உங்களின் முதல் மலை
பிரதேச பயணத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலும் அது ஊட்டி அல்லது கொடைக்கானல் என்று இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏழாம் வகுப்பு காலாண்டு விடுமுறையில் கொடைக்கானல் சென்றதே, நான் மலை அன்னையின் மடியில்
ஏறி மகிழ்ச்சி பெற்ற முதல் அனுபவம்.
இந்த பயணம் நேர்வதற்கு சில வாரங்கள் முன்னரே, கேட்கும் திசையெங்கும்
தேநீர் கடைகளின் உபயத்தில், காதுகளில் பாய்ந்தபடி இருந்தன "இதயகோவில்"
பாடல்கள். "இதயம்" என்றால் biology
பாடம் தாண்டி என்னவென்றே தெரியாத வயது...
மனதின் நீரோட்டத்தில்
நினைவின் குமிழ்கள் மீண்டும் எழுந்து உடைகிறது...முதல் முதலாக மலை மேல்
மனம் குதிக்கும் பரவசம் பார்த்து கிட்டத்தட்ட
25 ஆண்டுகள் ஆயிற்று.பலவகை உறவுகளுடன்,
பலவகை உணர்வுகளுடன் கொடைக்கானல் மலையை பலமுறை ஏறி இறங்கியாயிற்று...
ஒரு ஆத்மார்த்தமான தோழன் / தோழி போல,
எதிர்பார்த்து, காத்திருந்து, மலையேறும் பொழுது, ஏதோ ஒரு மலைப்பாதையின் திருப்பத்தில் திடீரென்று ஒட்டிக்
கொள்ளும் "இதய கோவில்" பாடல்கள்.
கொடைக்கானல் செல்லும் பேருந்துகள் அனைத்துமே வத்தலகுண்டு கடந்தவுடன், மலை அடிவாரத்தில் இருக்கும் கடை ஒன்றில் காபி டிபன் சாப்பிட நிறுத்துவது வழக்கம். இங்குதான்
"இதய கோவிலின்" "மதில் சுவர்"
தென்படத் துவங்கியது...கல் போன்ற மனமோ களிமண் போன்ற மூளையோ எதுவாயிருப்பினும் இசையின் மீது லயிப்பு ஏற்படுத்தும் இளையராஜாவின் இதய கோவில் பாடல்கள் என்னை அறியாமலே எனக்குள்
ஊடுருவியது அந்த முதல் பயணத்தில் தான்...
பேருந்து மலை ஏறத்துவங்கியவுடன், சட்டென்று வெப்பம் வடிந்து சில்லென்ற காற்று மேனியை
வருட, மலை, தன்
பசுமை கூந்தலை அள்ளி முடியாது பறக்க விட்டது போல் அசையும் பச்சைகள் ஆச்சர்யமூட்ட,
"கூட்டத்திலே கோவில் புறா" என்னுடன் பறந்து வந்து கொண்டே இருந்தது...ஒரு
humming அல்லது ஒரு chorus இத்தனை வசீகரமாக இருக்க முடியுமா?
"இதயம் ஒரு கோவில்" பாட்டின் துவக்கத்தில் வரும் அந்த
SPB...[இளையராஜா பாடும் இதே பாடலின் மற்றொரு version ஆரம்பத்தில்
Janaki],"வானுயர்ந்த சோலையிலே" துவக்கத்திலும் ."கூடத்திலே கோவில் புறா
" இடையிலும் வரும் அந்த ஜானகி...என்று எத்தனை இனிமை !
"மலைகளின் இளவரசி உங்களை வரவேற்கிறாள்" என்னும் பலகை பார்க்கும் வரை காணும் காட்சிகளின் பின்னணி இசை போல இந்த பாடல்கள் மனதை தொடர்ந்த போது, நான்
"இதய கோவிலின்" இசைத்
தூண்கள் நிரம்பிய பிரகாரத்தை வலம் வரத் துவங்கியிருக்கிறேன் என்று உணரவில்லை.
இன்று பொதுக் குளியலறை போல் நீர் வழியும்
"silver cascade" அன்றைய காலங்களில், ஆரவாரமாக, "அருவி" என்ற
பெயருக்கு ஏற்ப இருந்தது...கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இறங்கி நடக்கையில், பனி நகர்வதை பார்வையில் பார்த்த அந்த முதல் நாள்...வாயிலிருந்து காற்றை ஊதி அது பனியின் வடிவமுடன் படர்வதை பார்த்த அந்த
முதல் நாள்...புற்களின் மெத்தையில் பூத்திருக்கும் நீர்த்துளியை பற்கள் நடுங்க பார்த்த அந்த முதல் நாள்...என்று எத்தனை
"முதல்" அந்த ஒரே நாளில்...!
"kodaikanal
lake" படகு சவாரியில் ஏரியின் நீரை ஏந்தித்
தெளித்து ஏற்பட்ட மகிழ்ச்சியின் நடுவே மழை வர,
இன்னும் படகு பயணம் வேண்டும் என்று இதயம் கேட்க, வேறு வழியின்றி இடையில் இறங்கி மழைக்கு ஒதுங்க,
"படகு குழாம்" எதிரே இருந்த கடையில் ஒலித்த
"யார் வீட்டு ரோஜா"வும் அந்த மதிய நேர மழை காட்சியும் உயிருக்குள் காலம் ஒட்டிய ஓவியம்! சில வாரங்களுக்கு முன், ஏரியின் மீதிருந்த இருள் போர்வையை சூரியன் விலக்க சோம்பல் முறித்த ஏரியின் மேல் சாரல் விழும் அதிகாலை பொழுதில்
"நடை" போடும் வாய்ப்பு கிடைத்தது...ஏரியை சுற்றி வரும் ஆளரவமற்ற சாலையில் என் மனைவியுடன் நடந்து கொண்டிருந்தேன்...மனிதர்களின் வாசனை ஏதுமின்றி மழையின் வாசனையில் ஊறியிருந்தது
ஏரி ! அதிகாலை என்பதே உள்ளும் புறமும் அசுத்தமற்ற வடிவத்தின் அச்சோ?
ஏரியின் நீர்பரப்பில் சாரல்
விழுந்து தண்ணீரில் தோன்றிய
சிறு வட்டங்கள் ஏரியின் மேனியில் ஏற்பட்ட புல்லரிப்புகள் போல் கிளம்பி மறைந்தன.
"படகு குழாம்"! எதிரே இருந்த கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. அந்த இடத்தை நான் நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்று காலத்துக்கு தெரியும். எனவே எனக்கும் தெரிந்தது.சாலையோர மரங்களில் இருந்த இலைகளின் வழியே இறங்கிய சாரல் என்னை
நனைக்கத் துவங்கியது. கால்கள் தானாக
காலத்தின் பிடியில் இறுகி மெது நடையானது.
"...வான் மேகம் மோதும் மழைதனிலே நான் பாடும் பாடல் நனைகிறதே..." மாறிவிட்ட வயது...மாறி விட்ட வாழ்க்கை...இடம் மட்டும் இருபத்தி ஐந்து ஆண்டின் தடம்! இந்த பாட்டு இப்போது வெளியில் இருந்து வரவில்லை. எனக்கும் காலத்திற்கும் உண்டான தனிப்பட்ட உறவின் அம்சமாக காலம் பாடலை எனக்குள் இருந்து எடுத்து இறைத்துக் கொட்டிக் கொண்டிருந்தது போலும்.
"coakers walk" உள்ளே மூதாட்டியிடம் சோளம் வாங்கும் பொழுது..., "bryant
park" உள்ளே சிவப்புக்கும் ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட நிறத்தில் இருந்த பூவை எப்படி இயற்கை உண்டாக்கியிருக்கிறது என்று திகைத்த
போது ...என்று அன்று முழுவதும் வெவ்வேறு இடங்களில் இந்த பாடல் என் தோளேறி விளயாடிப் போனது."...பாடல் இங்கே நனைவதனாலே நனையும் வார்த்தை கரையுது இங்கே..."
இப்படித்தான்,
பல ஆண்டுகள் முன்பு ஒரு நாள், வெறித்திருந்த வானம் தந்த வெளிச்சமான
மதியம், "pine forest" காண நேர்ந்தது. "வானுயர்ந்த சோலையிலே" அங்கு
வரவேற்றது...சட்டென்று கருக்கத்துவங்கிய வானம்...நம் மேல் விழுந்து விடுமோ என்ற கணத்துடன் நகரும் மேகம் என அந்த சூழலே மாறிப்போனது...கொட்டப்போகும் மழையை எட்டிப்பார்ப்பது போல் உயர்ந்திருந்த மரங்களும் ஊசியாய் துளைத்த காற்றும்...இந்த பாட்டின் இரண்டு சரணங்கள் முழுவதும் வரிகளின் பின்னே நீந்தித் திரியும்
violin...! ஒரு வேளை "pine forest" இறக்கங்களில் நம் நினைவுகளை
உருட்டி விட்டால் நிகழும் உணர்வும் இந்த வயலின் தரும்
ஒலியிழைகளும் ஒரே ஸ்வரமோ? "வானுயர்ந்த சோலையிலே" கேட்டால் நாம்
"நான் பாடும் மௌன
ராகம்" பாடலையும் தவிர்க்க இயலாது...இந்த இரண்டு பாடல்களுமே இரட்டைப் பிறவி போல...ஒன்றினால் மற்றொன்று ஞாபகம் வரும்.இந்த பாடலில், முதல்
stanza துவக்கத்தில், அழுகையின் முதல் துளி, விழுவதற்காக திரண்டு,
இமையின் இரண்டு மயிரிழைகளுக்கு இடையில் நகரும் உணர்வு போல தள்ளாடும்
வயலின்...!
நீங்களும் முயன்று பாருங்கள்...அதிகாலை பொழுதில் சாரல்களின் விழுதை பிடித்தபடி ஏரியின் ஓரமாக நடந்து பாருங்கள்....இளையராஜாவின் ஏதோ ஒரு பாடல் சட்டென்று உங்கள் மனதின் விரலை
பிடித்தபடி உங்களுடன் நடக்கத்
துவங்கும்! அதன் வேகத்திற்கு ஒரு போதும் நாம் ஈடு கொடுக்க முடியாது
- ஏனென்றால் அது ஒரு காலக்குதிரை. "லகான்" பற்றிய
அவசியமோ அச்சமோ இல்லாத காலக்குதிரை! அதன் நாலு கால் பாய்ச்சலில் நம் பயணம் வித்தியாசமானது...ஏனென்றால்,
இது போன்ற காலக்குதிரையின்
பாய்ச்சல் பெரும்பாலும் பின்னோக்கி இருக்கும்தானே?
வார்த்தைகளை சிற்பம் போல செதுக்கி இருக்கிறீர்கள் குமரன். அற்புதம். நன்றி.
ReplyDeleteசெல்வேந்திரன்
வந்து போகும் மக்களுக்கு,கொடைக்கானல் ஆனந்த பூமி.இங்கு வாழ்ந்து பார்க்கும் மனிதர்களுக்கு இது ஒரு பனி தேசம்.கூதல் காற்றையும் குளிரையும் நேசிப்பவர்கள் இங்கு வரலாம்.
ReplyDelete