Thursday, January 19, 2012

9. கமலம் டீச்சர் - 1

ரெண்டு சுழி மூணு சுழிகளுக்கிடையே சிக்கிக்கொண்டிருந்த என் ஏழாம் வகுப்புத் தமிழை சீர் செய்யத் துவங்கியவர் கமலம் டீச்சர். நெற்றி வகிட்டில் குங்குமம் பதித்து மஞ்சள் பூசிய முகத்துடன் புடவையை முழுதாய் போர்த்தி அதன் மறுபுறத்தை இடது கை விரல்களில் பிடித்தபடி வரும் கமலம் டீச்சர் என்னை உளியால் செதுக்கிய வருடங்களில் ஒரு முறை கூட அவர்  வகுப்பறைக்குள் செருப்பணிந்து பார்த்ததில்லை. அறிவின் பலமோ குணமோ - அவர் நடக்கையில் மெட்டியின் சத்தம் பல "rows" வரைக்கும் கேட்கும். சுமார் 5 வருடங்கள் - "பிச்சை புகினும் கற்கை நன்றே" துவங்கி  "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" வரை அவர் ஊற்றிய தமிழ், அறிவுக்கு போகும் வழியில் ரத்தத்திலும் ஊறிப்போனது. அதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் அவர் ஒரு நொடியில் என் ஒரு ஜென்மத்திற்கு தேவையான பாடம் நடத்தியது ஒரு சாட்சி.

அப்பொழுதெல்லாம் 10, 12 வகுப்புகளில் தமிழுக்கு சங்கம் மன்றம் தேர்வுகள் உண்டு. அறிவியல், கணக்கு போன்றவற்றை விட தமிழில் அதிக மதிப்பெண் வருவது எனக்கும் வீட்டினருக்கும் விசித்திரமாக இருக்கும். 12 ஆம் வகுப்பு அரையாண்டு முடிந்து, கமலம் டீச்சர் மன்றம் மதிப்பெண் பட்டியல் மற்றும் பள்ளியின் வழக்கமான அரையாண்டு தமிழ் விடைத்தாள்கள் தாங்கி வகுப்பறைக்குள் நுழைந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பது இன்றும் ஞாபகம் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் கமலம் டீச்சருக்கு  கூடுதலாக ஒரு "அம்மன்" களை வந்து விடும். இப்போது போல் language பாடங்களில் 180, 190 என்றெல்லாம் அப்போது எளிதில் போட மாட்டார்கள். எனது விடைத்தாளை அனைவருக்கும்  முன் தூக்கிப் பிடித்தபடி  நான் 186 வாங்கியிருப்பதாகவும் 2nd paper இல் 96 மதிப்பெண் என்றும் கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருப்பதாகவும் சிலவற்றை வாசித்தும் காட்டி என்னை விடைத்தாள் பெற்று கொள்ள அழைத்தார். அந்த சில நிமிட புகழ்ச்சியில் எனக்கேறிய தலைக்கனத்துடன் அவர் முன் சென்று என் இடக்கையை எனையறியாமல் நீட்ட, ஒரு நொடி என்னையும் இடக்கையையும் மாறி மாறி பார்த்த அவர் விடைத்தாளை வகுப்புக்கு வெளியே வேகமாய் விட்டெறிந்து "போய் எடுத்துக்கோ" என்றார். மாடியிலிருந்த வகுப்பிலிருந்து பறந்து, நடைபாதை தாண்டி கீழே கிரௌண்டில் விழும்படி இருந்த அந்த வேகம் பக்கங்கள் கட்டியிருந்த வெள்ளை நூலை அறுத்து பக்கமெல்லாம் தனித்தனியாக கிடக்க அதை எடுக்கையில் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்தோம் என்று மனது குறுகிப்போனது. அதன் பின் என்னுடன் அவர் என்றுமே பேசியதில்லை. அன்று பசியில்லை. தவறுக்கும் பசிக்கும் தொடர்புண்டு போலும். இல்லாத பசியை அம்மாவிடம் சொல்லாமல் தட்டுடன் அமர்ந்த பொழுது "ஒளியும் ஒலியும்" இறுதிப் பாட்டு வருவதற்கு சரியாக இருந்தது (நமக்கு பிடித்த பாடல்கள் பெரும்பாலும் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் கடைசியாகத்தான் வரும். பாதிப்பாட்டிலேயே "செய்திகள் தொடரும்" slide போட்டு விடுவார்கள்). "kaise kahoon kuch kahna sakoon..." [Ilayaraja / Bhupindar singh / Janaki] என்று துவங்கும் "நண்டு" படத்தின் முழு நீள hindi பாட்டு. "அனைவரின் விதியும் அவரவர்க்குள்; விதியின் விதியோ  அவ்விதிக்குள்" "விதியின் ஸ்வரங்கள் யார் கண்டார்" போன்ற அற்புதமான பொருள் தரும் வரிகள் அடங்கிய இப்பாட்டு [தட்டித் தடுமாறி நான் பாஸ் பண்ணிய hindi இது போன்ற விஷயங்களுக்கு கைகொடுக்கிறது!] "காலச்சலனம்" மிக்கது - கேட்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் நம்மை தூக்கிகொண்டு போய்விடும். வழக்கமான இளையராஜா 2nd stanza special இந்த பாட்டிலும் உண்டு. ஆண் குரல் ஒரு "flat terrain" இல் பயணித்தாலும் Janaki கொண்டு வரும் ஏற்ற இறக்கங்கள் அற்புதம். மாலைப்பொழுதில் பரந்த வெளியில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி ரயிலில் நம்முடன் வரும் பிரமாண்டமான மலைகளுக்கு இடையில் சூரியன் மறைந்து கொண்டிருக்கும் பொழுது இந்தப் பாட்டை கேட்டுப்பாருங்கள்...அல்லது மரங்கள் மூடிய சாலையில் மழை  பெய்து முடிந்த பின் நடந்து போகையில் கேட்டு பாருங்கள்...

 www.youtube.com/watch?v=yUI1FLexJrY என்ற link போட்ட அந்த புண்ணியவானுக்கு நன்றி.
  
கமலம் டீச்சர் வீசி எறிந்த விடைத்தாள் என் பழைய பெட்டியில் இன்றும் உள்ளது. அன்றைக்குப் பிறகு என்றுமே என் இடக்கை எந்த பொருள் பெறவும் நீண்டதே இல்லை என்பது மட்டுமல்ல... அதன்பின் எப்பொழுதெல்லாம் தலைக்கனத்தின் சாயல் தலை தூக்கும் என்று தோன்றுகிறதோ அதற்கு முன்னரே கமலம் டீச்சர் என் நினைவில் வந்து என்னை குட்டி விட்டு போய் விடுகிறார்.




3 comments:

  1. சங்கம் மற்றும் மன்ற தேர்வுகள் இன்னும் மனதில் உள்ளது. நான் படித்த பள்ளியில் இன்னும் பிற தேர்வுகள் - காலாண்டு, அறையாண்டு, முழுஆண்டு பரீட்சை முடிந்த உடன் மனதில் உள்ள சந்தோசம் விவரிக்க முடியாதது .....

    நண்டு படத்தில் இந்த பாடல் நான் இது வரை கேட்டதில்லை... மிகவும் இனிமை. கதாநாயகனும், நாயகியும் நடப்பதிலேயே காதலை / வாழ்க்கையின் சாரத்தை சொல்வது மேன்மை........ஜானகியின் உணர்வு பாடலுக்கு இனிமை சேர்த்துள்ளது.....

    ReplyDelete
  2. மன்ற தேர்வுகள் என்பதெல்லாம் பொற்காலங்கள். எங்கள் பள்ளியிலிருந்து இந்த தேர்வுகளுக்கு எங்கள் பகுதியின் பெரிய பள்ளி டி.வி.எஸ். பள்ளிக்கு தான் அனுப்புவர். பத்தாம் வகுப்புக்கும் அந்த பள்ளிதான் மையம். இன்றும் நினைவில் இருக்கிறது.

    ReplyDelete