Sunday, May 19, 2013

36. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 21


நம்மில் நிறைய பேருக்கு, நேரடியாகவோ அல்லது எவர் மூலமாகவோ ஏதோ ஒரு கிராமத்துத் தொடர்பு இருக்கும். இன்னும் சொல்லப் போனால், ஏதோ ஒரு கிராமத்து பெருமரத்தின் மீது தொடர்ந்து அடித்த தலைமுறை காற்றினால், நகர்ந்து நகர்ந்து பெருநகரம் ஒன்றில் வந்து படிந்த இலைகளில் ஒன்றாக நாம் இருக்கக் கூடும்.

நச்சு மிகுந்த நகர வாழ்க்கையை "நச்"சென்று இருப்பதாக நினைத்துக் கொண்டு வாழத்துவங்கி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், கிராமத்து வாசனை நமக்குள் எங்கோ ஒரு ஓரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும். மழை வர எத்தனிக்கும் மாலையில் நெரிசல் மிகுந்த நகரத்து சாலையில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது வந்து வீசும் மண்வாசனையிலோ, "அளவாக பயன்படுத்த" அறிவுறுத்தப்பட்டு, ஒரு வாளி நீரில் குளியல் முடிக்க ஒரு கோப்பையை அந்த வாளிக்குள் விடும் பொழுது தெறிக்கும் நீரிலோ... சாலையை கடக்கையில் சட்டென்று கண்ணில் படும் மரத்தின் பச்சையிலோ...சும்மாடு வைத்துக் கொண்டு போகும் ஏதேனும் ஒரு மூதாட்டியை பார்க்கையிலோ...திடீரென்று அந்த கிராமத்து வாசனை எட்டிப் பார்க்கும். அந்த வாசனை, அப்படியே புகை போல மெலிதாக படர்ந்து நம்மை நம் நினைவில் இருக்கும் கிராமம் நோக்கி இட்டுச் செல்லும்...

சிறு வயதிலிருந்தே எங்கள் வீட்டில் அனைவருமே எங்கள் கிராமத்தை "கிராமம்" என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். அப்பாவை அப்பா என்று அழைப்பது போலவும் அம்மாவை "அம்மா" என்று அழைப்பது போலவும், ஊருக்கு பெயர் இருந்தாலும் கிராமத்தை "கிராமம்" என்றே எங்கள் வீட்டு முதியவர்கள் அழைத்து அது அப்படியே நிலைத்து விட்டது போலும்...

ஒரு தாத்தாவின் எண்பதாவது ஆண்டு நிறைவுக்குத்தான் நான் முதல் முறையாக "கிராமத்துக்கு" அழைத்துச் செல்லப்பட்டேன். வெட்டவெளியில் வீசும் காற்றும் அதில் கலந்து வரும் வயக்காட்டு வாசனையும் தான் சட்டென்று ஈர்த்தது. பிற்பகல் மூன்று மணிக்கு மேல் கிராமத்தின் பெரும்பான்மையான தோட்டங்களில் பம்பு செட் மோட்டார் ஓட விடுவார்கள்.

பெரிய கிணறு. அதையொட்டி ஒரு மோட்டார் ரூம். இறைத்த நீர் வயலில் பாய்ந்தோட வசதியாக ஒரு பெரிய சிமிண்ட் தொட்டி. "தொப தொப" என்று அந்த தொட்டியில் நம் தலைக்கு மட்டும் தயார் செய்யப்பட்ட அருவி போலக் கொட்டும் நீரைத் தரும் பெரிய குழாய். அனைத்து தோட்டங்களிலும் அமைப்பு பெரும்பாலும் இப்படித்தான் இருந்தது. நான்கைந்து பேர் மிதந்து சுற்றி வரும் அளவு பெரியதாக தொட்டி இருக்கும்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், காலம் தினம் தினம் தின்று பழகிய ஒரு பிற்பகல் எனக்கு மட்டும் புதிதாய்...குடும்பத்துக் கூட்டத்துடன் வரப்புகளின் ஊடே நடந்து வயல்களுக்கு நடுவில் இருந்த கிணற்றை அடைந்திருந்தேன் நான். தொட்டி நிறைந்து பெருக்கெடுத்த நீரோட்டத்தை புசித்துக் கொண்டிருந்தன வயல்கள். இயற்கை இப்படித்தான் நீர் அருந்தும் போலும்...அந்த வயல்வெளியே ஒருவித வாசனையின் மயக்கத்தில் கிடந்தது. பச்சை நிறத்தை சக்கையாய் பிழிந்து வடிகட்டியது போல காற்றில் அடிக்கும் வயல்களின் வாசனை.

தொட்டிக்குள் "விடப்பட்ட" எனது கழுத்தளவுக்கு நீர் இருந்ததால் கடல் போலத் தெரிந்தது எனக்கு. இறங்கு வெயிலில் நீரின் மேல் தங்க முலாம் பூசிக்கொண்டிருந்தது சூரியன். குழாயின் அருகில் சென்றாலே மூச்சு முட்டும் அளவு நீர் விழுவதும், தள்ளி வந்து இளைப்பாறுவதுமாய் நீரில் கரைந்து கொண்டிருந்தேன் நான். அப்பொழுதுதான், ஊரின் கடைக்கோடியில் இருக்கும் வீட்டில் ஏதோ "கிடா விருந்து" காரணமாக கடந்து போன பல்வேறு பாடல்களுக்குப் பின், குழாய் ஒலிப்பெருக்கியிலிருந்து மெதுவாக வழிந்து, ஈரமேறிப் போயிருந்த என் உடம்பின் துளைகளில் நுழைய வழிபார்த்து வருவது போல துவங்கியது அந்த "humming" (மெட்டி / 1982 / இளையராஜா / ஜானகி].

பாடலின் நகர்விற்கேற்ப, என்னையறியாது நான் மல்லாந்து மிதந்த படி வானத்தை பார்க்கத் துவங்கியிருந்தேன். வெயிலில் வெளீர் நீலத்தில் விரிந்திருக்கும் வானத்தில் ஆங்காங்கே ஒட்டியிருந்த மேக திட்டுக்கள் நகர்கிறதா...நான் நகர்கிறேனா அல்லது பாட்டு இரண்டையுமே நகர்த்துகிறதா என்று தெரியாத மயக்கத்தை கொடுத்தது.

humming முடிவதற்கும் பாட்டு துவங்குவதற்கும் இடைப்பட்ட நொடிகளில் பரவும் இசை, பம்பு செட் தொட்டியிலிருந்து பெருகியோடும் சிற்றோடை நீர் ஆங்காங்கே மண்ணால் உறியப்பட்டு, சட்டென்று ஒரு உடைபட்ட இடத்தில் சற்றே கொப்பளித்து வயலுக்குள் விழும் நிகழ்வின் உணர்வு போல இருக்கும்.

முதல் ஸ்டான்ஸாவின் துவக்கத்தில் வரும் வயலினையும் புல்லாங்குழலும் காற்றில் ஏறி அமர்ந்து, நெற்கதிர்களின் மீது தவழ்ந்து வருவது போல இருந்தது. அதனால் வயலே ஒருவித ஸ்வரத்தின் கட்டுக்குள் அசைந்தாடுவது போன்ற ஒரு ஏகாந்தமான காட்சியில் குளித்துக் கொண்டிருந்தேன்...

இரண்டாவது ஸ்டான்சாவின் துவக்கத்திலும் ஒரு அற்புதத்தை ஹம்மிங்கிலும் இசைகோர்வையிலும் வைத்திருப்பார் இளையராஜா. மேகத்திலிருந்து யாரோ நம்மை தூளியில் தொங்க விட்டு நீருக்குள் ஆட்டிவிடும் பரவசத்தை கொடுக்கும் அது.

இந்தப் பாட்டின் கிடார் strokes அனைத்துமே, நாம் மெதுவாக குளிர்ந்த நீரில் கால் வைத்து, படிப்படியாக உடல் முழுதும் நனைந்து பின்னர் அந்த ஈரம் மனதுக்குள்ளும் குளிரூட்டும் வரை ஏற்படும் சிலிர்ப்புகளின் ஏற்பாட்டை அவ்வப்பொழுது சுண்டி விடுவது போலவே பரவசமூட்டும்.

சமீபத்தில் மதுரைக்கு சென்றிருந்த போது, உறவினருக்கு போன் செய்து, "மோட்டார்" போடுவார்களா என்று உறுதி செய்து கொண்டு கிராமத்துக்கு போனேன். காயந்து போன வயல்கள் கடந்த காலம் போல் பார்வைக்கு வறண்டு அடியில் தாகத்துடன் இருந்தன. "இப்பல்லாம் கிணத்து தண்ணீ உப்பு கரிக்குது" என்றார் தோட்டத்துக்கு போகும் வழியில் குறுக்கிட்ட கிராமத்துக்காரர் ஒருவர். காலமே, கடக்க கடக்க எங்கோ ஒரு ஓரத்தில்  உவர்ப்பை உதிர்த்த‌ படிதானே இருக்கிறது?

பராமரிப்பின்றி பழுதான கிணறு. சிறு வயதில் புதிதாய் இருந்த தொட்டியின் நிறைய இடங்களில் தோல் உதிர்ந்து அதன் எலும்பு தெரிந்தது.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்து போன அந்த மதியம்...அதில் குளித்தவர்களின் நினைப்பிலிருந்து தெறித்த ஏதோ சில துளிகள்...அவையெல்லாம் இந்த பெயர்ந்து போன காரைப் பொடிகளில் தேங்கியிருக்கக்கூடும். எங்கெங்கும் என்றென்றும் தேங்குவதன் பெயர்தானே காலம்?

கண்கள் சிவக்க நனைந்து காய்ந்து நனைந்து காய்ந்து குளித்துத் தீர்த்தேன். எந்த வித பாட்டும் இப்போது இல்லை. காற்று மட்டும் காலத்தின் பாட்டை பாடியபடி திரிந்து கொண்டிருந்தது. இருட்டத் துவங்கியதால் வேறு வழியின்றி துண்டை எடுத்து துவட்டத் துவங்கினேன். அது என்னை துவட்டுவதற்கு பதில் மேலும் மேலும் ஈரமாக்கியபடி இருந்தது. காலக்குளியலில் ஈரமான எதையும் நினைவின் துண்டால் துடைத்து உலர வைக்க  முடியுமா என்ன?

1 comment: