Saturday, March 18, 2017

45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28

"நினைவூட்டும் மணியன் காபி பார்"  - எப்படி இருக்கிறது இக்கடையின் பெயர்? நீங்கள் மதுரைக்காரர் என்றால் இங்கு காபியோ டீயோ குடித்திருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம். மதுரைவாசியாய் இருந்து கொண்டு வெறும் காபி மட்டுமா கடையில் குடிப்போம் நாம்? கூடவே வடை, பஜ்ஜி, போண்டா ஏதேனும் உள்ளே தள்ளா விட்டால் பிறந்த ஊருக்கு பெருமை சேர்ப்பதாகாதே...? கடையின் காபி சுவையை நினைவுபடுத்த இப்பெயரை வைத்தார்களா என்று தெரியாது ஆனால் பிற நினைவுகள் குறித்த மிகுந்த பெயர் பொருத்தம் இக்கடைக்கு உண்டு. மேற்சொன்ன பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் முயற்சியின் பொருட்டு அப்படித்தான் அன்றொரு தினம், அடுத்த ஈடு போண்டா எண்ணெயில் கொதிக்க, அதை எதிர்நோக்கி நண்பர்களுடன் காபி அருந்தியபடி நினைவூட்டும் மணியனில் நின்றிருந்தேன் நான். வானொலியும் வாணலியும் இல்லாத காபி கடை மதுரையில் ஏது? இலங்கையிலிருந்தோ திருச்சியிலிருந்தோ "காத்திருந்தேன் தனியே" என்று உருகத் துவங்கியிருந்த சந்திரசேகருடன் அதே "அலைவரிசை"யில் நாங்களும் இணைந்து கொண்டோம். அப்பொழுத்தான் வெளியாகியிருக்கும் ஒரு படத்தின் பாடல் என்பது தவிர வேறெந்த அடையாளமும் அதில் இல்லை. ஆனால் அப்பாடல், படம் பிற தகவல்கள் பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே முடிந்து விட்டது. சந்திரசேகரா யார் இவர்? ஜேசுதாஸா அருண்மொழியா என்ற தீவிர ஆலோசனைக்குப் பின் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில் பின்னாளில் இப்பாடலை பாடியவர் இவர்கள் இருவரும் அல்ல. சந்திரசேகர் என்பவர் என்று தெரிய வந்தது.

இப்போது உள்ளது போல் விரல் சொடுக்கில் பாடல் விபரங்களை கணிணி மூலம் அடையும் வசதி அப்போது இல்லை. எனவே எவ்வாறு அப்பாடலை மீண்டும் கேட்பது என்பதில் எங்கள் சிந்தனை நீண்டது. அருகிலிருந்த ஏற்கெனவே அறிமுகமான கேசட் கடைக்குச் சென்றோம். இருப்பதிலேலே அதீத குரல் வளம் கொண்ட (சுமார் என்று பொருள் கொள்க) நண்பன் ஒருவன் "கா...த்..திருந்தேன் தனியே" என்று காற்று இடையிடையே புகுந்த தொண்டையுடன் பாடிக்காட்ட, எங்களையும் "காதல் நோய்" பீடித்து விட்டதோ என்ற சந்தேகத்துடன், ஒரு நமுட்டுச் சிரிப்புடன், "இது ராசா மகன். இப்போதான் ரிலீஸ் ஆயிருக்கு" என்றார் கடைக்காரர்.

அடுத்த வாரத்தில் இரண்டொரு முறை கேட்க நேர்ந்து நாவினடியில் நினைவிலிருக்கும் தேனின் ருசி போல் மெல்ல படியத் துவங்கியது பாடல். அதிலும் முக்கியமாக இரண்டு சரணங்களிலும் இரையுண்ட பாம்பு நகர்வது போல் ஏதோ ஒன்று, அடியில் - ஸ்வரத்தின் மிக அடியில் மெதுவாய் ஊர்வது மிக வித்தியாசமாக இருந்தது. வாழ்வில் சில நல்லதுகளை கண்டடைய ஏராளமான குப்பைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்னும் மாபெரும் கருத்தை, இரண்டரை மணி நேர கழிவுகளுக்கிடையில் இப்பாடலை வைத்து, "ராஜா மகன்" படக்குழுவினர் மக்களுக்கு பாடம் புகட்டியிருந்தனர். இப்பாடலின் அதிசயத்தை அப்படியே உள்வாங்க தியேட்டர் அவசியமாக இருந்தது. அதன் மிகப்பெரிய துல்லிய ஸ்பீக்கர்கள் அவசியமாக இருந்தது. எனவே படம் பார்த்தாவது என்று முடிவானது.

ராசா மகன், சக்தி சிவத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதிபுத்திசாலித்தனம் என்று நமக்கு நாமே எண்ணிக் கொள்ளும் வயதில் இருந்த நாங்கள், இப்பாடலை திறம்பட கேட்பதற்கு ஒரு "வியூகம்" அமைத்தோம். முதலில் ஒரு நண்பன் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றான். எங்கெங்கு ஸ்பீக்கர்கள் இருக்கின்றன என்று நோட்டமிட்டு அதற்குத் தகுந்த சீட் வரிசை எண்களை தெரிவிப்பது அவன் பணி. அப்போது மொபைல் எல்லாம் வந்திருக்கவில்லை என்பதால் அவன் மீண்டும் வெளியே வந்து எங்களிடம் தெரிவிக்க வேண்டும். டிக்கெட் எடுத்த பின் முழுமையாக வெளியே வர இயலாது. சக்தி சிவம் டிக்கெட் கவுண்டரோ கூண்டு போன்றது. பேசினால் கேட்காத தொலைவிலிருந்து பார்வைக்கு மட்டும் தெரியும்படி மட்டுமே அவனால் அதிகபட்சம் வெளியே வர முடியும். ஓரிடத்தில் நிற்பது என்றும், ஏ,பி, சி, டி போன்ற வரிசைகளில் எந்த வரிசையின் இறுதியில் ஸ்பீக்கர்கள் இருக்கின்றனவோ அதை அவன் விரல் எண்ணிக்கையின் மூலம் காட்டுவது என்றும் முடிவானது. அதற்கு சில பயிற்சியும் பின் "தேர்வும்" வைக்கப்பட்டது.

உள்ளே சென்றவன் வெகுநேரம் ஆகியும் தென்படவில்லை. எங்களுக்கு பின் வந்தவர்களுக்கு எல்லாம் வழிவிட்டபடி நாங்கள் கூண்டுக்குள் நின்றிருந்தோம். சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவன் வந்து "பச்சை சட்டை போட்ட குமரன் யாரு" என்றபடி வரிசையருகில் வந்தான். ஒரு பெரும் உவப்பு வந்தது போல் உந்தப்பட்ட நாங்கள், "இங்க...இங்க..." என்றோம். "எல்" கடைசியில எடுக்கச் சொன்னாரு என்று சொல்லிவிட்டுப் போனான். பாப்கார்ன் கடையில் "உதவியாளராக" இருக்கும் அவனுக்கு அன்று ஒரு ரூபாய் கூடுதல் வருமானம் என்று உள்ளிருந்து அவனை அனுப்பிய நண்பன் பின்னர் ஒரு தனி கதை சொன்னான்...!

வியூகத்தின் அடுத்த கட்டம் "எல்" வரிசையில் டிக்கெட் எடுப்பது. கேட்கும் வரிசை எண்ணில் டிக்கெட் தரும் பழக்கம் எல்லாம் எங்கும் கிடையாது. எனவே கவுண்ட்டரில் இருப்பவரிடம் சற்று நேரம் தாஜா செய்து, சட்டமன்றத்தில் "எண்ணிக்கை" பலம் பலன் அளிப்பது போல் எங்கள் எண்ணிக்கை காரணமாக "எல்" வெற்றி பெற்றது. சற்று பொறுங்கள். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...என்பது சின்ன விஷயங்களில் இருந்து பெரிய விஷயம் வரை எதிலும் உண்டு. எங்களின் மட்டற்ற மகிழ்ச்சி சில நிமிடங்களிலேயே குட்டப்பட்டது. "யார்ரா எல்லுல எடுக்கச் சொன்னது" என்றான் தன் முயற்சி அனைத்தும் வீணடிக்கப்பட்ட‌ கோபத்திலிருந்த நண்பன். பள்ளிக்குச் செல்லும் வயதில் பாப்கார்ன் விற்க வந்த சிறுவன் செய்த ஆங்கில எழுத்து குளறுபடியில் எங்கள் வியூகம் அனைத்தும் வீணாகிப் போன விரக்தியில், சில வரிசைகளுக்குப் பின் இருந்த இருக்கைகளையே அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி இருந்தோம் நாங்கள்.

படம் துவங்கியது. ஸ்பீக்கரின் கீழிருந்த வரிசை இன்னும் காலியாகவே இருந்தது. மெதுவாய், நாங்கள் ஒவ்வொருவராய் அவ்வரிசைக்கு மாறினோம். கடைசி சீட் வேண்டும் என்று போராடிப் பெற்றேன் நான். எந்த சமயத்தில் டார்ச் லைட்டுடன் ஒருவர் வந்து "மாறி உட்காருங்க" என்று சொல்வாரோ என்ற பதைபதைப்புடனும், பாட்டு மட்டும்
சீக்கிரம் வந்து விடாதா என்ற எதிர்பார்ப்புடனும் "ராசா மகனின்" ரம்பம் துவங்கியது.

உள்ளே சென்றவன் வெகுநேரம் ஆகியும் தென்படவில்லை. எங்களுக்கு பின் வந்தவர்களுக்கு எல்லாம் வழிவிட்டபடி நாங்கள் கூண்டுக்குள் நின்றிருந்தோம். சிறிது நேரம் கழித்து ஒரு சிறுவன் வந்து "பச்சை சட்டை போட்ட குமரன் யாரு" என்றபடி வரிசையருகில் வந்தான். ஒரு பெரும் உவப்பு வந்தது போல் உந்தப்பட்ட நாங்கள், "இங்க...இங்க..." என்றோம். "எல்" கடைசியில எடுக்கச் சொன்னாரு என்று சொல்லிவிட்டுப் போனான். பாப்கார்ன் கடையில் "உதவியாளராக" இருக்கும் அவனுக்கு அன்று ஒரு ரூபாய் கூடுதல் வருமானம் என்று உள்ளிருந்து அவனை அனுப்பிய நண்பன் ஒரு தனி கதை சொன்னான்...!

வியூகத்தின் அடுத்த கட்டம் "எல்" வரிசையில் டிக்கெட் எடுப்பது. கேட்கும் வரிசை எண்ணில் டிக்கெட் தரும் பழக்கம் எல்லாம் எங்கும் கிடையாது. எனவே கவுண்ட்டரில் இருப்பவரிடம் சற்று நேரம் தாஜா செய்து, சட்டமன்றத்தில் "எண்ணிக்கை" பலம் பலன் அளிப்பது போல் எங்கள் எண்ணிக்கை காரணமாக "எல்" வெற்றி பெற்றது. சற்று பொறுங்கள். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...என்பது சின்ன விஷயங்களில் இருந்து பெரிய விஷயம் வரை எதிலும் உண்டு. எங்களின் மட்டற்ற மகிழ்ச்சி சில நிமிடங்களிலேயே குட்டப்பட்டது. "யார்ரா எல்லுல எடுக்கச் சொன்னது" என்றான் தன் முயற்சி அனைத்தும் வீண்டிக்கப்பட்ட கோபத்திலிருந்த நண்பன். பள்ளிக்குச் செல்லும் வயதில் பாப்கார்ன் விற்க வந்த சிறுவன் செய்த ஆங்கில எழுத்து குளறுபடியில் எங்கள் வியூகம் அனைத்தும் வீணாகிப் போன விரக்தியில், சில வரிசைகளுக்குப் பின் இருந்த இருக்கைகளையே அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி இருந்தோம் நாங்கள்.

படம் துவங்கியது. ஸ்பீக்கரின் கீழிருந்த வரிசை இன்னும் காலியாகவே இருந்தது. மெதுவாய், நாங்கள் ஒவ்வொருவராய் அவ்வரிசைக்கு மாறினோம். கடைசி சீட் வேண்டும் என்று போராடிப் பெற்றேன் நான். எந்த சமயத்தில் டார்ச் லைட்டுடன் ஒருவர் வந்து "மாறி உட்காருங்க" என்று சொல்வாரோ என்ற பதைபதைப்புடனும், பாட்டு சீக்கிரம் வந்து விடாதா என்ற எதிர்பார்ப்புடனும் "ராசா மகனின்" ரம்பம் துவங்கியது.

சரி, இந்தப் பாடலில் என்னதான் இருக்கிறது? ரேடியோ, டேப் ரெக்கார்டரில் கேட்டால் செவிக்கு கிட்டாது தியேட்டர் ஸ்பீக்கரின் மூலம் மட்டும் செவிக்கு ஈயப்படும்
அத்தகைய உண(ர்)வு எது? இத்தனை எத்தனிப்புகள் அதற்கு தேவையா? இளையராஜாவின் பெரும்பான்மையான பாடல்கள் புதையல் போன்றவை. புதையல் இருக்கும் இடமும், அது பாடலுக்குள் புதைந்திருக்கும் நொடிகளையும் நாம் கண்டடைவதற்கு எத்தகைய முயற்சிகளும் தகும். இப்பாடலுக்குள்ளும் மறைந்திருக்கும் அத்தகைய நொடிகளை அடுத்த பகிர்வில் காண்போம். அதுவரை "காத்திருந்தேன் தனியே" என்று பாடிக்கொண்டோ கேட்டுக் கொண்டோ இருப்போம்...

3 comments:

  1. I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
    Nice One...
    For Tamil News Visit..
    https://www.maalaimalar.com/ | https://www.dailythanthi.com/

    ReplyDelete