Sunday, May 17, 2015

42. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 25

1990களின் இறுதி...வேலைக்குச் சேர்ந்த புதிது...அதிக வேலைபளுவால் நீளும் அலுவலக இரவுகளை இலகுவாக்க அவ்வப்போது இளையராஜாவின் உதவியை நாடும் பழக்கம் எனக்கு உண்டு...அப்படித்தான் அன்றும், வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத குளிரூட்டப்பட்ட கூண்டுக்குள் நாளின் பெரும்பகுதியை கழிக்கும் என் போன்று மென்பொருள் இயந்திரங்களில் செயலற்று போயிருந்த மனதின் பொத்தானை அழுத்தியபடி எங்கள் தளம் முழுதும் பரவியது இளையநிலா.


குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளின் இளமைகளையேனும் ஊடுருவி நாளும் பொழுதும் எண்ணற்ற உதடுகள் முணுமுணுத்த பாடல் தான். ஆண்டுகள் கடந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற தூண்டுதல் சற்றும் குறைந்து விடாத வண்ணம் அழுந்தத் தடம் பதித்த பாடல் தான். இந்தப் பாடலின் கட்டமைப்பு பற்றியோ இசையும் வரிகளும் புரியும் அதிசயம் பற்றியோ நாம் பேசப்போவதில்லை. கரும்பு எப்படி இனிக்கும் என்பது பற்றி கட்டுரை தேவையா என்ன? இங்கு நாம் காணப்போவது ஒரு பாடல் பரப்பின் மீது படரும் காலம் நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை...அது நமக்குள் ஏற்படுத்தும் ஞாபகங்களின் தேக்கத்தை...


அந்த இரவின் பொழுதில் ஒரு முறை பொழிந்து முடித்த இளையநிலாவை "can you play that again " என்று தன் இருக்கையில் இருந்து அழைத்தார் ரஞ்சன். எங்கள் குழுவின் மேலாளர்களில் ஒருவர். மேலாளர்களுக்கான பாசாங்கற்றவர். பெங்காலிகள் கலை ஆர்வம் மிக்கவர்கள் என்ற கூற்றை நாம் நம்புவதற்கு மற்றுமொரு சாமானிய சான்று ரஞ்சன். கிடார் வாசிப்பார். மிக முக்கியமான நீண்ட மீட்டிங்குகளின் முடிவில் சோர்வேதுமின்றி ஏதோ ஒரு டுயூனை "லலலா" என்று முணுமுணுத்தபடி வெளியேறுவார்.

மீண்டும் ஒரு முறை இளைய நிலா பொழிந்த பின்பு என் தோளை பின்னிருந்து ஒரு கை தொட்டது. அவர்தான்...இது இளையராஜா தானே என்றார். நம்மவரை நாட்டின் மற்றொரு மூலையில் இருக்கும் ஒருவர், அவரின் படைப்பின் மூலமாகவே அடையாளம் காணும் பொழுது கணப்பொழுதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. பாடலின் முடிவில் வரும் கிடாரை இளையராஜாவைத் தவிர வேறொருவர் கோர்த்திருக்கக் கூடிய சாத்தியம் மிகக் குறைவு என்றவர் "நநந..." என்று அதை வாசிப்பதைப் போன்ற அபிநயங்களை கை மடக்கிக் காட்டியபடி பாடிய காட்சி அப்படியே புகைப்படம் எடுத்தது போல் இன்றும் தெளிவாய் நினைவிருக்கிறது. நான் இதை காப்பி செய்து கொள்கிறேன் என்று தனது கணிணியில் ஏற்றம் செய்து கொண்டார். சில மாதங்கள் கடந்திருக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை வேலை முடிந்து கிளம்பும் தறுவாயில், "நிறைய வேலை பார்த்தாயிற்று. இங்கு வா" என்று தன் இருக்கைக்கு அழைத்தார். அவரின் கணிணியிலிருந்து ஒரு வீடியோ போட்டார். இளையநிலாவின் இறுதியில் வரும் கிடாரை அவர் தன் வீட்டில் வாசித்துப் பார்க்கும் வீடியோ... "தினமும் சற்று நேரமேனும் இதை பிராக்டிஸ் செய்து வருகிறேன். கேட்கும்படியாகவது இருக்கிறதா" என்றார். "பிரமாதமாய் இருக்கிறது " என்றேன் நான். "அப்படிச் சொல்லாதே. இந்தப் பாடலில் counterpoints எக்கச்சக்கமான  இருக்கின்றன. அவை நமக்குப் பிடிபடுவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதன் பக்கத்தில் கூட என் வாசிப்பு இல்லை என்றார். counterpoint என்றால் என்ன என்று ஆவலுடன் கேட்டேன். இளையராஜாவை ரசிப்பவர்கள் கவுண்ட்டர் பாயிண்ட்களை அனுபவத்திருப்பார்கள். அந்தப் பெயர் மட்டும்தான் அவர்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும் என்று சிரித்தார். "இரண்டு வேறுபட்ட ஆனால் ஒன்றுக்கொன்று தேவைப்பட்ட‌ இசை கோர்வையோ, இசைக் கோர்வையும் வரியுமோ ஒரே தளத்தில் இணைந்து இசைக்கும் பொழுது வரும் இயைவுதான் counterpoint... ஈசியாக சொல்லிவிட்டேன். இவ்வாறு ஒன்றை உருவாக்குவது அத்தனை எளிதல்ல‌. கருவியும் கருவியும் கவுண்டர் பாயிண்ட் ஆகலாம். கருவியும் வார்த்தையும் counterpoint ஆகலாம். ஏன் ஒரே கருவியே கூட அவ்வாறு இயங்கலாம். இப்பாடலில் கிடாரும் கிடாருமே கவுண்டர் பாயிண்ட்களாக பல இடங்களில் வருகின்றன. நினைத்துப்பார்க்கவே கடினமான விஷயம் இது" என்றார்.

தான் கேட்ட வரையில் இந்தியாவில் இளையராஜா தவிர வேறு இசையமைப்பாளர்கள் எவருமே கவுண்ட்டர்பாயிண்ட் பக்கம் வருவதற்கே யோசிப்பார்கள் போல என்றவர், வடக்கே சலீல் சவுத்ரி சில அற்புதமான கம்போசிஷன்கள் செய்திருக்கிறார் என்றும் அவரும் இதை சில இடங்களில் கையாண்டிருக்கிறார் என்றும் சொன்னார். அவருக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க நினைத்த நான், என் இருக்கைக்கு வரும்படி வேண்டினேன். "பூ வண்ணம் போல நெஞ்சம்..." என்னும் "அழியாத கோலங்களை" ஓட விட்டேன். "இதுல salil சாயல் நிறைய இருக்கு" என்றவரிடம் "சாயல் இல்லை. இது அவரோடது தான்" என்றவுடன் அவர் முகத்தில் தெரிந்த உணர்வில், எனக்கும் அவருக்கும் ஒரு "counterpoint" ஏற்பட்டது போல இருந்தது.

தூய மழையை மலையின் மயிர்கால்களின் வழியே மண் முழுக்க தன் மூச்சாக உள்ளிழுத்து காடாக்கி ஆறாக்கி களத்து மேடுகளின் வழியே காய்கனியாய் உருமாறி கடைகளில் கண்டெடுத்து பசியாறும் சாமானிய மனிதர்களான நம் போன்றவர்களுக்கு, அத்தகைய மழை பயணிக்கும் பாதை எத்தகைய ரகசியமோ அதை ஒத்தது இசையின் ஆக்க ரகசியம். எனவே பசியாறுதலின் பொருட்டு இசை கேட்கும்நான் அதை என் மனக்கருவிக்கு ஏற்றவாறு அர்த்தம் செய்து கொண்டேன். ஒரு பாடலுக்குள் வரும் நொடிகளின் புள்ளிகளில் காலம் நம் நினைவின் சுள்ளிகளை பற்ற வைத்தால் அது நமக்கே நமக்கான பிரத்யேகமான கவுண்டர் பாயிண்ட் இல்லையா? அப்படி எத்தனை எத்தனை லட்சம் மனங்களில் எத்தனை எத்தனை கோடி கவுண்டர் பாயிண்ட்களை வைத்து வாழ்க்கை கோலம் போட்டிருக்கிறார் இளையராஜா?

அன்றிரவு அலுவலக வண்டியில் வீடு திரும்பும் பொழுது கவுண்ட்டர்பாயிண்ட் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென்று சில ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்தில் வந்தது. ஞாபகங்கள் என்பதே சட்டென்று வரும் "கவுண்டர்பாயிண்ட்"களின் கோர்வைகள் தானே? அப்போது நாங்கள் ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி பல சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டிருந்தோம். நான் டிரைவரை அவ்வப்போது ஓய்வு எடுக்கும்படியும் தொடர்ந்து ஓட்டாதீர்கள் என்றும் சொல்லியபடி இருந்தேன். ஒரு முறை அவர், "இளையராஜா கேஸட் நிறைய இருக்கு சார். போயிட்டே இருக்கலாம்" என்றார். போயிட்டே இருக்கலாம்...ஆம். வாகனத்தில் மட்டுமல்ல. வாழ்க்கை வண்டி ஏறி இறங்கும் மேடு பள்ளங்களில் கவிழ்ந்து விடாமல் நம்மை உணர்வுகளின் கவுண்ட்டர்பாயிண்ட்களில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் செல்லும் வாகனத்தின் இருக்கைகள் தானே இளையராஜாவின் counterpointக‌ள்?

என்பதுகளில் வளர்ந்தவர்களின் அனைவரின் நினைவுக் கோலங்களிலும் ஒரு counterpoint புள்ளியாக கட்டாயம் இடப்பட்டிருக்கும் இந்த இளையநிலா...அப்படியொரு புள்ளியை ஒரு பதிவில் அடக்க இயலுமா? தொடர்வோம்...

குறிப்பு: ஆங்கிலத்தில் நிகழ்ந்த ரஞ்சனுடனான உரையாடல்கள் இங்கு தமிழில் உருமாற்றப்பட்டிருக்கின்றன.

12 comments:

  1. இளையராஜா என்ற இசை மேதையை பற்றி பேசி கொண்டே இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள். பேசித் தீராத விஷயங்களில் இதுவும் ஒன்று.

      Delete
  2. //"சாயல் இல்லை. இது அவரோடது தான்" என்றவுடன் அவர் முகத்தில் தெரிந்த உணர்வில், எனக்கும் அவருக்கும் ஒரு "counterpoint" ஏற்பட்டது போல இருந்தது. //

    புரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தருமி சார்.

      கவுண்டர் பாயிண்ட் என்பதற்கு இசையில் உள்ள அர்த்தம் போல, இரு மனங்களுக்கு இடையில் ஏற்படும் உணர்வால் ஒருமித்த தன்மை குறித்தும் அதற்கு இசையே தளமாய் அமைந்ததன் தருணம் குறித்தும் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறேன்.

      Delete
    2. அதில்லை குமரன். பாலுவின் படங்கள் எல்லாவற்றிற்கும் ராஜா தான் இசையமைத்தார் என்ற எண்ணத்தில் இருந்ததால் ‘இது அவரோடது’ (சலீலின் இசை) என்பது புரியாமல் போயிற்று. அதைத்தான் கேட்டிருந்தேன். பின் அது சலீலின் பாடல் என்பதைப் புரிந்து கொண்டேன், நன்றி

      Delete
  3. ராஜாவின் பாடல்களை கேட்டுக் கொண்டிருப்பது போல அவரது பாடல்கள் தரும் சுகத்தை விவரித்துக் கொண்டிருப்பதும் படிப்பதும் கூட இனிமைதான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். இப்போது வரும் இசையில் இது போன்ற அனுபவ லயிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு.

      Delete
    2. //இப்போது வரும் இசையில் // அவரது இசையிலும் இல்லாமல் போனது பெரும் சோகம் தான்.......

      Delete
  4. குமரன் சார்

    பிரமாதம். உங்களின் பதிவுகளை எத்தனை முறை வேண்டுமென்றாலும் வாசித்துக் கொண்டே இருக்கலாம் . இளையராஜாவின் இசையில் தெரியும் அழகியல் அம்சங்கள் அனைத்தும் அதை வர்ணிக்கும் உங்கள் எழுத்திலும் தெரிவதைப் பார்க்கிறேன் . 80 கள் போனது தெரியாமல் போக வைத்ததில் இசைஞானிக்கு மிகப் பெரிய பங்குண்டு . இசைக்கு உயிர் இருந்ததை அப்போதுதானே உணர்ந்தோம் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. சார்லஸ். எண்பதுகள் குறித்த உங்கள் கருத்து மிகச்சரி.

      Delete
  5. குமரன் சார்,

    உங்கள் இந்த பதிவு அருமை..அதுவும் கவுன்ட்டர் பாயிண்ட் பற்றிய ஒரு பாடல் நம்மை எவ்வாறு ஆட்கொள்கிறது என்பதை உங்கள் அலுவலக மேனேஜர் அவர்கள் மூலம் தெரிந்து கொண்டது, எனக்கும் அந்த பாடலை கேட்க வேண்டும் என்று கேட்டுவிட்டாச்சு. அந்த பாடலின் உயிர் துடிப்பே கிடார் தான். அதனை அன்று ரசிக்கவில்லை. இன்று உணர்ந்தேன். உங்கள் அடுத்த பதிவு எப்போது?

    ReplyDelete
    Replies
    1. குமார் சார், அடுத்த பதிவு விரைவில். உங்கள் மின்னஞ்சல் அனுப்பவும்.

      Delete