நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் காலம் வரையும் ஓவியம் என்று சொல்லலாம் இல்லையா? ஒரு முறை வரைந்த ஓவியத்தை காலம் பெரும்பாலும் மறுபடி வரைவதே இல்லை. மறுமுறை வரைந்தாலும் அதன் "வண்ணம்" முன்னர் வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணம் போல் இருப்பதே இல்லை. காலம் வரைந்த அத்தகைய ஓவியங்களை நாம் மீண்டும் மீண்டும் துடைத்து வாழ்க்கைச்சுவரில் அடிக்கப்பட்ட வயதின் ஆணியில் மாட்டுவதுதான் நினைவு என்பதோ?
செந்தில் குமார் அன்று "ஊரெல்லாம் உன் பாட்டுதான்" பாடலை குழலில் வடித்தபின், "உங்களுக்கு இந்த பாட்டில் எந்த வரி பிடிக்கும்?" என்றார். "ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி" என்றேன். சூழலுக்கு பொருத்தமாக நாங்கள் அமர்ந்திருந்த ஆலமரமும், தனது மகிழ்ச்சியை காட்டுவது போல் விழுதுகளை லேசாக அசைத்தபடி இருந்தது. அந்த வரியை ஒருமுறை பாடிப் பார்த்த அவர், "நீங்கள் நினைவுகளை விழுது போல பார்க்கிறீர்கள். நாங்கள் விழுதை நினைவாக பார்க்கிறோம்." என்றார். நாக்கின் மேல் கல்லை வைத்தது போல நகர்த்த முடியாத வார்த்தைகளுடன் நின்றேன் நான்.
இந்தப் பாடலை ஊன்றி கவனித்தால்,
மூன்று விதமாக பாடப்படும், மூன்று முறை வரும் இந்தப் பாடலில் ஒரே ஒரு சொல் மட்டுமே மாறுபடும். நினைவுகள் (நினைவுகளினால்?) வாடுவதற்கும் வாழ்வதற்கும் உண்டான வித்தியாசமே அது.
இந்த உணர்வுகளின் திரியை பிரித்துக் காட்டும் விதமாக, மூன்று பேரின் பாடல்களிலும் இசையின் அமைப்பு ஆங்காங்கே வேறுபடும்.
ஸ்வர்ணலதா மற்றும் ஜேசுதாஸ் பாடும் இரண்டு பாடல்களிலும், சரணங்களின் வரிகளுக்கு அடியிலும் இடையிலும் வயலின் அமைதி காத்து, "பாதச்சுவடுகள் போகும்" மற்றும் "ஆலம் விழுதுகள் போலே" ஆகிய வரிகளுக்கு முன் மீண்டும் தலை தூக்கி, இரண்டே வரிகளில் அடங்கி விடும்.
இளையராஜா பாடுவதை கேளுங்கள்...ஒரே சரணம் தான். அந்த சரணத்தின் துவக்கத்தில் வருவதும் மற்ற இருவர் பாடுகையில் வரும் அதே வயலின் தான். ஆனால் இப்போது புல்லாங்குழல் என்னும் "பாத்திரம்" வயலினிலிருந்து வழியும் உணர்வை, அதே வடிவில் தேக்கி வைத்துக் கொள்ள உடன் வருகிறது!
ஒரு அகலமான சாலையில் நாம் பயணம் செய்யும் பொழுது, ஒரு கீறலாக கிளம்பி, எங்கோ நீண்டு கொண்டு போகும் ஒற்றையடிப் பாதைகள் போல, அந்த பாதை எங்கு போகுமோ என்று நம்மை நினைக்க வைப்பது போல, ஒவ்வொரு வரியின் முடிவிலும் புல்லாங்குழல் நீண்டு புரள்கிறது...
மற்ற இருவர் பாடுகையில் "ஆலம் விழுதுகள் போலே" வரிகளின் வேரில் பொங்கி வழியும் வயலின், இளையராஜாவின் ஆலம் விழுதில் அமைதியாகி மறைந்து விடும்! அந்த அமைதியின் ஆழத்தை மேலும் தோண்ட முயல்கிறது தபேலா. அதில் சிதறும் நினைவை கொத்தியெடுத்து நம் மீதே மீண்டும் பூசுகிறது அதனுடன் வரும் கப்பாஸ். அவ்வாறு மறைந்து போன அதே வயலின், அந்த இரண்டு வரிகள் முடிந்தபின் மீண்டு வந்து காற்றில் நீந்துவது மற்ற இருவரின் அதே வரிகளில் கிடையாது!
செந்தில் குமார் வாசித்த புல்லாங்குழலின் வழியே காலம் வரைந்து போன அந்த மதியம் கடந்து சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து, நான் MCA இறுதி ஆண்டில் இருந்தேன். தினமும் பசுமலை பள்ளியை கடந்து தான் எங்கள் கல்லூரிக்கு போய் வர வேண்டும். ஒரு நாள் மாலை நான் திருப்பரங்குன்றத்திலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். பசுமலை bus stop அருகில் அவரை போன்ற ஒருவர், ஒரு பெண்மணியுடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நான் பேருந்திலிருந்து இறங்கி, அவர் அருகே சென்று "நீங்கள் செந்தில் குமார்தானே..." என்றேன். எனக்கு இருந்த சிறிதளவு சந்தேகம் கூட இல்லாமல் "என்ன குமரன் எப்படி இருக்கீங்க" என்றார் தாமதமின்றி. அவரின் மனைவியை அறிமுகப்படுத்தி, இருவருமே இசைப்பள்ளியில் பணிபுரிவதாக சொன்னார். செந்தில் குமாருக்கு இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரி "விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம்தான்". அவர் மனைவிக்கும் அது பிடித்த வரியாக இருக்கக் கூடும் என்பது, அவர்களிடம் விடைபெற்று பேருந்தில் ஏறிய பின், அவர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடி தொலைவில் நடப்பதை பார்க்கையில் தோன்றியது.
"ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி". அந்த விழுதுகளின் அர்த்தத்தைத் தானே நாம் நிகழ்காலத்தில் தேடி, எதிர்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?
மேஸ்ட்ரோ தொகுப்பு searching இல் சிக்குன ப்லாக் இது....அட நம்ம ஊரு...:-))
ReplyDeleteநீங்க பாடலின் யூ ட்யூப் லிங்க் கூட குடுக்க முயற்ச்சிக்கலாமே...
ரசித்து எழுதி உள்ளீர்கள்... ரசித்தேன்...
ReplyDeleteஉங்கள் பின்னூட்டக்காரர் கொடுத்த தகவலைப் பிடித்து இப்பதிவைப் பார்த்தேன்.
ReplyDeleteஒரு MCA படிக்கிற / படித்த ஒரு பையன் எழுதும் எழுத்துதானா இது? இசையில் நாட்டம என்பது எல்லோருக்கும் உள்ளது - எனக்கும் கூட! ஆனால் வரிகளை இப்படி பிரித்து, இசையை இப்படி ஆழ்ந்து உணர்ந்து ... எப்டிங்க இதெல்லாம்! பிரமிக்க வைக்கும் ரசனை! வாழி !
ஆச்சரியமும், ஆனந்தமும் ........
@dharumi a.k.a modi :-)
ReplyDeleteதருமி சார்...ரொம்ப ஓல்ட் வசனம் தான் ...ஆனால் பக்கா டிபிக்கல் நம்ம தமிழ் வசனம் ஒன்னு சொல்லவா...:-)) " எல்லாம் நம்ம ஊரு மண்ணு மஹிம :-) "
இன்னும் ஆச்சரியத்திலிருந்து மீள முடியவில்லை.
ReplyDeleteஎப்படி நம்மூரு என்கிறீர்கள்?
http://songsofage.blogspot.in/2012/07/blog-post.html
ReplyDeleteஇவரின் சில பழைய பதிவுகளை இப்போ மேயும் போது இந்த பதிவில் கண்டு கொண்டேன்...கண்டு கொண்டேன் :-))
எனக்கென்னவோ அந்த இயற்பியல்க்கு பதிலாய் வேதியல் ன்னு வச்சிருக்கலாமோ ..?!:-) நல்ல கெமிஸ்ட்ரி :-)
ReplyDelete