Thursday, December 15, 2011

7. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 3

நம் வீட்டுத்  திருமணங்கள் சொந்த ஊரில் நடந்தால் திருமணத்திற்கு வேண்டிய ஏதேனும் பொருளை வீட்டிலேயே வைத்து விட்டு மண்டபத்துக்கு வந்து விடுவது என்பது எழுதப்படாத "மரபு". அந்த மரபை கடைபிடித்து மதுரை தல்லாகுளத்தில் '93 இல் நடந்த  எங்கள் வீட்டுத்  திருமணம் ஒன்றில் வீட்டில் மறந்து வைத்த பொருளை எடுப்பதற்காக வீட்டிற்கு வரும் வழியில் பார்த்தது தான் வாழ்கையில் கண் முன்னே பார்த்த முதல் "major accident". Railway station அருகில் எனது சைக்கிளின் முன்னே ஒரு பைக் மீது பஸ் மோத... சாலையில் நான் பார்த்த முதல் இரத்தம்...மங்கம்மாள் சத்திரத்தின் அருகில் இருக்கும் CLS Book Shop பக்கத்தில் உள்ள டீ கடையில் சத்தமாக வந்து கொண்டிருந்த "அவளொரு மேனகை என் அபிமான தாரகை" [["நட்சத்திரம்" படத்தில் SPB]  இந்த பாடல் மிதமாக ஆரம்பித்து அருவிக்குள் தலையை திடீரென்று நுழைத்தது போல மூச்சு முட்ட முடியும்], கூடிய கூட்டம், ஆங்காங்கே சிதறிக்கிடந்த உதிரத்துளிகள்... இந்தப் பாட்டில் "தாமரைப் பூவின் சூரிய தாகம்" என்னும் சிறப்பான வரியும் உண்டு.
அரை மணி நேரத்தில் மீண்டும் கல்யாண மண்டபம் சென்ற பின் அங்கே பார்த்த மகிழ்ச்சி கொப்பளிக்கும் முகங்களும் சற்று முன் பார்த்த உயிருக்கு துடித்த உருவமும் வாழ்கையின் நிரந்தரமின்மையை அறைந்தாற்போல் சொன்னாலும் அது அரைகுறையாய் புரியும் வயது!

 சமீபத்தில் அனைவராலும் உச்சரிக்கப்படும் "முல்லைப் பெரியார்" dam மேல் '93 இல் சைக்கிளில் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நண்பர்களுடன் சென்ற சுற்றுலாவில் மதகுகள் மேலே இருக்கும் பாலத்தில் அக்கரைக்கு நடந்து போகும் பொழுது சுத்தமான காற்று நுரையீரலை நிரப்ப, பச்சைப் போர்த்திய மலைகள் பார்வையை வருட, சொர்கத்தின் "demo" version போலும் என்று நினைக்க வைத்த முல்லைப் பெரியாரில் என் காலில் முள் குத்த அங்கிருந்த காவலர் "கர்ணன்" என்னை சைக்கிளில் வைத்து மறுகரையில் விட்டது மறக்க முடியாத நினைவு. "கர்ணன்" ஒரு transistor வைத்திருந்தார் [வனச்சரகத்தில் வேலை பார்க்கும் அலுவலர்கள் தங்கள் தனிமை குறைக்க பலர் பல வழிகள் வைத்திருக்கின்றனர். கர்ணனுக்கு transistor. "ஏதோ நினைவுகள்" [அகல் விளக்கு - Shoba / Jency], "பனி மழை விழும்" ["எனக்காக காத்திரு" - Deepan Chakravarty] ஆகியவை இந்தக் கர்ணன் அந்த சைக்கிள் பயணத்தில் transistor மூலம் எனக்களித்த "முல்லைப் பெரியார் கொடை". இப்படிப்பட்ட பாடல்களை கேட்டுக்கொண்டு இயற்கையில் நம்மை நனைக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு என்ன பெயர்? தனிமையில் இனிமை. இன்று, அவசரமான பகல்கள் தரும் ஆயாசமான இரவுகளில், எப்பொழுதேனும் நள்ளிரவுக்கு முன் channel மாற்றுகையில் "ஏதோ நினைவுகள்" சிக்கும். எதிர்பாராமல் சிக்கும் நினைவுகளில் நாம் சிக்குவது எளிதன்றோ!
Benny Cook இந்த Mullai Periyar Dam கட்ட தன் நாட்டிற்குச்  சென்று சொத்தை விற்று வந்து பணம் கொட்டினார் என்கிறது சரித்திரம். இன்று ஒரே நாட்டில் இருக்கும் பக்கத்து பக்கத்து மாநிலங்கள் பேதங்களை தீர்ப்பதற்கு பதில் வளர்ப்பது பக்குவத்தை பீடித்த தரித்திரம். இம்மாதிரி சமயங்களில் Sardar Patel பற்றி படித்தவை ஞாபகம் வருகிறது. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவுடன் சேர மறுத்த சமஸ்தானங்களை எப்படி வழிக்கு கொண்டு வந்தார்...இவர் போன்றவர்கள் இன்றிருந்தால் முல்லைப் பெரியார் விவகாரம் ஒரு நாள் தாங்குமா?   
   

1 comment:

  1. மனிதர்களிடம் இன்று சகிப்புத்தன்மை குறைந்து விட்டதோ? என்று சந்தேகம் வருமளவுக்கு இன்றைய அரசியலும், மக்களும் மாறிவிட்டனர்.

    ஏதோ நினைவுகள், பனிவிழும் மழை பாடல் கேட்க கேட்க இனிமையான பாடல்கள்.

    ReplyDelete