Sunday, March 16, 2014

39. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 23

எதிர்பாராத இடத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்கையில் அது எத்தகையதாகினும் அதற்குரிய உணர்வு அதற்கான இயல்பை விட‌ பல்மடங்கு பெருகியே நம்மிடம் சேரும். அதன் காரணமாகவே அது ஆழமாக பதிந்து விடவும் கூடும். இப்படியாகத்தான் ஒரு மாலை வேளையும் ஒரு சைக்கிள் கடை சிறுவனும் சேர்ந்து ஒரு பாட்டைக் காட்டி விட்டுப் போய் இருபது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.

பத்தாம் வகுப்பு பாஸ் செய்ததன் பொருட்டு மீனாட்சி கோயில் அருகில் உள்ள ஜான்சி ராணி பூங்காவின் எதிரில் இருந்த "கமலா சைக்கிள் மார்ட்" கடையில் வாங்கிய எனது சிறகுகள் வீட்டில் வந்திறங்கிய தினம், அதன் மேல் படிந்திருந்த சிறு சிறு தூசியை கூட துடைப்பதுமாகவும், டயர் அழுக்காகாமல் ரோட்டில் ஓட்டுவது எப்படி என்ற கவலையுடன் இரவு முழுவதும் கழிந்தது.

சைக்கிளை பயன்படுத்திட என்ன சாக்கு கிடைக்கும் என்ற தவிப்புகளுக்கிடையில் காற்றடிப்பது கூட களிப்பான வேலையாகத் தோன்ற, அதற்கென்றே வீட்டிலிருந்து "கமலா சைக்கிள் மார்ட்" வரை போய் காற்றடிக்கும் பழக்கம் தொற்றியது. சைக்கிள் கடையின் எதிரில் ஒரு ஸ்பீக்கர் கடை இருந்தது. விதவிதமாக வெவ்வேறு சைஸ்களில் ஸ்பீக்கர்களை அடுக்கி வைத்திருப்பார்கள். பூக்கடைக்கு மணம் போல, ஸ்பீக்கர் கடையென்றால் பாட்டு வாசம் வீச வேண்டுமே...எப்போதும் அந்தக் கடையில் ஏதேனும் பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சைக்கிள் கடையில் முதலாளி தவிர மூன்று நான்கு பேர் உண்டு. அதில், எடுபிடி வேலைக்கு என்னை விட வயதில் குறைந்த ஒரு சிறுவனும் இருந்தான். அங்கு வரும் சைக்கிள்களில் சிறு சிறு ரிப்பேர்  மற்றும் பஞ்சர் பார்ப்பதும் அவன் வேலைகளில் அடக்கம். அழுக்கைடந்த ஒரு முண்டா பணியனும் காக்கி டிராயருமாகத் திரியும் அவன் கையில் எப்பொழுதும் ஒரு ஸ்பானர் இருக்கும். எதிர்கடையிலிருந்து வரும் பாட்டுக்கு எசப்பாட்டு போல விசில் அடித்துக் கொண்டே வேலை செய்வது அவன் ஸ்டைலாக இருந்தது.

சில மாதங்களில், பல முறை சென்று வந்ததன் பயனாக, ஒரு புதிய விஷயம் அந்த சிறுவனை நெருக்கமாக பார்த்ததில் புரிந்தது. அவன் எப்பொழுதும், எந்தப் பாட்டை விசிலடிக்கத் துவங்கினாலும் சற்று நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாட்டுக்குத் தாவி அதை விசிலடிப்பது அவனது வழக்கமாக இருந்தது. எந்த நேரத்தில் அந்தப் பாட்டுக்குத் தாவுவான் என்பது மிக இயல்பாக நெருடல் ஏதுமின்றி நிகழும் மாற்றமாக இருந்தது...

அதுவரை நான் அந்தப் பாடலை கேட்டிருக்கவில்லை. பிரபலமான பாடலாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையிலே, ஒரு நாள் பள்ளி முடிந்து காற்றடிக்கச் சென்றிருந்தேன். எதிர்கடையிலிருந்து "வா வெளியே இளம் பூங்குயிலே" [பாடு நிலாவே‍ - 1987] என்னும் ஒரு பாட்டு ஒலிக்கத் துவங்கியது. சிறுவனுக்கு குஷி தாளவில்லை. அவன் எல்லா பாடல்களுடன் இணைக்கும் விசில் இந்தப் பாடலே என்று விளங்கியது. இத்தனைக்கும் அது ஒரு மிகச் சாதாரணமான பாடலாகவே தோன்றியது.

இந்தப் பாடலின் துவக்கம், குழந்தைகள் விளையாடும் கீபோர்டில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் பீட்களில் ஒன்று போலத்தான் இருக்கும். இந்தப் பாட்டில் என்ன இருந்து விடப் போகிறது என்று கவனச் சிதைவு ஏற்படுத்தும் துவக்கம் அது.

நம்மூர் பாடல்களுக்கு இரண்டு ஸ்டான்ஸா என்று உருவாக்கப்பட்டதே இளையராஜாவின் interlude களுக்காகத்தானோ? அப்படித்தானே அவர் தனது வயலின் கொண்டும் குழல் கொண்டும் ஏராளமான இரண்டாம் சரணங்களுக்குள் நம்மை மூழ்க வைத்திருக்கிறார்...இந்தப் பாட்டில் அதற்காக‌ காத்திருக்கும் பொழுதில் பேங்கோஸ் மீது சற்று இளைப்பாறலாம். பிறகு அந்த வயலினும் புல்லாங்குழலும் நிகழ்கிறது. காத்திருந்த பயன் கிடைக்கிறது. முப்பதே நொடிகள். ஒருவிதமான துன்பியலின் படிகளில் நம்மை அமர்த்தி விட்டு மீண்டும் சாதாரணத்தில் சறுக்கிக் கொண்டு போய் விடும் பாட்டு.

நம் சிறுவன் இந்தக் முப்பது நொடிக் கோர்வையை சற்றே நீட்டி இழுத்து வாசிக்கும் பொழுது அதில் ஒரு சோகத்தின் இழையை இழுப்பது போல இருக்கும். பிறகு சட்டென்று பாட்டின் முடிவில் வரும் சஞ்சாரங்களுக்குப் போய், தனக்குத் தோன்றிய ஸ்வரங்களை சேர்த்து வாசிப்பான். எண்ணம் என்பதே ஸ்வரம் தானே?

இரண்டு மூன்று வருடங்கள் கடந்திருக்கும். புதியதின் மீதிருக்கும் ஆர்வம் தரும் மகிழ்ச்சியின் சுழற்சிகள் பழக்கமான பின் அவற்றை மெல்ல வடிந்து போகச் செய்வது தானே காலத்தின் கோட்பாடு? சைக்கிள் அன்றாட வாழ்வின் அங்கமானது. போகும் வழியில் இருக்கும் எந்த கடையிலும் காற்றடிக்கும் "பக்குவம்" வந்து விட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பின் கமலா சைக்கிள் மார்ட் செல்ல நேர்ந்த பொழுது சிறுவன் அங்கு இல்லை. முதலாளியிடம் "பையன் இல்லையா?" என்றேன். "சாப்பாடெல்லாம் போட்டு பாத்துகிட்டேன்...சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்டான்" என்றார். அதில் கோபத்தை விட வலி அதிகம் இருப்பது போல இருந்தது. சொல்லலாம் என்று நினைத்தும் சொல்ல முடியாத நிலையில் நம்மை வைக்கும் கோடிக்கணக்கான நொடிகளை உருவாக்கும் காலத்தில் இதுவும் அத்தகைய இன்னொரு நொடியாக இருந்திருக்கக் கூடுமோ? யாருக்குத் தெரியும் யார் எதை சொல்ல நினைத்தார்கள் சொல்லாமல் போனார்கள் என்று?3 comments:

 1. இனி பாடல் அருமையான பகிர்வு

  ReplyDelete
 2. Welcome Back, We really miss your Blogs............ IR Fan

  ReplyDelete
 3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

  வலைச்சர தள இணைப்பு : !நெஞ்சில் உலா!!!

  ReplyDelete