Sunday, January 27, 2013

32. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 19


நாம், சமூகத்துடன் நேரடி தொடர்பில் இறங்குவது பெரும்பாலும் கல்லூரியில் கால் வைக்கும் பொழுது துவங்குகிறது. இதன் ஒரு வடிவம், NCC, NSS போன்ற அமைப்புகளில் சேர்ந்து "நாட்டு நலப் பணி"களில் ஈடுபடுவது. நம்மில் பெரும்பாலானோர் நம் கல்லூரி நாட்களில் இதில் பங்கு பெற்றிருப்போம்..

எனது "இளங்கலை" பருவத்தில் NSS சார்பாக நாங்கள் traffic ஒழுங்குபடுத்தும் பணியில் சில பொழுது பணியாற்றியிருக்கிறோம். அத்தகைய ஒரு தினத்தின் மாலைப் பொழுதில், நெரிசல் மிகுந்த திண்டுக்கல் ரோடு சந்திப்பில் நாங்கள் நிறுத்தப் பட்டிருந்தோம். பழைய ஆரிய பவன் ஒரு முனையுமாய், முருகன் கோயில் மறு முனையுமாய் இருக்கும் அந்த நான்கு ரோடு சந்திப்பில், பக்கத்துக்கு நால்வர் வீதம் கைகளை இணைத்தபடி குறுக்கே நின்றால்  red signal ஒதுங்கினால் green! ஒருபக்கக் குழு ஒதுங்கி "green" செய்யும் பொழுது ஒரு விசில் தர வேண்டும். மறுபக்க குழு உடனே மறு விசில் கொடுத்து கைகளை கோர்த்தபடி மறித்து "red" செய்ய வேண்டும். இவ்வாறு நான்கு குழுக்களின் ஒருங்கிணைப்புடன், ஒவ்வொரு பக்கத்து சாலையிலும் போக்குவரத்து நின்று செல்லும்.

சாலை ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மதுரை மகாஜனம் "இது என்னடா புதுக் கூத்து" என்று எங்களை வினோதமாக பார்த்தபடி கைத்தடுப்புகளை மீறப் பார்க்கும்.  இந்த சந்திப்புக்கு அருகில் ஒரு சிறிய அம்மன் கோயில் சாலை நடைபாதையில் அந்நாளில் இருந்தது. அங்கு "கூழ்" ஊற்றும் திருவிழா. அப்புறம் என்ன, அங்கு இளையராஜா, ஒலிப்பெருக்கியின் வழியே மனதை நிரப்பும் இசையின் கூழை எடுத்து நமக்குள் ஊற்றுவார் என்பதை தனியே சொல்லவும் வேண்டுமா?

நாங்கள் பாடல்களை கேட்டவாறே எங்கள் வேலையை செய்து வந்தோம். அப்பொழுது "தங்க நிலவுக்குள்" (ரிக்க்ஷா மாமா / 1992 / Ilayaraja / SPB) பாடல் வந்தது.

இந்தப் பாடலில் சில அற்புதங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அதை தேடியெடுக்க, இளையராஜா செதுக்கியிருக்கும் வெவ்வேறு ஒலித்தளங்களின் தோட்டத்தில் நாம் நடக்க வேண்டும். அடித்தளத்தில் கிடார் மற்றும் தபேலாவின் கைப்பிடியை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு வயலின் மற்றும் புல்லாங்குழலின் படிகளில் ஏறிய பின், லயங்களின் லாவகத்துடன் ஒரு ஊஞ்சல், நாம் அமர்ந்தாட அமைக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு புரிய வரும்.

இதை எப்படிச் செய்திருக்கிறார் இளையராஜா? சில வரிகளைத் தவிர அனைத்து வரிகளின் முடிவிலும் வரும் புல்லாங்குழல் எப்படியிருக்கிறது? ஊஞ்சலில் நாம் உயரே செல்லும் பொழுது காதின் பின்புறத்தில் ஒரு காற்று வருடிச் செல்லும்...அனுபவத்திருக்கிறீர்களா? அதைப் போன்றது இந்த வரிகளின் பின்வரும் குழலின் வருடல். அந்த உச்சியில் ஒரு நொடி நின்று, மீண்டும் கீழிறங்கி, கால்கள் தரையைத் தொட்டு, ஒரு விசை உருவாகி மறு உச்சிக்கு போவோம்...அந்த உச்சிகளில் ஏற்படும் வருடல்களை ஆணியடித்து நிறுத்த முயல்வது போல சீரான இடைவெளியில் வரும் இரண்டு கப்பாஸ்... இந்த ஊஞ்சல் வீச்சில் தரைதொடும் நடுப்பொழுதை, காலக் கட்டுக்குள் கொண்டு வருவது போலவே, இரண்டு கப்பாஸ் நடுவே ஒலிக்கும் அந்த ஒற்றை மணியோசை...

இந்த பாடலின் வசீகரம் பற்றி பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு நிமிட மயக்கத்தில் எதிர் சாலையில் விசில் ஊதியது எங்கள் காதில் ஏறவில்லை. ஏறியிருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயம் என்று அப்போது எங்களுக்குத் தோன்றவும் இல்லை. பதில் விசில் ஊதி, கைகளை கோர்த்து உடனடி தடுப்பு ஏற்படுத்த வேண்டிய நாங்கள், இசை அடுப்பை ஊதிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட நிமிடத்துக் குழப்பத்தில், பெருநெரிசல் ஏற்பட்டு அந்த குறுகிய சாலைகளின் சந்திப்பு குழப்பமாகிப் போனது... "college பசங்க கிட்ட பொறுப்பான வேலைய‌ கொடுத்தா இப்படித்தான் ஆகும்" என்று சொல்லியபடி எங்களை கடந்து போனார் ஒருவர்.

இப்பொழுது அதே இடத்தில் "automatic signal" வந்து விட்டது. இன்றும் அந்த இடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம், அத்தனை நெரிசலிலும், இரைச்சலுடன் கடக்கும் வாகனங்களுக்கு இடையிலும், அனைத்து சத்தமும் மறைந்து போய், அந்த வரிகளுக்கு முடிவில் வரும் புல்லாங்குழல் எங்கிருந்தோ என் காது மடலை தொடுவது போன்ற ஒரு உணர்வு.

நாம் கடக்கும் சாலைகள் அனைத்துமே காலத்தின் பாதைகள் தானே?

No comments:

Post a Comment