Sunday, July 7, 2013

37. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 22

ஒரு மழை நமக்குள் பல நினைவுகளைத் தந்து போகக்கூடும். கெட்டித்து போன மண் மேல் முதலில் துளித்துளியாய் ஒட்டி, பிறகு மெல்ல பெருமழையாய் கொட்டி, இறுகியிருந்த மண் நெகிழ்ந்து, ஈரத்தினால் குழைந்து ஒரு வாசனை கிளம்புமே...அது மழை வாசமா? மண் வாசமா? அல்லது அந்தப் பொழுதுகள் நமக்குள் கிளப்பும் நினைவின் வாசமா?

மழைக்கும் மனதுக்கும் இடையே கிடக்கும் நினைவுப் புதையல்களை தோண்டி எடுக்கும் வேலையை சில பாடல்கள் செய்யும். பெருமழை பொழுதில் பேருந்துக்குள் அமர்ந்திருக்கிறீர்களா? மழையை ரசிக்கும் மனிதர்கள் பேருந்துகளுக்குள் இருப்பார்கள் என்று மழைக்குத் தெரியும் போலும். "நான் வெளியில் வந்திருக்கிறேன். உள்ளே என்ன செய்கிறாய்?" என்பது போல பேருந்தின் உலோகத் தகடுகளை தன் எண்ணற்ற கரங்களால் தட்டி நம்மை வெளியே வரச் சொல்லுவது போல அடித்துச் செல்லும் மழையின் சத்தம். அத்தகைய மழை தினத்தில் மழையின் வடிவத்தில் ஏறி மனதில் படிமமாய் ஊறிய‌ ஒரு பாடல், ஆயுளுக்கும் நினைவின் கிறக்கத்தை மனதுக்குள் இறக்கிச் செல்வதில் அதிசயமில்லை.

"பூமி குளிரட்டும் நல்லா அடிச்சு பெய்" என்று மழையிடம் பேசிக் கொண்டிருந்தார் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பாம்படம் அணிந்திருந்த ஒரு பக்குவப்பட்ட மூதாட்டி. அவரின் பேச்சை ரசித்தது போல‌, காற்றின் வழி பிடித்து தேடி வந்து கூடுதல் சாரல்களை அவர் மேல் கொட்டி கன்னத்தில் தட்டி விட்டுப் போனது மழை. நரைத்திருந்த அவரின் கூந்தலில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் போல மின்னிக் கொண்டிருந்தன மழையின் துளிகள். வானம் பார்த்து காத்திருந்து பாளம் பாளமாக பிளவுபட்ட‌ நிலத்தின் மீது பொழியும் மழை அந்தப் பிளவுகள் நோக்கி வழிந்தோடுவது போல, வயதின் சுருக்கங்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிய அந்த மூதாட்டியின் கன்னத்தில் இறங்கிய மழைத்துளிகள் அந்தச் சுருக்கங்கள் தந்த பிளவுகள் நோக்கி வழிந்து கொண்டிருந்தன. வழியும் மழைத்துளிகளிடம் வசப்பட்டதாலேயோ என்னவோ, துடைக்கும் நினைப்பின்றியோ மனமின்றியோ அமர்ந்திருந்தார் அவர்.

சற்றே ஓய்ந்தது போலிருந்த மழையின் ஒலியை வைத்து சாளரங்களை நன்றாக திறந்து வைக்கத் துவங்கினர் பயணிகள். அரசு பேருந்துகளுக்கே உரித்தான‌, விரித்தால் மடிக்க முடியாத, மடித்தால் விரிக்க முடியாத‌ ஷட்டரை முக்கால் பாகம் மேலேற்றி "ட" வடிவிலிருக்கும் துருப்பிடித்த இரும்பினுள் அடைக்கும் முயற்சியில் ஒரளவு வெற்றி அடைந்து அமர்ந்திருந்தேன் நான்.

பேருந்து நிலையத்தின் மேடு பள்ளங்களில் தேங்கியிருந்த மழை நீரின் மேல் விழுந்து சிதறும் தூறல்கள் நீரில் சிறு வட்டங்களைத் தோற்றுவித்து, அந்த வட்டங்களுக்குள் தோன்றும் புது வட்டம் சிறு வட்டங்களை பெருவட்டங்களாய் மாற்றி, விரிந்து கொண்டே போகும் வட்டம், ஏதோ ஒரு நொடியில் மறைந்து...புதிதாய் ஒரு வட்டம் நுழைந்து...இதுவே சுழற்சியாய்..மழை போடும் நீர் வட்டத்தின் ஆரம் போல பெருகிக் கொண்டே போகும் நினைவின் சாரம் சட்டென்று இன்னொரு நினைவைத் தோற்றுவித்து...அது பெருகி....ஒரு துளியின் தடத்தில் மறுதுளி...வட்டங்களுக்குள் வட்டங்கள்...நினைவுகளுக்குள் நினைவுகள்!

இந்தச் சுழற்சியை இசையின் பாதைக்குள் பொருத்தியது போல, நம்மையே அந்தச் சுழற்சியின் மையப் புள்ளியில் இருத்தியது போல, அடிமனதில் மெதுவாக அசையும் உணர்வுகளின் ஒலிவடிவம் போலத் துவங்கியது ஒரு பிளாட்பாரத்தில் இருந்த தேநீர் கடை ஒன்றிலிருந்து ஒலிக்கத் துவங்கிய "நிலவே நீ வர வேண்டும்" பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த அற்புதமான கிடார்.

பாடல் முடியும் வரை பேருந்தை கிளப்பாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு. தள்ளித் தனியே நின்றிருந்த ஓட்டுனர் தேநீர் கிளாசை சுழற்றியபடி அதிலிருந்து வெளியேறும் ஆவியை பார்த்தபடி இருந்தார். ஒரு வேளை அவரும் இந்தப் பாடல் முடியும் வரை காத்திருக்க நினைத்திருந்தாரோ என்னவோ? எவருக்குத் தெரியும் எவரின் நினைப்பு?

கரையிலிருந்து நீண்டு, நதியின் மீது படர்ந்திருக்கும் கிளைகளை உடைய மரத்தின் இலைகள் உதிர்ந்து நீரோட்டத்தில் மிதந்து செல்வது போல, இந்தப் பாடல் முழுவதுமே "bass guitar" மேல் மிதந்து நகர்கிறது. அந்தக் கிளையின் நிழல், தண்ணீரின் அசைவுக்கு ஏற்ப ஆடுவது போலத்தானே நம் நினைவுகளும் இந்தப் பாடலின் ஊடே அசைகிறது...நீரோட்டம் ஆங்காங்கே எழும்பி அடங்குகையில் அதன் மேலேறி இறங்கும் இலையின் பயணத்தை ஒத்ததாக இருக்கிறது "bass guitar" மேலே ஏறி இறங்கும் வரிகள்.. நினைவுகள் கொப்பளித்து நிகழ்காலத்தின் கோப்பையை மீறி வழிவது போல, ஆங்காங்கே அடியிலிருந்து மேலேறி வரிகளின் இடைவெளியில் பொங்கி உள்ளடங்கும் நொடிகள் அவை.

நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஊடகமாக மழை மாறிப் போகும் அதிசயத்தை முதல் ஸ்டான்ஸா துவக்கத்தில் வரும் புல்லாங்குழலில் புரிய வைக்கிறார் இளையராஜா. நம் மேல் விழும் மழைத்துளி உடலின் மீது வழிந்தோடும் வழித்தடங்களுக்கு எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளனவோ அத்தனை சாத்தியங்கள், அந்த துளியின் நகர்வு எத்தகைய நினைவின் துளிகளை நம்மிலிருந்து மீட்டெடுக்கும் என்பதற்கும் உண்டு. ஜன்னலின் மீது சாய்ந்து வானத்தை பார்த்தபடி இருந்த என் முகத்தை தாங்கியிருந்த கைகளின் மீது இறங்கி, மழையின் ஒரு குமிழ் அதற்குரிய நீர்த்தடத்தை உருவாக்கி விரல் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த புல்லாங்குழலின் தடம், குமிழின் தடத்தை ஒத்ததாகி ஒலித்தது. மழையின் குமிழும் புல்லாங்குழலும் அங்கு என்னவாகிப் போனது? மழையின் குமிழ், காலக் குமிழாகி, அது வேகமாக‌ உருண்டோடி, புல்லாங்குழலின் உள்ளோடி, ஒவ்வொரு துளையிலிருந்தும் சொட்டும் நினைவுகளின் சத்தத்தில் உள்ள உயிரின் ஸ்வரம்தானோ அந்த முதல் ஸ்டான்ஸா புல்லாங்குழல்? அத்தகைய சொட்டுக்களை வாங்கி, நமக்குரிய உணர்வுகளில் தாங்கி, மறுபடி நம் மனதுக்குள்ளேயே ஊற்றுகிறதோ அதன் பின் வரும் வயலின்?

பெய்து போன மழை நெய்து வைத்த மிச்சம் போல ஜன்னலின் விளிம்புகளில் மாலையாக கோர்த்திருந்த மழைத்துளிகள் ஒவ்வொன்றாக என் உச்சந்தலையில் இறங்கின. அந்த சிலிர்ப்பின் ஊடுருவல் மெதுவாகத் துவங்கி, மேலோங்கி வளர்ந்து, மனம் முழுதும் படர்ந்து நிற்கும் பொழுதுகளைத் தான் இரண்டாம் சரணத்திற்கு முன்னர் வரும் கிடாரும் வயலினும் தருகிறதோ? மனதில் தோன்றும் நினைவின் சிலிர்ப்புகள் இப்படித்தான் நிகழுமோ?

தமிழ் வகுப்புகளில் நாம் "மாத்திரை" பற்றி படித்திருப்போம். சொற்களுக்கான உச்சரிப்பின் கால அளவு "மாத்திரை" என்று தமிழாசிரியர் சொல்லும் பொழுதே சொற்கள் ஒரு குறிப்பிட்ட அளவின் வடிவமைப்பில் வாயில் உருள்வது போல இருக்கும். இப்பாடலில் "நீயின்றி வாடுதே...", "துன்பங்கள் சேர்ந்ததே" [முதல் ஸ்டான்ஸா] மற்றும் "மாயங்கள் செய்வதே...", "காயங்கள் ஆனதே..." [இரண்டாம் ஸ்டான்ஸா] என்னும் வரிகளின் அடியில் இளையராஜா என்ன செய்கிறார்? அந்த "bass guitar" இந்த வார்த்தைகளின் "மாத்திரைகளை" அப்படியே சாப்பிட்டு அதன் வடிவிலேயே வரிகளோடு உருகி ஓடுகிறதே...நினைவின் கரடு மேல் எத்தனை லாவகமாக நம்மை ஏற்றி இறக்குகிறார் இளையராஜா!

மழை, தான் தொடும் அனைத்தின் மீதும் காலத்தை ஊற்றி விட்டு போய்விடுகிறது. நனைதலும் காய்தலும் மனதுக்கே உரிய மழையின் சொல்லாடல்கள் தானே? மழை என்பதே நினைவுக்கான காலத்தின் குறியீடுதானே? இசையும் அத்தகையது தான் இல்லையா?

குறிப்பு: இதே பாடல் தந்த மற்றொரு அனுபவம் வாசிக்க இங்கே செல்லவும்... 

5 comments:

 1. அண்ணேன் சும்மா ரசிச்சு , லயிச்சு உருகீருக்கீங்க ....! படிக்குரவங்களையும் ரசனையின் உச்சத்துக்கு கொண்டுபோய்ட்டீங்க ...! அழகு ....! அழகு ...! அழகு ...!

  ReplyDelete
 2. // அப்படியே ஓடிச்சென்று கட்டியணைத்து , உச்சி முகர்ந்து, நச்சென்று முத்தமிடத்தோன்றியது அந்த அழகான ரசனைவாதிகளின் கரங்களுக்கு... ///

  ரசனைவாதி நீங்கள் தான்...!!!

  என்ன செய்ய உத்தேசம்...? உங்களின் பதில் என்ன...? ஹிஹி.... வாழ்த்துக்கள்... என் இனிய நண்பரின் ரசனையில் : http://jeevansubbu.blogspot.com/2013/07/blog-post_23.html

  ReplyDelete
 3. அருமையா சொல்லியிருக்கீங்க...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஓடும் பேருந்தில் கேட்கும் பாடல்களில் என்னையும் நான் மறந்ததுண்டு அந்நேரங்களில் இறங்குமிடம் வந்துவிடக்கூடாதே என்ற தவிப்பும் இருந்ததுண்டு.. இன்று நினைவுபடுத்தியது அந்நாட்களை உங்கள் வரிகள். மிக்க நன்றிங்க.

  ReplyDelete