Friday, July 27, 2012

21. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 11


ஒரு பாடலுக்குள்ளே கடல் மெதுவாக அசைந்து கொண்டிருக்க முடியுமா? "கடல்" என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமலேயே ஒரு பாடல் முழுதும் கடலின் வாசனை வீச முடியுமா? ஒரு பாடலே படகாக, அதன் மேல் நாம் அமர்ந்து, கடலில் மிதந்து, நினைவில் மூழ்கிக் கொண்டிருக்க முடியுமா? நிச்சயம் முடியும்.

அது என் ஏழாம் வகுப்பு ஆண்டு விடுமுறை நேரம். என் அப்பா பணிபுரிந்த நீதித்துறை சார்பில் ஊழியர்கள் மாநாடு கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது. இதை பயன்படுத்தி மாநாட்டின் முன்பின் தினங்களில் சுற்றுலாவும் சேர்க்கப்பட்டு ஊழியர்களின் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர். ஒரு அதிகாலை பொழுதில் மதுரை கோர்ட் வளாகத்திலிருந்து நான்கைந்து "தீப்பெட்டி" வேன்கள் (அப்பொழுது இந்த வகை வேன்கள் மட்டுமே நிறைய பேர் சேர்ந்து பயணம் செய்வதற்கு புகழ் பெற்றிருந்தன) கிளம்பின. கடல் பார்க்கும் கனவுடன் அந்த வேன்களில் இருந்த பல சிறுவர்களில் நானும் ஒருவன்.

மதிய வேளை. உணவு நேரம். திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் காற்று நம்மை இழுத்துக் கொண்டு போய்விடும் என்று தோன்றிய அத்துவான காட்டில் வேன்கள் நிறுத்தப்பட்டன. சுற்றிலும் வான் தொடும் விசிறிகள் காற்றின் வேகத்திற்கு சுற்றிக் கொண்டிருந்தன. நாங்கள் இருந்த இடம், ஆசியாவில் அதிவேக காற்று வீசும் இடமான ஆரல்வாய்மொழி. கடல் எப்போது கண்ணில் தெரியும் என்ற ஏக்கமும் உணவின் ஊக்கமுமாய் வேகமாக சாப்பிட்டு முடிக்கையில் ஒரு வித "வாசனை" பிடிபட்டது. ஆம். கடலின் விரல் நம் மூக்கை தொடப்பார்க்கும் இடம் ஆரல்வாய்மொழி. "இன்னும் சற்று தொலைவில் தான் நான் இருக்கிறேன் வா" என்று காற்று மூலம் கடல் தெரிவிக்கும் இடங்கள் நம் மனதில் சட்டென்று ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். ஆரல்வாய்மொழியும் அத்தகைய இடமே...

உணவுக்குப் பின் சற்று நேரம் ஓய்வுக்கு விடப்பட்டது. வேன் டிரைவர் cassette playerரில் பாடல்கள் போட்டு விட்டு சீட்டில் சற்று அசந்திருந்தார். நாங்கள் வேன்களை சுற்றி "ஓடிப் பிடித்து" விளையாடிக் கொண்டிருந்தோம். என் வயதுக்குள் இளையராஜா கடலை ஊற்றப் போகிறார் என்று அப்போது தெரியாது. வரிசையாக வந்து கொண்டிருந்த பாடல்களின் நடுவே
தாலாட்டத் துவங்கியது வானம்! இந்த பாடலின் வசீகரத்தினால் நான் அன்று மெதுவாக ஓடி பலமுறை ஆட்டத்தில் "அவுட்" ஆனேனா என்று தெரியாது ஆனால் அந்த பேய் காற்று வீசும் ஆரல்வாய்மொழியும், மதிய நேர‌ அமைதியும் இந்தப் பாடலும் என் மனதை என்னவோ செய்திருக்க வேண்டும்.

அன்று இரவு, கடலுக்கு அருகில் இருக்கும் Vivekananda Ashram என்ற அற்புதமான இடத்தில் தங்கும் ஏற்பாடு. அந்த van driver ஒரு அசாத்தியமான இளையராஜா ரசிகராக இருக்க வேண்டும். நாங்கள் படுக்கச் செல்லும் பொழுதில், தென்னை, பனை மரங்களுக்கிடையில் "ஊ" என்று உற்சாகமாய் ஊரை சுற்றி வந்த கடல் காற்று நாங்கள் தங்கியிருந்த இடத்தையும் தழுவிப் போக மறக்கவில்லை. வேன் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு "தாலாட்டுதே வானம்" கேட்டுக் கொண்டிருந்தார். அன்று வரை, இந்தப் பாடல் காட்சியை நான் பார்த்ததில்லை. அதன் பின்னும் சில வருடங்கள் கழித்துத்தான் பாடல் வரும் காட்சியை பார்க்க நேர்ந்தது. ஆனால், அந்த அற்புத இரவிலேயே, இசையின் துடுப்பு மூலம் என்னை கரையிலிருந்து கடலுக்குள் செலுத்திக் கொண்டிருந்தார் இளையராஜா.


மறுநாள் காலை, விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி! படகில் செல்லும் பொழுது இந்தப் பாடல் ஏனோ நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. ஏன் இப்படி? என்று தெரிய ஐந்து வருடங்கள் ஆனது. அந்த இடைப்பட்ட ஐந்து வருடங்களில் இந்தப் பாடலை பலமுறை கேட்டு மனதுக்குள் பத்திரப்படுத்தியபின், வானம் இருட்டிக் கொண்டு வரும் ஒரு ஐப்பசி மாத பிற்பகலில் அதே விவேகானந்தர் பாறைக்கு போகும் படகில் காலம் என்னை ஏற்றியது.

எனக்கு முன்னரே படகில் ஏறிக் காத்திருந்தது "தாலாட்டுதே வானம்". இந்தப் பாட்டு படகில் மட்டுமா ஏறும்? கடல் முழுதும் ஏறுமே! நம் மனது முழுதும் ஊறுமே! "தள்ளாடுதே மேகம்"? மேகம் தள்ளாடுவதை பார்ப்பதற்கு நாம் கடலில் இருக்க வேண்டும். கடலின் கரங்கள் படகை அசைக்க, அந்த அசைவின் பிம்பம் போல வானத்தின் கண்ணாடியில் மேகங்கள் அசையும் காட்சி கண்ணுக்குள் புகுந்து நெஞ்சத்தை நிறைக்கும்.

இந்தப் பாடலில், பல இடங்களில், புல்லாங்குழல் மேலே நகர, அதனடியில் வயலின் நீளும். இப்படி நீளும் வயலின், பார்வையின் பரப்பில், படகின் அடியில் மோதும் அலைகள் பிடிமானம் இன்றி ஏற முயன்று, படகின் சுவர்களில் வழுக்கிக் கொண்டு மீண்டும் கடலுக்குள் விழும் அழகு போன்றது.

படகு நீரைக் கிழித்துக்கொண்டு முன்னேறுகையில் வரி வடிவங்களாய் நம்மை விட்டு நீங்கும் நீர், படகின் பின் முனையில் மறுபடியும் குழுமி நம்மைத் தொடரும் அழகியலை சொல்கிறதோ முதல் சரணத்திற்கு முன்பு வரும் வயலின்?

நம்மை வாரிச் சுருட்டிக் கொண்டு போவது போல அடுத்தடுத்து வரும் அலைகளின் உயரம் கூடிக் கொண்டே போகையில், அந்த அலைகளின் படிக்கட்டுக்களில் படகு ஏறி இறங்கும் லாவகத்துக்கு ஏற்ற லயத்தில் மனமும் ஏறி இறங்குமே...அது போன்றது இரண்டாவது சரணத்திற்கு முன்பு ஏறி இறங்கும் வயலின்.

நம் மீது ஆங்காங்கே தெறிக்கும் கடலின் துளிகள் தரும் தொடுகை உணர்வு போல  பாடலில் ஆங்காங்கே "வைத்து எடுக்கப்படும்" கப்பாஸ்!

நம் வீடுகளுக்கும் கடலுக்கும் பல நூறு மைல்கள் தொலைவு இருக்கலாம். ஆனால், வீட்டுக்குள்ளேயே கடலை வைத்திருக்கவும், விரும்பிய பொழுது "குளியல்" போடவும் உதவுகிறது இந்தப் பாடல்!

4 comments:

  1. கடல் "குளியல்" உதவும் பாட்டு என்று விளக்கி படிக்கும் அனைவரையும் ஞாபக குளியல் போட வைக்கிறீர்கள் kumaran sir

    ReplyDelete
  2. இளையராஜாவின் இந்த பாட்டு சுகமாய் தாலாட்டும். உங்க ரசனையும், இசை சார்ந்த அனுபவங்களும் தேனில் ஊறிய பலாசுளையாக இனிக்கிறது.

    ReplyDelete
  3. கலக்குகிறீர்கள் குமரன். நிறைய இடங்களில் மனதை கலங்கவும் வைக்கிறீர்கள். அற்புதமான தலைப்பு. அருமையான எழுத்து.

    ReplyDelete