அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் நகரத்தின் மீது இரவை இழுத்துப் போர்த்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது காலம். இருப்பினும், அந்த ரயில் நிலையத்தில், காலத்தின் பகடை ஆட்டத்தில் தங்கள் மீது விழுந்த ஏதோ ஒரு நிகழ்தகவின் பொருட்டு எத்தனையோ பேர் எதனையோ தங்கள் எதிர்பார்ப்பாக்கி பயணத்தை துவக்க விரைந்து கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். எனது கம்பார்ட்மெண்ட் நோக்கி சென்று கொண்டிருக்கையில் பிளாட்பாரத்தில் தொங்க விடப்பட்டிருந்த டிவிகளில் இருந்து விளம்பரங்களுக்கிடையில் ஒலித்தது ஒரு குரல். "மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று..." - "மட்டும்தான்" என்பது இந்த வரியின் பொருளை குறுக்கினாலும், ஒரு பெருங்கவிதை வெளியை நமக்கு(ள்) நாமே உருவாக்கி ஞாபக பாத்திகளின் வழியே கால நீருற்றி உணர்வின் பூக்கள் பூத்துக் குலுங்கும் நினைவுத் தோட்டத்திற்கான விதைகள் அந்த ஒற்றை வரிக்குள் ஒளிந்திருந்தன...சிலருக்கு இந்த வரி அர்த்தமற்றதாக தோன்றுகிறது. அர்த்தமுள்ளதோ அர்த்தமற்றதோ, இரண்டுமே நம் நினைப்பின் ரசம் பூசி நாம் எண்ணுவதையே சரி என்பது போல் காட்டும் மனக்கண்ணாடியின் மாயம் தானே?
எனது பெட்டியை அடைவதற்குள் இரண்டு மூன்று டிவிக்களை தாண்டியதில், அது ஒரு புதிய திரைப்படத்தின் விளம்பரம் என்ற செய்தியை கண்ணும் காதும் மூளையில் பதிய வைத்திருந்தது. அந்த வரியைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தின் நெரிசலையும் சத்தங்களையும் மீறி, வயல் வெளிகளில் நெற்கதிர்களின் தலை மேல் இறங்கி ஏறி ஒரு வித லயம் கலந்த அசைவுடன் சத்தமின்றி நம்மிடம் வந்து சேரும் சுகமான காற்றைப் போல ஒரு இசைத் துகள் என்னை சில நொடிகள் வருடிப் போனது. அதைத் தொடர்ந்து "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்றொரு குரல் மக்கள் திரளில் எழுந்த இரைச்சல்களின் ஊடே பயணம் செய்து உள்ளத்தின் ஏதோ ஒரு ஊற்றுக்கண்ணைத் திறப்பது போல இறங்கியது.. எனது இருக்கையில் அமர்ந்த பின்னும் அந்த "சுகமான காற்று" தீண்டுவது போன்ற உணர்வில் ஆழ்ந்திருந்தேன். அந்த இசைத் துகள் அவ்வப்பொழுது என்னுள் நகர்ந்து கொண்டே இருப்பது போன்ற உணர்வின் அசைவுடன்...
உலகியல் வேலைகளின் பின்னே மந்தையின் நடுவில் சிக்கிய ஆடு போல நாம் ஓடும் பொழுது, உள்ளத்தின் தேவைகளை அறிந்து அதன் வழியில் நம்மை ஆற்றுப்படுத்தும் அற்புத கருவியாய் கலைவடிவங்கள் தானே நம் ஆன்மத்தின் ஆதார ஸ்ருதியை நமக்கு மீட்டுக் கொடுக்கின்றன? எனவே தான் அவை இடம் பொருள் ஏவல் மீறி எங்கோ ஒரு நொடியில் நமக்குள் புகுந்து கொள்கின்றன. அப்படித்தான் அன்று நுழைந்தது "ஆனந்த யாழ்..."
சில தினங்கள் கழித்து ஒரு இரவில், அறையில் இருந்த என்னை சீக்கிரம் வரச்சொல்லி அழைத்த மனைவியின் குரல் ஹாலில் இருந்த டிவியின் முன் நிறுத்தியது. டிவியில், ஒரு புல்வெளி முழுவதும் புகுந்து நகரும் காற்று, திரையை விட்டிறங்கி நம் மேல் வீசுவது போல ஆனந்த யாழை மீட்டிக்கொண்டிருந்தது. "உங்க லிஸ்டுல சேர்ந்துரும் போல" என்றார் என் மனைவி. "உங்க லிஸ்ட்" என்றால் என் அடி மனதின் சுவற்றில், ஒரு குகையின் சுவற்றில் வழியும் ஏதோ ஒரு ஊற்றின் நீர் கசிவு போல ஆங்காங்கே வழிந்தபடி இருக்கும் பாடல்களின் வரிசையில் இதுவும் இனி ஊறத்துவங்கும் என்று பொருள்.
"தங்க மீன்கள்" வேண்டி கணிணியில் "வலை" வீசி எனது ஒலிப்பேழையில் பிடித்து நீந்த விட்டேன். இரண்டு மாதங்களாக இரவில் துயில்வதற்கு முன் ஒலிப்பேழையிலிருந்து உள்ளத்தின் உள்ளே குதித்து நீந்தி விட்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தன "ஆனந்த யாழை" மற்றும் "நதி வெள்ளம் மேலே" என்னும் இரண்டு மீன்கள். செதில் செதிலாக அதில் பதிந்து இருந்தன உணர்வின் தறி ஏறக் காத்திருந்த இசையின் இழைகள். நெய்து நெய்து இழைகள் கூழாகி விழிப்படலத்தின் மீது நீரின் திரைச்சீலைகளை உருவாக்கும் மீன்கள் அவை.
இவ்வாறாக இசைப்பேழையில் என்னுடனேயே வந்து கொண்டிருந்தன இந்த மீன்கள். அலுவலகத்திலிருந்து ஒரு தினம் வேலை முடித்து நள்ளிரவை நெருங்கும் பின்னிரவு வேளையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
மாலை துவங்கிய மழை, ஆள் நடமாட்டம் குறைந்த பின், முழு சுதந்திரம் கிடைத்தது போல சாலை முழுவதும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. காற்றுடன் கைகோர்த்து அதன் நடனத்தின் வழியெங்கும் மரத்திலிருந்து இலைகளை பிடித்து, சாலையின் ஈரத்தில் ஒட்டி ஓடியாடிக் கொண்டிருந்தது மழை. கரும்பலகையில் வரைந்த நூற்றுக்கணக்கான இலைகளின் ஓவியம் போல தார்ச் சாலையெங்கும் இலைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.
"நதி வெள்ளம் மேலே" துவங்கியது. இரண்டாம் ஸ்டான்ஸா துவக்கத்தில் வரும் குழலுக்கு ஏற்றவாறு, இருட்டிப்போய் ஆளரவமற்று இருந்த சாலையின் மரங்களிலிருந்து மழை சொட்டுகள் வெவ்வேறு கிளைகளிலிருந்து வெவ்வேறு இடைவெளியிலிருந்து உதிர்ந்து சாலையில் கலந்து நகர்ந்து கொண்டிருந்தன. சாலையில் என்னையும் மழையையும் தவிர யாருமில்லை. வண்டியை ஒரு நிமிடம் நிறுத்தலாம் எனத் தோன்றியது. பாடலை மீண்டும் ஓட விட்டேன். மரங்கள் அனைத்தும் ஏதோ துயரத்தின் வெளியில் தங்களை மெதுவாக அசைத்து கண்ணீர் சிந்துவது போல ஒரு மிகப்பெரும் சித்திரமாக சாலை என் முன் மாறியது. இப்பாடல் பாடியவர் பல்வேறு ஏற்ற இறக்கங்களில் ஜெயச்சந்திரனை ஞாபகப்படுத்தி எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நம்மை மூழ்க வைக்கிறார்.
இரவும் மழையும் இணையும் பொழுதுகளில் இந்த இரண்டு பாடல்களுமே நமக்குள் நன்றாக ஊடுருவுகிறது. கையடக்க ஒலிப்பேழை அத்தகைய இரவுகளை எதிர்நோக்கி என்னருகில் காத்திருக்கிறது.

wonderful song wonderful writing
ReplyDelete