Saturday, August 25, 2012

23. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 13


ஒரு பாடல் எப்பொழுது, எப்படி நம் மனதுக்குள் இறங்குகிறது? இந்த உலகை நிர்வகிக்கும் காலத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்றோ? ஏதோ ஒரு நிகழ்வில் ஒரு பாடல் முழுதுமோ அல்லது அதன் ஒரு துளியோ நம் காதில் விழுகிறது. அதை நாம் கேட்ட நொடியில், பிறகு பலமுறை கேட்கும் நொடிகள் உரசி உரசி காலத்தின் இழை பாடலுக்குள் நுழைந்து மேலும் மேலும் நினைவுகளை கோர்த்துக் கொண்டே போகிறது இல்லையா? இதில் மனதுக்குள் இறங்கிய நொடி என்று எதை அடையாளப்படுத்துவது?

இப்படித்தான், நான் B.Sc படித்துக் கொண்டிருந்த பொழுது, பசுமலை பள்ளியில் பார்வையற்றோர் எழுதும் தேர்வுக்கு எங்கள் கல்லூரி மூலம் சென்றிருந்தேன். அவர்கள் விடை சொல்லச் சொல்ல‌ நாம் எழுத வேண்டும். செந்தில் குமார் என்பவருக்கு தேர்வு எழுத நான் அவர் அருகில் அமர்ந்தேன். அவர், பிறந்த பொழுதிலிருந்து மனதின் மூலமே உலகைப்பார்த்து வளர்ந்தவர். பசுமலையில், சாலையில் இருந்து நீண்டு அடிவாரத்தில் முடியும் அழகிய பாதையின் முடிவில் இருந்தது தேர்வு அறை.

செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, "நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது". எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம் வரை நடந்து வருவோம். சரியான இடங்களில்,  தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை "hum" செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.

அப்படிப்பட்ட தேர்வு முடிந்த வெயில் நிறைந்த மதிய வேளை ஒன்றில் தான் அவர் "ஊரெல்லாம் உன் பாட்டுதான்" (ஊரெல்லாம் உன் பாட்டு / 1991 / 3 versions Yesudoss, Swarnalatha, Ilayaraja) - முணுமுணுத்தபடி மூன்றாக மடித்திருந்த தன் ஊன்றுகோலை பிரித்து நீட்டிக் கொண்டிருந்தார். இந்தப் பாடல் மூன்று பேரால், மூன்று வெவ்வேறு இசைத் தளங்களில், மூன்று முறை பாடப்படும். இந்த மூன்று  மூன்று வெவ்வேறான உணர்வின் ரேகைகளை மனதில் வரையக்கூடியவை. எனக்கு இரண்டாம் stanzaவில் வரும் வயலின் மீது ஒரு அதீத பிடிப்பு. இளையராஜா பாடும் version ஒரு stanza மட்டுமே கொண்டது என்றாலும் அதிலும் இந்த வயலின் கோர்வை வரும்.

இசைக் கல்லூரியில் பயிலும் அவரிடம் இந்தப் பாட்டின் இரண்டாம் stanza வயலின் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது அதை உங்கள் புல்லாங்குழலில் வாசியுங்களேன் என்றேன். லேசாக சிரித்தபடி தன் ஜோல்னா பையை தடவிக்கொண்டார். அதனுள் உறங்கிக்கொண்டிருக்கும் குழலை எழுப்பினாரோ என்னவோ...

சற்று தூரம் நடந்த பின், அடிவேர்கள் பரந்திருந்த ஆல மரத்தின் அடியிலிருந்த சிமிண்ட் திட்டில் அமர்ந்து புல்லாங்குழலை வெளியில் எடுத்தார். காலத்தின் துளைகளில் நினைவை இட்டு நிரப்பக் காத்திருந்தது போல பேசாமல் இருந்தது அந்த புல்லாங்குழல். பெருகி வரும் காட்டருவியின் நீர் பிரிந்து, சிற்றோடை போல இரு கரைகளிலும் இருக்கும் சிறு சிறு பாறைகளின் நடுவே காலகாலமாக வழிந்தோடி வழிந்தோடி, பச்சை பூத்து ஒரு வாசம் வீசுமே..அந்த சூழலையும் அந்த வாசனையும் நுகரும் பொழுது ஒரு உணர்வு தோன்றுமே...அதைப்போன்றதொரு உணர்வை பீறிட்டு கிளப்பியது அவர் வாசித்த "ஊரெல்லாம் உன் பாட்டு".

அந்த இரண்டாம் stanza  துவக்கத்தில் வரும் வயலின் நடுவே, வயலினை வைத்தே ஒரு ஒற்றை stroke போட்டிருப்பார் இளையராஜா...அதை அப்படியே புல்லாங்குழலில், ஒரு காலத்துகளுக்குள் நினைவின் ஒரு சொட்டை தொட்டு எடுப்பது போல், குழலின் துளையில் விரலை வைத்தெடுத்து வாசித்தார் செந்தில் குமார். பாடலின் ஒரு மிக அற்புதமான நொடிக்குள் நம்மைத் தூக்கியெறியும் அந்த வயலின் நொடிகள்...ஒருவேளை அந்த இரண்டாம் stanzaவில் முழுவதுமே புல்லாங்குழலை வைத்திருக்கலாமோ இளையராஜா என்றேன் நான். இது நடந்தது 1993ல்.

இந்தப் பாடலில் வரும் கப்பாஸில் ஒரு மாயம் இருக்கிறது. நதியோ, அருவியோ ‍ ஏதோ ஒரு நீரோட்டத்தில் கால்களை ஆட்டியபடி இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். எத்தனை வேறுபட்ட வேகத்தில் கால்கள் ஆடத்துவங்கினாலும், பாடல் செல்ல செல்ல, தானாகவே அந்த கப்பாஸ் ஒலிக்கும் இடைவெளியின் லயத்திற்கேற்றவாறே நம் கால்கள் நீரில் அலையத்துவங்கும்!

இந்தப் பாடல் பற்றி ஒரு பதிவில் முடிக்க இயலவில்லை. காலத்தின் நீள அகலங்களை நம் வசதிக்கேற்றபடி நீட்டவோ சுருக்கவோ, நினைக்கவோ மறக்கவோ நமக்கு உரிமை இருக்கிறதா என்ன? காலம் வரையும் வடிவத்திற்கேற்றவாறு படிந்து கிடக்கும் ஞாபகங்கள் தானே நம் மனதின் வடிவம்? எனவே அடுத்த பதிவிலும் "ஊரெல்லாம் உன் பாட்டு" தொடரும்...





5 comments:

  1. நல்ல விவரணையுடன் கூடிய ரசிக்கத் தக்க பதிவு...

    ReplyDelete
  2. இந்த பதிவே ஒரு திரை படத்திற்கான "கரு"தான்

    ReplyDelete
  3. அருமை...

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. good writing. How u got interest with cho ? can u write something?

    ReplyDelete
  5. //அந்த இரண்டாம் stanza துவக்கத்தில் வரும் வயலின் நடுவே, வயலினை வைத்தே ஒரு ஒற்றை stroke போட்டிருப்பார் இளையராஜா...அதை அப்படியே புல்லாங்குழலில், ஒரு காலத்துகளுக்குள் நினைவின் ஒரு சொட்டை தொட்டு எடுப்பது போல், குழலின் துளையில் விரலை வைத்தெடுத்து வாசித்தார் செந்தில் குமார். பாடலின் ஒரு மிக அற்புதமான நொடிக்குள் நம்மைத் தூக்கியெறியும் அந்த வயலின் நொடிகள்...ஒருவேளை அந்த இரண்டாம் stanzaவில் முழுவதுமே புல்லாங்குழலை வைத்திருக்கலாமோ இளையராஜா என்றேன் நான்//

    அழகான இசையை அழகான வார்த்தைகளில் .........

    உங்கள் இசையும், உங்கள் இசையின் ஆராதிப்பும் என்னைத் ‘தூக்கியெறிந்து’ விட்டன. அல்லாடுகிறேன்.

    ReplyDelete