Sunday, April 7, 2013

35. Cassette கடை முதியவர்...

நம்மில் பலர் படித்து நல்ல வேலை, சம்பளம் என்று வாழ்க்கையில் ஆகியிருக்கலாம். அந்த நினைப்பின் மூலம் நம்மில் பலருக்கு ஒரு கர்வமும் இருக்கலாம். ஆனால், காலம் வீசிய வாய்ப்புகளின் பகடையில் நம் பக்கம் விழுந்த சாதகமான தாயம் இது என்றும் அந்த வாய்ப்புகள் கிடைக்காததன் விளைவாக பலர் எங்கெங்கோ தேங்கி விட்டார்கள் என்பதை நாம் சமூகத்தின் சாளரங்கள் வழியே பார்த்துப் புரிந்து கொள்ள நேர்கையில், கர்வம் காணாமல் போய், ஒரு வித பக்குவத்தை நம் மனது அடையக்கூடும்...

நம் கேசட் கடை பெரியவர் அத்தகைய ஒரு தெளிவையும் அதே சமயம் விடை காண இயலாத கேள்வியையும் ஒருசேர கொடுத்த நிகழ்வு ஒன்று இன்றும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. கணிப்பொறி என்பது ஒரு மந்திர இயந்திரம் என்பது போல நம் போன்ற சராசரி மனிதர்களின் கைகளுக்கு எட்டாமல் இருந்த நாட்கள் அவை. ஏதேனும் செய்திகளில் தட்டுப்படுமே அன்றி, அதைப் பற்றி வேறெதுவும் நாம் அறிந்திராத காலம்.

பெரிய சைஸ் திருமண ஆல்பம் மூன்று நான்கை சேர்த்து தைத்தால் போன்ற அளவில் இருக்கும் "பாடல்கள் புத்தகம்" 5 நம் முதியவரிடம் இருந்தது. அதை நம் மடியில் வைத்தோ கையில் பிடித்தோ பார்க்க இயலாது. கையும் தொடையும் வலிக்கத் துவங்கி விடும். அத்தகைய தடிமனான புத்தகங்களில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருந்தார் அவர்.


இந்த பெரிய சைஸ் புத்தகங்களில், நம் தேடுதலை சுலபப்படுத்த, குறிப்பு புத்தகம் ஒன்றையும் வைத்திருந்தார். இதில், பாடகர்கள், இசையமைப்பாளர்களுக்கு ஒரு குறியீடு இருக்கும். உதாரணமாக,  என்றால் இளையராஜா, என்றால் ஜெயச்சந்திரன். இந்த குறியீடுகளைக் கொண்டே மற்ற புத்தகங்களில் பாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இந்த குறியீடுகள் புத்தகங்களின் எந்தெந்த பக்கங்களில் வருகின்றன என்பது குறிப்புப் புத்தகத்தில் இருக்கும். இரண்டு பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல் என்றால் அது இரண்டு குறியீடுகளில் வரும். இது ஒருவகை குறியீடுத் தொகுப்பு.

இன்னொன்றில் பாடலின் படமும் வருடமும் மற்றொரு குறியீட்டில் இருக்கும். இந்த இரண்டு குறியீடு வகைகளையும் இணைக்கும் வகையில் இன்னொரு நம்பர் குறியீடு இருக்கும். இந்த நம்பர் குறியீடு அனைத்து குறிப்பு வகைகளிலும் இருக்கும். இந்த நம்பரின் மூலம், ஒரு பாடல் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு தகவல் இருந்தால் போதும். அந்தப் பாடலின் அனைத்து தகவல்களையும் நீங்கள் பத்து நிமிடங்களில் புரட்டி எடுத்து விடலாம்...

இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? இவர் இதை வெறும் புத்தகத்தில் செய்தது, கணிப்பொறி, கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாமல் இருந்த காலங்களில்.

நான் கல்லூரியில் கணிப்பொறி படிக்கத் துவங்கியவுடன் பொறி தட்டியது... தரவுத்தளம் (Relational Database) என்பதன் அடிப்படை கோட்பாடுகளை அசாத்தியமாக அவர் அந்தப் புத்தகங்களின் ஆக்கத்தில் கையாண்டிருந்ததைக் கண்டு அசந்து போனேன் நான். குளுகுளு அறையில் "Primary key" "Foreign key" என்று புழங்கும் சொற்களை, அதன் பெயர் மட்டுமே அறியாமல், அதை ஒத்த அறிவை, தனது அனுபத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு உருவாக்கிய, ஐந்தாம் வகுப்பு மேல் பள்ளி செல்லாத முதியவர் நமக்கு விட்டுப் போன செய்தி என்ன...?

காலத்தின் வீச்சில் கணக்கற்றுச் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற கோடி மனிதர்களில், மேலும் மேலும் பலர் வளர்ந்து கொண்டே போவதும், என்ன திறமை இருக்கிறது என்று வெளியில் தெரியாமலேயே பலரின் வாழ்வு பொட்டல் வெளியில் கொதிக்கும் கோடையில் தகிக்கும் தார்ச்சாலையில் தெரியும் கானல் போலாவதும் ஏன்? விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் விளக்க முடியாத நிகழ்வுகளின் வழிகளை குறிக்க, மொழியின் துணை நாடி நாம் வைத்த சொல் தானே "விதி"!

3 comments:

  1. காலத்தின் வீச்சில் கணக்கற்றுச் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற கோடி மனிதர்களில், மேலும் மேலும் பலர் வளர்ந்து கொண்டே போவதும், என்ன திறமை இருக்கிறது என்று வெளியில் தெரியாமலேயே பலரின் வாழ்வு பொட்டல் வெளியில் கொதிக்கும் கோடையில் தகிக்கும் தார்ச்சாலையில் தெரியும் கானல் போலாவதும் ஏன்? விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் விளக்க முடியாத நிகழ்வுகளின் வழிகளை குறிக்க, மொழியின் துணை நாடி நாம் வைத்த சொல் தானே "விதி"!


    அருமையான ஆழமான சிந்தனையும்
    நடையும் மனம கவர்ந்தது
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நானும் இதையே வழிமொழிகிறேன் நல்ல திறம்மிக்க சிந்தனையின் வெளிப்பாடு.

      Delete
  2. முதல் பத்தியையும் , கடைசி பத்தியையும் இரண்டு முறை படித்தேன் . அவ்வளவு ஆழமான , உண்மையான வார்த்தைகள் .

    ReplyDelete