Sunday, October 28, 2012

27. நீதானே என் பொன் வசந்தம் - இளையராஜா என்ன செய்தார்?


இளையராஜாவின் இசை விரும்பிகள் இப்போது சந்தித்து கொண்டால், அவர்கள் உரையாடலில் தவறாமல் இடம்பெறுவது, "நீதானே என் பொன் வசந்தம்" பாடல்கள் கேட்டாயா?" என்பது தான். அதிலும், நாற்பது வயது கடந்தவர்கள் இந்த கேள்வியை கேட்கும் பொழுது அவர்களின் கண்களை உற்றுப் பார்த்தால், அதில், கடந்த காலம் கொப்பளித்துக் கொண்டிருப்பது தெரியும்.

எனது ஒலிப்பேழையின் உள்ளே இந்தப் பாடல்களை தேக்கிய பின்னும் கேட்பதற்கான சரியான காலத்திற்காக சில வாரங்களாக காத்திருந்தேன்... ஏனென்றால், "நீதானே எந்தன் பொன் வசந்தம்" என்னும் "வரி"க்குதிரை லேசாக அதன் கால்களால் நம்மைத் தட்டினால் நாம் முப்பது ஆண்டுகள் முன்னர் போய் விழுவோம். நினைவெல்லாம் நித்யா, 80கள், நம் பால்யம் என்று நூல் பிடித்து நாம் எங்கோ திரியத் துவங்குவதற்கான வசதி இந்த வரியின் அடியில் ஒளிந்துள்ளது. எனவே, இதை தனித் திரியாக பிரித்து, பின்னர், புதிதாக வந்திருக்கும் பாடல்களை கேட்கும் அனுபவம் பெற‌ வேண்டும்.

சென்ற வாரம் மதுரைக்கு போகும் சந்தர்ப்பம். மழை பெய்த மதுரை இரவில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உலவும் வாய்ப்பு. பள்ளியில் படிக்கையில், "நினைவெல்லாம் நித்யா" நாட்களில், தினசரி மாலை, பெரும்பாலும் அம்மாவின் வாசம் நிறைந்த தேநீருடனும் "பனி விழும் மலர் வனம்" முடிந்து "நீதானே எந்தன்..." பாடல்களுடனும் இதே மொட்டை மாடியில் "home work" செய்யத் துவங்கிய வருடங்கள் நினைவில் எழ, ஒலிப்பேழையை ஓட விட்டேன். வெல்லத்தை கலத்தில் கொட்டி, கொதிக்க கொதிக்க, பாதி ஆவியாகி அடியில் பாகு கெட்டிப்பது போல ஆழமற்ற‌ பாடல்கள் முதல் கேட்பிலேயே ஆவியாக‌, மீதமிருந்தது "முதல் முறை" மற்றும் "சற்று முன்பு" பாடல்களின் வெல்லப்பாகு...

"முதல் முறை பார்த்த ஞாபகம்" பாடலில் சில அற்புதங்கள் இருக்கின்றன. எத்தனை நாட்கள் ஆகி விட்டன இது போன்ற "கனமான" வயலின் கோர்வையை காதுக்குள் ஊற்றி...

நம் உடலில் காயம் ஏற்பட்டால் அது காய்ந்து பொருக்காக மாறும். அந்த பொருக்கை விரலால் தடவுகையில் ஒரு வித நெருடல் தோன்றும். இதுவே, மனதில் விழுந்த நினைவின் பொருக்காக இருந்தால்? அதைத் தடவிப் பார்ப்பது எப்படி? அதைத் தான் இந்தப் பாடல் முழுவதும் இளையராஜாவின் violin நமக்குத் தருகிறது.

நம்மூரில் ஊர்களுக்கிடையே பயணம் செல்கையிலே சாலையோரம் இருக்கும் முள் மரங்கள் சில சமயம் நம்மேல் சட்டென்று கீறி விட்டு பின்னோக்கி ஓடி விடும். அந்தக் கீறல் ஒரு நொடி தான். ஆனால் அது நீண்ட நேரம் "எரியும்". அது போல, இந்தப் பாட்டின் சரணங்களில் ஆங்காங்கே வரும் அந்த violin ஒற்றை கீறல்க‌ள்!

"காற்றை கொஞ்சம்" பாடல் முழுவதும், பழைய இளையராஜாவின் வயலின் பாட்டுக்கு அடியில் ஓடுவது, மனதுக்கு இதம் அளிக்கிறது...

இனி சில ஏமாற்றங்கள்:

(i)இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு அடியில் நம்மை இறங்க வைத்த அந்த அற்புதமான தபேலா எங்கே? ஒரு இடத்தில் கூட தென்படவில்லையே? "இது இளையராஜா பாடல்" என்று இனம் காண வைத்த அந்த "bass guitar" எங்கே தேய்ந்து போனது?

(ii)பாட‌க‌ர்க‌ளுக்கு ப‌ஞ்ச‌மா? லயத்திலும் உச்சரிப்பிலும் நம்மை ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு ப‌ல‌ மைல் தொலைவில் இருக்கிறார்க‌ளே... அதிலும் "சாய்ந்து சாய்ந்து" பாட‌லின் த‌ர‌ம் அதைப் பாடிய‌வ‌ர்க‌ளால் பாதாள‌த்தில் சாய்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தே..."தேங்கிப் போன..." [ "சற்று முன்பு" பாடல்] வரிகளுக்காக மட்டும் ரம்யாவிற்கு ஒரு சபாஷ்.


(iii)ஒரு தலைமுறை, வருடக்கணக்கில் முணுமுணுத்த வரி தானே படத்தின் பெயராய் வைக்கப்பட்டிருக்கிறது...பிறகு ஏன் "எந்தன்" விடுத்து "என்"?
இளைய தமிழ் தலைமுறைக்கு "எந்தன்" என்பதன் அர்த்தம் தெரியாது, அதனால் "reach" குறைந்து விடும் என்ற அவநம்பிக்கையா?

(iv)இளையராஜாவின் ப‌ல‌ பாட‌ல்க‌ள், ந‌தியின் அடியில் த‌ங்கி விடும் கூழாங்க‌ற்க‌ள் போல‌ ந‌ம் நினைவில் நீண்ட‌ கால‌ம் ப‌டிந்து விடுப‌வை. ஆனால் "நீதானே என் பொன் வ‌ச‌ந்த‌ம்" பாட‌ல்க‌ள், ந‌ம் நினைவுக‌ளில் தேங்கும் அள‌வு ந‌ம‌க்குள் இற‌ங்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே...

4 comments:

 1. நானும் இளையராஜாவின் ரசிகன்தான். இசையை நீங்கள் வர்ணனை செய்வது போல எனக்கு எழுதத்தெரியாது. ஆனால் இளையராஜாவின் இசையில் கிறங்கி விடுவேன். நீதானே என் பொன்வசந்தம் சந்தேகமில்லாமல் சிறந்த இசைதான். ஆனால் இளையராஜாவின் பழைய பரவசப்படவைக்கும் மெட்டுக்களுடன் ஒப்பிட்டு விட்டீர்களானால் ஏமாற்றம்டைவ்து மட்டுமே மிச்சம். இந்த இசையை அனுபவிக்க முடியாது.

  ReplyDelete
 2. பேசிப் பேசி
  மௌனம் வந்து
  பேசுதிங்கே.
  //நினைவுக‌ளில் தேங்கும் அள‌வு ந‌ம‌க்குள் இற‌ங்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே//
  இது அதிகமான எதிர்பார்ப்பினால் வந்த விளைவே.
  என் ஆதங்கத்தை இங்கே தெரிவித்திருக்கிறேன்.
  http://www.sekkaali.blogspot.com/2012/09/blog-post.html

  ReplyDelete
 3. Maestro has made a totally different approach to his orchestration in this film. I am absolutely amazed by all the songs, except "pudikkala mamu". "ennodu va va.." is mesmerizing.

  ReplyDelete
 4. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete