Saturday, June 23, 2012

19. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 9


மதுரை நகரம் முழுவதும் மத்தளம் போன்ற இடியுடன் மழை இறங்கிய ஒரு மாலை வேளை. முன்னர் கண்டிராத அளவு மூன்று நாட்கள் கொட்டித் தீர்க்கப் போகிறது மழை என்று தெரியாமல் , வழக்கமான மழை என்று நினைத்து கிடைத்த இடங்களில் ஒதுங்கினோர் ஏராளம்.சற்று நேரத்தில் நின்று விடும் என்று காத்திருந்த எண்ணற்ற பேரில் நானும் ஒருவனாய், உயர்நிலைப் பள்ளியின் முதல் ஆண்டு மாணவனாய், பழங்கானத்தம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன்...

இரண்டு பேர் சந்தித்துக் கொண்டாலே, "வாங்க காபி சாப்பிடுவோம்" என்று அருகிலுள்ள கடையில் நுழையும் மதுரை மக்களின் மனது அறிந்தே, அனைத்து பேருந்து நிறுத்தங்களின் அருகிலும் குறைந்தது ஒரு காபி கடையையாவது நீங்கள் மதுரையில் பார்க்கலாம். சூடான பாலில் சுவையான காபி தேநீர் மட்டுமல்ல, அத்துடன் வாடிக்கையாளரை மகிழ்விக்க சங்கீதமும் போடத்தெரிந்த ரசனை மிகுந்தவர்கள் மதுரை டீ கடைக் காரர்கள்.

மழைக்கு ஒதுங்கியவர்களும் காபி குடிப்போருமாய் கூட்டம் நிறைந்திருந்த கூரை வேயப்பட்ட டீக்கடையில் ஒலிக்கத்துவங்கியது "நிலவே நீ வர வேண்டும்..." [என்னருகில் நீ இருந்தால் / Ilayaraja / 1990-91]. இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் அற்புதமான கிடார், கூரையிலிருந்து மழை நீர்த்தாரைகள் தரையில் தேங்கியிருந்த தண்ணீர் மேல் விழும் தாளக்கட்டில் துள்ளத் துவங்கியது. மழையின் துளிகள் இந்த கிடாரின் இழையை பிடித்து மனதுக்குள் இறங்குவது போன்ற ஒரு உணர்வு.

காலக் கிணற்றின் மீட்க முடியாத ஆழத்தில் வீசப்பட்ட நினைவின் கல்லில் இருந்து கசியும் நீர் போல நம்முள் ஏதோ ஒன்று வழிந்து கொண்டே இருக்கும் இப்பாடல் முழுவதும். அந்த கசிவின் வடிவம் போல‌"bass guitar", மெலிதாக, அனைத்திற்கும் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் நளினம் இளையாராஜாவுக்கு மட்டுமே சாத்தியம்.

முதல் stanza ஆரம்பத்தில் வரும் அந்த புல்லாங்குழல்... அதை வாசிப்பவர் குழலின் துளைகளின் வழியே அனுப்புவது காற்றையா அல்லது நம் காலத்தையா? அல்லது புல்லாங்குழலே காலத்தின் துளைகளால் செய்யப்பட்ட கருவியா? அத்துளைகளுக்குள் நம்மை இழுத்துக் கொண்டு போய், "அனைத்தும் கடந்து போகும்" என்று நம்மை ஆரத்தழுவுவது போல இருக்கிறது இல்லையா?

"இணைந்து இருந்த சோலைகள் உலகை மறந்த கோலங்கள்" [1st stanza இறுதி இரண்டு வரிகள்] , "கலைந்து பிரிந்த மேகங்கள் இழந்த காதல் சோகங்கள்" [2nd stanza இறுதி இரண்டு வரிகள்] என்ற வரிகளின் பின்னே சட்டென்று சொட்டும் வயலின் துளிகளை தனியே பிரித்தெடுங்கள்...மழை பெய்து ஒய்ந்த வேளையில் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்ந்து அமர்ந்திருக்கிறீர்கள். மழையின் துளி ஜன்னலின் மேற்பகுதியிலிருந்து சொட்டி உங்கள் உச்சந்தலைக்குள் இறங்குகிறது...அந்த உணர்வின் ஊடுருவலை ப்ரதிபலிப்பது போலிருக்கும் இந்த வயலின் சொட்டுக்கள்...!

அப்படியே சற்றே பின்னால் நகர்ந்து அதற்கு முந்தைய வரிகளுக்கு அடியில் செல்லுங்கள்... "நீ இன்றி வாடுதே பூஞ்சோலை மலரே...துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே"  1st stanza] , "மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே காயங்கள் ஆனதே என் நோய்க்கு மருந்தே"  [2nd stanza]. இந்த வரிகளின் பின்னே வரும் வயலின் எப்படி இருக்கிறது? தலையில் இறங்கிய நீர்த்துளி காதோரமாய் வழிந்து நம் கன்னத்தை தாங்கியிருக்கும் கைகளில் இறங்கி அந்த துளி, கை முழுதும் பயணம் செய்து முழங்கை வழியே பேருந்தின் ஜன்னல் இரும்பில் வழிந்தோடும் நொடிகள் போன்றது அது. இங்கே வழிவது மழையின் மொழியா? வயலின் ஒலியா? வாழ்க்கையின் துளியா ?

குறிப்பு: கடந்த சில நாட்களாக, இளையராஜாவின் பாடல் London Olympics துவக்க விழாவில் இடம்பெறுவதனால் அவருக்கு அங்கீகாரம் என்று வரும் செய்திகள் குறித்த "ஆதங்கம்" படிக்க:
இளையராஜாவை நாம் இழிவு செய்கிறோமா?

4 comments:

  1. இந்த படத்தில் வரும் புல்லாங்குழல் இசையைத்தான் நாளொரு மேனியும் பொழுதுக்கு 4 தரவை விச்சை தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சியில் போட்டு தாலாட்டுகிறார்களே, குறிப்பிடுவீர்கள் என்று படித்துக்கொண்டே வந்தேன் கடைசி வரை காணோம் அதான் எழுதுகிறேன்.

    அன்புடன்
    பனிமலர்.

    ReplyDelete
  2. நீங்களே சொல்லியிருப்பது போல,ஞாபகங்களை மனதில் தேய்த்து தேய்த்து வரிகளை வடிக்கிறீர்களோ? அருமை. இசையை வார்த்தைகளுக்குள் கொண்டு வரும் நீங்கள் ஒவ்வொரு பதிவிலும் ஆச்சரியப்படுத்துகிறீர்கள். தொடரவும். வாழ்த்துக்கள். ‍- முத்துராஜ்

    ReplyDelete
  3. அருமையான பாடலும் மென்மையான இசையும் சேர்ந்த ஒரு மறக்க முடியாத பாடலை மீட்டிய அழகான பதிவு!

    ReplyDelete