடுவார். பகல்களில் ஊசி வைத்து ஏதேனும் துணியை தைத்து கொண்டும் இரவுகளில் குப்பைகளை குவித்து தீ மூட்டி அதன் நாக்கையே உற்று பார்த்துகொண்டிருப்பதுமாய் கரைந்து கொண்டிருக்கும் இவர் ஜீவன். பள்ளி நாட்களில் இவர் அருகில் செல்லவே பயமாக இருக்கும். இவரை கடக்க வேண்டியிருப்பின் தெருவின் எதிர்புறம் சென்று மீண்டும் வருவது போன்ற செயல்களை சிறுவயதில் செய்திருக்கிறேன். இவரை பற்றி நான் வைத்திருந்த பிம்பத்தை சுக்கு நூறாக்கிய அந்த நாளும் வந்தது...

நான் ஒன்பதாவது படித்து கொண்டிருந்த  நேரம்.Ravi Shastri இறங்கி வந்து long on மேல் சிக்ஸ் அடிப்பது போலவும், Kapil Dev இரண்டு கால்களும் அந்தரத்தில் மடங்கியபடிஇடக்கையை (ஒரு கையால் சாமி கும்பிட்டால் எப்படி இருக்குமோ அவ்வாறு) கழுத்துக்கு கீழ் வைத்து பந்து வீசப்போகும் காட்சி போலவும் இருக்கும் அட்டை போட்ட நோட்டுக்களையே தேடி வாங்குவது என் பழக்கம். நேதாஜி சாலையில் இன்றும் இருக்கும் "insania" கடையே எங்கள் ஆஸ்தான புத்தகக்கடை.அன்றும் நோட்டு வாங்குவதற்காக இன்சானியா முன் நின்றிருந்தேன். இந்தக் கடைக்கு சற்று தள்ளியுள்ள அம்மன் கோவிலில் விழா...கடையின் இடப்பக்கம் உள்ள மூலையில் நம்மவர் சில குப்பைகளை போட்டு எரித்துக்  கொண்டிருந்தார். கடைக்காரர் சிக்ஸர் அடிக்கும் ravi shastriயை தேடிக்கொண்டிருந்தார்..."நான் வாழ வைப்பேன்" [1979 / TMS / கண்ணதாசன் / இளையராஜா] படத்திலிருந்து "எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே..." கோவில் குழாய் ஒலிபெருக்கிகளில் கசிந்து கொண்டிருந்தது...மாலை நேர கூட்டம் நடைபாதைகளில் நிரம்பியிருக்க TMS உருகும் இந்த பாட்டில் மொத்தம் 3 stanza.பொட்டல் வெளியில் பொசுக்கும் வெய்யிலில் தனியே நடக்கும் தகிப்பை கொடுக்கும் வயலினும் புல்லாங்குழலும் வரும் ஒவ்வொரு stanza துவக்கமும் இந்த பாட்டின் இளையராஜா special. திடீரென்று பீறிட்டு கிளம்பிய அழுகை ஒலி வந்த திசை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தீயை உற்று நோக்கியபடி பெரும் ஓலத்துடன் அழுத நம் நண்பருக்கும் இந்த பாட்டுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ? ஒரு வேளை "நீ வாடினால் வண்ண பூ பூ வாடுமே" என்பது போல இவரின் தோட்டத்தில்மலர வேண்டிய ஒரு பூ  வாடியதால் இவர் வாழ்வு வாடி விட்டதோ?
"கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை; நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை" என்ற ஆதங்கத்தின் உச்சத்தை தான் அவர் தீயிலே எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தாரோ? "காலம் வரும் அந்த தெய்வம் வரும் அந்த நாளும் வரும் நல்ல வாழுவும் வரும்" என்று இவர் நம்பியிருந்து, அந்த காலமும் தெய்வமும் கூட்டு சேர்ந்து இவர் வாழ்வின் மீதேறி மிதித்து கூழாக்கி விட்டதோ? 

பாட்டு முடிந்த சில  நொடிகளில் இவர் அழுகை நின்று விட்டது. பார்த்திருந்தவர்களின் மானுடம் உறைந்து போய் கிடக்க  அவர் தன் உடமைகளுடன் நடக்கத் துவங்கினார்...அன்று நள்ளிரவே நான் மொட்டை மாடியிலிருந்து பார்க்கையில் எங்கள் வீட்டருகில் இவர் மீண்டும் தீயை மூட்டியிருந்தார். "தீக்குள் விரலை வைத்தால்..." என்ற வரிக்கு ஆயிரம் அர்த்தங்கள் இல்லையா? வெள்ளைத் தாளில் வரைந்த  சோகச்சித்திரம் போல எங்கள் தெருவில் உலவிய இவர் கசங்கிய காகிதமாய் காலத்துடன் போனார்...

நாம் சாலையை கடக்கும் வேளையிலோ பேருந்து நிலையங்களின் அழுக்கான  மூலையிலோ இவர் போன்ற பலரை பார்க்கிறோம். இவர்கள் இப்படி ஆனதன் ஆதார நொடிகளின் பின்னணி இசை போல ஏதேனும் ஒரு பாடல் இவர்களுக்குள் பதிந்து, அந்த  பாடல் இவர்களின் மூளைக்குள் உலை போல் எப்போதும் கொதித்துக்கொண்டே இருக்குமோ? இவர்களை குறிக்க நாம் பயன்படுத்தும் "பை..." வார்த்தையை உபயோகத்திலிருந்து நீக்கலாம் இல்லையா?

பி.கு: 

(i) இளையராஜா இந்த பாடலை, இன்றைய நவீன recording முறைகளை பயன்படுத்தி மெருகூட்டி, பாடல் முழுதும் அடியில் guitar ஒட விட்டு, மது பாலகிருஷ்ணன் போன்ற ஒருவரை பாட வைத்து தன் படத்தில் மீண்டும் வெளியிட்டு "remix" என்றால் இதுதான் என்று நம்மை மகிழ வைப்பாரா?

(ii)இதே படத்தில் வரும் "திருத்தேரில் வரும் சிலையோ" பாடலுக்கு முன் வரும் இசை, சற்றே மாறுப்பட்ட பல்லவி design ஆகிய இரண்டையும் தவற விடாதீர்கள்...

Saturday, April 28, 2012

1. நிழல்கள் - இது ஒரு பொன் மாலை.../ பூங்கதவே தாழ்திறவாய்...

கூட்டுக்குடும்பங்களின் இறுதி அத்தியாயம் துவங்கிய எழுபதுகளின் பிற்பகுதியில் பிறந்த என் போன்ற பலருக்கும் அந்த அத்தியாயத்தின் சில பக்கங்களை அர்த்தம் புரியாமல் புரட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கும். நான் அவ்வாறு புரட்டியது ஒரே வீடு தனி சமையல் என்னும் ஒரு விதமான கூட்டுக்குடும்பத்தின் பக்கங்களை...இது விஷிஷ்டாத்வைதம் போல விசித்திரமான கான்செப்ட். எது எதில் உள்ளது எதில் இல்லை என்பதில் அவ்வளவு தெளிவு இருக்காது. ஆனால் ஆனந்தமானது...

சிறியவர்களும் பெரியவர்களுமாய் 13 பேர் நிரம்பியிருந்த வீட்டின் முதன்மை  பொழுது போக்கு, கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டிருந்த "desk top monitor" அளவு இருக்கும் பளிங்கு நிற வால்வு ரேடியோ. வயர் கூடை designல் முன் பக்கம் முழுதும் ஓட்டைகளுடன்  on செய்தால் விரல் அளவு உள்ள பச்சை விளக்கு எரிய 10 நொடியும்  சத்தம் வர 10 நொடியும் ஆகும் இதை தொடுவதற்கே எனக்கு சில வருடங்கள் தேவைப்பட்டன. வீட்டின் பெரியவர்கள் சூடான காபி டம்ளரை நெற்றியில் உருட்டியபடி சரோஜ் நாராயண் சுவாமியை கேட்கும் பொழுது  தலைவலி தருபவை குடும்ப நடப்புகளா உலக நடப்புகளா என்று நமக்கு தெரியாத வயது. "சுழன்றும்  ஏர்பின்னது உலகம்" என்பதை நல்ல மெட்டுடன் பாடும் ஆண்குரல் பின்னர் பாக்டம்பாஸ் 20-20 ஐ எப்படி அதிக மகசூலுக்கு பயன்படுத்தலாம் என்று சொல்லிகொண்டிருக்கும் பொழுது திருச்சியில் இருக்கும் knob ஒரு முள் நகர்ந்து இலங்கையில் இறங்கினால் பெரும்பாலும் ஒலிப்பது "பொன் மாலை..." இன்றைய எரிச்சலூட்டும் டாப் 10 போல் அல்லாமல் இயற்கையான ரசனையுடன் [ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சர்வானந்தா, ஹப்துல் ஹமீது போன்றோரால்] தொகுத்து வழங்கப்படும் ஞாயிறு டாப் 10 நிகழ்ச்சியில் "பொன் மாலை பொழுது" நான் 1,2,3 வகுப்புகளின் "promoted" போஸ்ட் கார்டு வாங்கி 4 ஆம் வகுப்பு போன பின்பும் முதல் இடத்தில் தொடர்ந்தது. பின்னாளில் கல்லூரி நண்பர்களுடன் ooty 4th mile அருகில் உள்ள pine forestல் "வானம் எனக்கொரு போதி மரம்" கேட்ட நிமிடங்கள் சுஜாதாவின் தலைப்பு போல்  "ஏறக்குறைய சொர்க்கம்". ஆனால்  "விசால பார்வையால் விழுங்கு மக்களை" என்னும் பாரதிதாசன் வரியை ராஜசேகர் தப்பாக புரிந்து கொண்டாரோ என்ற  இன்று வரை எனக்கு சந்தேகம்தான்.
என் சகோதரர் 82-83'ல் டெல்லியிலிருந்து வாங்கி வந்த கெட்டியான கருப்பு உறை போட்ட tape recorder, 87'ல் அப்பா வாங்கிய கிரீம் கலர் national panasonic 2-in-1, 93'ல் மேல மாசி வீதியில் வாங்கிய 16w pmpo philips, 00'ல் domlur modern electricalsல் வாங்கிய 32w pmpo philips '01ல் tokyo akhiabaraவில் வாங்கிய சோனி walkman, '06ல் toronto searsல் வாங்கிய philips mp3 player என அனைத்திலுமே தேடிப்பிடித்து முதலில் கேட்டது பொன் மாலையும் இளைய நிலாவும்தான்.

முழு வீட்டிற்க்கும் சில கதவுகளே பார்த்து பார்த்து பழக்கப்பட்டு, இரண்டு பேருக்கு எதற்கு இதனை கதவுகள் திறக்கிறார்கள் என்ற சந்தேகம் முளைத்த குழந்தை வயதில் ஆசிரியையின் கண்டிப்புடன் குழைவும் சேர்ந்து வரும் உமா ரமணனின்   குரல் மெதுவாக மனதில் பதிந்தது "பூங்கதவே"வில்தான் [ இதில் வரும் நாதஸ்வரம் பிறகு புரட்சிக்காரன் என்னும் வறட்சியான படத்தில் "ஒற்றை பார்வையிலே" என்னும் அற்புதமான பாடலில் தவில் base வைத்து பாடல் முழுதும் வருடி விட்டிருந்தார் இளையராஜா]. உமாவின்  பாடல்களை ரசிக்கும் வயது வரும் பொழுது அவர் பாடுவதை நிறுத்தியிருந்தார். பெங்களூர்இல் வேலைக்கு சேர்ந்த பின்பு ஒரு முறை மதுரை செல்வதற்காக kalasipalyam KPN ல்    அமர்ந்திருந்த பொழுது குப்பைகளுக்கு நடுவில் திடீரென்று "மீட்டாத ஒரு வீணை" என்னும் பாட்டு துவங்க, என்னடா இது இந்த பாட்டை எப்படி விட்டோம் என்று யோசித்து டிரைவரிடம் CD cover கேட்க அவர் ஏற இறங்க பார்த்தபடி கொடுத்தார் - "பூந்தோட்டம்" என்னும் புது படம்! அதற்கு பின் அவரின் குரல் இன்று வரை புதியதாய் வரவில்லை.

நம் ஊர் தொலைகாட்சிகளில் வரும் ராசிக்கல் ஜோசியர்கள் சொல்லும் பலன் போல் இல்லாமல் கீழ்காணும் பாடல்களை ஞாயிறு இரவு நிலவும் அவசரமற்ற அமைதியில் கேட்டால் விசேஷ நிம்மதி கிட்டும்!

அரிது - இனிது - பகுதி 1

பாடல் - படம்

1 . எங்கெங்கோ செல்லும் - பட்டகத்தி பைரவன்
2. பூந்தென்றல் காற்றே - மஞ்சள் நிலா 
3. சிந்து நதிக்கரை - நல்லொதொரு குடும்பம்
4. மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை
5. அதிகாலை நேரமே - மீண்டும் ஒரு காதல் கதைThursday, April 26, 2012

3. முதல் மழை

முதல் முறை நம்மை நனைத்த மழை நம் நினைவில் இல்லாமலிருக்கலாம். ஆனால் நம் நினைவில் இருக்கும் முதல் மழை நம்மை நிச்சயம் நனைத்திருக்கக்கூடும். "Gas Stove" இல்லாத நாட்கள் அவை. "Nutan" stove நிரப்ப மண்ணெண்ணெய் வாங்க செல்லும் அம்மாவின் கையையும் புடவைத்தலைப்பையும்  பிடித்து கொண்டு பல முறை ரேஷன் கடைக்கு சென்று வந்தது இன்னும் காட்சியாக ஞாபகம் இருக்கிறது. அத்தகைய ஒரு மத்தியானம் - பொசுக்கும் வெய்யிலுக்கு பெயர் போன மதுரையில் "எட்டு ஊருக்கு எத்தம் கூட்டியது" மழை. ஒரு கையில் kerosene டின் மறு கையில் நான் என நடந்த, நவாப்பழ  கலரில் மாங்காய் டிசைன் போட்ட நைலெக்ஸ்  புடவை கட்டிய அம்மாவை பிடித்த படி பெருமாள் கோயில் அருகில் வரும் போது வழக்கம் போல் கோயில் யானை கொட்டடியில் "நொண்டி யானை"யை [பெயருக்கு மன்னிக்கவும். அழைக்கும் பொழுது சங்கடமாக இருக்கும். ஆனால் இதுதான் அதன் வட்டாரப்பெயர்]  குளுப்பாட்டி கொண்டிருந்தார்கள். இந்த சற்றே கால் வளைந்த யானை சுமார்  15 வருடம்  என்னுடனே வளர்ந்து நான் B.Sc படிக்கும் போது இறந்தது. இதுவும் மீனாட்சி கோவிலின் "பெரிய யானை"யும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது உறவினர் போல வருடம் தோறும் சந்தித்து கொள்ளும். பெரிய யானையின் தும்பிக்கை முன் புறம், காது ஆகியவை பழுப்பு கலரில் brown புள்ளிகளுடன் இருக்கும்[சுமார் 50 வருடம் மீனாட்சி கோயிலில் இருந்து June 2001 ல் பெரிய யானை இறந்ததும் அதற்கு மதுரை மக்கள் கொடுத்த பிரியாவிடையும் தனிக்கதை]. எங்கள் பெருமாள் கோவில் யானைப்பாகன் பல முறை "நாம தப்புத்தண்டா பண்ணினாதான் யானை ஏதாவது பண்ணும் இல்லேனா ஒண்ணும் செய்யாது" என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். சிறியவர்களை விட நிறைய பெரியவர்கள் யானைக்கருகில் சென்றிட பயப்படுவதற்கும் பாகன் சொன்னதற்கும்  தொடர்பு இருக்குமோ?
 . யானை பார்க்கவென்றே கோயிலுக்கு போகும் எனக்கு, இன்றும் "திருப்புகழ் சபை" அருகில் இருக்கும் மிகப்பெரிய யானைக்கொட்டடியை [இங்கு 10 பைசா கொடுத்தால் யானை, ஒட்டகம், டும் டும்" மாடு ஆகிவற்றை அருகில் சென்று பார்க்கலாம்] கடக்கையில், அன்று  உயரமாக கம்பீரமாக நடந்து போகும் பெரிய யானையும் அதை பல முறை பல வகையில் பல நிகழ்வில் அம்மாவுடன் பார்த்து ரசித்ததும்  நினைவில் வரத்தவறுவதில்லை. அன்றைய மழைக்கு மீண்டும் வருவோம். "பாத்தது போதும். தினம்தானே இங்கயே உக்காந்து யானைய பாதுண்ட்ருக்க. மழை வருது ஜலதோஷம் பிடிக்கும்" என்று அக்கறையுடன்  திட்டியபடி வீட்டிற்கு இழுத்து கொண்டு போகையில் யானை கொட்டடிக்கு எதிரில் இருக்கும் 
tea  கடையில் ஒலித்தது "உறவுகள் தொடர்கதை". இந்த பாட்டு ஓரளவுக்கு  புரிவதற்கு ஒரு 20 வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் "உறவுகள் சிறுகதை உணர்வுகள் தொடர்கதை" என்றிருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்று தோன்றும்.
"உன் கண்ணிலோ ஈரம் என் நெஞ்சிலோ பாரம்" என்னும் simple வரி எந்த இரு மனிதருக்கிடையில் ஏற்படும் misunderstandingலும்  இந்த இரண்டில் ஏதோ ஒன்றில்தான் உணர்வு நிற்கும் என்பதை அழகுபடுத்துகிறது. "...வாழ்வென்பதோர்..." என்ற வரியின் முன்னால் வரும்  பத்து நொடி flute ல் கடைசி இரண்டு நொடி மற்றொரு வசீகரம்!

மழையும் காலமும் சேர்ந்து ஆடும் ஆட்டத்தில் நாம் அனைவரும் பெரும்பாலும் வெறும் பார்வையாளர்கள்தானே...  அம்மாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து விட்டு திரும்பும் பொழுது கொட்டித்தீர்த்த பெருமழையில்  மண்டபம் camp கடக்கையில்  ரோட்டோர கடையிலிருந்து ஒலித்தது இதே பாட்டு.
அம்மாவுடன் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நியூ சினிமா தியேட்டரில் பார்த்த "தாய் மூகாம்பிகை" - இதில் வரும் "ஜனனி ஜனனி" பாட்டில் வரும்  kollur இடங்களை 
2002 ல் அம்மாவுடனேயே நேரில் பார்த்தது, சாந்தி தியேட்டரில் அம்மாவுடன் பார்த்த "அலைகள் ஓய்வதில்லை" [ஒருவரின் விரலை இன்னொருவர் தொட்டால் shock அடிக்குமோ என்று பயப்பட வைத்த பாரதிராஜாவின் visuals...] , நான் வீட்டின் எந்த மாடியில் எந்த மூலையில் இருந்தாலும் அம்மா கூப்பிட்டு அனுப்பும் "செந்தாழம்பூவில்"...., சென்னை plaza தியேட்டரில் பார்த்த "பயணங்கள் முடிவதில்லை", கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள தியேட்டரில் பார்த்த "உதய கீதம்" [இவை பற்றி விரிவாக பின்னர்]
இவையும் இன்னும் பலவும் நினைவு விளக்கின் திரியை தூண்டி விட உதவும் எரிந்து முடிந்த தீக்குச்சிகள் போன்றவை.
சமீபத்தில் வந்த "பிச்சைப்பாத்திரம்" பாடலை வெகுவாக ரசித்த அம்மா  பூஜை புனஸ்காரங்களில் கொண்டிருந்த நம்பிக்கையும் அவரின்  நம்பிக்கைக்கு  ஆதாரமான கடவுள் கூட்டம் வெட்கி தலைகுனியும்படி நினைவு பிறழ்ந்து உருவம் குலைந்து  சிறிது சிறிதாய் சிதைந்து hospitalல் காலனுடன்  பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த ஒரு நாள் அதிகாலை 3 மணிக்கு "பிச்சைப்பாத்திரம்" பாட்டு கேட்க வேண்டும் என்று திடீரென்று ஏதேதோ முனகல்களுக்கிடையில் சொன்னதும்  அடுத்த நாள் வீட்டிலிருந்து mp3 player எடுத்து வருவதற்குள் நினைவு நிரந்தரமாக தப்பியதும் "வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்"  வரியின் வார்ப்பு.

சாதாரண பாடலுக்குள்ளும் "சரக்கு" இருக்கக்கூடும் என்பதை நிரூபிக்கும் அரிது - இனிது பகுதி 3:

1. காலை நேரக்காற்றே - பகவதிபுரம் ரயில்வே கேட்
2. கண்விழி என்பது - வளையல் சத்தம்
3. வண்ணம் வண்ணம் - பிரேம பாசம்
4. ஆனந்த தேன்காற்று - மணிப்பூர் மாமியார்
5. கோடி இன்பம் - நெஞ்சிலாடும் பூ ஒன்று


Friday, April 20, 2012

15. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 5

நவராத்திரி தினங்களின் இரவுகளில் பெரும்பாலான ஊர்களில் "மேடைக்  கச்சேரி" ஏற்பாடு செய்யும் வழக்கம் உண்டு. இப்போது   உள்ளது போல் - ஒரு மைதானத்தை பிடித்து, டிவி படம்பிடிக்க, "entry fee" வசூலிக்கும் பகட்டான "weekend" கச்சேரிகள் இல்லை அவை. சாலை மறித்து பந்தல் போட்டு மேடையில் பாடல் கச்சேரி நடக்கும். வழிப்போக்கர்கள் தங்களுக்கு பிடித்த பாடல் என்றால் நின்று கேட்பார்கள். சில பாடல்கள் முடிந்த பின் நகர்ந்து விடுவார்கள். சிலர் மட்டுமே "இருக்கையில்" அமர்ந்து ரசிப்பார்கள்.

நான் மேல்நிலை வகுப்பில் (higher secondary) நுழைந்த இரண்டாம் வருடம், ஒரு நவராத்திரி இரவில், என் நண்பன் வீட்டுக்கு சென்று விட்டு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். கீழவாசல் அரசமரம் பிள்ளையார் கோவில் மதுரையில் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்று. அங்கு சாலையின் பாதியை அடைத்து போடப்பட்டிருந்த பந்தலில் "பாடல் கச்சேரி" களை கட்டியிருந்தது. traffic நெரிசலில் பேருந்து அகப்பட்டிருக்க, கரகரத்த குரல் கொண்ட அறிவிப்பாளர் விறுவிறுப்பாய் அடுத்த பாடல் பற்றிய "முன்னுரை" விளம்பிக்கொண்டிருந்தார்..."வில்லுப்பாட்டுக்காரன்" படத்தின் "கலைவாணியோ ராணியோ" பாடல்...பாடலின் வசீகரிக்கும் "percussion" செவியில் ஊடுருவ பேருந்திலிருந்து இறங்கி விட்டேன்.  மேடையில் இருந்த வயலின், புல்லாங்குழல், கப்பாஸ் வாசிக்கும் மூவருமே அறுபது வயதை கடந்த தோற்றத்திலிருந்தார்கள். அதிகம் பிரபலமாகாத இந்த பாடலுக்குள்தான் எத்தனை ஆச்சர்யங்கள்! கிட்டத்தட்ட நாம் மறந்து விட்ட ஹார்மோனியம் இந்த பாடலின் பல்லவியின் அடியில் நகரும். இந்த பாடலில் குறிப்பிட்ட நான்கு வரிகளின் முடிவிலும் ஒரு அற்புதம் வைத்திருக்கிறார் இளையராஜா - "வேதங்களும்  நாதங்களும் வேண்டி வந்தது கூட", "வேதனைகளை மாற்றிடும் அவள் விரிந்த சென்பகச்சோலை" , "ஜாடையிலே ஏற்றி விடும் தாகம் என்கிற மோகம்", "ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி" - இந்த வரிகளின் முடிவில் முத்தாய்ப்பாக guitar தரும் அழுத்தமான இரண்டு  strokes !   இந்த இன்பம் நம்மை சரியாக அடைய வேண்டும் என்பது போல் இந்த இடங்களில் மட்டும் தபேலா சற்றே "பின் வாங்கும்"! கப்பாஸ் வாசிப்பவர் இந்த இரண்டு strokes வருகின்ற போதெல்லாம் காட்டிய முகபாவம் இன்றும் நினைவில் பதிந்திருக்கிறது. . மூன்று முதியவர்களும் தங்களுக்குள் இருக்கும் "காதலையும்" பாடல் மீது தங்களுக்கு இருக்கும் "காதலையும்" ஒருவருக்கொருவர் கண்கள் மூலம் பரிமாறிக்கொண்டதும்... இரண்டு சரணங்களுக்கு முன்னும் புல்லாங்குழலும் வயலினும் கிட்டத்தட்ட பேசிக்கொள்ளும் நொடிகளும்...
இந்தப் பாடலுக்கு கால்களும் மனதும் தானாக தாளம் போடாவிட்டால் நம் மானிடத்தன்மையில் ஏதோ குறை என்று பொருள். 

தற்போது நுனி நாக்கால் "பாட்டு (பார்த்து?)  படிக்கும்" பாடகர்கள் இப்பாடலின் "பாதங்களை பார்த்ததுமே பார்வை வரலை மேல" "தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா" என்னும் வரிகளில் SPB  என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று கவனிப்பது நல்லது.

இத்தகைய கச்சேரிகளில் சில சமயங்களில் "once more" என்று கூட்டம் சத்தம் போடும். அதை ஏற்று, இசைக்கும் குழு மீண்டும் அதே பாடலை பாடும். "கலைவாணியோ" பாட்டுக்கும் ஒன்ஸ் மோர் நிகழ்ந்தது. எனக்கும் பேருந்தை விட்டு கீழே இறங்கியது வீண்போகவில்லை என்ற மகிழ்ச்சி. மீண்டும் இசைக்கப்பட்ட இந்த பாடலை கண்கொட்டாமல் ரசிக்க முடிந்தது. இசைக்கருவிகள் வாசிக்கும் மனிதர்களின் விரல்களை காலம் தனிப்பட்ட கவனத்துடன் தயார் செய்து பூமிக்கு அனுப்பியிருக்குமோ? இல்லையென்றால் இவர்களின் விரல்கள் தரும் ஸ்வரங்கள் சாகாவரம் பெற்றவையாக திகழ முடியுமா?இப்பொழுதெல்லாம் முதல் வகுப்பு படிக்கும் குழந்தை கூட "pocket money" வைத்திருக்கிறது. நம் காலத்திலோ வெளியில் சென்றால் எந்த வேலைக்காக போகிறோமோ அதற்கு தேவைப்படும் பணம் மட்டுமே தருவார்கள். ஏற்கனவே பேருந்துக்கான காசு கழிந்து போனதால் கலைவாணியை நினைத்தபடி வீட்டுக்கு நடந்தே வந்து சேர்ந்தேன். வீடு திரும்பும் நேரம் தப்பியதால் என் அம்மா, தெருவை நோக்கி இருக்கும் எங்கள் வரண்டாவிலிருந்து தலை நீட்டி என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்...பதின்வயதில் பிள்ளைகள் இருக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் ஆயிரம் கவலைகள் அடிவயிற்றில் சுருளும். கலைவாணியை ரசித்ததால் ஏற்பட்ட தாமதம் பற்றி அம்மாவிடம் விளக்கியபோது என்னை கூர்ந்து பார்த்த அம்மாவின் கண்களில், இவன், கவனத்தை சிதறடிக்கும் கலைவாணிகள் ராணிகளிடம் நேரம் வீணடிக்கவில்லை என்ற நம்பிக்கையும் நிம்மதியும் தெரிந்தது. நம்பிக்கைதானே எந்த உணர்வுக்கும் உறவுக்கும் உயிர்நாடி...

Saturday, April 7, 2012

14. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 4

உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களின் திருமணத்திற்கு முன் தினம் இரவு திருமண மண்டபத்திலிருந்து ஒரு பெருங்கூட்டமாக "second show" போகும் வழக்கம் இன்றைய multiplex சூழலில் மழுங்கியிருக்கலாம் (இப்போதெல்லாம் எத்தனை பேர் திருமணத்திற்கு முன் தினமே மண்டபத்திற்கு வருகிறார்கள்?). அவ்வாறு நினைவிலிருக்கும் பல "night show" இரவுகளில் அருமையானது என் முதல் "second show " அனுபவம்.

வடபழனியில் தெரிந்தவர் ஒருவரின் திருமணத்தில் முதல் நாள் விழா முடிந்து, மண்டபத்தில் இரும்பு chair வரிசை குலைந்து ஆங்கங்கே "உலகக் கதை" பேசும் குழுக்கள் வசம் சென்றிருக்க, சுமார் 20 பேர் கொண்ட கூட்டம் மண்டபத்திற்கு அருகிலிருக்கும் AVM தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருந்த "நல்லவனுக்கு நல்லவன்" செல்லத்  தயாராகிக் கொண்டிருந்தது.
சில நாட்களாக மாமாவின் பின்னாலே "கொடுக்கு" போல சுற்றி கொண்டிருந்த நானும் வருவேன் என்று அடம்பிடிக்க, அம்மா அப்பாவின் அனுமதி, தூங்கக்கூடாது, நடுவில் போரடிக்கிறது போகலாம்  என்று சொல்லக்கூடாது,"cone ice" கிடையாது என்ற நீளமான "லிஸ்ட்" அனைத்தின் சம்மதம் பெற்று என் முதல் "second show " அனுபவத்திற்கு அழுது அடம்பிடித்து கிளம்பிய இரவு கடந்து இருபத்தி எட்டு ஆண்டுகள் ஓடி விட்டாலும் நேற்று போல் நினைவில் இருக்கிறது. serial bulb ஒளிரும் cut out பார்த்துக் கொண்டிருக்கையில் மாமா ஒரு கத்தை டிக்கெட்டுகளுடன் வரிசையிலிருந்து வெளிவந்தார்...அப்பொழுதெல்லாம் a/c என்பதை அறிய நமக்கிருந்த ஒரே இடம் "தியேட்டர்"! screen விலகுவதற்கு முன்பே போடப்பட்ட படத்தின் பாடல்களில் "உன்னைத்தானே..." "சிட்டுக்குச்  செல்ல சிட்டுக்கு" இரண்டுமே முதல் முறையே ஒரு விதமான வசீகரம் கொடுத்தாலும் வருடக்கணக்கில் இந்த பாடலை கேட்கப்போகிறோம் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. "காடு மலை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன்" என்று ஒருவர் தேனீர் குடிக்கும் விளம்பரம், இந்திரா காந்தி பசுமை புரட்சியை பார்வையிடும் டாகுமெண்டரி இவையெல்லாம் கடந்து ஆரம்பித்த  படம் போரடிக்க, அந்த பாடல்களை இன்னொரு முறை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் நேரத்தை கடத்திக்கொண்டிருக்க, மீண்டும் வந்தது "உன்னைத்தானே...". இப்பாடல் முழுவதும் நான் இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பித் திரும்பி இரண்டு பக்க சுவர்களில் இருந்த "speaker"களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட அற்புதமான இசைக்கோர்வை கொண்டது இந்தப் பாடல். "triplet " மற்றும் தபேலா என்று இரண்டு வகை "base " உள்ள இப்பாடலில் வலது காதுக்குள்  (வலது பக்க ஸ்பீக்கர்)  ஒவ்வொரு வார்த்தைக்கேற்ப அதன் பின்னே தேனை ஊற்றும்   கிடார் அற்புதம்.இடது காது மற்ற அற்புதங்களை உள்வாங்கும். கப்பாஸ் மேலோங்கி ஒலிக்கும் சில பாடல்களில் இதுவும் ஒன்று.உங்கள் tape recorder வலது பக்க  ஸ்பீக்கர் off செய்தோ அல்லது உங்கள் வலது காது head phone நீக்கியோ கேட்டு பாருங்கள் - guitar இல்லாமல் தபேலா மற்றும் கப்பாஸ் இரண்டின் மூலம் இந்த பாடல் எப்படி இருக்கிறது என்றும் ரசிக்க முடியும். பாட்டில் வரும் பெண் குரல் மஞ்சுளா என்பவருடையது. "இழுத்தால்" என்று இவர் செய்யும் உச்சரிப்பு, பயிற்சி குறைவா, பிழையா என்பதை விட அந்த வரியின் பொருளுக்கேற்ற பாவத்தில் அமைந்திருப்பது போலவே தோன்றும்.

இந்த பாடல் கேட்ட உற்சாகம் வடியும் முன்னரே வந்தது "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு"..."காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே; நியாயங்கள் ஆறுதலை கூறுவதெங்கே" [வைரமுத்து] என்னும் சிறப்பான வரியை உள்ளடக்கிய இந்த பாட்டின் இறுதியில் repeat ஆகும் பல்லவியின் பின், கடலலை போல எழும்பும் violin  - நம் வயதிற்கேற்ப உணர்ச்சிகளை குவிக்கும் வாய்ப்பு தரும். இந்த இரண்டு பாடல்களுக்குமே ஒரே pattern - அதாவது triplet drum மற்றும் தபேலா base . வார்த்தைகளுக்கு பின் அதன் சாயலிலேயே பின் தொடரும் கிடார். பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் triplet மேல் போகும் வயலின் அல்லது வீணை. பாட்டின் நடை நம்முடைய செவியில் நங்கூரமிட உதவும் கப்பாஸ்...வாழ்க்கை முழுதும் ரசிப்பதற்கான 2 பாடல்கள் ready. பாடல் முழுவதும், வரிகளுக்கு பின்னே அதே தொனியில் ஒலிக்கும் கிடாரை ரசிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்ததும் இந்த இரண்டு பாடல்கள்தான். பெரும்பான்மையான ilayaraja பாடல்கள் இந்த guitar "கல்வி" கற்காமல் முழுமையாக ரசித்ததின் திருப்தி தராது.

படம் முடிந்து, ஆளரவமற்ற தெருக்களை அர்த்தசாமத்தில் கடந்து, மண்டபத்தில் நீளமாக விரிக்கப்பட்டிர்க்கும் சிகப்பு ஜமுக்காளங்கள் ஒன்றில் படுத்து காலை விழித்த பொது கண்ணெரிச்சல் என்றால் என்ன என்பதன் முதல் அனுபவமும் கிட்டியது. திருமண விருந்து முடிந்து அருகில் இருந்த என் மாமா வீட்டிற்கு செல்லும் வழியெங்கும் சாலையில் கூட்டம் கூட்டமாக மக்கள் குழுமி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை BBC உறுதி செய்திருந்த நிலையில் நம் ஆகாஷ வாணியும் தூர்தர்ஷனும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட குழப்பம் தெருக்களிலும் தெரிந்தது.
அன்று மதியத்துக்கு மேல் செய்தி ஊர்ஜிதமாக, எல்லா ரேடியோ அலைவரிசையிலும் shenoi , வீணை என்று சோக கீதம் போட, மூன்று நாட்கள் நகரம் முழுதும் சோகம் மூடிக்கொண்ட நாட்கள். நானோ, முந்தைய இரவு கேட்ட இரண்டு பாடல்களின் பிடியில் இருந்தேன் - மீண்டும் கேட்க ஆவலாய் ரேடியோவை எங்கு திருப்பியும் பாடல் கிடைக்காத ஏமாற்றத்தில்...
இன்று, vadapalani arcot road என்றால், இரண்டு பாடல்களும், இந்திரா காந்தி இறந்த அன்று கூட்டம் கூட்டமாக சாலையில் கூடிய மக்களும் arcot road எங்கும் இறைந்து கிடப்பது போலத்தான் ஞாபகம் வருகிறது....
இந்திரா காந்தி மரண நிகழ்வின் தீவிரமும் அதன் பின்னால் இருந்த தேசத்தின் வலிகளையும் அறியாமல் பாடலுக்காக ரேடியோ திருப்பிய அந்த நாட்களை நினைத்தால் இன்று நகைப்பாக இருக்கிறது. வயதின் அறியாமை, முக்கியத்துவங்களின் மேல் எப்படியெல்லாம் முகமூடி போடுகிறது!


   

Saturday, March 24, 2012

13. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 3

இப்போது போல் நேரத்தை தின்னும் நெரிசல்கள் இல்லாத ஞாயிற்று கிழமைகள் எழுபதுகளில்  இருந்தது. அந்த வருடங்களில் சிறுவன் சிறுமியாக இருந்தவர்கள் சில வரங்கள் பெற்றிருந்தார்கள். அப்படித்தான் நானும்...

எங்கள் வீட்டிற்கு சின்னத்தம்பி என்னும் ஒருவர் iron செய்ய வருவார். Ramesh ratnayake (தலையில் வெள்ளை band கட்டிக்கொண்டு medium pace போடும் இவரை ஞாபகம் இருக்கிறதா?) மற்றும் Arjuna ranatunga இருவரையும் ஏதோ ஒரு வகையில் கலவை செய்தால் இவரின் உருவம் கிடைக்கும். நீங்கள் அறிந்திராத சின்னத்தம்பியை உங்களுக்கு சற்றேனும் அறிமுகம் செய்தாயிற்று. பெரும்பாலும் ஞாயிற்று கிழமை மதியம் எங்கள் வீட்டின் உயர்ந்த வாசல் படிக்கட்டுகளின் அருகில் iron வண்டியை நிறுத்தி முதலில் கரி போடத் துவங்குவார். ஞாயிறு மதியம் தெருவில் ஒரு ஈ குளுவான் கூட இருக்காது.
பருவ காலம் பொறுத்து அனல் காற்றோ மாலை மழை வருவதற்கு முந்தைய வாசனையை நம் மூக்குக்கு அறிமுகப்படுத்தும் மழை காற்றோ வீசும்.
சிலோன் ரேடியோவில் "டாப் 10", "பாட்டுக்கு பாட்டு", "பட வசனம்" [திரைப்படம் முழுதும் வானொலியில் வரும்] என வரிசையாக நிகழ்ச்சிகள்.
இதில் பெரும்பாலும் சின்னத்தம்பி iron செய்கையில் பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும். அப்பொழுதெல்லாம் பால், bottle இல் தான் வரும். மதியம் காபிக்கு வீடு தயாராகும் போது திறக்கப்படும் பாட்டிலின் silver paper மூடியில் வெண்ணை போன்ற ஆடை ஒட்டிக்கொண்டிருக்கும். அதை நாக்கிற்கு கொடுத்தபடி அவர் iron  செய்வதை பார்ப்பது என் பழக்கம்.
அவர் iron செய்து முடித்தபின் என்னை iron வண்டியில் உட்கார வைத்து ஒரு "ரவுண்டு" கூட்டிப் போய் வருவார். அதற்காகவே வாசலில் காத்துக் கிடந்த ஞாயிற்று கிழமைகள் பல.
இவ்வாறு "ரவுண்டு" போகும் பொழுது   சொல்லி வைத்தது போல் பெரும்பாலும் ஒலிப்பது "சிட்டுக்குருவி" படத்தில் வரும் "என் கண்மணி" பாடல். அதிலும் குறிப்பாக "தேனாம்பேட்டை super market இறங்கு" என்றவுடன் நான் iron வண்டியிலிருந்து குதிப்பதும் வழக்கமாகி போனது. சில சமயம் "என் கண்மணி" இல்லாமல் "உன்ன நம்பி நெத்தியிலே" ஒலிப்பரப்பாகும் பொழுது அந்த ஞாயிறே வீணானது போல் தோன்றும். இன்று வரை, "என் கண்மணி என் காதலி" எங்கு ஒலித்தாலும் அல்லது தேனாம்பேட்டை சிக்னலை எப்போது கடந்தாலும்  அந்த ஞாயிற்று கிழமைகள் நினைவின் செல்களில் பொங்கி அடங்கும். சின்னத்தம்பி முப்பது வருடங்களுக்கு முன் iron செய்த வெள்ளை கலர் பூ design சட்டை ஒன்று இன்றும் எங்கள் வீட்டில் இருக்கிறது.

இந்த பாடல், multi track வசதிகள் இல்லாத காலத்தில் இளையராஜாவால் எப்படி சாத்தியப்பட்டது என்பது புதிர். பல்லவியில் மட்டும் "கப்பாஸ்" வித்தியாசமாக வந்து போகும். கப்பாசை வெவ்வேறு தொனிகளில் கையாள்வதிலும் இளையராஜாவுக்கு நிகர் அவரேதான்.  "என் கண்மணி" வந்த பின், அதற்கு சற்றே பிந்தைய கால கட்டத்தில் மற்றுமொரு பாடல் பெரும்பாலும் ஞாயிறு மதியங்களை நினைவூட்டும் - தர்மயுத்தத்தில் வரும் "ஆகாய கங்கை". இது என் அக்காக்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.  அவர்களின் "frock"ஐ  பிடித்து இழுத்துக்கொண்டே நான் அவர்களுடன் வீடு முழுதும் ஓடித்திரிந்த ஞாயிறுகளில் மனதில் பதிவான பாடல் இது.  "கமக்கம்" என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்ள இந்த பாடலில் ஒவ்வொரு வார்த்தைக்கும் Janaki தரும் ஏற்ற இறக்கத்தை ரசித்தால் போதும். இந்த பாடலை முழுவதும் இயக்குவது கப்பாஸ். இந்த பாடலின் highlight இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் வயலினும் அதற்கு மேல் "உருளும்" கப்பாசும். மகிழ்ச்சியின் தளத்தில் சென்று கொண்டிருக்கும் பாடல் இந்த பத்தே நொடிகளில் ஒரு "haunting" ஏற்படுத்தி "nostalgia" [நினைவின் பின்னூட்டம் என்றால் இன்னும் பொருத்தம்] சவாரி போகச்செய்து விடும். பாடலின் வேக மாறுதல்களுக்கு ஏற்ப கப்பாஸ் இடைவெளி கூடிக்குறைவது இப்பாடலின் மற்றொரு speciality. "சீதா(ப்?) புகழ் ராமன்" என்பதை நாம் எத்தனை  விதமான பொருளில் அர்த்தம் செய்து கொள்ளலாம்? இந்த வரி இது போன்ற ஆழமற்ற வரிகள் கொண்ட காதல் பாடலில் waste செய்யப்பட்டிருக்க வேண்டாம்...

"teynampettai signal" விளையாட்டு முடிந்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற என் திருமணதிற்கு சின்னத்தம்பி வந்திருந்தார் - ஒரு customs officer ஆக வளர்ந்து. அந்த பரபரப்பான தினத்திலும் அவர் என் கைகுலுக்கி வாழ்த்த அருகில் வந்த பொது எங்கள் இருவர் மனத்திலும் ஒரே நொடியில் பற்றி கொண்டு இருவர் வாயிலிருந்தும் ஒரே சமயத்தில் வெளிவந்த முதல் வார்த்தை "என் கண்மணி" பாடல்தான். எங்கோ இருக்கும் எவரோ இருவரின் நினைவுகளின் வடம் கால் நூற்றாண்டு காலமாக கட்டியிழுத்துச் செல்லும் தேர் எது?


இப்பகுதியில் சொல்லப்பட்டிருப்பது போன்ற நாட்களின் நினைவுகளில்  மூழ்கித் திளைக்கும் அனைவரின் பார்வையிலும் பத்தாண்டுகளுக்கு முன் வந்த சேரனின் "பாண்டவர் பூமி"  கட்டாயம் பட்டிருக்கும். இதில் ராஜ்கிரண் தன் பிறந்த ஊருக்குப் போவதாக படத்தில் வரும் 15 நிமிடங்கள் நம் தொண்டைக்குள் உருண்டை ஒன்று திரள்வதை நம்மால் தவிர்க்க இயலாது. இப்போதும் எந்த சேனலில் எப்போது "பாண்டவர் பூமி" போடப்பட்டாலும் அந்த 15 நிமிடங்கள் நான் பார்பதுண்டு. நம் வருடங்களை நாம் மீண்டும் மீண்டும் குடிக்க உதவுகிறது அந்த 15 நிமிடங்கள்.

எங்கள் வீட்டில் கேட்கப்பட்டதை போல் இந்த பாடல்கள் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் நூற்றுக்கணக்கான ஞாயிறுகளில் கேட்கப்பட்டிருக்கக்கூடும். அவர்களில் பலர் இன்று வெவ்வேறு இடங்களில் உயர்ந்த உத்தியோகங்களில் அமர்ந்திருக்கக்கூடும். அத்தகைய அனைவரின் அணைத்து விதமான செல்வங்களையும் சேர்த்து ஈடாக வைப்பினும் அந்த ஞாயிறு மதியங்களை நம்மால் மீட்டெடுக்க முடியுமா?Saturday, March 10, 2012

12. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 2

முன்னர் சொன்ன இளையராஜாவின் இயற்பியலுக்கான அடிப்படை விதிகளின் தொடர்ச்சியாக, இளையராஜாவால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஆனால் நாம் அதிகம் கண்டு கொள்ளாத "கப்பாஸ்" கருவி அவரின் பெரும்பான்மையான பாடல்களில் நாம் அதனுடன் பயணம் போவதற்கான வழிகாட்டியாக இருப்பது என்று சொன்னால் மிகையாகாது.


 "தென்றலே என்னைத்  தொடு" படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பரவியிருந்த நேரம். இந்த படத்தில் நடித்த பெண்ணின் பெயர் கொண்ட, வீட்டில் அதிபுத்திசாலி என்று கருதப்பட்ட, என் ஒன்று  விட்ட அக்கா 12th standard முடித்து மதுரையிலேயே இரண்டாவதாகவோ மூன்றாவதாகவோ வந்திருந்த தினம் அன்று. காலையில் நான் பள்ளிக்கு கிளம்புகையில் தனது அதிக மதிப்பெண்ணுக்காக எனக்கு ஒரு "5 star" [அப்பொழுது கிடைக்கக்கூடிய அதிகபட்ச treat!] வாங்கித்தருவதாக சொல்லியிருந்தார். "5 star" chocolate சுவையை நாக்குக்கு ஞாபகப்படுத்தியபடி school பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து வீட்டிற்கருகில் வருகையில் வீட்டின் முன் சற்று கூட்டம். என்னை வீட்டிற்குள்  விடாமல், சில வீடுகள் தள்ளியிருந்த, எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான, "ராஜ[ம்] மாமி" வீட்டிற்கு கொண்டு போய் விட்டார்கள். "ராஜ மாமி" என்றழைக்கப்பட்ட Rajalakshmi மாமி Iyengar நெறிமுறையின் படி எப்பொழுதும் நெற்றியில் வைணவ குறியீட்டுடன் பெயருக்கேற்றபடி ஆஜானுபாகுவாய் இருப்பார். வீட்டிற்கு உடனே போயாக வேண்டும் என்று அடம் பிடித்த என்னை அக்காவிற்கு உடம்பு சரியில்லை என்றும் 10 நிமிடம் பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்றும் சொல்லி ஒருவருடன் அனுப்பி வைத்தார். ஆட்கள் நிரம்பியிருந்த எங்கள் வீட்டின் அரக்கு கலர் சுண்ணாம்பு தரையில் பற்கள் கட்டிபோய் கிடத்தப்பட்டிருந்த அக்கா கொடுத்தது ஆயுளுக்கும் நினைவில் இருக்கும் அதிர்ச்சி. அன்றிரவு முழுதும் ராஜ மாமி என்னை சாப்பிட வைக்கவும் சமாதானப்படுத்தவும் பல்வேறு உபாயங்கள் கையாண்டார். அதிலொன்று அவர்கள் வீட்டிலிருந்த மேல்நோக்கி திறக்கும் Panasonic tape recorder மூலம் பலமுறை போடப்பட்ட "தென்றலே என்னைத்  தொடு" பாடல்கள். அவர்கள் வீட்டு  மொட்டை மாடியிலிருந்து எங்கள் வீட்டு பக்கவாட்டு ஜன்னல்கள் தெரியுமென்பதால் அந்த மொட்டைமாடி கைப்பிடி காரைச்  சுவரை, விரல்களால் நோண்டியபடி ராஜ மாமியின் புடவைத் தலைப்புக்குள் பாதி மறைந்த படி, அக்காவிற்கு என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்ற அந்த நாள்...என்னையே அறியாமல் "கப்பாஸ்" ரசிக்க துவங்கிய நாள்  போலும்...


"தென்றல் வந்து என்னைத் தொடும்" பாடலில் [1,2]...[ இடைவெளி  ]...[3,4,5] என்ற தாளக்கட்டில் பாடல் முழுதும் "Cymbal" உடன் வரும் கப்பாஸ் இந்த பாட்டையே இன்னொரு தளத்திற்கு கொண்டு போகும்.இந்த பாட்டில்தான் எத்தனை கருவிகளை இழையோட வைத்திருக்கிறார் இளையராஜா! இதை எளிமையாக்கி ரசிக்க உதவுவதும் மேற்சொன்ன கப்பாஸ் தான். ராக சகவாசம் உள்ளவர்கள் இப்பாடல் hamsanandham என்பார்கள். சரணங்களின் பிற்பகுதியில் வரும் higher octave chords அற்புதம் என்பார்கள். பாட்டை மூளைக்கு அனுப்புவதற்கு இது தேவைப்படலாம் ஆனால் மனதை நிரப்ப, பாடலை  அனுபவிக்கத் தெரிந்தால் போதுமே!  ஹம்சானந்தமோ இல்லையோ இந்தப் பாட்டு அம்சமான ஆனந்தம் தான். இரண்டு விதமான base guitar stroke வைத்து பாடல் துவங்கும் போதே இது பல அடுக்கு இசைகோர்வை கொண்ட பாடல் என்று மனது தயாராகும். இப்பாடல் நான்கு இசை அடுக்குகளை கொண்டது. அடித்தளத்தில் இருப்பது guitar தரும் இழைகள். இது அவ்வபொழுது மேலடுக்கில் வந்து பரவசப்படுத்தும் (தேகம், மோகம் போன்ற வார்த்தைகள் முடிவில் கவனியுங்கள்...). இதற்கு மேலே கப்பாஸ். இது, இரு வார்த்தைகளுக்கிடையில் இருக்கும் இடைவெளியையும்  நிரப்பும் [3,4,5] அழகை என்ன சொல்வது...மூன்றாவது அடுக்கு இளையராஜாவின் வழக்கமான வித்தைகளுக்கு...முதல் சரணத்தில் குழலில் வரும் interlude கேட்டு முடித்தபின் இதையே வயலினிலும் கேட்டால் எப்படியிருக்கும் என்ற நினைப்பை புரிந்து இளையராஜா இரண்டாவது சரணத்திற்கு முந்தைய இடத்தில் வயலினில் மாற்றியிருப்பார். நான்காவது அடுக்கு நம்மை வருடி விட - பாடல் முழுதும் ஒரு புறத்தில் ஒலிக்கும் சிறு கோர்வைகள் அதைத்தொடர்ந்து மறுபுறத்தில் வேறு கருவிகள் மூலம் பின்தொடர்கிறது...இப்பாடலில் "ம்" என்று முடியும் இடத்திலெல்லாம் அதற்கு பின் ஒரு மாயம் வைத்திருப்பார் இளையராஜா. 


சில வருடங்களுக்கு முன் ராஜ மாமியை சென்னையில் ஒரு முதியோர் இல்லத்தில் சென்று பார்த்த பொழுது,  உடம்பை பல்வேறு நோய்களுக்கு குத்தகைக்கு விட்டு தன் பெயரின் பொலிவை இழந்திருந்தார். பேசி விட்டு கிளம்புகையில் மற்றவர்களை வெளியில் இருக்கும்படி சொன்ன ராஜ மாமி,  என்னைத் தனியே சில நொடிகள் பார்த்து கொண்டே இருந்து சட்டென்று உடைந்து அழத்தொடங்கினார். அழுகை விசும்பலாகி என் தலையை வருடி "போயிட்டு வா" என்றார். பெரும்பாலான இறுதி சந்திப்புகளை காலம் சூசகமாக நமக்கு தெரிவித்து விடுகிறது!