Thursday, February 23, 2012

11. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 1

இளையராஜாவின் பாடல்களை கேட்பது எப்படி? வாழ்கையை வாழ்வது எப்படி? இந்த இரண்டு கேள்விகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே விதமான பதில் இருக்கக்கூடும். நினைவின் இழைகளில் காலம் மீட்டும் ஸ்வரம் இசையா? வாழ்வா? இசைவான வாழ்வா? இத்தகைய இழைகளைப் பிடித்து பயணம் போகப் பழகுவதற்கே வருடங்கள் பல தேவைப்படுகிறது.
இப்பயிற்சியில் ஏற்படும் பரிமாணங்களின் அடர்த்தியும் பன்முகத்தன்மையும் இளையராஜாவின் பாடல்களில் நினைவாக பதிவாகிறதோ அல்லது பாடல்களின் பரிமாணங்கள் நிகழ்வில் உராய்ந்து நம் நினைவாக பதிவாகிறதோ...!  . உராய்தல் (friction)  இயற்பியலின் கூறு என்றால், நினைவுகள் உராயும் இசையின்  கூறே இளையராஜாவின் இயற்பியல் எனலாம் ...

நினைத்தாற்போல் கேட்டு விட்டு போவது என்பது இளையராஜாவின் பாடல்களில் முடியாது. ஒரே ஒரு நொடி வந்து போகும் குழலின் ஒலி  கூட அது கேட்கப்பட்ட காலத்தை சுமந்து கொண்டு வருடக்கணக்கில் உலா போகும். ஒரு மரத்தை தச்சன் இழைப்பதை போல அந்த நொடியை மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு, ஸ்வரத்தில் அதை தேய்த்து தேய்த்து... போகப்போக நினைவா ஸ்வரமா என்ற வித்தியாசம் மறந்து  அந்த நொடியிலேயே நனைந்து ஒரு ஏதுமற்ற நிலையை ஏற்படுத்தும் இயலை இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

நாம் படித்த இயற்பியல் அதிகபட்சம் மூன்று பரிமாணங்கள்  அடிப்படையிலானது. வாழ்க்கையோ காலத்தின் பரிமாணங்கள் அடிப்படையிலானது. அந்த பரிமாணங்களை நம் ஞாபக அறையின் நீள அகலத்தில் தேக்கி வைப்பதற்கு தோதான ஒலியலைகளை நமக்கேற்ற ஸ்வரத்தில் நமக்கேற்ற தளத்தில் நமக்கேற்ற விசையாக இசைப்பது இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

ஒரு ஒலிக்கற்றையால் நம் நரம்புகளை நீவி விட முடியும். ஒரு ஒலிக்கற்றையால் செயலின் வரம்புகளை சீவி விட முடியும். ஒரு ஒலிக்கற்றையால் நினைவின் விதைகளை தூவி விட முடியும். சில ஒலிக்கற்றைகள் தூக்கம் தரலாம். சில ஏக்கம் தரலாம். ஞாபக வீக்கம் தருபவை சில... துயரம் நீக்கும் மருந்தாய் சில... இப்படி நம் மனக்குடுவை முழுதும் முட்டி மோதும் ஒலிக்கற்றைகள் பாய்ச்சும் அனுபவ ஒளி wave nature அல்ல particle nature அல்ல. இது Einstein பார்த்திராத, விஞ்ஞான தர்க்கங்கள் மீறிய, இளையராஜாவின் இயற்பியல் எனலாம்...

இயக்கங்களை விளக்குவது இயற்பியல் என்றால்,  மனதின் இயக்கங்களை மயிலிறகால் துலக்குவது இளையராஜாவின் இயற்பியல் எனலாம். காலத்தின் பிணக்குகளை ஸ்வரங்களின் கணக்குகளுக்குள் கட்டிப்போடும் சூத்திரம் இளையராஜாவின் இயற்பியலில் அடிப்படை விதி எனலாம்...

நம் புலன்களுக்கு நலம் பயக்கும் இந்த விதிகளின் விரல்கள் ஐந்து. இவை முறையே வயலின், புல்லாங்குழல், கிடார், வீணை மற்றும் கப்பாஸ். இவ்விரல்கள் தாங்கும் கரங்கள் இரண்டு - தபேலா மற்றும் triplet. விஞ்ஞான உடம்பு நடமாட இயற்பியல் விதி இருத்தல் போல நம் மெய்ஞான உடம்பை புடம் போட இந்த இளையராஜாவின் இயற்பியல் விதியின் விரல்கள் கருவியாகும்...இக்கருவியின் வழியே கசியும் காலத்தை செவிக்குள் ஊற்றி, உடலை உற்சாகப்படுத்தும் செந்நீர் போல் மனதை மகிழ்வூட்டும் நன்னீராய் உயிரெங்கும் ஓடும் ஸ்ருதியாய் படரும் பாடல்கள்தான் எத்தனை எத்தனை...

அவற்றை "இளையராஜாவின் இயற்பியல்" [ Physics of Ilayaraja ] என்னும் பகுதிகளில் அனுபவிக்க முயல்வோம்...

2 comments:

  1. Ilayaraja is the best.

    ReplyDelete
  2. Ilayaraja is unique and we can not compare with any musicians. His period is the Golden Era of Indian (especially Tamil and South India) Music. 4,500 songs no one can achieve his records. Long life Raja Sir! May the Almighty God bless you and give you good health and happy long life.

    ReplyDelete