Friday, February 10, 2012

10. கமலம் டீச்சர் - 2 / "தீண்டாய்..." / ஹம்பி [ Hampi ]

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில், தமிழ் செய்யுட்களை மனப்பாடம் செய்யச்  சொல்லாமல் அந்த வயதுக்கு தகுந்த அர்த்தங்களை புரிய வைப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்தார் கமலம் டீச்சர். அப்படிப்பட்டவர் செய்யுள் பகுதியில் இருந்த ஒரு சங்க இலக்கிய பாடலை, தான் நடத்தப் போவதில்லை என்றும் அப்படியே மனனம் செய்து எழுதி விடும்படியும் சொல்லியது அதிசயமாக இருந்தது. "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது... " என்று துவங்கும் செய்யுளே அது. முதல் வரி தவிர மற்ற எந்த வரியிலும் ஒரு வார்த்தை கூட புரியாததால் ஒரு மதிய நேர வகுப்பில் நான் எழுந்து நின்று இந்த பாட்டின் அர்த்தம் புரியவில்லை என்றேன். கடைசி வரிசையில் இருந்து சில சிரிப்பொலியும் கேட்டது (அவர்களுக்கு அப்போதே சில அரை குறை அர்த்தம் தெரிந்திருந்தது போலும்). அனல் பார்வை வீசிய கமலம் டீச்சர், "hey boys" என்று துவங்கி (கமலம் டீச்சர் கோபம் வந்தால் மட்டும் ஆங்கிலம் கலந்து திட்டுவார்) "Syllabus போடுபவர்களுக்குத்தான் அறிவில்லை உங்களுக்கு என்ன?" என்று திட்ட, சரி இது ஏதோ பள்ளிக்குப்  பொருந்தாத பாடல் என்று புரிந்தது. இது நடந்தது 1991. இதன் பிறகு, வயது, வாழ்வியல் பரிமாணங்களை விஸ்தரித்த போது இந்த பாட்டு கிட்டத்தட்ட புரிந்திருந்த நிலையில், 1998 இல் ஒரு முறை சென்னையிலிருந்து மதுரைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த பொழுது அதிகாலை வேடசந்தூர் அருகே "Motel" ஒன்றில் காபி குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மார்கழி மாதம் மட்டும் மதுரைக்கு குளிர் என்றால் கொஞ்சம் புரியும் போலும்.. . இங்கு வந்து யார் cassette வாங்குவார்கள் என்று யோசிக்க வைக்கும் ஒரு cassette கடை இது போன்ற "Motel" களில் இருக்கும் (யாருமே இல்லாத கடையில் எதுக்குடா டீ ஆத்துற? comedy  போல யாருமே வாங்காத கடையில் எதற்கு பாட்டு போடுகிறார்கள்?... ) . அப்படிப்பட்ட கடையிலிருந்து அந்த மார்கழி காலையில், ரசனை குறைவான இழுவையுடன் "கன்றும் உண்ணாது..." என்று  துவங்கியது ஓரளவு நல்ல பாடலான "தீண்டாய் மெய் தீண்டாய்...". முதல் கேட்பிலேயே இது வைரமுத்துவின் வேலை என்று தெரிந்து போகும் இந்த பாடலில் "ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ" , "பூமி வாழ புதிய காதல் கொண்டு வந்தோம்" என்ற இரண்டு வரிகள் தேறும். இப்பாடலுக்குப்பின் வேடசந்தூர் - மதுரை இடையிலான தூரம் 7 வருடங்கள் ஆனதில் ஆச்சரியமில்லை.

Hampi நகரத்தை நமக்கு அறிமுகம் செய்யும்  இப்பாடலில் தோன்றுவதை விட ஹம்பி ஒரு காலக்கண்ணாடி என்பதை பல வருடங்கள் கழித்து hampi சென்ற போது அதன் ஒவ்வொரு துளி மண்ணும், கல்லும், காற்றும் உணர்த்தியது. பல நகரங்கள், காலத்தை விழுங்கி விட்டது போல் மாயை காட்டி மாறுகையில், hampi நகரை  காலம் விழுங்கி விட்டது போல் நூற்றாண்டுகள் அப்படியே உறைந்து நிற்கும் அதிசயம் அங்கு காணலாம். அங்கிருக்கும் கல்லைத்  தொடுகையில் கூட காலம் கையில் ஒட்டி கொள்கிறது போன்ற உணர்வு...நாங்கள் ஹம்பியில் இறங்கியதிலிருந்தே "நீ பார்க்காத அதிசயத்தை காட்டுகிறேன் வா" என்று மழை என் மனதின் விரல் பிடித்து இழுத்து போனது. மௌனித்திருந்த கல்மண்டபங்களின் கூரைகளிலிருந்து வழிந்த மழை நீர் மண்ணில் பரவி ஊரெங்கும் போட்ட நீர் திரவியத்தின் வாசனையில் முக்கியெடுத்த காட்சிகள் அனைத்துமே நமக்கு "கால மூர்ச்சை" உண்டாக்கும் நொடிகள்.  

"தீண்டாய்..." கேட்கும் பொழுதெல்லாம், பொருந்தாத இடத்தில் மாணவர்களை நிறுத்தக்கூடாது ஆசிரியரும் நிற்க கூடாது என்னும் உயரிய கொள்கை கொண்ட கமலம் டீச்சர் ஞாபகம் வரத்தவறுவதில்லை...

1 comment: