Sunday, September 11, 2011

1. நிழல்கள் - இது ஒரு பொன் மாலை.../ பூங்கதவே தாழ்திறவாய்...

கூட்டுக்குடும்பங்களின் இறுதி அத்தியாயம் துவங்கிய எழுபதுகளின் பிற்பகுதியில் பிறந்த என் போன்ற பலருக்கும் அந்த அத்தியாயத்தின் சில பக்கங்களை அர்த்தம் புரியாமல் புரட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கும். நான் அவ்வாறு புரட்டியது ஒரே வீடு தனி சமையல் என்னும் ஒரு விதமான கூட்டுக்குடும்பத்தின் பக்கங்களை...இது விஷிஷ்டாத்வைதம் போல விசித்திரமான கான்செப்ட். எது எதில் உள்ளது எதில் இல்லை என்பதில் அவ்வளவு தெளிவு இருக்காது. ஆனால் ஆனந்தமானது...

சிறியவர்களும் பெரியவர்களுமாய் 13 பேர் நிரம்பியிருந்த வீட்டின் முதன்மை  பொழுது போக்கு, கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கப்பட்டிருந்த "desk top monitor" அளவு இருக்கும் பளிங்கு நிற வால்வு ரேடியோ. வயர் கூடை designல் முன் பக்கம் முழுதும் ஓட்டைகளுடன்  on செய்தால் விரல் அளவு உள்ள பச்சை விளக்கு எரிய 10 நொடியும்  சத்தம் வர 10 நொடியும் ஆகும் இதை தொடுவதற்கே எனக்கு சில வருடங்கள் தேவைப்பட்டன. வீட்டின் பெரியவர்கள் சூடான காபி டம்ளரை நெற்றியில் உருட்டியபடி சரோஜ் நாராயண் சுவாமியை கேட்கும் பொழுது  தலைவலி தருபவை குடும்ப நடப்புகளா உலக நடப்புகளா என்று நமக்கு தெரியாத வயது. "சுழன்றும்  ஏர்பின்னது உலகம்" என்பதை நல்ல மெட்டுடன் பாடும் ஆண்குரல் பின்னர் பாக்டம்பாஸ் 20-20 ஐ எப்படி அதிக மகசூலுக்கு பயன்படுத்தலாம் என்று சொல்லிகொண்டிருக்கும் பொழுது திருச்சியில் இருக்கும் knob ஒரு முள் நகர்ந்து இலங்கையில் இறங்கினால் பெரும்பாலும் ஒலிப்பது "பொன் மாலை..." இன்றைய எரிச்சலூட்டும் டாப் 10 போல் அல்லாமல் இயற்கையான ரசனையுடன் [ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சர்வானந்தா, ஹப்துல் ஹமீது போன்றோரால்] தொகுத்து வழங்கப்படும் ஞாயிறு டாப் 10 நிகழ்ச்சியில் "பொன் மாலை பொழுது" நான் 1,2,3 வகுப்புகளின் "promoted" போஸ்ட் கார்டு வாங்கி 4 ஆம் வகுப்பு போன பின்பும் முதல் இடத்தில் தொடர்ந்தது. பின்னாளில் கல்லூரி நண்பர்களுடன் ooty 4th mile அருகில் உள்ள pine forestல் "வானம் எனக்கொரு போதி மரம்" கேட்ட நிமிடங்கள் சுஜாதாவின் தலைப்பு போல்  "ஏறக்குறைய சொர்க்கம்". ஆனால்  "விசால பார்வையால் விழுங்கு மக்களை" என்னும் பாரதிதாசன் வரியை ராஜசேகர் தப்பாக புரிந்து கொண்டாரோ என்ற  இன்று வரை எனக்கு சந்தேகம்தான்.
என் சகோதரர் 82-83'ல் டெல்லியிலிருந்து வாங்கி வந்த கெட்டியான கருப்பு உறை போட்ட tape recorder, 87'ல் அப்பா வாங்கிய கிரீம் கலர் national panasonic 2-in-1, 93'ல் மேல மாசி வீதியில் வாங்கிய 16w pmpo philips, 00'ல் domlur modern electricalsல் வாங்கிய 32w pmpo philips '01ல் tokyo akhiabaraவில் வாங்கிய சோனி walkman, '06ல் toronto searsல் வாங்கிய philips mp3 player என அனைத்திலுமே தேடிப்பிடித்து முதலில் கேட்டது பொன் மாலையும் இளைய நிலாவும்தான்.

முழு வீட்டிற்க்கும் சில கதவுகளே பார்த்து பார்த்து பழக்கப்பட்டு, இரண்டு பேருக்கு எதற்கு இதனை கதவுகள் திறக்கிறார்கள் என்ற சந்தேகம் முளைத்த குழந்தை வயதில் ஆசிரியையின் கண்டிப்புடன் குழைவும் சேர்ந்து வரும் உமா ரமணனின்   குரல் மெதுவாக மனதில் பதிந்தது "பூங்கதவே"வில்தான் [ இதில் வரும் நாதஸ்வரம் பிறகு புரட்சிக்காரன் என்னும் வறட்சியான படத்தில் "ஒற்றை பார்வையிலே" என்னும் அற்புதமான பாடலில் தவில் base வைத்து பாடல் முழுதும் வருடி விட்டிருந்தார் இளையராஜா]. உமாவின்  பாடல்களை ரசிக்கும் வயது வரும் பொழுது அவர் பாடுவதை நிறுத்தியிருந்தார். பெங்களூர்இல் வேலைக்கு சேர்ந்த பின்பு ஒரு முறை மதுரை செல்வதற்காக kalasipalyam KPN ல்    அமர்ந்திருந்த பொழுது குப்பைகளுக்கு நடுவில் திடீரென்று "மீட்டாத ஒரு வீணை" என்னும் பாட்டு துவங்க, என்னடா இது இந்த பாட்டை எப்படி விட்டோம் என்று யோசித்து டிரைவரிடம் CD cover கேட்க அவர் ஏற இறங்க பார்த்தபடி கொடுத்தார் - "பூந்தோட்டம்" என்னும் புது படம்! அதற்கு பின் அவரின் குரல் இன்று வரை புதியதாய் வரவில்லை.

நம் ஊர் தொலைகாட்சிகளில் வரும் ராசிக்கல் ஜோசியர்கள் சொல்லும் பலன் போல் இல்லாமல் கீழ்காணும் பாடல்களை ஞாயிறு இரவு நிலவும் அவசரமற்ற அமைதியில் கேட்டால் விசேஷ நிம்மதி கிட்டும்!

அரிது - இனிது - பகுதி 1

பாடல் - படம்

1 . எங்கெங்கோ செல்லும் - பட்டகத்தி பைரவன்
2. பூந்தென்றல் காற்றே - மஞ்சள் நிலா 
3. சிந்து நதிக்கரை - நல்லொதொரு குடும்பம்
4. மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை
5. அதிகாலை நேரமே - மீண்டும் ஒரு காதல் கதை







4 comments:

  1. குமரன் - பழைய நினைவுகளை தூண்டும் நல்ல தலைப்பு, எழுத்து. ஞாயிறு மதியம் இரண்டு மணிக்கு இலங்கை வானொலியில் (நிகழ்ச்சியின் பெயர் ஞாபகம் இல்லை - இசைத்தென்றல்?!!) இடவரிசையுடன் பாடல்கள் ஒலிப்பரப்பப்படும் நிகழ்ச்சி. ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு, அயர்ன் வண்டிக்கு அருகே அயர்ன் பண்ணும் சின்னத்தம்பியுடன் நின்றுகொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாக முதல் இடத்திலே இருந்து வந்த 'என் கண்மணி என் காதலி" பாட்டை கேட்ட காலங்கள்.....

    ReplyDelete
  2. super start kumaran. Eager to read story of how you maintain your cassettes, how you troubled recording shops in madurai and how you would say that if one wants "கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன நெஞ்சுகுள்ளே அன்பின் பாரமென்ன" listen cassette 58 b side 4th song (am i right?)!

    ReplyDelete
  3. இன்றுதான் பதிவுக்குள் வந்தேன் அருமை
    அனைத்தையும் படித்துவிட வேண்டும் என
    தீர்மானம் செய்து கொண்டேன்
    சொல்லிச் செல்லும் சிறு சிறு விவரங்கள்
    தங்கள் ரசிப்பின் விசாலத்தை மிக அழகாகச்
    சொல்லிப் போகிறது
    மனம் கவர்ந்த பதிவுகள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Arumaiyana padivu........Meetatha veenai from Poonthottam padiyathu Mahalakshmi Iyer. Nandri !

    ReplyDelete